‘சாப்பிடுவது மனித இயல்பு; ஜீரணிப்பது தெய்வீக இயல்பு!’ - மார்க் டிவைன்
‘அமைதியில் அவை மிக அழகாக இருக்கின்றன. விவேகம் உள்ள அமைதி அது. நாம் மண்ணான பிறகும் அவை நிற்கும். நாம் அவற்றைக் காப்போம்!’ - கேலியன் மேக்டன்னல்மார்
அமேசான் காட்டில் நான் தங்கி யிருந்தபோது கேலியன் சொன்னது நூறு விழுக்காடுகள் உண்மை என்பது புரிந்துபோனது. அமேசானின் இருண்ட காடுகளில் வாழ்கிற பல உயிரினங்கள் நம்முடைய கற்பனையையும் மிஞ்சி இருக்கின்றன. இங்கே ‘கருப்பு கைமென்’ (Black caiman) என்கிற முதலை, 16 முதல் 20 அடி நீளம் வளர்ந்து, அனகோண்டா பாம்பையே விழுங்கி ஏப்பம் விடுகிறது. ‘அரபெய்மா’ (Arapaima) என்கிற ராட்சத மீன் ஒன்பது அடி வளர்ந்து நாக்கில்கூட பற்களைக் கொண்டு வாழ்கிறது. 4 ஆயிரம் மைல்கள் கடலில் இருந்து நீந்தி வந்து, அமேசான் ஆற்றில் அடைக்கலம் புகும் ‘புல்சுரா’ 11 அடிகள் வளர்ந்து அசத்துகிறது. 600 ஓல்ட்ஸ் (Volts) மின்சாரத்தைப் பாய்ச்சி தன் எதிரியை செயலிழக்க வைக்கும் ‘எலெக்ட்ரிக் ஈல்ஸ்’ (Electric Eels) என்று, அப்பப்பா பட்டியலில் அடங்கா அதிசயங்கள் இங்கே கொட்டிக் கிடக்கின்றன!
‘‘யனோமாமி சாப்பிட்ட புழுக்களின் பெயர் பனை வீவில் (Palm weevil). இவற்றில் 69 - 78 விழுக்காடுகள் கொழுப்பு சத்து இருக்கிறது. இவை எனர்ஜி பார்களைப் போன்றவை. நாம் களைப்பாக இருந்தால், பாலில் புரோட்டீன் கலந்து, அந்தப் புரதச்சத்து நிறைந்த பானத்தை அருந்தி புத்துணர்வு பெறுவோம் அல்லவா? அதுபோலதான் அமேசான் காட்டில் வாழும் பழங்குடி மக்களுக்கு இந்தப் புழுக்கள்’’ என்றார் வழிகாட்டி.
முதன்முதலில் ‘யனோமாமி’ சிறிது கூட தயக்கம் காட்டாமல் பனை வீவில்களை சாப்பிட்டதைப் பார்த்து என்னுள் ஆச்சரிய அலைகள் எழும்பினாலும், பின்வந்த நாட்களில் இப்படி தென் அமெரிக்க மக்கள் பனை வீவிலை சாப்பிடும் காட்சிகள் சர்வ சாதாரணமாக அரங்கேறியது. இந்த உணவை சூரி (suri) என்றழைக்கிறார்கள்.
அமேசானின் தலை நகரமான மேனஸின் பஜார்களிலும், பிரேசில் நாட்டின் சந்தைகளிலும் இந்தப் புழுக்களைக் கூவிக் கூவி விற்கிறார்கள். வேக வைத்த பனை வீவில்களை, சாஸுகளில் புரட்டி எடுத்து வரிசையாகக் குச்சிகளில் குத்தி கொடுக்கிறார்கள். தட்டில் வைத்து, மீன் சாஸில் முக்கித் தருகிறார்கள். பலர் இந்தப் புழுக்களை உயிரோடு ரசித்து சாப்பிடுவதை இன்னும் என்னால் ஜீரணிக்க முடிய வில்லை. பனை வீவில் சூப்பும் இங்கே பிரசித்திப் பெற்று விளங்குகிறது.
தென்னை மரம், பனை மரம், பேரீச்சை மரம் போன்றவற்றுக்குள் ஒரு மீட்டர் அளவுக்கு ஓட்டைப் போட்டு ஊடுருவிச் சென்று வாழ்கிற பனை வீவில்கள், சிவப்பு வண்டுகளின் கூட்டுப் புழுக்கள் என்பதும், இவற்றால் பெரிய பெரிய பனை இனத்தைச் சார்ந்த மரங்களும், பூமியில் சாய்ந்துவிடும். ஆகையினால் இவை விவசாயிகளின் எதிரிகள் என்பது கூடுதல் தகவல்!
அமேசான் காடுகளில் நான் பார்த்து, என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்திய மிருகம் ‘உல்லி’ (woolly monkey) அதாவது கம்பளி குரங்குகள். வட்ட முகத்துடன் உடல் முழுவதும் கம்பளியைப் போன்ற அடர்த்தியான முடியைக் கொண்ட தோலைக் கொண்டு, தன்னுடைய உறுதியான கைகளால் மரததுக்கு மரம் தாவி, தலைக்கீழாகத் தொங்கும்போது, தனது நீண்ட வாலை மரக்கிளையில் சுற்றி நம்மை பார்க்கும் அழகே தனிதான்! ஆனால், பாவப்பட்ட இந்தக் குரங்குகள், அமேசான் பழங்குடி மக்களின் விருப்பமான உணவாக இருக்கிறது.
இது மட்டுமா? புஷ் இறைச்சி (Bush meat) என்று காடுகளில் கிடைக்கிற காட்டுப் பன்றிகள், குரங்குகள், மான்கள், டாபிர் (tapir) என்கிற ஒரு வகை பன்றிகள், பறவைகள், எலிகள், ஊர்வன என்று எல்லாவற்றையும் வேட்டையாடிச் சாப்பிடு கிறார்கள். காட்டில் வாழ்பவர்கள் மட்டும் இவற்றை உண்டால் பரவாயில்லை. ஆனால், தென்அமெரிக்க நகரங்களிலும் இந்த உணவு வகைகள் பலரால் விரும்பிச் சாப்பிடப்படுவதால், மஞ்சள் திட்டுக்களைக் கொண்ட ஆமைகள் மற்றும் கம்பளிக் குரங்குகள் போன்ற அதிசய விலங்கினங்கள் அழிவை நோக்கிச் சென்றுகொண்டிருக்கின்றன.
நீண்ட மூங்கில் குழாயின் வழியாக விஷ அம்புகளை, ஊதி எப்படி கம்பளி குரங்குகளைக் கொல்வார்கள் என்பதை ‘யனோமாமி’ செய்து காட்டினார். என் கையிலும் ஒரு மூங்கில் குழாய் திணிக்கப்பட்டது. ஆனால் அதில் அம்புகள் இல்லை. புகைப்படத்துக்காக அதை வாயில் வைத்துக் கொண்டு ஊதுவது போல் போஸ் கொடுத்தேன்.
கம்பளி குரங்குகளின் அழகில் மயங்கியிருந்த என் மனம் தாயைக் கொன்று, குட்டிகளை வீட்டுப் பிராணியாக வளர்க்க விற்கிறார்கள் என்பதை அறிந்து மருகியது. அன்று இரவு எங்களுக்கு பிரேசில் நட் (Brazil nut) சூப் பரிமாறப்பட்டது. அப்பப்பா, அப்படிப்பட்ட சுவையான சூப்பை வாழ்நாளில் நாங்கள் குடித்ததே இல்லை! இந்த பிரேசில் கொட்டைகளை வழங்கும் மரங்கள் அமேசான் மற்றும் நெக்ரோ நதிக் கரைகளில் அதிகமாக வளர்கிறது. 160 அடி உயரம் வளர்ந்து 500 ஆண்டுகளுக்கும் மேல் வாழ்கிற இந்த பிரேசில் நட் மரங்கள், பல தென் அமெரிக்க இல்லங்களின் புழக்கடையில், நம்ம ஊர் மாமரங்களைப் போல வளர்க்கப்படுகின்றன. இந்தக் கொட்டைகளைத் தாங்கும் பழங்கள் அளவில் மிகப் பெரியவைகளாக இருப்பதினால், இந்த மரங்கள் இருக்கும் பாதை வழியாக செல்லும் மக்கள் தலையில் விழுந்தால் அதோ கதிதான்!
‘அகாய் பெரி’களை (Acai berry) இங்கே வாழும் மக்கள் அதிகமாக உண்ணுகிறார்கள். அமேசான் பழங்குடி மக்களின் விருப்பமான உணவாக இவை திகழ்கின்றன. அமேசான் காட்டில் நாங்கள் தங்கியிருந்த நாட்களில் இந்தப் பழங்களையும், இவற்றில் இருந்து தயாரிக்கப்பட்ட பழரசம், மற்றும் பல வகையாக ‘டெசர்டு’களையும் (dessert) உண்டு மகிழ்ந்தோம். ‘அகாய் நா டிகிலா’(Acai na tigela) என்று அகாய் பெரிகளைக் கூழாக்கி, தோலை நீக்கி, கிடைக்கிற பழப் பசையுடன் வறுத்த ஓட்ஸ், துண்டுகளாக வெட்டப்பட்ட வாழைப்பழம், மற்றும் பலவகையான பழத் துண்டுகளைச் சேர்த்து சிறிது குவரானா சிரப்பை ஊற்றி கொடுத்த, சுவை மிகுந்த பானத்தை (Smoothie) நினைத்தால் இன்றும் என் வாயில் உமிழ்நீர் அதிகமாகச் சுரக்கிறது.
சாக்லேட், பைனாப்பிளைக் கலந்தாற் போன்ற சுவைக்கிற குபுவாகு (Cupuacu) என்கிற அமேசானுக்கே உரிய பழங்கள், ‘ஜீனஸ்’ (jnanes) என்கிற அரிசி சாதத்தோடு, மூலிகைகள் மற்றும் சிக்கனைக் கலந்து வாழை இலையில் சுற்றி விற்கப்படும் உணவுகள், பிரேசிலியன் ‘பிபிகியு’ (Brazilian BBQ) என்று கோழி, பன்றி, மாட்டிறைச்சிகளைக் கம்பிகளில் குத்தி, தீயில் வாட்டித் தரப்படும் உணவு வகைகள், நாக்கில் பஞ்சு மிட்டாயைப் போல கரைகிற ‘அரபெய்மா’ மீன் வறுவல் என்று அமேசான் காட்டிலும் சுவைமிக்க உணவுகள் கடை விரிக்கப்பட்டுள்ளன.
- பயணிப்போம்…
எண்ணங்களைப் பகிர்ந்துகொள்ள: shanthisiva12@gmail.com
முக்கிய செய்திகள்
வலைஞர் பக்கம்
4 days ago
வலைஞர் பக்கம்
5 days ago
வலைஞர் பக்கம்
10 days ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago