தமிழ் இலக்கிய வரலாற்று ஆராய்ச்சியாளர்
தமிழ் இலக்கிய வரலாற்று ஆராய்ச்சியாளர்களின் முன்னோடிகளுள் ஒருவரும், தமிழறிஞருமான மு.ராகவையங்கார் (Mu. Raghava Iyengar) பிறந்த தினம் இன்று (ஜூலை 26).
அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:
* ராமநாதபுரத்தில் பிறந்தார் (1878). தந்தை, ராமநாதபுரம் சமஸ்தானப் புலவர். தந்தையிடமே கல்வி பயின்றார். இவரது 16 வயதில் தந்தை மரணமடைந்த பிறகு, தமிழறிஞர் பாண்டித்துரை தேவர், இவரது கல்வி தொடர உதவினார்.
* பாண்டித்துரைத் தேவர் தொடங்கிய நான்காம் தமிழ்ச்சங்கத்தின் சங்கப்பள்ளியில் தமிழாசிரியராக நிய மிக்கப்பட்டார். மேலும் அவர் தொடங்கிய ‘செந்தமிழ்’ என்ற பத்திரிகையில் முதலில் உதவியாசிரியராகவும் பின்னர் அதன் ஆசிரியராகவும் செயல்பட்டார். தமிழ், வடமொழி, ஆங்கிலம் மொழிகளில் நிபுணத்துவம் பெற்றிருந்தார்.
* சங்க காலப் பெண்களின் வீரத்தைச் சித்தரித்து ‘செந்தமிழ்’ இதழில் இவர் எழுதிய ‘வீரத் தாய்மார்’ என்ற கட்டுரையைப் பாராட்டிய பாரதியார், தனது ‘இந்தியா’ நாளிதழிலும் அதனை வெளியிட்டார். இலக்கண, இலக்கியங்கள், வரலாற்று நூல்களை ஆராய்ந்து, கட்டுரைகளும் நூல்களும் எழுதினார். ‘நரி விருத்தம்’, ‘சிதம்பரப் பாட்டியல்’, ‘திருக்கலம்பகம்’ உள்ளிட்ட நூல்களை உரையுடன் பதிப்பித்தார்.
* விக்ரம சோழனுலா, அணி இலக்கணம் கூறும் அரிய நூலான சந்திரலோகம், கேசவப்பெருமாள் இரட்டை மணிமாலை உள்ளிட்ட நூல்களையும் வெளியிட்டார். இவரது ‘வேளிர் வரலாறு’ சென்னைப் பல்கலைக்கழகத்தின் இன்டர்மீடியட் தேர்வுக்கான பாடமாக வைக்கப்பட்டது. இதை இலங்கையைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர் வீ.ஜே.தம்பிப்பிள்ளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து ராயல்-ஏஷியாடிக் சொசைட்டி இதழில் வெளியிட்டார்.
* இவரது தொல்காப்பியப் பொருளகராதி ஆராய்ச்சி உரை சென்னைப் பல்கலைக்கழக வித்வான் தேர்வுக்குப் பாடநூலாக வைக்கப்பட்டது. அதுவரை அறியப்படாத பல புலவர்களின் வாழ்க்கை வரலாற்றை ஆராய்ந்து இவர் எழுதிய ‘சாஸன தமிழ்க் கல்வி சரிதம்’, இவரது ஆராய்ச்சித் திறனையும் வரலாற்று அறிவையும் பறைசாற்றின.
* சென்னைப் பல்கலைக்கழக தமிழ்ப் பேரகராதித் தயாரிப்புக் குழுவின் தலைவராகச் செயல்பட்டு, அதற்கு இறுதிவடிவம் கொடுத்தார். இவரது ஆராய்ச்சிக் கட்டுரைகள் கலைமகள், அமுதசுரபி, தமிழர்நேசன், வாணி விலாசினி, கலைக்கதிர் உள்ளிட்ட இதழ்களில் தொடர்ந்து வெளிவந்தன. தமிழர் நேசன், கலைமகள் இதழ்களின் கவுரவ ஆசிரியராகவும் சில காலம் பணியாற்றியுள்ளார்.
* சுவடிகள், கல்வெட்டுகள், பண்டைய இலக்கண, இலக்கிய உரைகள் ஆகியவற்றில் காணப்பட்ட பழஞ்செய்யுள்களை முழுமையாகத் தொகுத்து, இவர் உருவாக்கிய பெருந்தொகை நூல் அறிஞர்கள் போற்றும் நூலாகப் புகழ்பெற்றது.
* திருவனந்தபுரம் பல்கலைக்கழக தமிழ் ஆராய்ச்சித் துறை தலைவராக 1945-ல் பொறுப்பேற்றார். சென்னை லயோலா கல்லூரியில் சிறிது காலம் பேராசிரியராகப் பணியாற்றினார். இவர் நிகழ்த்திய சொற்பொழிவுகள் தொகுக்கப்பட்டு, தமிழிலும், ஆங்கிலத்திலும் நூல்களாக வெளிவந்தன.
* பொன்னுசாமித் தேவர், பாண்டித்துரைத் தேவர் ஆகியோரது வாழ்க்கை வரலாற்றை எழுதி, அதனை ‘செந்தமிழ் வளர்த்த தேவர்கள்’ என்ற நூலாக வெளியிட்டார். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் சார்பில் பாலகாண்டம், சுந்தரகாண்டம் உள்ளிட்ட சில பகுதிகளுக்குச் சிறப்புரை எழுதினார்.
* சொற்கள், அவை இயங்கும் விதம், வினை, முதனிலைகள், பாகுபாடு உள்ளிட்டவற்றை ஆராய்ந்து ‘வினைத்திரிவு விளக்கம்’ என்ற நூலாகப் படைத்து, 80-வது வயதில் வெளியிட்டார். தமிழ்த் தொண்டாற்றிய முதும்பெரும் புலவர் மு.ராகவையங்கார் 1960-ம் ஆண்டு தமது 82-வது வயதில் மறைந்தார். இவரது படைப்புகளை தமிழக அரசு 2009-ல் நாட்டுடைமையாக்கியது.
முக்கிய செய்திகள்
வலைஞர் பக்கம்
2 days ago
வலைஞர் பக்கம்
4 days ago
வலைஞர் பக்கம்
5 days ago
வலைஞர் பக்கம்
7 days ago
வலைஞர் பக்கம்
7 days ago
வலைஞர் பக்கம்
8 days ago
வலைஞர் பக்கம்
11 days ago
வலைஞர் பக்கம்
15 days ago
வலைஞர் பக்கம்
16 days ago
வலைஞர் பக்கம்
18 days ago
வலைஞர் பக்கம்
19 days ago
வலைஞர் பக்கம்
21 days ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago