மிஸ்டர் உல்டா!

By ஜாசன்

(கொட்டை எழுத்து தலைப்பு செய்திகள் மட்டும் நிஜம். உள்செய்தி எல்லாம் மிஸ்டர் உல்டாவின் பீம் சர்வீஸ்)

தலைவர் தேர்தலில் தம்பிதுரை மூலமாக சசிகலாவிடம் ஆதரவு கேட்ட மோடி: வெற்றிவேல் தகவல்

டிடிவி தினகரனின் தொண்டர் தலைவர் பி.வெற்றிவேலை தினகரன் வீட்டு வாசலில் வழிமறித்த உல்டா, ‘‘உங்க மேல மன்மோகன் சிங் ரொம்ப கோவமா இருக்காரு’’ என்ற உசுப்பலோடு தொடங்கினார். பதறிப்போன வெற்றிவேல், ‘‘அய்யய்யோ. அவரைப் பத்தி நான் எதுவும் பேசலையே’’ என்றார்.

உடனே உல்டா, ‘‘அதுதான் அவர் கோபமே. நரசிம்ம ராவ் பாணியில் முதல்வர் பழனிசாமி மவுனம் சாதிக்கக்கூடாதுன்னு சொன்னீங்க இல்ல... இது மன்மோகன்ஜி காதுக்கு போயிடுச்சு. ‘‘நான்கூடத்தான் பிரதமரா இருந்தப்போ வாயே தொறக்கலை. முன்னாள் காங்கிரஸ்காரரான வெற்றிவேலுக்கு இது நல்லா தெரிஞ்சும், என் பெயரை அவர் சொல்லவே இல்லை’’ன்னு மன்மோகன் ரொம்ப வருத்தப்பட்டார்’’ என்று விளக்கினார்.

‘‘ஓ, இதான் மேட்டரா, அடுத்து தலையைக்கூட ஆட்டாத தலையாட்டி பொம்மை பத்தி ஒரு டாபிக் வச்சிருக்கேன். அதுக்கு மன்மோகன்ஜி பெயரைப் பயன்படுத்திக்கிறேன்’’ என்றபடி காரில் ஏறினார் வெற்றிவேல்.

‘‘ஆமா, அதிமுக தலைமை, தலைமைங்கிறாங்களே, அப்படீன்னா யாரு?’’ என்றார் உல்டா. ‘‘அதுக்கு இப்போ பஞ்சமே இல்ல. நான், தங்க. தமிழ்ச்செல்வன், புகழேந்தி, வைகைச்செல்வன், எல்லாத்துக்கும் மேலே நாஞ்சில் சம்பத்னு ஏகப்பட்ட பேரு...’’

‘‘டிடிவிய விட்டுட்டீங்களே!’’

‘‘அவர்தான் ஆகஸ்ட் 5 வரைக்கும் லீவ் சொல்லி, லீவ் லட்டரே தந்திருக்காரு. ஆகஸ்ட் அஞ்சுக்கப்புறம் ஒன் அன் ஒன்லி தலைமை டிடிவிதான்’’ என்று கூறிவிட்டு சிட்டாகப் பறந்தார்.

----------------------

ஜனாதிபதி வேட்பாளர் ராம்நாத் சென்னை வருகை

ராம்நாத் கோவிந்த் தங்கியிருந்த ஹோட்டலுக்கு போனபோது, வரவேற்பு வேலைகளில் பிஸியாக இருந்தார் தமிழிசை. ‘‘வெல்கம் மிஸ்டர் உல்டா! ஜனாதிபதி வேட்பாளர் உள்ளே வெயிட்டிங்... போங்க’’ என்றார்.

‘‘உல்டா ஜி வாங்கோ, வாங்கோ! உங்க தோஸ்து எம்.எல்.ஏ, எம்.பி. யாராவது இருந்தா எனக்கே ஓட்டு போடச் சொல்லுங்கோ’’ என்று உல்டாவிடமே ஓட்டு வேட்டை நடத்தினார் கோவிந்த்.

‘‘நீங்க ஜனாதிபதி வேட்பாளர் ஆனது எப்படி?’’ என்று படாரென விஷயத்துக்கு வந்தார் உல்டா.

‘‘பள்ளிக்கூடம் படிக்கிற காலத்தில் இருந்தே நான் யாரையும் எதிர்த்து பேசமாட்டேன். நீட்டுற பேப்பர்ல முத்து முத்தா கையெழுத்து போடுவேன். அமித் ஷாஜி வந்து ‘இதான் ஜனாதிபதி வேட்பாளர் வேட்புமனு’ன்னு நீட்டினார். எங்கே கையெழுத்து போடணும்னேன். வேறென்ன தகுதி வேணும்...’’ என்று சிரித்தார்.

‘‘உங்களுக்கு வெற்றி நிச்சயம்தானே’’ என்று உல்டா கேட்க, ‘‘அதெல்லாம் பெரிய இடத்துப் சமாச்சாரம். மோடி, அமித் ஷா, வெங்கய்யா மாதிரி பெரியவங்கள்லாம் பாத்துப்பாங்க’’ என்றார் அசால்ட்டாக.

‘‘பிஹார்ல கவர்னரா வேலை பார்க்கப் போயி, நிதிஷ்குமாரைக் குழப்பி மோடி வேட்பாளரான உங்களுக்கு ஆதரவு தர்ற மாதிரி பண்ணீங்களே, சூப்பர் சார்! உங்களால இப்ப பிஹார்ல ஆட்சிக்கே வில்லங்கம் வர்ற மாதிரி ஆயிருச்சி போலிருக்கே’’ என்றார் உல்டா.

‘‘பிஹார் கவர்னரா இருந்த வரைக்கும் நிதிஷ்குமாரைப் பார்த்தா வணக்கம் சொல்வேன். எழுந்து நின்று மரியாதை செய்வேன். ஆனா லாலு பிரசாத் அன் கோ வந்தா கண்டுக்கமாட்டேன். ஆட்டோமேடிக்கா புகைச்சல் கிளம்பிடுச்சி. எல்லாம் உங்க திமுக ஷேல் தலைவர் ஸ்டாலின் ஃபார்முலாதான்’’ என்று இடிஇடியென சிரித்தார் கோவிந்த்.

‘‘தமிழ்நாட்டுப் பயணம் திருப்திதானே?’’

‘‘நான் இங்க வந்ததே ஒரு சம்பிரதாயம்தான். ‘அதிமுகவிடம் ஓட்டு கேட்டுப் போறீங்களே, துணைக்கு இன்கம்டாக்ஸ் அதிகாரிகளை அனுப்பட்டா? அவங்களுக்கு எல்லார் வீடும் அத்துபடி’’ன்னு அமித் ஷாஜி கேட்டார். நான்தான் ரொம்ப கேவலமா இருக்கும்னு மறுத்துட்டேன்.”

‘‘நீங்க சீட்ல உட்கார்ந்ததும், இங்கே சீட்டை கிழிச்சுடுறதா பேசிக்கிறாங்களே’’ என்றார் உல்டா.

‘‘இந்த ஆட்சியை வீட்டுக்கு அனுப்பிடுங்க ப்ளீஸ்னு உங்க ஷேல் தலைவர்தான் தினமும் சொல்லிட்டே இருக்காரு. அண்ணா என்ன சொல்லிருக்கார்? மாற்றான் தோட்டத்து மல்லிக்கைக்கு மணம் உண்டு’ன்னு சொல்லியிருக்கார். அப்போ.. எதிர்க்கட்சியின் கருத்துக்கு செவிசாய்க்கணும் இல்லையா?’’ என்று மென்மையாகப் புன்னகைத்து உல்டாவுக்கு வாசலைக் காட்டினார் கோவிந்த்.

-----------------------------

வேறுவழியின்றி ஜிஎஸ்டி-யை ஏற்றோம்: தம்பிதுரை பேட்டி

வீட்டில் சீட்டு குலுக்கிப் போட்டுக் கொண்டிருந்தார் தம்பிதுரை. ‘‘இதுல ஒண்ணை எடு’’ என்று கார் டிரைவரிடம் கேட்டுக்கொண்டிருந்தார்.

‘‘என்ன சார் சீட்டுக் குலுக்கல்’’ என்ற கேட்டபடி வந்தார் உல்டா. ‘‘அடடே, உல்டாவா! இங்கே வா’’ என்று கூறி, சீட்டெடுக்கும் பணியை இவருக்கு மாற்ற, உல்டாவும் ‘இங்கி பிங்கி’ போட்டு ஒன்றை எடுத்துக் கொடுத்தார். ‘‘எடப்பாடி! சரி, அவரையே பார்க்கப் போறேன்’’ என்றார் தம்பிதுரை.

நைஸாக மற்ற ரெண்டு சீட்டையும் எடுத்துப் பார்த்தார் உல்டா. ‘டிடிவி’, ‘பிரதமர் மோடி’ என்று அவற்றில் இருந்தன. ‘‘உங்க நிலமை ரொம்ப மோசம் சார். இவர் சொல்றதை அவர்கிட்டே, அவர் சொல்றதை இவர்கிட்டே... ரொம்ப கஷ்டம்’’ என்று உல்டா அனுதாபம் தெரிவிக்க, ‘‘வேறு வழியின்றி இப்படி பண்ணவேண்டியதா இருக்கு’’ என்று அங்கலாய்த்தார்.

“ஆமாமா! வேறு வழியின்றி ஜிஎஸ்டி ஆதரவு, வேறு வழியின்றி நீட் தேர்வு, வேறு வழியின்றி ஜனாதிபதி தேர்தலில் ஆதரவு, வேறு வழியின்றி எடப்பாடிக்கு ஆதரவு, வேறு வழியின்றி சிறையில் சசிகலாவுடன் சந்திப்பு... இன்னும் இப்படி எத்தனை வேறு வழியின்றியோ...’’ என்று உல்டா எடுத்துத் தர, ‘‘வேறு வழி’’ என்று முறைத்தார் தம்பிதுரை.

‘‘சரி, உண்மையில் ஜனாதிபதி தேர்தலில் சசிகலா சொல்லித்தான் ஆதரவு என்பது உண்மையா?’’

‘‘ஜெயிலுக்குப் போயி சின்னம்மாவைப் பார்த்தேன். ‘ஜனாதிபதி’ன்னு நான் ஆரம்பிச்சதுமே, ‘யோசிச்சு டைம் வேஸ்ட் பண்ணாதீங்க. உடனே லெட்டர் தந்துடுங்க’ன்னாங்க. அதைத்தான் வெளியே வந்து சொன்னேன். இதிலேதான் சின்ன குழப்பம் நடந்து போச்சு..’’ என்று இழுத்தார் தம்பிதுரை.

“சின்னம்மா விஷயத்துல சின்ன குழப்பமா?’’ என்றார் உல்டா.

‘‘அவங்க பரோல் கொடுக்கச் சொல்லி, ஜனாதிபதி சிபாரிசுக் கடிதம்னு நெனச்சுட்டு, உடனே ஓகே சொன்னாங்களாம். சின்னம்மா இப்போ என் மேல செம கடுப்புல இருக்காங்க’’ என்றார் தம்பிதுரை.

‘‘அப்போ, ஜனாதிபதி தேர்தல் வர்ற விஷயமே சின்னம்மாவுக்கு தெரியாதா?’’ என்று உல்டா ஆச்சரியம் காட்ட, ‘‘அவங்களுக்கு இப்போ தெரிஞ்சது எல்லாம் தேர்தல் கமிஷன். பொதுச் செயலாளர். முதல்வர்.. இப்படி சின்னச் சின்ன விஷயங்கள்தான்’’ என்றார் தம்பிதுரை.

-------------------------------------------------

புதுவையை தீவிரமாக கண்காணிக்க வேண்டும்: மத்திய அரசுக்கு ஆளுநர் கிரண்பேடி கோரிக்கை

‘‘மரியாதையா ஓடிப் போயிடு. உனக்கெல்லாம் இங்கே வியாபாரம் கிடையாது’’ என்று அடிக்காத குறையாக யாரோ ஒரு ஆளை விரட்டிக் கொண்டிருந்தார் பாண்டிச்சேரி ராஜ்நிவாஸ் வாசலில் இருந்த காவலர். அதை ரசித்தபடியே வெளியே வந்த ஆளுநரம்மா கிரண்பேடி, உல்டாவை வரவேற்றார்.

‘‘அவரு ரப்பர் ஸ்டாம்ப் செய்யுறவரு. இந்த கவர்னர்கிட்டே அதுக்கெல்லாம் வேலை இல்லைனு ஜனங்களுக்கு எப்படிதான் புரிய வைக்கிறதோ’’ என்று சலித்துக்கொண்டார்.

‘‘உங்களுக்கும் சியெம்முக்கும் அப்படி என்னதான் பிரச்சினை மேடம்? எதுக்கு டெய்லி அவரைச் சீண்டி புலம்பவிடுறீங்க?’’ என்று விஷயத்துக்கு வந்தார் உல்டா.

‘‘அங்கேதான் எல்லாரும் தப்பு பண்றீங்க. அவரை எம்எல்ஏவாகத்தான் மக்கள் தேர்ந்தெடுத்தாங்க. ஆனா, முதல்வரா பதவிப் பிரமாணம் செஞ்சு வச்சது கவர்னர்தானே... இப்போ சொல்லு, யார் பெரியவர். நானா அவரா?’’ என்று கூறி கிறுகிறுக்க வைத்தார் கிரண்பேடி.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வலைஞர் பக்கம்

4 days ago

வலைஞர் பக்கம்

4 days ago

வலைஞர் பக்கம்

9 days ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

மேலும்