ருசியியல் சில குறிப்புகள் 28: நல்ல புளியோதரையின் தரம்!

By பா.ராகவன்

திடீரென்று ஒரு கிறுக்குத்தனம். தொடர்ச்சியாக இரண்டு நாள் சாப்பிடாமல் இருந்து பார்த்தால் என்ன என்று தோன்றியது. ஒன்றும் உயிர் போய்விடாது என்பது தெரியும். ஆனால், வயிற்றில் பசி இருந்தால் காரியம் சிதறும். வீரியம் குறையும். இது வேண்டாத வம்பு என்று உள்ளுணர்வு சொன்னது. கொஞ்சம் யோசித்துப் பார்த்தேன். வெறும் இரண்டு நாள். ஒரு முயற்சி செய்து பார்த்தால்தான் என்ன? என்னதான் காரியம் சிதறி, கோட்டையே தரை மட்டமானாலும் திருப்பிக் கட்டவா முடியாது? எம்பெருமானே, என் பக்கம் இரு என்று உத்தரவு போட்டுவிட்டு களத்தில் இறங்கினேன்.

ஆனால், நானெல்லாம் குத்புதீன் ஐபக் வம்சத்தில் நாக்குக்குக் கப்பம் கட்டி வாழ்கிற ஜென்மம். அதனால் விரத காலத்தை ஒரு பெரும் விருந் தோடு ஆரம்பிப்பதே முறை என்று முடிவு செய்தேன். சென்ற வாரத் தில் ஒருநாள் இரவு 9 மணிக்கு மாயா பஜார் ரங்காராவைத் தோற்கடிக்கும் உத்தேசத்துடன் உண்ண அமர்ந்தேன்.

அன்றைய எனது மெனு வானது இவ்வாறு இருந்தது. நெய் யில் செய்த புளியோதரை, பலப்பல காய்கறிகளைப் போட்டுச் சமைத்த சாம்பார் சாதம், மாதுளம்பழம் போட்ட தயிர் சாதம், அப்பளம், ஊறுகாய். இதோடு நிறுத்துவது அடுக்குமா? இனிப்பு இல்லாமல் ஒரு விருந்தா? எனவே எடு ஒரு ஐஸ் க்ரீம்!

மேற்படி சமாசாரங்களெல்லாம் ஒரு காலத்தில் எனது தினசரி மெனுவில் வழக்கமாக இருந்தவைதான். ஆனால், கடந்த ஒரு வருடமாக உணவு மதமாற்றம் கண்டு, இம்மாதிரி மாவுச் சத்து மிக்க உணவுகளை அறவே தவிர்த்து வந்தேன். ஆனால், புரட்சி செய்தே தீருவது என்று முடிவு செய்துவிட்டால் அதையெல்லாம் பார்க்க முடியுமா? அப்புறம் சரித்திரத்தில் எங்ஙனம் ஏறி உட்கார்வது?

சரித்திரத்தில் ஏற வேண்டுமென் றால் முதலில் மண்டைக்குள் சாத்தான் ஏற வேண்டும். அவன் ஏறினால் இந்த மாதிரி என்னவாவது செய்யச் சொல் வான். எனவே செய்தேன். என் நோக் கம், இந்த திடீர் அதிர்ச்சியை உடம்பு இயந்திரத்துக்குக் கொடுப்பதன் மூலம் தடாலடியாகக் கொஞ்சம் எடை குறைக்க முடியுமா என்று பார்ப்பதுதான்.

இப்படி ஒரேயடியாக 2,000 கலோரி களுக்கு மேல் ஒருவேளை உணவு உட்கொண்ட பிறகு தொடர்ச்சியாக 48 மணி நேரம் உண்ணாதிருப்பது என்பது என் முடிவு. மீண்டும் அடுத்த சாப்பாட்டு முகூர்த்தத்தில் மாவுச் சத்து மிக மிகக் குறைந்த அளவே (சுமார் 40 கிராம்) சேரும் கொழுப்பு உணவை உண்பது.

ஒரு வாரம் முன்னதாகவே திட்டம் போட்டுத்தான் மேற்படி மெனுவைத் தயாரித்திருந்தேன். என் உடம்புக்கு என்னவெல்லாம் சேராதோ / சேரக் கூடாதோ அது எல்லாமே இருக்க வேண்டும் என்பதுதான் என் உயரிய நோக்கம். என் ரத்த சர்க்கரை அளவு இப்போதெல்லாம் என்ன சாப்பிட்டாலும் 100-ஐத் தாண் டாது. அதைக் குறைந்தபட்சம் 200 அளவுக்காவது உயர்த்தி மகிழ்விக்கிறபடியாக மெனுவை அமைத்துக்கொண் டேன்.

அன்றிரவு நான் உண்ட புளியோதரையானது அமிர்த ஜாதி. இந்தத் தொடரில் ஏற்கெனவே சொல்லியிருக்கிறேன் என்று நினைக்கிறேன். திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோயிலிலும் சிங்கப்பெருமாள் கோயிலிலும் மட்டுமே அத்தனை உயர்தரப் புளியோதரை கிடைக்கும். ருசியை மூக்கும் மணத்தை நாக்கும் உணரக்கூடிய ரகம் அது. உண்ண ஆரம்பித்தால் நிறுத்தாமல் அரை மணி நேரம் சாப்பிடலாம்.

ஒரு நல்ல புளியோதரையின் தரம் என்பது அதன் மூலப்பொருளான புளிக் காய்ச்சலின் தரத்தைச் சார்ந்தது. இது சாராயம் காய்ச்சுவதைக் காட்டிலும் கடினமான திருப்பணி. இன்றைக்கெல்லாம் யார் புளிக் காய்ச்சல் காய்ச்சுகிறார்கள்? கடையில் கிடைக்கிற பாட்டில் புளியோதரை மிக்ஸில் ஆத்மா சாந்தியடைந்துவிடுகிறது. அவன் நல்லெண்ணெயில்தான் செய்தானா, க்ரூடாயிலைக் கொட்டினானா என்று தெரியாது. எத்தனை நாள் பழைய சரக்கு என்று யாருக்கும் தெரியாது. புளிக் காய்ச்சலின் ஒரிஜினல் ருசியானது எவ்வாறு இருக்கும் என்றுகூடப் பெரும் பாலானோருக்குத் தெரிந்திருக்காது. என்ன செய்ய? பாவிகளின் கடைசிப் புகலிடம் பர்கராகும்போது ஆதி மாமி களின் அசகாயத் தயாரிப்பான புளிக் காய்ச்சல் போன்ற தொன்ம ருசி ரத் தினங்கள் தமது இருப்பை மறைத்துக் கொள்ளத்தான் வேண்டியதாகி விடுகிறது.

நிற்க. ஒரு நல்ல புளிக் காய்ச்சலின் அடிப்படை, அதன் சேர்மானப் பொருட் கள் அனைத்தும் சம அளவில் இருக்க வேண்டும் என்பது. 100 கிராம் புளி எடுத்துக்கொள்கிறீர்கள் என்றால் செக்கில் ஆட்டிய நல்லெண்ணெய், க. பருப்பு, உ. பருப்பு மூன்றும்

அதே 100 கிராம் அளவுக்கு இருக்க வேண்டும். அதில் 10 சதவீத அளவுக்கு வெந்தயம் சேர வேண்டும். எண்ணெய் சுட்ட மறுவிநாடியே கடுகு, பருப்புகள், வெந்தயம், சீரகம், பெருங்காய வகை யறாக்களைப் போட்டு வறுத்துக் கொண்டு, அதிலேயே முந்திரிப் பருப்பை யும் அள்ளிப் போட்டு வறுத்துவிட வேண் டும். புளியைக் கரைத்துக் கொட்டுவது இதற்கு அப்புறம்தான்.

இரண்டு அல்லது இரண்டரை நிமிடங் கள் இந்தக் கரைசல் தளதளவென்று கொதிப்பதை வேடிக்கை பார்த்துவிட்டு, மஞ்சள் பொடி, உப்பு போட வேண்டும். ஓம் சாந்தி, ஓம் சாந்தி என்று 108 முறை ஜெபித்து முடிக்கிறபோது மேற்படி புளிக் கரைசலானது பாதி வடிந்து லேசாகக் கெட்டிப்படும். பழநி பஞ்சாமிர்த லெவலுக்கு வந்திருக்கிறதா என்று பார்த்து, கப்பென்று அடுப்பை அணைத்துவிட வேண்டும்.

எல்லாம் சரியாகத்தான் செய்திருக் கிறோமா என்று அறிய, அடுப்பை அணைக்கும்போது வருகிற வாசனை யைப் பரிசோதனை செய்வது ரொம்ப முக்கியம். பச்சைப் புளி வாசனை கொஞ்சம் வந்துவிட்டாலும் தீர்ந்தது விஷயம். காய்ச்சிய புளியின் வாசனையைப் பெருங்காய வாசனை தூக்கிச் சாப்பிடுவதே சரியான பதம்.

இவ்வாறெல்லாம் தாலாட்டி சீராட்டித் தயாரிக்கிற புளிக் காய்ச்சலைக் குறைந்தது 15 மணி நேரம் அப்படியே மூடி வைத்துவிட்டு, அதன்பின் எடுத்து சாதத்தில் கலந்தால் முக்கால்வாசி வேலை முடிந்தது. இதற்குப் பிறகு ஒரு 50 கிராம் மிளகைப் பொடி செய்து (மிளகுப் பொடியாக வாங்கிக் கலந்தால் ருசிக்காது) அதை இன்னொரு 50 கிராம் நல்லெண்ணெயில் கலந்து மேற்படி புளியோதரைக் கலவையின் தலையில் கொட்டிக் கிளற வேண்டும்.

கொஞ்சம் பேஜார்தான். ஆனால், இப்படிச் செய்தால்தான் நிஜமான புளியோதரையின் ருசியை அனுபவிக்க முடியும்.

நான் எட்டாம் கிளாஸ், ஒன்பதாம் கிளாஸ் படித்துக்கொண்டிருந்தபோது, என் வகுப்பில் அமுதன் என்றொரு பயல் வாரம் ஒருமுறை மதிய உணவுக்குப் புளியோதரை எடுத்து வருவான். அவன் டிபன் பாக்ஸைத் திறந்தால் பள்ளி முழுதும் மணக்கும். அவனது புளியோதரைக்கு ஆசிரியர்கள் அத் தனை பேரும் அடிமைகளாக இருந்தார் கள். ஒரு வாரம் அவன் எடுத்து வரவில்லை யென்றாலும் ஏன் என்று கேட்கிற அள வுக்கு உயர்தர அடிமைகள். தான் சாப் பிட்டு, ஆசிரியர்களுக்கு ருசி பார்க்கக் கொடுத்து மிச்சம் இருக்கும் புளியோத ரையை நண்பர்களுக்குப் பகிர்ந்தளிக் கும் பரோபகாரியாக அவன் இருந்தான்.

அவனது தாயை நான் கண்டதில்லை. ஆனால் அப்படியொரு மணக்கும் கரம் கொண்ட பெண்மணி இன்னொருவர் இருக்க முடியுமா என்பது இன்று வரை எனக்கு சந்தேகம்தான். ஒரு புளியோதரையில் தனது கலை மனத்தை வெளிப்படுத்தத் தெரிந்த பெண்மணி. அவர் புளியோதரைக்கு வேர்க்கடலை போட மாட்டார். மாறாக காராசேவைப் பொடி செய்து போட்டுக் கலந்தனுப்புவார்.

வறுத்த முந்திரியும் காராசேவுப் பொடியும் புளியோதரையோடு சேர்ந்து நெரிபடும்போது உண்டாகும் ருசிதான் அநேகமாக அமிர்த ருசியாக இருக்க வேண்டும்.

- ருசிக்கலாம்… | எண்ணங்களைப் பகிர: writerpara@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வலைஞர் பக்கம்

3 days ago

வலைஞர் பக்கம்

4 days ago

வலைஞர் பக்கம்

9 days ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

மேலும்