பால்ய மைதானத்தின் கிரிக்கெட்

By வெ.சந்திரமோகன்

பள்ளி நாட்களில் அறந்தாங்கியில் ‘ஹவுசிங் போர்ட் கிரிக்கெட் போர்டு’ என்ற நாமம் கொண்டு தனி சுதந்திரம் பெற்றுத் திகழ்ந்த எங்கள் கிரிக்கெட் அணி உள்ளூர் பிரசித்தம். விடுமுறை நாட்களில் வேகாத வெயிலில், கிடைக்கும் இடங்களிலெல்லாம் ஸ்டம்பை ஊன்றி விளையாடத் தொடங்குவோம்.

எங்கள் ஹவுசிங் யூனிட் குடியிருப்பில் மூடப்படாத சாக்கடைகள் அதிகம். அவற்றில் விழும் பந்துகளை எந்தக் கூச்சமும் இல்லாமல் வலது கையாலேயே எடுத்து குடிநீர்க் குழாயில் கழுவி டவுசரில் அழுந்தத் துடைத்துவிட்டு நாங்கள் விளையாடுவதை, பெற்றோர் பெருமக்கள் கொலை

வெறியுடன் ‘கவனித்துக்கொண்டிருப்பார்கள்'. பந்து எங்கெங்கோ மாயமாய் மறைந்தாலும் எங்கள் மீட்புக்குழு அதை எப்படியேனும் எடுத்துவந்து விளையாடும். எடுக்கவே முடியாத இடங்களில் பந்து சென்று விழும் வரை அப்பழுக் கற்ற எங்கள் கிரிக்கெட் தொடரும்.

பிட்சுகள் பலவிதம்

விடுமுறை நாட்களில் வருகைபுரியும் பையன்களின் எண்ணிக்கையைப் பொறுத்து அணி இரு பிரிவாகப் பிரிக்கப்படும். அல்லது இருப்பதிலேயே சாதுவான பையனைக் குனியவைத்து அவன் முதுகுக்கு மேல் விரல்களைக் காட்டி எந்த நம்பர் வரும்போது அவன் யாரைக் கை காட்டுகிறானோ அந்த வரிசைக் கிரமத்தில் விளையாடத் தொடங்குவோம். கடைசி நம்பர் பையன் பந்து வீசுவான். முதலாமவனுக்கு மட்டை பிடிக்கும் பாக்கியம் கிடைக்கும். பத்தே பத்து கட்டிடங்கள் கொண்ட அந்த சின்ன பிரதேசத்துக்குள் மட்டும் நாங்கள் ஐந்து ‘விளையாட்டு மைதானங்களை' பராமரித்துவந்தோம்.

ஒன்றுக்கொன்று எதிரெதிராக வளர்ந்திருந்த இரு மரங்களின் இடைவெளியை கிரிக்கெட் பிட்சாக பாவித்து ஒரு மரத்திலிருந்து அடுத்த மரத்துக்கு (அதில் ஸ்டெம்ப் செதுக்கப்பட்டிருக்கும்) எறிந்து விளையாடுவோம். மேல் நோக்கி அடிக்கப்படும் பந்துகள் சில சமயம் மரங்களில் மாட்டிக்கொள்ள, பீல்டிங் அணியினர் அந்த மரத்தின் கிளைகளைப் பிடித்து உலுக்கி அதகளம் பண்ணுவார்கள். களைப்படையும் பந்து கீழே விழும்போது பச்சக்கென்று பிடித்துவிடுவார்கள். அதுவரை இப்போதைய ‘ரிவியூ' முடிவு கேட்டு காத்திருக்கும் மட்டையாளர்கள் போல் பரிதவிப்புடன் மேல் நோக்கி பார்த்தபடி நின்றிருப்பார்கள். சில சமயம் பந்து ‘நியூட்டனாவது ஒன்றாவது’ என்று அலட்சியமாக, கிளையில் மாட்டிய திசைக்கு நேரெதிர் திசையில் வேறொரு கிளையிலிருந்து படக்கென கீழே தரையில் விழுந்துவிடும். அப்போது கிரண் மோரேயைக் கிண்டல் செய்யும் ஜாவேத் மியாண்டட் போல் மட்டையாளன் களிப்பில் தவ்விக்குதிப்பான்.

கிணற்றுக்குள் விழும் பந்து

மொகாலி போன்ற ஒரு முக்கியமான ‘மைதானம்' இரண்டு கட்டிடங்களுக்கு மத்தியில் இருந்தது. அதன் இடைவெளி சற்று அதிகம். லெக் சைடில் தூக்கி அடிக்கப்படும் பந்துகள் அந்தக் கிணற்றில் போய் விழுந்துவிடும். அந்த கிணற்றில் விழும்படி அடித்தவன் ‘அவுட்’! கிணற்றில் விழுந்த பந்தை எடுப்பது யார்? ஹவுசிங் போர்ட் பெற்றோர்கள் கண்டிப்பானவர்கள் என்பதால் எங்களில் யாரும் இறங்க மாட்டோம். பக்கத்துத் தெருவில் இருந்து வரும் செந்தில் தான் அதை எடுப்பான். இந்த சாகசத்துக்குப் பரிசாக சில சலுகைகள் அவனுக்குக் கிடைத்தன. ஒப்பனிங் ஓவர் அவன்தான் போடுவான். ஓப்பனிங் பேட்டிங்கும் வேண்டும் என்று அவன் கேட்டபோதும் எங்களால் சம்மதிக்காமல் இருக்க முடியவில்லை. எங்களால் கற்பனைசெய்ய முடியாத சாகசமல்லவா அவனுடையது!

நாகராஜிடம் சொந்தமான பேட் ஒன்று இருந்தது. அவன்தான் அப்படி அழைத்தானே ஒழிய அது எங்களை பொறுத்தவரை ஆப்பை(அகப்பை) தான். அதைப் பிடித்துக் கொண்டு அவன் பேட்டிங் செய்தான் என்றால் ஷெர்லக் ஹோம்ஸ் வந்தாலும் ஸ்டெம்ப் இருக்குமிடத்தைக் கண்டு பிடிக்க முடியாது. எனவே நாகராஜை அவுட் செய்வதென்பது வேர்ல்ட் கப்பில் ஹாட்ரிக் எடுப்பதுபோல் பெரும் சாதனை தான். அதே போல் நன்னப்பா பேட்டிங் செய்த பின்னர், பில்டிங் செய்ய லாங் ஆனுக்கு அனுப்பினால் சில பல நிமிடங்களில் காணாமல் போய்விடுவான். அங்குதான் அவன் வீடு இருக்கிறது. அவனை அவன் குகையிலேயே சந்தித்து திரும்பக் கொண்டுவருவது என்பது நடவாத காரியம்.

அவன் அம்மா “கொதிக்கிற வெயில்லே அவனை ஏன்டா விளையாட கூப்புடுறீங்க? போங்கடா” என்று விரட்டி விடுவார். ‘‘அவன் இவ்வளவு நேரம் பேட்டிங் செய்தான் அம்மா. பீல்டிங் செய்யும் முறை வரும்போது இப்படி வீட்டுக்குள் புகுந்து வர மறுப்பது தர்மமாகுமா?''

என்றரீதியில் நெடுநேரம் கெஞ்சி அவனைத் திரும்பப் பெறுவதற்குள் மாலை மங்கிவிடும். அடுத்த நாள் விட்ட இடத்திலிருந்து ஆட்டம் தொடங்கும். அந்த நாட்களில் கிரிக்கெட் ஆடுவதில் இருந்த களிப்பு வேறெதிலும் கிடைத்ததில்லை.

இன்றும் தெருக்களில் கிரிக்கெட் விளையாடிக்கொண் டிருக்கும் சிறுவர்களைக் கடந்துபோகும்போது, ‘‘சார்… ஒரு கை குறையுது. டீம்ல சேந்துக்கிறீங்களா?” என்று குரல் கேட்குமா என்ற எதிர்பார்ப்புடன்தான் நகர்கிறேன். குரல்தான் கேட்டபாடில்லை!

- வெ. சந்திரமோகன், தொடர்புக்கு: chandramohan.v@thehindutamil.co.in

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வலைஞர் பக்கம்

7 days ago

வலைஞர் பக்கம்

14 days ago

வலைஞர் பக்கம்

16 days ago

வலைஞர் பக்கம்

21 days ago

வலைஞர் பக்கம்

2 months ago

வலைஞர் பக்கம்

2 months ago

வலைஞர் பக்கம்

2 months ago

வலைஞர் பக்கம்

2 months ago

வலைஞர் பக்கம்

2 months ago

வலைஞர் பக்கம்

2 months ago

வலைஞர் பக்கம்

2 months ago

வலைஞர் பக்கம்

2 months ago

வலைஞர் பக்கம்

2 months ago

வலைஞர் பக்கம்

2 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

மேலும்