ஜெயகாந்தன் தன் வாழ்வில் நிகழ்ந்த பல சம்பவங்களை அவரே நிறைய எழுதியிருக்கிறார். ‘ஓர் இலக்கியவாதியின் அரசியல் அனுபவங்கள்’, ‘கலையுலக அனுபவங்கள்’, ‘ஆன்மிக அனுபவங்கள்’, ‘நினைத்துப் பார்க்கிறேன்’, ‘யோசிக்கும் வேளையில்’ போன்ற படைப்புகளில் அந்தப் புதையல் இருக்கிறது.
மகத்தான ஓவியர்கள், செல்ஃப் போர்ட்ரெய்ட் என்று தம்மைத் தாமே வரைந்துகொள்வார்களே, அது போலத் தன் வாழ்வின் சம்பவங் களை வண்ணமயமாகத் தீட்டி வைத் திருக்கிறவர் அவர். பிறர் தொட்டுச் சிறப்பாகக் கூறுவதற்கு அவர் சிறிதும் இடம் மீதி வைக்கவில்லை என்றே கூறலாம். ஆயினும், திருப்பத்தூர் நண்பர்களாகிய எங்கள் பார்வையில், அவர் எவ்வாறெல்லாம் தெரிந்தார் என்பது எங்களுக்கே உரிய பிரத்யேக அனுபவம் அல்லவா?
இந்தக் கட்டுரைத் தொடரை ஆரம்பிக்கும்போதே, பேசாப் பெருளைப் பேச நாம் துணிகிறோம் என்று தயக்கம் வந்தது. அவரைச் சிறப்பாக எடுத்து இயம்ப நிகழ்காலத்தில் நிறையப் பேர் உள்ளனர். எதிர்காலத்தில் ஏராளமானவர் வருவர். ஆயினும் பெரும்கூட்டத்தில், எல்லோரும்தான் சரணகோஷம் போடுகிறார்களே என்று எந்த சாமானிய பக்தனும் வாய்மூடிச் செல்வதில்லை. இந்த இடைக்குறிப்பை இத்துடன் நிறுத்திக்கொண்டு, 19964-65ம் ஆண்டுகளில் பிரவேசிக்கிறேன்.
நான் ஒன்றும் வருஷவாரியாகக் கடைசி வரைக்கும் எழுதப் போவ தில்லை. இந்த ஆண்டுகளில் சில நல்ல விஷயங்கள் நிகழ்ந்தன. அதனால் அந்த ஆண்டுகளின் ஞாபகம், கால நேரத்தோடு சரியாக கைகோத்துக் கொள்கிறது.
முதலில், ஜெயகாந்தன் 26, எழும்பூர் நெடுஞ்சாலையில் தான் இருந்த வீட்டை விட்டுவிட்டு, பக்கத்திலேயே ஹால்ஸ் ரோடில் கொஞ்சம் இடவசதி அதிகம் உள்ளதும், சவுகரியமானதுமான ஒரு வீட்டுக்குக் குடி போனார். அந்த வீட்டில் அவர் இருந்தபோது நிகழ்ந்த முக்கியமான நிகழ்ச்சிகள் என்று அவர் வீணைக் கற்க முற்பட்டதையும், காதம்பரி என்று காவியப் பெயரிடப்பட்ட அவரது மூத்த பெண் குழந்தையான அம்மு பிறந்ததையும், ‘உன்னைப் போல் ஒருவன்’ என்ற, தமிழில் அதுவரை இல்லாத ஒரு சினிமா உதயமானதையும் சொல்லலாம். அதோடு இன்னொன்றையும் அவசியம் சொல்ல வேண்டும்.
1964-ம் ஆண்டு, ஜூன் மாதத்தில், ஆனந்த விகடனில் என்னுடைய ‘கங்கவரம்’ என்கிற சிறுகதை வெளியாயிற்று. அது வெளிவந்த சில நாட்களுக்குப் பிறகு நண்பர்களோடு சேர்ந்து சென்னைக்குச் சென்றேன். ‘உன்னைப் போல் ஒருவன்’ உருவாக்கும் முயற்சியில் ஜெயகாந்தன் ஈடுபட்டிருந்தார். அவரது நண்பரும் சினிமா ஞானம் உள்ளவருமான கே.ஆர்.லெனினோடு எங்கோ வெளியே செல்ல புறப்பட்டுக் கொண்டிருந்தார்.
அந்த வீட்டின் வெளி கேட் அருகே லெனினோடு வந்து நின்றவர், திருப்பத்தூர் நண்பர்களைக் கண்டு மகிழ்ச்சியடைந்து, என்னை நோக்கி கையை நீட்டினார். எதற்கு நீட்டுகிறார் என்று எனக்குத் தெரியவில்லை. என் கையைப் பற்றி குலுக்கி, ‘‘உங்க ‘கங்காவரம்’ நல்லாயிருந்தது!’’ என்று பாராட்டினார். நான் கூச்சத்தால் நெளிந்து என்னவோ சொன்னேன்.
‘‘இல்லையில்லை இன்னும் சில நண்பர்களும் சொன்னார்கள்..’’ என்றார்.
இந்தக் கதையை ஜெயகாந்தன் பாராட்டினார் இல்லையா, அவ்வளவு தான்! அதற்குப் பிறகு நான் கதையெழுதுவதையே விட்டுவிட்டேன். எழுதினால் அவர் பாராட்டுகிற மாதிரி எழுத வேண்டும். அடுத்த கதையை நன்றாக இல்லை என்று சொல்லிவிட்டால்? அதனை அஞ்சியே அதற்குப் பிறகு நான் கதை எதுவும் எழுதவில்லை.
‘‘எழுது… எழுது!’’ என்று என்னைத் தூண்டாத நண்பர்களே இல்லை. அவர்களின் வற்புறுத்தலுக்காக அவ்வப் போது, ‘அதை எழுதப் போகிறேன். இதை எழுதப் போகிறேன்’ என்று போக்குக் காட்டிவிட்டு, சும்மாவே இருந்துவிடுவேன். நாளடைவில் அவர் களும் என்னை வற்புறுத்துவதை நிறுத்திவிட்டார்கள்.
இந்த சுயபுராணம், கொஞ்ச காலம் கழித்து ஜெயகாந்தன் கூறிய அழகும் அர்த்தமும் நிறைந்த ஒரு வாக்கியத்தை நோக்கிச் செல்கிற காரணத் தால் நீங்கள் என்னை மன்னிக்கலாம்.
ராயப்பேட்டை நெடுஞ் சாலையில் ‘ஆசிய ஜோதி ஃபிலிம்ஸ்’ அலுவலகத்தில் நாங்கள் தனியாக இருந்தபோது, நான் அவரிடம் ‘‘எழுதுவதற்குப் பயமாக இருக்கிறதே ஜே.கே?’’ என்றேன்.
‘‘அதுதான் சரஸ்வதி தேவியின் மீது உள்ள மரியாதை!’’ என்றார் பதிலாக.
என்னிடம் வந்து எழுதுகிறேன் என்று சொல்லும் வளரும் எழுத்தாளர்களுக்கு எல்லாம் இந்த வாக்கியத்தை எடுத்துச் சொல்லி உச்சரித்து, உச்சரித்து அதை நான் உள்ளூர மந்திரம் ஆக்கிக் கொண்டேன்.
1974-ம் ஆண்டு என்று நினைக் கிறேன். கம்யூனிஸ்ட் கட்சி ‘கல்பனா’ என்கிற மாத இதழைத் தொடங்கி, அதற்கு ஜெயகாந்தனைப் பொறுப்பாக்கியிருந்தது. அதில் மாதம் ஒரு நாவல் வெளியிடப்பட்டது.
அப்போது ஜெயகாந்தன் என்னிடம் ஒரு நாவல் எழுதித் தருமாறு கேட்டிருந் தார். நான் மிகவும் சிரமப்பட்டு, சிறுகதையும் அல்லாத, குறுநாவலும் பெருநாவலும் அல்லாத, அதே நேரத்தில் வெறும் ‘ரிப்போர்ட்டிங்’ மாதிரியும் இல்லாமல் ஒன்றை ‘தெரிந்த முகங்கள்’ என்கிற தலைப்பில் எழுதிக் கொடுத்தேன். அதை படிப்பவர்கள் எல்லாருக்கும் தெரிந்துவிடும், அது ‘ஜெயகாந்தனைப் பற்றியது’ என்று.
அப்போதெல்லாம் எதையாவது எழுதலாம் என்று பார்த்தால், ஜெயகாந்தன்தான் எனக்குள் என் வழியை அடைத்துக்கொண்டு எதிரில் வந்து நிற்பார். அவரைப் பற்றி எழுதித் தீர்க்காமல் வேறு எதுவும் எழுத மனம் முனையாதிருந்த காலம் அது.
‘‘ஏம்பா, கம்யூனிஸ்ட் கட்சி இந்தப் பத்திரிகையை நடத்துகிற பொறுப்பை எனக்குத் தந்திருக்கிறது. இதில், நான் என்னையே புகழ்கிற ஒரு படைப்பை வெளியிடுவது அநாகரிகமானது’’ என்று ஜே.கே சொல்ல, அந்தப் பிரதியை அப்படியே தூக்கி பரணிலே போட்டுவிட்டேன்.
முன்பொரு சமயத்தில், ஜெயகாந்தன் எங்கள் காதுபட, ‘‘நல்ல எழுத்தைப் பனையோலையில் எழுதிப் பரணிலே போட்டுவிட்டாலும், உரிய காலத்தில் அது தன் உச்சத்தை எட்டிவிடும்’’ என்று சொல்லியிருந்ததை நினைத்துக் கொண்டுதான், அதை நான் பரணிலே தூக்கிப் போட்டேன்.
பின்னாளில் என் மகன் வழியாக, அமெரிக்காவில் இருக்கிற ராஜாராம், துக்காராம் என்கிற மதிப்புமிக்க சகோதரர்கள், அந்தப் பிரதியைப் படிக்க நேர்ந்து, அவர்கள் அதை வெளியிடலாம் என்று தீர்மானித்து, பிற்காலத்தில் அது அவர்களின் ‘எனி இந்தியன் பதிப்பகம்’ வெளியிட்ட ‘தெரிந்த முகங்கள்’ என்கிற கதைத் தொகுதியில் இடம்பெற்றது.
ஜெயகாந்தன் அந்தப் புத்தகத்தின் முன்னுரையில் இதைப் பற்றிப் பிரஸ்தாபித்து, ‘இப்போது படித்துப் பார்த்தால் நன்றாகத்தான் இருக்கிறது!’ என்று குறிப்பிட்டிருப்பார்.
ஆனால், இன்றளவும் அந்தப் படைப்பை குறித்து எனது கருத்து, அது என்னால் மறுபடியும் மறுபடியும் படித்துப் பார்த்துக் கொள்வதற்காகவே என்னால் எழுதப்பட்ட பிரத்யேகமான ஒன்று என்பதே!
- வாழ்வோம்…
எண்ணங்களைப் பகிர்ந்துகொள்ள: pisakuppusamy1943@gmail.com
முக்கிய செய்திகள்
வலைஞர் பக்கம்
2 days ago
வலைஞர் பக்கம்
2 days ago
வலைஞர் பக்கம்
4 days ago
வலைஞர் பக்கம்
11 days ago
வலைஞர் பக்கம்
13 days ago
வலைஞர் பக்கம்
14 days ago
வலைஞர் பக்கம்
16 days ago
வலைஞர் பக்கம்
17 days ago
வலைஞர் பக்கம்
17 days ago
வலைஞர் பக்கம்
21 days ago
வலைஞர் பக்கம்
24 days ago
வலைஞர் பக்கம்
25 days ago
வலைஞர் பக்கம்
27 days ago
வலைஞர் பக்கம்
28 days ago
வலைஞர் பக்கம்
1 month ago