நிதானமாக யோசித்துப் பார்த்தால்...

By பால்நிலவன்

ஒரு விஷயம் பரபரப்பாக தோன்றுவதும் பின்னர் நிதானமாக யோசித்துப் பார்த்தால் அது ஒன்றுமே இல்லை என்பதும் மிகவும் தாமதமாகவே நமக்குத் தோன்றிவிடுகிறது. உதாரணமாக பிக்பாஸ். பொழுதுபோக்கு ஊடகத்தைப் பொறுத்தவரை ஒரு டிவி நிகழ்ச்சியின் வெற்றி உறுதி என்பது அது ஒளிபரப்பப்படுவதற்கு முன்பே பலவகையில் எதிர்பார்ப்புகளை உருவாக்கிவிட வேண்டும்.

''நம் எல்லோருக்கும் பல முகங்கள் இருக்கின்றன. உங்களைச் சுற்றி 64 கேமராக்கள்.... நீங்கள் யார் என்பதை வெளிப்படுத்தும் நிகழ்ச்சி... வீட்டில் ஒரு முகம், அலுவலகத்தில் ஒரு முகம், நண்பர்களிடத்தில் ஒரு முகம், பொது இடத்தில் ஒரு முகம் தனி இடத்தில் ஒரு முகம்''- என்று கமல் திடீரென்று தோன்றி டிவி விளம்பரங்களுக்கு மத்தியில் சில மாதங்களுக்கு முன் பேசினார், பிக்பாஸ் பற்றிய அந்த விளம்பரம், அட நம்மைப் பற்றியே பேசுவதுபோல இருக்கிறதே என அந்த நிகழ்ச்சிக்காக ரசிகர்களை காத்திருக்க வைப்பதிலேயே வெற்றி எனும் விதையை ஊன்றிவிட்டது.

அதன்பிறகு அந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர்கள் நடந்துகொண்டது, அவர்கள் பற்றி அறியும் ஆவல், நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர்களின் சொந்த வாழ்க்கை குறித்த செய்திகள்... அது குறித்த நமது நிலைப்பாடுகள்... இவைகள் ஒரு ரசவாதம் போல கலந்து அடுத்துவரும் நிகழ்ச்சிகளில் அவர்கள் குறித்த நமது பார்வைகள் பன்மடங்கு பெருகியிருந்தது... உண்மையில் அந்த நிகழ்ச்சியில் வலம் வந்தவர்கள் அவர்கள் அவர்களாகத்தான் இருந்தார்கள். அப்படி இருந்தார்களா என்பதும் ஒரு கேள்வி. அப்படி இருக்க வைக்கப்பட்டார்கள் என்று வேண்டுமானால் இவ்வாக்கியத்தில் சற்று திருத்தம் செய்து கொள்ளலாம்.

நாட்டில் நடக்கும் எவ்வளவோ பிரச்சினைகள் பின்னுக்குத் தள்ளிவிட்டு இந்நிகழ்ச்சியைப் பற்றி பேச்சு, இந்நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் நடந்துகொண்ட அணுகுமுறைகள் குறித்து பஸ்ஸிலும் ஓட்டலிலும் அலுவலகங்களிலும் வீட்டு வரவேற்பறையிலும் பலத்த விவாதமாக்கப்பட்டுவிட்டன. மாற்றங்களை உருவாக்குபவர்கள் என்ற பொருளில் மெரினா புரட்சியை உருவாக்கிய, தமிழக இளைஞர்களை உரசிப் பார்த்த ஜல்லிக்கட்டு போராட்டத்தின்வழியே பிரபல்யமடைந்த ஜூலி என்ற இளம்பெண்ணும் நாம் பெரிய திரையில் பார்த்த நன்கு அறிமுகமான பிரபலமான முகங்களோடு இணைந்து பிக்பாஸ் நிகழ்ச்சிக்குள் இடம்பெறுகிறார். இவ்வளவு காலம் தமிழக அரசியலைப் பேசாத கமல் சில மாதங்களாக தீவிரமாகப் பேசத் தொடங்குகிறார்.

பிக் பாஸ் உச்சம்பெறும்போது அவரும் நிகழ்ச்சிக்கு வெளியே நாட்டு நடப்பைப் பற்றி கவலை கொள்பவராக, தமிழக அரசைப் பற்றியும் தமிழக அரசியல் சூழ்நிலைப் பற்றியும் பேட்டிகள் தருகிறார். நிகழ்ச்சியில் வாரம் ஒருவர் வெளியேற்றப்படுகிறார். வெளியேற்றப்பட்டவரின் குணநலன்கள் அது நிகழ்ச்சியின் ஸ்கிரிப்ட்டுக்கானது என்பதை மறக்கும்அளவுக்கு பார்வையாளர்களின் சொந்த வாழ்க்கை தருணங்களில் அவர்களது குணநலன்கள் பேசப்பட வைக்கிறார்கள்.

இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற ஓவியா என்ற துறுதுறு பெண்ணின் காதல் தோல்வி அது நிகழ்ச்சியின் ஸ்கிரிப்டில் இல்லை, அது இயல்பானது உணர்வுபூர்வமானது உண்மையானது என வாதிடும் அளவுக்கு அவரது காதலுக்கு வக்காலத்து வாங்க பலரின் இதயங்களும் களவாடப்படுகின்றன. இதுதான் இந்த ஸ்கிரிப்டின் வெற்றி.

அதுமட்டுமல்ல அந்த தொலைக்காட்சி நிகழ்ச்சியின் ஒரு பகுதியான ‘வாரம் ஒருவர் வெளியேற்றப்படுதல்’ என்ற வகையில் ஓவியா வெளியேற்றப்படுவது ஒரு அப்பாவியான இளம்பெண்ணுக்கு இழைக்கப்பட்ட அநீதியாக நிகழ்ச்சியைக் காணும் ரசிகர்கள் கருதினார்கள். ஓவியா மனநல டாக்டரை நாடுவதுதான் நல்லது. இல்லையெனில் என்னாகுமோ என்றெல்லாம் நிகழ்ச்சிக்கு வெளியிலுள்ள பலரும் யோசனை தெரிவித்தார்கள். பெட்டிக்கடையில் தொங்கும் சில செய்தித்தாள் சுவரொட்டிகளில் ‘ஓவியா தற்கொலை முயற்சி’ என்று ஒருநாள் பார்க்க நேர்ந்த போது ஒருகணம் எனக்கு வியப்பு கலந்த அதிர்ச்சியில் தூக்கிவாரிப் போட்டது.

அப்படி ஏற்பட்டது, புறக்கணிப்பு எனும் வலிக்காக ஓர் இளம் உயிர் மேற்கொண்ட தற்கொலை முயற்சி எனற நிலைக்காக அல்ல. அந்த செய்தித்தாள் தனது ஊடக வலிமையைக் கொண்டு இவ்வளவு மோசமாக பொதுவெளியில் நாட்டில் நடக்கும் பல்வேறு நிகழ்வுகள் சம்பந்தப்பட்டு ஏதேதோ சிந்தனையில் அல்லது அப்படியெதுவும் இல்லாமல்கூட சாதாரண மனநிலையில் சாலையில் நடந்துசெல்பவர்களிடம் கூட பாதிப்பை கட்டமைக்கிறதே என்பதற்காகத்தான் அந்த வியப்பு கலந்த அதிர்ச்சி.

நானும் ஓவியாவின் வாழ்க்கைப் பின்னணியை, நடந்தது என்ன என்பதை அறிய யூடியூப்பில் கிடைத்த வெவ்வேறு சிறு, குறு வீடியோக்களின் வழியே தெரிந்துகொள்ள முயன்றதை நினைத்துப் பார்க்கையில் எனக்கே சிரிப்பு வருகிறது. வாழ்க்கையை இவ்வளவு துணிச்சலாக எதிர்கொண்ட பெண்ணுக்கா இந்த நிலை என்று நானும் ஒருநாள் உணர்ச்சிவசப்பட்ட நிலைக்குத் தள்ளப்பட்டேன், ஒரு பெண் தன் காதலைச் சொல்வதற்குக் கூட உரிமையில்லையா என்ன கொடுமை எந்த மாதிரி ஒரு சமூகத்தில் நாம் வாழ்கிறோம் என ஒருநாள் கூட நிகழ்ச்சியைப் பார்க்காத என்னைப் போன்ற ஒருவரையும்கூட உணர்ச்சிவசப்படச் செய்த வகையில் தள்ளச் செய்தது. அந்தவகையில் இதெல்லாம் நிகழ்ச்சியின் வெற்றி அல்லாமல் வேறென்ன?

ஒரு பரபரப்பான ஊடக வெளிச்சத்தைத் தாண்டி இதை நிதானமாக யோசித்துப் பார்த்தால் ஒன்றுமேயில்லை என்பதை அறியமுடியும். உணரமுடியும். இவர்களை விட நாம் அன்பு செலுத்தமுடியும், அன்பை இனங்காண முடியும். இவர்களை விட நாம் சிலரை வெறுத்து ஒதுக்க முடியும். நாம் சிலரிடம் வெறுத்து ஒதுக்கப்படவும் நேரும். அப்போதெல்லாம் தனியே வாய்விட்டு சிரிக்க, மனம்விட்டு அழ, தோள்கொடுக்க, தோள்கிடைக்க இயலாமல் தவித்த தருணங்களை விட இது உயிரோட்டமானதா?

மூத்த மனநல மருத்துவர் அசோகன், தி இந்து ஆன்லைன் வீடியோ பேட்டியில் பிக்பாஸ் நிகழ்வின் பக்கவிளைவுகள் குறித்து, அவர் குறிப்பிட்டுச் சொன்னதுபோல் இந்நிகழ்ச்சியின் வெற்றி முழுக்க முழுக்க எடிட்டிங்கில்தான் உள்ளது. ஒவ்வொருநாளின் முழுநாள் நிகழ்வுகளையா காட்டுகிறார்கள்? தொலைக்காட்சி ஒளிபரப்பின் பிரைம்டைம் கட்டத்திற்குள் அடங்குவதுதானே... அவர் சொல்வது போல ஒன்று சாப்பிடுகிறார்கள் அல்லது மற்றவர்களைப் பற்றி பேசுகிறார்கள் அல்லது தூங்குகிறார்கள்...

90களின் பின்பாதி வருடங்களில் (95-2000) டிவி நிகழ்ச்சிகளைப் பார்த்து மதிமயங்கியதுண்டு நான். சென்னைக்கு இரண்டாவது முறை வந்து புதியதாக ஒரு அலுவலகத்தில் பணியில் இணைந்து பணியாற்றிய அலுவலகத்தின் பணி (9-5) நேரம்போக, ஒரு பேயைப் போல அலைந்து தொலைக்காட்சி தொடரில் பங்கேற்றவர்களை கிட்டத்தட்ட நூற்றுக்கும் மேற்பட்ட ஊடக வெளிச்சக் கலைஞர்களை பேட்டியெடுத்து நாளிதழ், டாட்.காம்களில் வெளியிட்டு சுகங்கண்டதில் ஒரு மோகம் இருந்தது எனக்கு... அதன் தொடர்ச்சியாகவோ என்னவோ ஒருசில தொலைக்காட்சியிலும் டிவி நிகழ்ச்சி தயாரிப்புப் பணிகளின் முக்கிய துணைக்கூறாக நான் இருக்க நேர்ந்தது.

அப்போது சிலவற்றில் வெற்றியடைந்தாலும் பலவற்றில் தோல்வியடைந்தேன். தோல்வி அடைந்ததற்கு என்ன காரணம் என பலமுறை நான் யோசித்ததுண்டு. ஏனெனில் வெற்றிகரமான தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் ஒருசிலவற்றைத் தவிர (அது கற்பனையோ நிஜமோ) பலநிகழ்ச்சிகள் ரசிகர்களை கேளிக்கையான ஒரு பாதையில் அழைத்துச் செல்கிறது. அல்லது உணர்ச்சிவசப்பட வைக்கிறது. சமூகசிந்தனைபோல பாவ்லா காட்டுகிறது. எனக்கு அந்தவகையான கேளிக்கையான பாதைகளில், உணர்ச்சிவசப்படுத்துதலில், பாவ்லாவான சமூக அக்கறை உருவாக்குதலில் ரசிகர்களை எந்தப் பாதை வழியாகவும் அழைத்துச் செல்லும் தகுதி சிறிதும் இல்லை என்பதை புரிந்துகொள்ளும் ஒரு வாய்ப்பாகவும் அது அமைந்தது. பார்த்துக்கொண்டிருந்த வேலையிலிருந்து வெளியேவந்து இந்த மாதிரி முயற்சிகளில் ஈடுபட்டதால், உண்மையில் ஒருபக்கம் வாழ்வின் வயிற்றுப் பசி குடலைப்புரட்டித் தின்ன வேதனையோடு வெளியேறிய நாட்கள் அவை.

இப்படி ஊடகங்களில் வெற்றிக்கொடி நாட்ட முடியாமல் இயல்புநிலைக்கு திரும்பிய ரசனைத்தரம் குறித்த சிந்தனை படைத்தவர்கள் ஏராளம். வெளியே வந்தாலும் ரசிகர்களை சின்னத்திரையோடு தரம் தாழாமல் தக்கவைக்க எவ்வகையான உத்திகளை கையாள வேண்டும் என்றெல்லாம் பலவாறாக யோசித்ததுண்டு. அப்படியெல்லலாமல் நல்ல நிகழ்ச்சிகள் வரவில்லையென மட்டையடி அடிக்கமுடியாது. சிற்சில நல்ல நிகழ்ச்சிகள் தொலைக்காட்சிகளில் வரத்தான் செய்தன.

மேலும் வித்தியாசமாக ஏதாவது செய்ய வேண்டும் என யோசிக்கிறவர்கள் பலவிதமான உலகளாவிய ஊடகங்களைக் காண்பது வழக்கம். அவை பலநேரம் பிடித்தமாகவும் பலநேரம் சுவையாகவும் சிலநேரம் அருவறுக்கத் தக்கவையாகவும் இன்னும் சிலநேரம் கர்ணகொடூரமாகவும் இருக்கும். நான் கடைசியாக சொன்னதற்காக ஓர் உதாரணம் மட்டும் இங்கு காட்டலாம்.

டபிள்யூடபிள்யூ எஃப் எனப்படும் மல்யுத்தப் போட்டி. அவ்வகையான நிகழ்ச்சிக்குக் கிடைத்த வெற்றி சாதாரண வெற்றியல்ல. பூமிப்பந்தின்மீதுள்ள எந்த ஒரு கண்டத்திலோ நடக்கும் அந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற மல்யுத்த வீரர்களின் ஸ்டிக்கர்கள் நம் ஊர் கடைகளில் விற்கப்பட்டன. காலையில் உடைச்ச கடலை, பச்சமிளகாய், தக்காளி, உளுத்தம்பருப்பு இவற்றோடு வீட்டில் உள்ள குழந்தைகள் கேட்டுள்ள அவர்களுக்குப் பிடித்த மல்யுத்த வீரர்களின் ஸ்டிக்கர்கள் என மளிகை லிஸ்ட் எடுத்துச்சென்று வாங்கிவந்த அனுபவம் நம்மில் பலருக்கும் இருக்கக்கூடும்.

ஒருவர் ஒருவரை அடித்து மூக்கில் ரத்தம் வரவழைத்து அவரை வீழ்த்தி அவர்மேல் ஏறி பலவறாக மிதித்து மாமிச மலைகள் துவம்சம் செய்வதை நம் குழந்தைகள் ரசிப்பதை நம்மால் தடுக்கமுடியவில்லை. தாங்கள் செய்ய முடியாததை அவர்கள் செய்கிறார்கள்.... ''நாளை நான் பெரியவனான பிறகு இவ்வாறு செய்வேன்'' என்று அவர்கள் மனதில் சின்னதான விதை ஊன்றப்படுகிறது. சமூக அக்கறை என்றால் என்ன? அது கறுப்பா சிகப்பா என கேட்கும் அவர்கள் சமூகத்தின் ஒருபகுதியாக பிற்காலத்தில் வளர்வதை அத்தகைய நிகழ்ச்சிகளைப் போன்ற பல்வேறு ஊடக தாக்கங்களே காரணம்.

ரெஸ்லிங் சண்டைக்காட்சியின் நிகழ்ச்சிகளோடு நேரடியாக பிக்பாஸை ஒப்பிட முடியாது, வேண்டியதில்லை என்றாலும் எத்தகைய தெளிவான சமூகப் பார்வை, நடக்கும் எந்த நிகழ்வையும் இன்னொரு கண்கொண்டு பார்க்கும் வல்லமை உள்ளவர்களையும் வசியம் செய்துவிட்ட மகா காரியத்தை பிக்பாஸ் செய்துவிட்டது.

அதற்குக் காரணம் யதார்த்த சூழலில் இன்று நாளுக்கு நாள் சக மனித உறவு என்பது உத்தரவாதமற்ற திசையில் போய்க்கொண்டிருக்கும் நிலையில், பல்வேறு விதங்களில் உருவெடுக்கும் குடும்பப் பிரச்சினைகள் என்ற பிக்கல்பிடுங்கல் அற்ற, வேளைக்குவேளை சாப்பிடவும், தங்களோடு உலவவிடப்பட்ட இனிய பார்வையும் புன்னகையும் பரிமாறிக்கொள்ளும் மனிதர்களோடு சாப்பிடவும் தூங்கவும் பேசவும், பிரைம் டைமில் ஒளிபரப்பாகும் சின்னத்திரையின் ஒரு நிகழ்ச்சிக்காக ஏற்பாடு செய்யப்பட்ட வீடு மாதிரியே தோற்றமளிக்காத,  வண்ணக்கலவையிட்ட அட்டைச்சுவர்களின் கலைவடிவமைப்பு என்றாலும், செயற்கையாக உலவவிடப்பட்டவர் அம்மனிதர்கள் என்றாலும் அங்கேயும்கூட மனித மனத்தின் ஆசாபாசங்களின்  பரஸ்பர நட்புறவுகளின் நெருக்கத்தை பார்வையாளர்களை இதயத்தின் நெருக்கத்தோடு அலசியதுதான்.

கிடைத்தற்கரிய வாய்ப்புகளில் ஊடகத்தில் வெற்றிமிக்க ஒரு நிகழ்ச்சியை எனக்கு உருவாக்கமுடியாமல் போனதற்கு பல ஆண்டுகளுக்குமுன் நான் வருந்தியது என்னவோ உண்மைதான். ஆனால் அப்படி வருந்தியது நிச்சயம் இந்த மாதிரியான ஒரு நிகழ்ச்சிக்காக இல்லை.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வலைஞர் பக்கம்

4 days ago

வலைஞர் பக்கம்

4 days ago

வலைஞர் பக்கம்

9 days ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

மேலும்