குருதி ஆட்டம் 10 - பைத்தியமா..?

உற்றுப் பார்த்துக் கொண்டிருந்த துரைசிங்கம், கனத்த கண்ணாடிக் கதவை ஓங்கி ஓங்கித் தட்டினான். கதவை தட்டும் சத்தம் தனக்கே கேட்காதது மேலும் அவனுக்கு கோபமூட்டியது.

துரைசிங்கம் பிறவியிலேயே வாய் பேச முடியாதவன் அல்ல; காது கேட்கும். ஆனால், வான் வெளியும் வங்கக் கடலும் கைக்கோத்துக் கிடக்கும் பெரும்பரப்பில் பேரிடிச் சத்தமே இறங்கினாலும் வெறும் தும்மல் சத்தமாக நசிந்து போகும். கடல் கீறிப் போகும் கப்பலின் இரைச்சல் வேறு சேர்ந்துகொள்ள, கதவை குத்தியவனின் கைதான் வலித்தது. காது கேட்கவில்லை.

கைக்குக் கிடைத்த இரை… கண்முன் தப்பி விட்ட துயரமும் கொலைவெறியும் கண்ணில் ஆட, வாயை அகலத் திறந்து கண்ணாடியைக் கடித்தான். பல் வழுக்கிக் கொண்டு போனது.

தலையால் முட்டி கதவை உடைக்க நினைத்தவன், நொடி யோசனையில் மேற்கே திரும்பி அரியநாச்சியைப் பார்த்தான்.

துரைசிங்கத்தை நோக்கி, அரியநாச்சி வந்து கொண்டிருந்தாள். வேகமாக வரும்படி கை அசைத்தான்.

ஏதும் புரியாதவளாக அருகே வந்தவள், “ஏய்… துரைசிங்கம், இங்கே என்ன பண்றே?” என்றாள்.

சொல்ல முடியாத சோகத்தோடும் ஏமாற்றத்தோடும் திரைச்சீலையை விலக்கி, கண்ணாடிக் கதவைக் காட்டினான்.

கதவில் நெற்றியைப் பொருத்தி, கண்ணாடி வழியாக ஊடுருவிப் பார்த்தாள்.

பச்சைக் கம்பள விரிப்பு, ‘மெத் மெத்…’ என நீண்டு கிடக்க, முதல் வகுப்பு அறைகள் ஆடம்பர மிடுக்குக் காட்டின. உள்ளிருப்பவர்கள் ஊதித் தள்ளும் புகை, கூடம் நிறைந்து மண்டியது. கப்பல் சிப்பந்திகள் பணிவுமிக்க சேவக நடை நடந்து ஊழியம் செய்தார்கள்.

போதையில் நடை பிரளும் மனைவியைத் தாங்கிப் பிடித்தவாறு, ஒரு வெள்ளையன் தன் அறைக் கதவைத் திறந்து உள்ளே நுழைந்து கொண்டிருந்தான்.

முழுக் கோழிச் சப்பையை இடது கையில் வைத்து கடித்துக் கொண்டே, வலதுகை குவளை மதுவை தழும்பிச் சிந்தவிடாமல் லாகவமாக நடந்து திரிந்தான் ஒரு போதைக்காரன்.

முகம் சுழித்துத் திரும்பிய அரியநாச்சி, துரைசிங்கத்தை ஏறிட்டுப் பார்த்தாள். “துரைசிங்கம்… இங்கே என்ன வேடிக்கை?” என்றாள்.

‘தகப்பனைக் கொன்ற வெள்ளை அதிகாரி ஸ்காட் இந்தக் கப்பலில்தான் இருக்கிறான். அதோ… அந்த அறைக்குள் நுழைந்தான். நான் பார்த்தேன்’ என்று சொல்ல ‘வாய்’ வரவில்லை அவனுக்கு.

“வா… நம்ம கமராவுக்கு போகலாம்” என்று சொன்ன அரியநாச்சிக்குள் ஏதோ உறுத்தியது. துரைசிங்கம் விளையாட்டுப் பிள்ளை இல்லை. விவரம் தெரிந்த நாளில் இருந்து தன் கைப் பக்குவத்தில் வளர்ந்தவன். தான் ஊட்டி வளர்த்த லட்சியத்தைத் தவிர, வேறொன்றும் அறியாதவன். குறி வைத்த ரத்தம் குடிக்கும் வரை, ஓய்தல் வேண்டாதவன். அவன் இங்கே எதைக் கண்டான்? யாரைக் கண்டு உறுமுகிறான்?

துருவி நோக்கினாள். துரைசிங்கத்தின் மிருகக் கண்களில் இயலாமை வழிந்தது. இருபது வருட வளர்ப்பில் இப்படி இவனைப் பார்த்ததே இல்லை. ஏதோ இருக்கு. துரைசிங்கத்தின் தோள் குலுக்கிக் கேட்டாள். “சொல்லு துரைசிங்கம்… யாரைப் பார்த்தாய்?”

அரியநாச்சியின் கேள்வியால் கொஞ்சம் உயிர் வந்தவனாக, முதலில் இருந்து தொடங்கினான். அடி வயிற்றில் இருந்து குரலெடுத்து, ‘ப்ப்பா… ப்ப்பா…’ என்றான். தன் தொண்டையைத் தானே நெறித்து, கண் செருக நாக்கை நீட்டி, செத்தது போல் நடித்துக் காட்டினான்.

அரியநாச்சிக்கு ஏதோ புரிவது போல் தென்பட்டதும் உற்சாகமானான். உள்ளங்கைகளைத் தொப்பி போல் குவித்து தன் தலையில் வைத்தான். வலது கையை நெஞ்சுக்கு நேராக நீட்டி, ஆட்காட்டி விரலால் துப்பாக்கிச் சுடுவது போல் சுட்டுக் காட்டினான். இரண்டு கண்களையும் விரல்களால் ஒற்றி, “ங்ஞா… ஆத்தேன்…” என்றான்.

“ஐய்யோ… நீ சொல்றது ஒண்ணுமே புரியலே. வா… போகலாம்” கையைப் பிடித்து இழுத்தாள்.

துரைசிங்கத்தின் சகலமும் ஒடுங்கியது. அரியநாச்சியின் கைப்பிடியில் ரெண்டு எட்டு நடந்து கொண்டே, முதல் வகுப்பு கண்ணாடிக் கதவைத் தலை திருப்பிப் பார்த்தான். மங்கலாய்த் தெரிந்த கண்ணாடியின் உட்பகுதியில் தன் அறைக்குள்ளிருந்து வெளி யேறிக் கொண்டிருந்தான் டி.எஸ்.பி. ஸ்காட். அரியநாச்சியின் கைப்பிடியை உதறிவிட்டு, கண்ணாடிக் கதவுப் பக்கம் பாய்ந்தான். மதுபானக் கூடம் நோக்கி நடந்து போய்க் கொண்டிருந்தான் ஸ்காட்.

வடிவான குடிசையை வேய்ந்து முடித் திருந்தான் தவசியாண்டிக் கோடாங்கி. தானும் தன் மகள் செவ்வந்தியும் வசிக்கும் குடிசையை விட விஸ்தாரமான குடிசை. தெற்கே பார்த்த வாசல். மச்சு குளிரும் மாசி மாதப் பனி கூட இறங்காத வகையில் தென்னங்கிடுகுகளை, கொல்லம் ஓடுகள் போல் வரிந்து வேய்ந்திருந்தான். தாழ்வாரத் திண்ணைகளை, சாணிப் பாலால் நெய் பதத்துக்கு மெழுகி இருந்தான். உள் வீட்டு மண் தளத்தை, வாழை இலையாய் இழைத்திருந்தான். கண்ணுக்குள் பொத்திப் பொத்தி வார்த்த காரியங்களில் இன்னும் ஏதோ மிச்சமிருப்பதாக எண்ணி, உறக்கம் தொலைத்து அலைந்தான்.

“புதுக் குடிசைக்கு யாருப்பா வர்றா…?” என்கிற செவ்வந்தியின் கேள்வியைக் காதிலேயே வாங்கவில்லை.

தகப்பனும் பேசாத தனித்த காட்டில், வண்ணப் பூக்களோடும், வண்ணத்துப் பூச்சிகளோடும், ஓடை நீரோடும், ஓங்கி உயர்ந்த மரங்களோடும்… சந்தனம் பிசைந்த நிலவொளியாய் கானக வலம் வந்தாள் செவ்வந்தி.

அரியநாச்சியும் ஓடி வந்து கண்ணாடி வழியாக பார்த்தாள். கூடத்து புகை மண்டலத்துக்குள் புகுந்திருந்த ஸ்காட், அரியநாச்சியின் கண்ணில் படவில்லை. கண்ணாடியை ஓங்கி குத்தி, கத்தினான் துரைசிங்கம். அரியநாச்சியின் தோள்களைப் பிடித்துக் குலுக்கி அலறினான்.

கப்பலின் மேல்தளத்தில் வலம் வந்து கொண்டிருந்த ஓர் அதிகாரி நெருங்கி வந்தான். துரைசிங்கத்தைக் கூர்ந்து பார்த்தான். மேலும் இரண்டு கப்பல் சிப்பந்திகள் வந்து கூடினார்கள்.

அரியநாச்சியைப் பார்த்து, “இங்கே உங்களுக்கு என்ன வேலை? இவன் உன் மகனா? ஏன் கத்துகிறான்… பைத்தியமா?” என்றான் அதிகாரி. அரியநாச்சியின் பதிலை எதிர்பாராமலே, “பைத்தியத்தை எல்லாம், ஏன் கப்பலில் அழைத்து வருகிறாய்? கரை இறங்கும் வரை உன்னால் இவனுக்கு காவல் இருக்க முடியுமா? போ… போ. உன் அறைக்கு அழைத்துப் போ…” என, பாந்தமாக புத்தி சொல்லிவிட்டு, சிப்பந்திகளுடன் கிழக்கே நடந்து போனான்.

உடுப்பணிந்தவர்கள் விலகி போனதும், துரைசிங்கம் முதல் வகுப்பு அறை வாசலிலேயே, இரண்டு கால்களையும் பரப்பி அமர்ந்து கொண்டான். அரியநாச்சி கெஞ்சியும் துரைசிங்கம் எழுவதாக இல்லை.

குருதி பெருகும்…
எண்ணங்களைப் பகிர்ந்துகொள்ள: irulappasamy21@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வலைஞர் பக்கம்

2 days ago

வலைஞர் பக்கம்

10 days ago

வலைஞர் பக்கம்

12 days ago

வலைஞர் பக்கம்

17 days ago

வலைஞர் பக்கம்

2 months ago

வலைஞர் பக்கம்

2 months ago

வலைஞர் பக்கம்

2 months ago

வலைஞர் பக்கம்

2 months ago

வலைஞர் பக்கம்

2 months ago

வலைஞர் பக்கம்

2 months ago

வலைஞர் பக்கம்

2 months ago

வலைஞர் பக்கம்

2 months ago

வலைஞர் பக்கம்

2 months ago

வலைஞர் பக்கம்

2 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

மேலும்