ரிஷப் பந்த் ஆடும் லெவனில் இடம்பெற்றது குறித்த கேள்விக்கு “நீங்கள் எல்லோரும் அவரைக் கேட்டீர்கள், அதனால்தான் சேர்க்கப்பட்டார்” என்றார் ரோகித்சர்மா. இதுதான் இந்திய கிரிக்கெட்டில் தற்போது நடக்கிறது. வாட்ஸ்ஆப் ஸ்டேட்டஸ்களிலும், ஷேர்சாட்டிலும் மட்டும் கிரிக்கெட் பார்க்கும் சினிமாத்தனமான ரசிகர்களின் திருப்தியை மட்டுமே இலக்காக கொண்டு அணி நிர்வாகம் செயல்படுகிறது. அதிகமான ரசிகர்களை கொண்டுள்ள வீரர்களுக்கு நிரந்தர இடம் அளிப்பதும், ஒன்றிரண்டு பெரிய சிக்ஸர்களை அடித்து வேடிக்கை காட்டும் வீரர்களை அணியில் சேர்ப்பதும் ஐபிஎல்லுக்கு மட்டும்தான் உதவும்.
ஒருசிலரின் பிடிவாதத்தால் கைக்கு எட்டிய உலகக்கோப்பை வாய்க்கு எட்டாததாகி விட்டது. சச்சின் கேப்டனாக இருந்தபோது ஆடும் லெவனை தேர்ந்தெடுக்கும் உரிமைகூட இல்லாமல் புலம்பியிருக்கிறார். டாஸ் போட மட்டுமே இந்திய கேப்டன்கள் பயன்படுத்தப்பட்ட காலம் அது. ஆனால் இன்றைய கேப்டன் கோலி பயிற்சியாளர் பிடிக்கவில்லை, ரவி சாஸ்திரிதான் வேண்டும் என்கிறார். தட்கலில் பதவியைப் பிடித்த ரவிசாஸ்திரியோ எனக்கு துணை பயிற்சியாளராக ஜாகீர்கானோ, டிராவிட்டோ வேண்டாம், பழைய சகாக்களான பரத் அருணும், சஞ்சய் பாங்கரும்தான் வேண்டும் என்கிறார். கேட்டதை கொடுத்தது பிசிசிஐ, பதிலுக்கு இன்று இவர்கள் செய்த கைமாறு என்ன? மிடில் ஆர்டரில் எந்த ஒரு பேட்ஸ்மேனும் செட்டாகி விடாமல் பார்த்துக் கொண்டனர். இந்தியாவின் அசல் கிரிக்கெட் ரசிகர்களின் உணர்வுகளை சுத்தமாக மதிக்கவில்லை.
தற்போதைய மிடில் ஆர்டருடன் அரையிறுதிக்கு வந்ததே சாதனைதான். 5 சதங்களை ரோகித்தே அடித்துவிட்டதால் தொடரிலிருந்து வெளியேறும் வரை வெற்றிடம் மறைக்கப்பட்டு விட்டது. டாப் ஆர்டரை காலி செய்தால் பேட்டிங்கில் ஒன்றுமில்லை என்பது நமது அணி நிர்வாகத்திற்கு வேண்டுமானால் தெரியாமலிருக்கலாம். மற்ற அணிகளுக்கு கண்டிப்பாக தெரிந்திருக்கும். மற்றபடி அரை மணி நேரம் சரியில்லை, முக்கால் மணி நேரம் சரியில்லை என்றெல்லாம் விடும் கதைகளை கேட்க இங்கு ஆட்கள் இல்லை. சட்டியில் இருந்தால்தானே அகப்பையில் வரும்.
சாஹல் ஒரு போட்டியில் 88 ரன்களை விட்டுக்கொடுத்தால் அடுத்த போட்டியில் குல்தீப் நீக்கப்படுகிறார். நான்கு போட்டிகளில் 14 விக்கெட்டுகளை எடுத்த ஷமி உட்கார வைக்கப்படுகிறார். ஹர்திக்கிற்கு பதிலாக புவனேஸ்வரை பயன்படுத்தியிருந்தால் ஷமியை களமிறக்கியிருக்கலாம். ரிஷப் பந்திடம் இன்னும் எதை எதிர்பார்க்கிறார்கள் எனத் தெரியவில்லை. இங்கிலாந்து மண்ணில் தினேஷ் கார்த்திக் ஆடுவதில்லை என்று இப்போது கூறுபவர்களுக்கு அம்மண்ணில் ரகானேவை விட யார் சிறப்பாக ஆடினார்கள் அவர் ஏன் பரிசீலிக்கப்படவில்லை என்ற கேள்விக்கு விடையில்லை.
எந்த ஒரு தவறுகளிலிருந்தும் பாடம் கற்றுக்கொள்ளாத விராட்கோலியின் கேப்டன்சி திறமைகள் குறித்து கவுதம் கம்பீர் மட்டுமே கேள்வி எழுப்பி வருகிறார். அதிலுள்ள நியாயத்தை உணர வேண்டிய சூழல் இது. உலகக்கோப்பையை பெற்றுத்தருவதற்காகவே மற்றொரு சீனியர் வீரருக்கு அணியில் நிரந்தர இடம் அளித்தனர். அவரது மந்தமான ஆட்டம்தான் உலகக்கோப்பை நமக்கு கிடைக்காததுக்கு காரணம் என்ற உண்மையை சுட்டிக்காட்ட ஜாம்பவான் வீரர்களாலேயே முடியவில்லை. அந்த விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட வீரர், தான் ஓய்வுபெறும் வரை தனது ஆவரேஜ் 50 ரன்களுக்கு கீழ் வந்துவிடக்கூடாது என்ற நோக்கத்தை தவிர வேறு எந்த நோக்கத்துடனும் பேட்டிங் செய்ததாக தெரியவில்லை. உண்மையிலேயே அவரை அணி நிர்வாகம் மதிக்கிறதா அல்லது அவரை நீக்க வேண்டும் என ரசிகர்களே சொல்ல வேண்டும் என கோர்த்து
விடுகிறார்களா என தெரியவில்லை. பினிஷர் என்ற பெயரை இழக்கச் செய்தாயிற்று, டிஆர்எஸ் அப்பீலில் சொதப்பியாயிற்று, கீப்பிங்கிலும் செட்டாக சில ஓவர்கள் தேவைப்படுகிறது. இந்திய விக்கெட் கீப்பர்கள் கீப்பிங் மட்டும்தான் செய்வார்கள் என்றிருந்த காலத்தில் ரன்கள் அடிக்க தொழில்நுட்பங்கள் தேவையில்லை என்று புதுமையை புகுத்தியவர் தோனி. அவரை கோலியின் பாதுகாவலராக மட்டும் பயன்படுத்துவது அழகல்ல.
சரிசெய்யப்படாத மிடில் ஆர்டர் பிரச்சினை தீர்க்கப்பட்டதாக அவர்களாகவே கூறிக்கொண்டனர். நடந்ததை பற்றி பேசுவதில் பயனில்லை. இனிமேலும் ஏதும் மாறப்போவது போல் அறிகுறி இல்லாததுதான் பிரச்சினை. கடைசியில் நீங்கள் செய்யப்போவது தினேஷ் கார்த்திக்கையும், குல்தீப் யாதவையும் நீக்குவதாகத்தான் இருக்கும். ஆனால் உண்மையில் பலமற்ற மிடில் ஆர்டருக்கு காரணம் தேர்வாளர்கள் ஐபில் திறன் அடிப்படையில் வீரர்களை தேர்வு செய்ததுதான்.
டி20 போட்டிகளுக்கு மட்டும் பொருத்தமான ஹர்திக் பாண்டியா, பந்த், ராகுல் போன்றோரைத்தான் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளுக்கு மீண்டும் மீண்டும் தேர்வு செய்கிறார்கள். தேர்வாளர்களின் இந்த போக்குதான் அம்பத்திராயுடுவை ஐபில் போட்டிகளிலிருந்து நேரடியாக உலகக்கோப்பைதான் என முடிவு செய்து ரஞ்சி போட்டிகளிலிருந்து ஓய்வுபெறச் செய்தது. மற்ற உள்ளூர் போட்டிகளில் தொடர்ந்து திறமையை காண்பித்து வரும் மயாங்க் அகர்வால், அபினவ் முகுந்த் போன்றோருக்கு கிடைக்காத வாய்ப்பு திடீரென தோன்று ஐபில் வீரர்களுக்கு கிடைத்து விடுகிறது. தேர்வாளர்கள் மாறாதபட்சத்தில் இனி இளம் கிரிக்கெட் வீரர்கள் சிஎஸ்கே அணியிலும், மும்மை இந்தியன்ஸ் அணியிலும் இடம்பெறுவதையே குறிக்கோளாக கொண்டு தயாராவார்கள்.
3 கேப்டன்களுக்கு தயாராவோம்
அணி நிர்வாகம் உண்மையான காரணங்களை அலச வேண்டிய தருணமிது. கேப்டன்களை கவருவதை மட்டுமே முதல் கடமையாக செய்துவரும் சில வீரர்கள் தொடர்ந்து இடம் பிடிக்கிறார்கள். தங்கள் கேப்டன்சி தவறுகளை உணர மூன்றுவிதமான கிரிக்கெட் போட்டிகளுக்கும் தனித்தனி கேப்டன்களை நியமிக்க வேண்டும். டெஸ்ட்க்கு ரகானேவையும், டி20க்கு ரோகித்தையும் கேப்டன்களாக்கினால் வேறு சில வீரர்களின் திறமையையும் நாம் கண்டுகொள்ளவும், ஒவ்வொருவருக்கும் தங்களது தவறுகளை கண்டுகொள்ளவும் வாய்ப்பு கிடைக்கும்.
மற்றபடி நடுவருடன் மோதும் கேப்டன்கள், நோபால் சர்ச்சைகள் போன்ற செயற்கையான சினிமாத்தனங்களை காட்டி ரசிகர்களை ஏமாற்ற உங்களுக்கென இருக்கிறது ஆண்டுதோறும் ஐபில். இந்திய கிரிக்கெட்டை ஜென்டில்மேன்களின் கேமாகவே தொடர விடுங்கள்.
முக்கிய செய்திகள்
வலைஞர் பக்கம்
8 days ago
வலைஞர் பக்கம்
9 days ago
வலைஞர் பக்கம்
14 days ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago