காலத்தின் வாசனை: வள்ளலாரைத் தேடிய சி.ஐ.டி.!

By தஞ்சாவூர் கவிராயர்

வெள்ளைச்சட்டை, வெள்ளை வேட்டி, தோளில் சிவப்புநிறக் காசித்துண்டு, தெளிந்த முகம், சிரித்தால் பளீரென்று தெரியும் சுத்தமான பற்கள். இந்தத் தோற்றத்தில் ஒரு மனிதரைப் பார்க்க நேர்ந்தால் அவர் என்ன உத்தியோகம் பார்க்கிறவர் என்று நினைப்பீர்கள். நம்புங்கள் அவர் ஒரு போலீஸ்காரர். சி.ஐ.டி. போலீஸ்காரர். அவரை போலீஸ் உடுப்பில் நான் பார்த்ததே இல்லை. சி.ஐ.டி. என்பதால் மஃப்டியில்தான் இருப்பார். அப்பாவுடன் கூடப் பிறக்காவிட்டாலும் எனக்குப் பெரியப்பா முறை வேண்டும். யாரைப் பார்த்தாலும் கண்ணை இடுக்கிக்கொண்டு வாஞ்சையுடன் பார்ப்பார். அவரைப் பார்க்கிறவர்கள் மனதில் எழும் ஒரே கேள்வி;

இவர் எப்படி போலீஸ்காரர் ஆனார்?

பெரியப்பாமீது எனக்குப் பெருமையும் மதிப்பும் வரக் காரணம் ஒரு சம்பவம். 45 வருடங்களுக்கு முன் நான் ஒரு கல்லூரி மாணவன். அப்போதெல்லாம் இரவில் சைக்கிளில் முகப்பு விளக்கு இல்லாமல் போனால் குற்றம். அபராதம் கட்ட வேண்டும்.

ஆற்றுப் பாலத்துக்கு அருகில் ஒரு போலீஸ்காரர் என் சைக்கிளை நிறுத்தினார். விளக்கு இல்லை, விளக்கமே தேவை இல்லை.

“இறங்குங்க சார்!”

அடுத்து என்மீது வீசப்பட்ட வசவுகள், அரண்டுபோனேன். மெதுவாகத்தான் சொன்னேன்.

“திருவையாறு சி.ஐ.டி எங்க பெரியப்பா சார்!”

“தம்பி” - சட்டென்று தோரணை மாறி “யாரு நம்ப வள்ளலார் சாமியா?”

“ஆமாம்” என்றேன்.

“இத முன்னாடியே சொல்லி இருக்கப்புடாதா? பாத்துப் பத்திரமா போங்க தம்பி. என்ன மனுசனா ஆக்கி இந்த உடுப்போட நிக்க வச்சவரு அவரு!”

தப்பித்தோம் பிழைத்தோம் என்று சைக்கிளை மிதித்தேன். திரும்பிப் பார்த்தேன் விறைப்பாக நின்றார். அவர் முன்னால் யாருமில்லை. பெரியப்பாவுக்கு மானசீகமாக சல்யூட் அடிக்கிறாரோ?

பெரியப்பா திடீர் திடீரென்று எங்கள் வீட்டுக்கு வருவார். “வள்ளல் பெருமானைத் தேடிவந்தேன்” என்று சுற்றும் முற்றும் பார்ப்பார். ஏதோ வள்ளல் பெருமானை நாங்கள் ஒளித்து வைத்திருக்கிற மாதிரி. அப்பா ஒரு வள்ளலார் பக்தர். அப்பா கேட்பார், “சீர்காழிக்குப் போவதாக அல்லவா சொல்லிக்கொண்டிருந்தீர்கள்? அங்கே அண்ணாத்துரை மீட்டிங் இருக்கே!”

“எனக்கு பதிலாக இராமலிங்கத்தைப் போகச் சொல்லிவிட்டேன். திடீரென்று வள்ளலார் ஞாபகம் வந்துவிட்டது... அதான் இங்கே வந்தேன்...”

“சாமியார் எல்லாம் போலீஸ் வேலைக்கு வந்தா சட்டம் ஒழுங்கு என்ன ஆவுறது?”

வாசலில் இராமலிங்கத்தின் குரல் கேட்டது.

“சீர்காழிக் கூட்டம் கான்சல் ஆயிட்டுது... அதுக்குப் பதிலா ரெண்டு பேரும் திலகர் திடலுக்குப் போறோம்... பெரியார் மீட்டிங்...”

இராமலிங்கம் பரம நாத்திகர்.

பெரியப்பா பேசுவதையும், ஆன்மிகவாதிகளையும் நையாண்டி செய்வார். அரசியல் கூட்டங்கள் எங்கு நடந்தாலும் இரண்டு பேரில் யாராவது ஒருவரைத்தான் அனுப்புவார்கள். இராமலிங்கம் அரசியல் கூட்டங்களில் குறிப்பெடுத்துப் பழகியதால் எல்லா அரசியல் தலைவர்களின் பேச்சையும் அப்படியே ஒப்பிப்பார்.

“அண்ணா மாதிரி பேசுங்க... பெரியார் மாதிரி பேசுங்க...” என்று அவரைச் சூழ்ந்துகொண்டு கேட்போம். ஒரு மணிநேரம் அட்சரம் பிசகாமல் பேசிக்காட்டுவார்.

பெரியப்பா அரசியல் கூட்டங்களில் குறிப்பெடுக்கும்போது கிடைத்த அனுபவங்களைச் சிரிக்கச் சிரிக்க சொல்லுவார். பேச்சாளர் பெரியப்பாவைக் கவனித்துவிடுவார்.

“இங்கே காவல் துறை நண்பர்கள் வந்திருக்கிறார்கள். எங்கள் பேச்சு இன்று இரவுக்குள் மேலிடத்துக்குப் போய்விடும். நாங்கள் பிரிவினைவாதம் பேசுவதாய் வழக்கை ஜோடிப்பீர்கள். வா முடிந்தால் இப்போதே கைதுசெய் பார்க்கலாம்!” என்று பேசிவிட்டு உட்கார்ந்ததும் கட்சித் தொண்டரைக் கூப்பிட்டு ''டேய்! வள்ளலார் சாமி வந்திருக்குடா... இட்லி வாங்கிட்டு வாடா” என்பார். மேடைக்குப் பின்னால் அவர்கள் கொடுத்த இட்லியை மரியாதைக்காக விண்டு போட்டுக்கொள்வாராம் பெரியப்பா.

காக்கிப் பையிலிருந்து ஒரு வாழைப்பழச் சீப்பை வெளியே எடுப்பார் இராமலிங்கம்.

“ரஸ்தாளி. கண்டியூரில் வாங்கினேன்!”

“தனித்தனி முக்கனி பிழிந்து வடித் தொன்றாய்க் கூட்டி...” என்று ராகம்பாட ஆரம்பிப்பார் பெரியப்பா.

“போச்சுடா! வள்ளலார் சமையல் குறிப்பு ஆரமிச்சுட்டீர்! எல்லாம் சரி. செத்தாரைப் பிழைக்க வைப்பேன் என்கிறாரே வள்ளலார்- அங்கேதான் உதைக்குது! செத்தவன் ஏன் பொழைக்கணும்?”

பெரியப்பா சிரித்தார் “பாமர ஜனங்கள் மட்டுமின்றி படித்தவர்களும் இப்படித்தான் பொருள் சொல்லுகிறார்கள் இராமலிங்கம்! புலவர் என்ன சொல்கிறார் பாப்பம்!”என்று அப்பாவை நோக்கி கை நீட்டினார்.

“நாங்கள் வெறும் கற்றுச்சொல்லிகள்! சொந்தமாக ஏதும் சொல்லத் தெரியாது! நீங்களே சொல்லுங்கள்!”

“அஞ்ஞானம்தான் மரணம். ‘செத்த பிணத்தைச் சுற்றி சாம்பிணங்கள் அழுதாற்போல்’ என்று சித்தர்கள் பாடவில்லையா?”

“பிணங்களாக வாழ்ந்துகொண்டிருக்கும் இந்த மனிதர்கள் பிழைக்க வேண்டுமானால் அவர்கள் ஞானம் பெறவேணும்! என்ன ஞானம்? எல்லா உயிர்மீதும் அன்புசெய்யும் ஞானம்! அந்த ஞானத்தை ஊட்டி இந்தப் பிணங்களைப் பிழைக்க வைப்பேன் என்கிறார் வள்ளலார்!”

“ஆஹா” என்றார் ராமலிங்கம். வாய்நிறைய அதக்கிக்கொண்டிருந்த ரஸ்தாளிப் பழமா; பெரியப்பாவின் பேச்சா எதுக்கு இந்த ஆஹா என்று தெரியவில்லை.

- தஞ்சாவூர்க் கவிராயர்.

தொடர்புக்கு: thanjavurkavirayar@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வலைஞர் பக்கம்

3 hours ago

வலைஞர் பக்கம்

7 days ago

வலைஞர் பக்கம்

9 days ago

வலைஞர் பக்கம்

10 days ago

வலைஞர் பக்கம்

12 days ago

வலைஞர் பக்கம்

12 days ago

வலைஞர் பக்கம்

13 days ago

வலைஞர் பக்கம்

16 days ago

வலைஞர் பக்கம்

20 days ago

வலைஞர் பக்கம்

21 days ago

வலைஞர் பக்கம்

23 days ago

வலைஞர் பக்கம்

24 days ago

வலைஞர் பக்கம்

26 days ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

1 month ago

மேலும்