நாச்சியார் கோவிலில் நாங்கள் வசித்த குறுகலான தெருவின் வழியே சில குறிப்பிட்ட நாட்களில் இருட்ட ஆரம்பிக்கும் வேளையில் மக்கள் திடுதிடுவென்று விழுந்தடித்தபடி ஓடுவார்கள். அதே சமயம் இரண்டு தெருக்கள் தள்ளி ஒரு மைதானத்தில் இருந்த டூரிங் டாக்கீஸில் படம் ஆரம்பிக்கப் போவதை அறிவிக்கும் மேளவாத்திய இசைத்தட்டு உச்சஸ்தாயியில் முழங்கும். மற்ற நாட்களில் சினிமா பார்க்க சாவதானமாக நடந்துபோகிற மக்கள் அன்றைக்கு மட்டும் ஓடுவானேன்? அப்பாவிடம் கேட்பேன். அவர் எதிர் சுவரைக் காட்டுவார்.
சுவரொட்டிமீது ‘இப்படம் இன்றே கடைசி’ என்ற துண்டுச் சுவரொட்டி சிவப்பு நிறத்தில் குறுக்காக ஒட்டப்பட்டிருக்கும். அதற்குத்தான் இந்த ஓட்டம்! ஓடாத படங்களை ஓட வைக்க சினிமா கொட்டகைக்காரர்கள் கடைப்பிடிக்கும் உத்தி இது என்று அப்புறம்தான் தெரிந்தது.
திரைப்படம் ஆரம்பிக்கும் முன்னதாக வெள்ளித் திரையில் ‘பாதி டிக்கெட் பரிசோதனைக்கு உட்பட்டது’ என்ற வாசகம் விளம்பர ஸ்லைடுகளில் பளிச்சிட்டு மறையும். அப்போது அனிச்சையாகச் சட்டைப்பையைத் தொட்டுப்பார்த்துக்கொள்ளும் ரசிகர்களில் ஒருவனாக நானும் இருந்திருக்கிறேன். பாதி டிக்கெட் மட்டும் ஏன் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும்? மீதி டிக்கெட் என்னாகும் என்ற கேள்வி மனதைக் குடையும். ‘உங்கள் கால்களை முன் சீட்டில் வைக்காதீர்கள்’ என்ற ஸ்லைடு திரையில் ஓடும். விலுக்கென்று காலை இழுத்துக்கொள்வேன். ஆனால், பலரும் காலை எடுக்காமல் நீட்டிக்கொண்டிருப்பார்கள்.
‘திரையரங்கில் பீடி சுருட்டு பிடிக்காதீர்கள்’ என்ற எச்சரிக்கை பளிச்சிட்டாலும் பின்னால் புரொஜெக்டரிலிருந்து வரும் ஒரு பெரிய ஒளிக்கற்றையில் புகை வளையம் சுருள்சுருளாக எழுவது தெரியும். அதைத் தொடர்ந்து ‘சுவை மிகுந்தது சொக்கலால் பீடி’ என்ற விளம்பரமும் வெளிப்படுவது ஒரு நகைமுரண்.
டபரா முக்கியம்!
ஓட்டல்களில் தாங்கிக்கொள்ள முடியாத வாசகம் ஒன்று உண்டெனில் அது காப்பி டபராவில் எழுதப்பட்டிருக்கும். ‘இது மங்களாம்பிகா ஓட்டலில் திருடியது’ என்ற வாசகம்தான். நீண்ட காலமாக ஓட்டலுக்கு வரும் வாடிக்கையாளர்கள் மரியாதை என்னாவது என்று பொருமுவேன். நண்பர் சிரித்தபடி சொல்லுவார் “உங்களுக்கு மரியாதை முக்கியம் கடைக்காரருக்கு டபரா முக்கியம்.” பேருந்துகளில் ‘கரம், சிரம், புறம் நீட்டாதீர்கள்’ என்று தமிழ்க்கொடி நாட்டியிருப்பதைப் பார்க்கலாம். தஞ்சை மேலவீதியில் ‘இங்கு கர்னாடக சங்கீதம் கற்றுத்தரப்படும்’ என்று எழுதப்பட்ட போர்டுகளில் பளிச்சிடும் அழகான திருத்தமான தமிழ் எழுத்துக்களை இப்போதெல்லாம் பார்க்கவே முடிவதில்லை. அத்தர்பாய் கடையில் ‘ஞாயிறு விடுமுறை’ என்ற அறிவிப்புகூட வெகுதிருத்தமாய் எழுதப்பட்டு நெஞ்சைக் கொள்ளை கொள்ளும்.
‘நாய்கள் ஜாக்கிரதை’ என்று போர்டுகள் தொங்கும் வீடுகளை எனக்குப் பிடிப்பதில்லை. இந்த போர்டுகளில் பொதிந்திருக்கும் பயமுறுத்தல் நாயைவிட மோசம்.
தையல்கடைகளில் ‘காஜா எடுக்கப் பையன்கள் தேவை’ என்ற அறிவிப்பைப் பார்க்க கஷ்டமாக இருக்கும். கடையில் ஒரு ஏழைப் பையன் வந்து உட்கார்ந்து குனிந்த தலை நிமிராமல் காஜா எடுக்கும் காட்சி மனச்சித்திரமாய் எழுந்து மனசை நெருடும்.
மலைவாசஸ்தலம் ஒன்றில் பூங்காவை ஒட்டிய சாலையில் வாகன எச்சரிக்கைப் பலகைகள் ‘மான்கள் குறுக்கிடும்; கவனம் தேவை!’ என்ற அறிவிப்பில் ஒரு கவிதைத்தன்மை தென்படும். மெல்லிய தூரலில் நனைந்துவிடாமல் நெஞ்சோடு புத்தகங்களை அணைத்துக்கொண்டு சாலையை கடக்கும் கல்லூரி மாணவிகள் கூட்டம் இந்த அறிவிப்பின் பொருத்தம் உணர்த்தி உங்களைப் புன்னகைக்க வைக்கும்.
வேறு எங்கும் கிளைகள் கிடையாது
குறைந்த சுமை நிறைந்த வசதி’ என்ற ரயில்வண்டி வாசகமும் வாழ்க்கைப் பயணத்துக்கு உரியதுதான். ‘இங்கு செய்யப்படும் பட்சணங்கள் சுத்தமான நெய்யினால் செய்யப்பட்டவை அல்ல’ என்ற அறிவிப்பு திருநெல்வேலி ஸ்பெஷல். என்ன ஒரு நேர்மை! சாதாரணக் கடைகளில்கூட ‘எங்களுக்குத் தமிழ்நாட்டில் வேறு எங்கும் கிளைகள் கிடையாது’ என்ற அறிவிப்பு எழுதப்பட்டிருக்கும். அவ்வளவு நயமான சரக்குகளை விற்கும் ஒரே கடையாக்கும் நாங்கள் என்கிற பெருமிதம் வழியும் அறிவிப்பு அது.
பள்ளிகளில் சாரணர் இயக்கத்தின் ‘வழிகாட்டும் வாசகம்’ எனக்கு மிகவும் பிடிக்கும். ‘தயாராக இரு!’ எத்தனை ரத்தினச் சுருக்கமான புத்திமதி!
அப்பா பள்ளிக்கூடத்தில் சாரணர்களுக்கான மாஸ்டர். பெரிய காக்கி ட்ரவுசர், சட்டை, குஞ்சம்வைத்த தொப்பியுடன் சாரணர் உடையில் வாரத்தில் ஒருநாள் காட்சியளிப்பார். நெஞ்சில் “தயாராக இரு” என்ற வாசகம் எழுதிய வில்லை குத்தியிருக்கும்.
‘இங்கு அரசியல் பேசாதீர்கள்’ என்ற வாசகத்தை சிகை அலங்காரக் கடைகளில் சர்வசாதாரணமாகப் பார்க்கலாம். அங்கேதான் அரசியல் பேச்சு அமளி துமளிப்படும். சவரம் செய்த நுரைபூத்த கத்தியைக் கழுத்துக்கு நேராக ஆட்டியபடி, சிகையலங்காரம் செய்யும் சிங்காரம் ‘என்ன நான் சொல்றது?’ என்று கேட்டால் யாருக்கு மறுக்கத் தோன்றும்?
-தஞ்சாவூர்க் கவிராயர், ‘தெருவென்று எதனைச் சொல்வீர்’ உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர், தொடர்புக்கு:-thanjavurkavirayar@gmail.com
முக்கிய செய்திகள்
வலைஞர் பக்கம்
8 days ago
வலைஞர் பக்கம்
8 days ago
வலைஞர் பக்கம்
13 days ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago