கன்னட இலக்கியவாதி
நவீன கன்னட இலக்கியத்தின் முன்னோடி படைப்பாளிகளில் ஒருவரும் சாகித்ய அகாடமி விருது வென்றவருமான யஷ்வந்த் விட்டோபா சித்தால் (Yashwant Vithoba Chittal) பிறந்த தினம் இன்று (ஆகஸ்ட் 3). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:
* கர்நாடக மாநிலம், வட கன்னட மாவட்டத்தில் உள்ள ஹனெஹள்ளி என்ற இடத்தில் பிறந்தார் (1928). தனது கிராமத்தில் ஆரம்பக் கல்வியும் கும்தா என்ற இடத்தில் உயர் நிலைப் பள்ளிக் கல்வியும் பயின்றார்.
* பம்பாய் பல்கலைக்கழகத்தில் அறிவிய லிலும் பின்னர் தொழில்நுட்பக் கல்வியிலும் இளங்கலைப் பட்டங்கள் பெற்றார். அமெரிக்காவின் ஸ்டீவன்ஸ் இன்ஸ்ட்டிடியூட் ஆஃப் டெக்னாலஜியில் ரசாயனப் பொறியியலில் முதுகலைப் பட்டம் பெற்றார்.
* பாலிமர் அறிவியல் மற்றும் செயற்கை ரெசின்கள் குறித்து ஆராய்ந்து அந்தக் களத்தில் பல புதுமைகளை அறிமுகப்படுத் தினார். லண்டனில் உள்ள பிளாஸ்டிக்ஸ் அன்ட் ரப்பர் இன்ஸ்ட்டிடியூட் நிறுவனத்தின் ஃபெல்லோவாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பம்பாய் திரும்பிய இவர், பணிகளுக்கிடையே இலக்கிய ஆர்வத்தையும் தக்கவைத்துக் கொண்டார்.
* முதலில் சிறுகதைகளையும் பின்னர் நாவல்களையும் படைத்தார். முதன்முதலாக 1949-ல் ‘ஓம்மிய ஹள்ளு’ என்ற நாவலை எழுதினார். அது நல்ல வரவேற்பைப் பெறவே தொடர்ந்து எழுதி வந்தார்.  இவரது படைப்புகளின் கதைக்களங்கள், இவர் இளமையில் வாழ்ந்த இடங்கள் அல்லது அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளாக இருந்தன. வாழ்க்கை, மனித உறவுகள் குறித்த ஆழமான அக்கறையும் புரிதலும் இவரது படைப்புகளில் பிரதிபலித்தன.
* அடுத்தடுத்த நாவல்கள், நகர வாழ்வின் எதார்த்தம், நவீன இந்திய வாழ்க்கையின் சிக்கல்களை மையமாகக் கொண்டிருந்தன. மேலும் சமகாலத்திய சமுதாய - அரசியல் உண்மைகளை அடிப்படையாகக் கொண்டும் எழுதினார். கன்னடத்திலும் ஆங்கிலத்திலும் எழுதினார். இந்தி, மராத்தி மொழிகளில் சிறந்த புலமை பெற்றிருந்தார்.
* ‘ஓம்மிய ஹள்ளு’, ‘மூரு தரிகாலு’, ‘புருஷோத்தமா’, ‘புட்டண்ணா ஹெஜ்ஜே கெனோடில்லா’ உள்ளிட்ட நாவல்கள், ‘ஆட்டா’, ‘சந்தர்ஷனா’, ‘சித்தார்த்தா’, ‘ஓடிஹேடா முட்டி பந்தா’, 2 தொகுதிகளாக வெளிவந்த ‘சமாக்ர கதேகளு’ என்ற சிறுகதைத் தொகுப்பு, ‘தி பாய் ஹு டாக்ட் டு ட்ரீஸ்’ சிறுகதைத் தொகுப்பு, ‘சாகித்ய சப்த தந்துகளு’, ‘அந்த்தகரணா’ உள்ளிட்ட விமர்சன நூல்கள் ஆகிய இவரது படைப்புகள் கன்னட இலக்கியத்துக்கு வளம் சேர்த்தன.
* பல்வேறு இதழ்களில் ஆங்கிலத்திலும் கன்னட மொழியிலும் விமர்சனக் கட்டுரைகளை எழுதிவந்தார். தாய்மொழி கொங்கணியாக இருந்தாலும் கன்னட மொழியில் இவரது புலமையும் வார்த்தைகளைத் தேர்ந்தெடுப்பதில் உள்ள நிபுணத்துவமும் அனைவரையும் அதிசயிக்க வைத்தன.
* இவரது படைப்புகள், ஆங்கிலம் உள்ளிட்ட பல மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. ‘மூரு தரிகாலு’ நாவலைத் தழுவி கன்னடத்தில் திரைப்படம் தயாரிக்கப்பட்டது. ‘தி லைப்ரரி ஆஃப் காங்கிரஸ்’ என்ற அமெரிக்க காங்கிரஸ் நூலகத்தில் இவரது 15 நூல்கள் இடம் பெற்றுள்ளன.
* ‘புருஷோத்தமா’ என்ற படைப்புக்காக 1983-ல் சாகித்ய அகாடமி விருது வென்றார். மேலும் 1979, 1980 மற்றும் 1990-ம் ஆண்டுகளில் கர்நாடகா சாகித்ய அகாடமி விருது இவருக்கு வழங்கப்பட்டது. மாஸ்தி விருது, ஆதிகவி பம்பா விருது உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றவர். தலைசிறந்த கன்னடப் புனைக்கதை எழுத்தாளர்களில் ஒருவரான யஷ்வந்த் விட்டோபா சித்தால் 2014-ம் ஆண்டு மறைந்தார். -
முக்கிய செய்திகள்
வலைஞர் பக்கம்
3 days ago
வலைஞர் பக்கம்
4 days ago
வலைஞர் பக்கம்
9 days ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago