அமெரிக்க அரசியல் அறிவியலாளரும், பொருளியல் துறையில் நோபல் பரிசு பெற்ற முதல் பெண்மணியுமான எலினார் ஆஸ்ட்ரோம் (Elinor Ostrom) பிறந்த தினம் இன்று (ஆகஸ்ட் 7).
அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:
* அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் (1933) பிறந்தார். பொருளாதாரத் தேக்கநிலையால் உலகம் முழுவதும் பாதிக்கப்பட்ட நிகழ்வு, சிறுவயதில் இவரிடம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இதனால், அரசியல் அறிவியல், பொருளியல், கூட்டுறவு துறைகளில் இயல்பாகவே ஆர்வம் பிறந்தது.
* கலிபோர்னியா, லாஸ் ஏஞ்சல்ஸ் பல்கலைக்கழகங்களில் அரசியல் அறிவியலில் இளங்கலை, முதுகலை, முனைவர் பட்டங்களைப் பெற்றார். நிலத்தடி நீர்மட்டம், பாசன அமைப்புகள், மேய்ச்சல் நிலங்கள், காடுகள், மீன் வளர்ப்பு, நகர்ப்புற காவல்துறை உள்ளிட்ட பல்வேறு களங்களில் ஆய்வு மேற்கொண்டார்.
*புளூமிங்டனில் உள்ள இண்டியானா பல்கலைக்கழகத்தில் அரசியல் அறிவியல் பேராசிரியராக 1965 முதல் 1991 வரை பணியாற்றினார். அங்கும் தொடர்ந்து பல ஆராய்ச்சிகளை மேற்கொண்டார். அங்கு தனது பெயரில் அரசியல் அறிவியல் கொள்கை ஆராய்ச்சிக்காக தனி துறையை உருவாக்கி அதன் இயக்குநராகவும் பணியாற்றினார்.
*பொருளாதாரப் பிரச்சினைகள் குறிப்பாக சுற்றுச்சூழல், ஆதார வளங்களைப் பாதுகாப்பது தொடர்பான சிக்கல்களுக்கு தீர்வு காண்பதில் அதிக ஆர்வம் காட்டினார். இயற்கை வளங்களைப் பயனாளிகளே சுரண்டி அழிக்கின்றனர் என்பது அன்றைய காலக்கட்டத்தில் பொதுக் கருத்தாக இருந்தது. இதுகுறித்து கள ஆய்வுகளை மேற்கொண்டார்.
* மேய்ச்சல் நிலங்கள், மீன்பிடி நீர்நிலைகள், வனப்பகுதிகளை உள்ளூர் சமூகங்கள் எவ்வாறு பகிர்ந்துகொண்டு அவற்றை நிர்வகிக்கின்றனர் என்பதைக் கண்டறிந்து மேற்கண்ட பொதுக் கருத்தை ஆதாரத்துடன் மறுத்தார். பெரும்பாலான நவீன பொருளாதார நிபுணர்களின் முடிவுகளில் இருந்து இவர் முற்றிலுமாக மாறுபட்டிருந்தார்.
* அமெரிக்கா, ஸ்வீடன், ஸ்பெயின், நைஜீரியா, பொலிவியா, இந்தோனேஷியா, நேபாளம் உள்ளிட்ட பல நாடுகளில் நீர்ப்பாசனம், மீன்பிடித் தொழில், வனத்துறை மேலாண்மை குறித்து தனித்தனியாக விரிவான ஆராய்ச்சிகளை மேற்கொண்டார். அறிவார்ந்த விருப்பக் கோட்பாடு (Rational Choice Theory) மற்றும் மேம்பாட்டுப் பொருளாதார நுட்பங்களைத் தனது ஆராய்ச்சிகளுக்குப் பயன்படுத்தினார்.
* காடுகள், நீர்ப்பாசனத் தொகுதிகள், புல்வெளி மேய்ச்சல் நிலங்கள் போன்ற இயற்கை வளங்களின் பயன்பாட்டை அரசு மற்றும் தனியாரின் கட்டுப்பாட்டில் இருந்து விடுவித்து, சாதாரண மக்களே சிறப்பாக நிர்வகிக்க முடியும் என்பதை செயல்விளக்க அடிப்படையில் நிரூபித்துக் காட்டினார்.
* இந்த சாதனைக்காக, கலிபோர்னியாவைச் சேர்ந்த பொருளாதார நிபுணர் ஆலிவர் வில்லியம்சன்னுடன் இணைந்து இவருக்கு 2009-ல் பொருளியல் துறைக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. இதன்மூலம் அத்துறையில் நோபல் பரிசு பெற்ற முதல் பெண்மணி என்ற பெருமையும் பெற்றார்.
* பொதுக் குளங்களை நிர்வகித்தல் உள்ளிட்ட பல வழிகாட்டி நெறி களை வகுத்துக் கொடுத்தார். பொதுவான இயற்கை வளங்கள், பொது ஆதாரங்களைப் பராமரிப்பது, அவற்றில் இருந்து கிடைக்கும் பயன்களைப் பகிர்ந்துகொள்வது ஆகியவை தொடர்பாக தெளிவான வரையறைகளை வகுத்துக்கொள்வது அவசியம் என்று வலியுறுத்தினார்.
* அரசியல் அறிவியல், பொருளாதாரம் உள்ளிட்ட துறைகளில் பல நூல்கள் எழுதியுள்ளார். பொருளாதாரக் களத்தில் திருப்புமுனையை ஏற்படுத்திய எலினார் ஆஸ்ட்ரோம் 79-வது வயதில் (2012) மறைந்தார்.
முக்கிய செய்திகள்
வலைஞர் பக்கம்
3 days ago
வலைஞர் பக்கம்
4 days ago
வலைஞர் பக்கம்
9 days ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago