அப்பாவின் அந்திமக் காலத்தில் நடந்த சம்பவம். இப்போது நினைத்தாலும் வயிற்றைக் கலக்குகிறது. கொஞ்ச நாளாகவே அப்பாவின் சுறுசுறுப்பு அவரிடமிருந்து விடைபெற்றுவிட்டிருந்தது. கட்டிலில் அடிக்கடி படுத்துக்கொண்டார். “என்னவோ ஒரு அசதி” என்றார். ஒருநாள் காலை அவர் அறைக்குள் எட்டிப் பார்த்தேன். ஜன்னல் வழியாக சூரிய வெளிச்சம் பளீரென்று அவர்மீது விழுகிறது. கண் மூடிப் படுத்திருக்கிறார். இடப்பக்க கண்ணின்மீது பழுப்புக் காகிதத் துண்டுகள் கோணல்மாணலாக ஒட்டப்பட்டிருந்தன. கண்ணைத் திறக்காமலே “யாரது?” என்றார். செவிப்புலன் அத்தனைக் கூர்மை.
“நான்தான். அது என்ன? கண்மீது பழுப்புக் காகிதத்தைக் கிழித்து ஒட்டியிருக்கு?”
சட்டென்று அவர் முகத்தில் பயம் நிழல் மாதிரி படிந்தது.
“ஓ அதுங்க வந்தாச்சா?” என்றவர், “அது பேப்பர் இல்லடா… எறும்புக் கூட்டம்” என்றார்.
“என்னது எறும்பா?”
“ஆமாண்டா, அது பேரு சாவு எறும்பு. நான் ரொம்ப நாள் இருக்க மாட்டேன்டா...”
நான் உற்றுப் பார்த்தேன். கண்மீது ஒட்டியிருந்த காகிதம் மெல்ல நகர்ந்தது, அசைந்தது. ஈரத் துணியை எடுத்து வந்து ஒற்றி எடுத்து தூர எறிந்தேன். எத்தனை எறும்புகள்! அவ்வளவு சிறிய எறும்பை இப்போதுதான் பார்க்கிறேன்.
“இது கடிச்சது உங்களுக்குத் தெரியலையா?”
“தெரியவே இல்லைடா! கண் மேல ஒணக்கையா ஒரு அரிப்பு இருந்தது. கண்ணத் திறக்க மனசில்லாமல் இருந்தேன்! சாவு எறும்புடா! வாசனைக்கு வந்துட்டுது!”
“என்னப்பா சொல்றீங்க? சாவு எறும்பா?”
“மரணம் நெருங்கும்போது சிலருக்குத் தோலிலே இருந்து ஒரு வாசனை வரும். விசித்திரமான வாசனை. என் தாத்தாவுக்கு அப்படி வந்தது. மொதல்ல கண்... அப்புறம் கைகால்...”
என்னால் தாங்க முடியவில்லை.
“அப்பா போதும்! படுக்கைப் புண் வராம இருக்கிறதுக்கு உங்களுக்கு நேத்து போட்ட பவுடர் வாசனைக்காகத்தான் வருது”
“உனக்குத் தெரியாதுடா! அதுங்க வந்துடும்! - அப்பா விரக்தியாக சிரித்தார்.
”உடனே செக் புக்கை எடுத்துட்டு வா. இப்பவே கையெழுத்துப் போட்டு வச்சுடறேன். அப்புறம் ட்ரா பண்றது கஷ்டம்”
கைவிரல்கள் நடுங்கின. கையெழுத்து நடுங்கியது. “பத்தே நாள்” என்றார் என்னைப் பார்த்தபடி.
“அப்பா, சும்மா இருங்க!” என்று அதட்டினேன். சாவு எறும்பு என்று ஒன்று இருக்கிறதா? மரணத்துக்கு வாசனை உண்டா?
மறுநாள் அவர் கண்களில் எறும்புக் கூட்டம் இல்லை. நிம்மதியாக இருந்தது.
வழக்கம்போல் முதுகில் படுக்கைப் புண் வராமல் இருக்க பவுடர் போட எழுந்து உட்கார உதவினேன். பகீரென்றது! முதுகில் அங்கங்கே எறும்புக் கூட்டம். ஈரத் துணியால் எடுத்துப் போட்டேன். கை கூசியது!
அப்பா புரிந்துகொண்டார்.
“எனக்கு ஒண்ணு தோணுதுடா…”
“நல்லதா இருந்தா சொல்லுங்க. இல்லேன்னா வேண்டாம்...” என்றேன்.
“நெருப்புன்னா வாய் வெந்துடுமா? இந்த எறும்புகள் எல்லாம் வலியில்லாம கடிக்குதுடா. பேசாம அப்படியே வலியே இல்லாம என்னை முழுசா சாப்பிட்டுட்டா தேவலை... நிம்மதியா போய்ச் சேர்ந்திடுவேன்”.
“அப்பா!...” -கத்தினேன்.
“மரணத்தின் வலியை உணராமல் போயிடலாம் பாரு அதுக்காகச் சொன்னேன்!
அப்பா பார்பபதற்குதான் சாத்வீகம். ஆனால், வலிகளைத் தாங்கிக்கொள்வதில் கஷ்டங்களை விழுங்குவதில் ராட்சஸர்.
அமேஸான் காடுகளில் உள்ள எறும்புகளைப் பற்றி சில புனைகதைகள் படித்திருக்கிறேன். கிராமங்களைத் தாண்டி எறும்புக் கூட்டம் பயணிக்குமாம். தட்டுப்படும் எல்லா உயிரினங்களையும் இரவோடு இரவாகச் சுரண்டித் தின்றுவிட்டுப் போய்விடுமாம். அவை சென்றபின் அந்த இடமே பிராணிகள் மற்றும் மனிதர்களின் மண்டை ஓடுகளாக எலும்புக் கூடுகளாகக் காட்சியளிக்குமாம். எப்போதோ படித்த கதைகள்!
“திருவெறும்பூர் பெயர்க் காரணம் தெரியுமா?” என்றார் அப்பா. “தேவர்கள் அசுரர்களுக்கு அஞ்சி எறும்பு வடிவில் ஈஸ்வரனை வழிபட்டதாகச் சொல்லப்பட்டிருக்கு. எறும்புகள் ஏற வசதியாகச் சற்றே சாய்ந்து கொடுத்த இறைவனின் பெயர் எறும்பீஸ்வரர்!” புன்னகைத்தார். “எறும்புக்குப் பக்தி மணமும் தெரியும்” என்று அதற்குப் பொருள்.
எறும்புகள் சுவரோரம் செல்லும் அழகை முன்பெல்லாம் ரசிப்பேன். இப்போதோ ஏதோ இனம் தெரியாத பீதி மனசைக் கவ்வுகிறது. தோட்டத்தில் ஒரு காட்சி. செத்துப்போன வண்ணத்துப் பூச்சியை எறும்புகள் இழுத்துக்கொண்டு போய்க்கொண்டிருந்தன. எண்ணிப் பத்தே நாள் அப்பா செத்துப் போனார்.
பார்த்தாலே திகிலைக் கிளப்பும் அந்த எறும்புக் கூட்டத்தை அப்புறம் நான் பார்க்கவே இல்லை.
-தஞ்சாவூர்க் கவிராயர்.
தொடர்புக்கு:thanjavurkavirayar@gmail.com
முக்கிய செய்திகள்
வலைஞர் பக்கம்
4 hours ago
வலைஞர் பக்கம்
7 days ago
வலைஞர் பக்கம்
9 days ago
வலைஞர் பக்கம்
10 days ago
வலைஞர் பக்கம்
12 days ago
வலைஞர் பக்கம்
12 days ago
வலைஞர் பக்கம்
13 days ago
வலைஞர் பக்கம்
16 days ago
வலைஞர் பக்கம்
20 days ago
வலைஞர் பக்கம்
21 days ago
வலைஞர் பக்கம்
23 days ago
வலைஞர் பக்கம்
24 days ago
வலைஞர் பக்கம்
26 days ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago