உமா மகேஸ்வரன் 10

By ராஜலட்சுமி சிவலிங்கம்

தமிழ் அறிஞர், கல்வியாளர்

தஞ்சையில் கரந்தை தமிழ்ச் சங்கத்தை தோற்றுவித்த ‘தமிழவேள்’ உமா மகேஸ்வரன் (Uma Mageswaran) பிறந்த தினம் இன்று (மே 7). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

> தஞ்சாவூர் மாவட்டம் கருந்திட்டைக்குடியில் (1883) பிறந்தார். வல்லம், கும்பகோணத்தில் ஆரம்பக் கல்வி பயின்றார். சிறு வயதிலேயே பெற்றோர் மறைந்ததால், கரந்தையில் சித்தியிடம் வளர்ந்தார். அவர் இவரை நன்கு படிக்கவைத்தார்.

> தமிழ், ஆங்கிலத்தில் அதிக ஆர்வம் கொண்டிருந்தார். புத்தகங்கள் படிப்பதில் நாட்டம் கொண்டவர், பள்ளி நேரம் தவிர எஞ்சிய நேரத்தில் ஏதாவது படித்துக்கொண்டே இருப்பார். தஞ்சை கல்லூரியில் இளங்கலைப் பட்டம் பெற்ற பிறகு, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் எழுத்தர் பணியில் சேர்ந்தார்.

> சென்னை சட்டக் கல்லூரியில் சட்டம் பயின்றார். சிறந்த வழக்கறிஞராகப் புகழ்பெற்றார். ஏழைகளுக்கு இலவசமாக வாதாடினார். கூடுதல் வழக்கறிஞராக நியமிக்கப்பட்டார். பள்ளிக்கூடம் கட்டுவது, சாலைகள், ஆற்றுப் பாலங்கள் அமைப்பது என பல்வேறு நலப்பணிகளை மேற்கொண்டார்.

> மக்களின் வாழ்க்கைத் தரம் மேம்பட கூட்டுறவு நிலவள வங்கி தொடங்க உதவினார். கூட்டுறவு அச்சகம், கூட்டுறவு பால் உற்பத்தி விற்பனைக் கழகத்தை தொடங்கினார். 1911-ல் கரந்தை தமிழ்ச் சங்கத்தை ஆரம்பித்து, அதன் முதல் தலைவராகப் பணியாற்றினார். 30 ஆண்டுகாலம் அதைக் கட்டிக்காத்தார்.

> அங்கு ஆயிரக்கணக்கான நூல்கள் கொண்ட தமிழ்ச்சங்க நூல் நிலையம் இவரது முயற்சியால் உருவானது. தொழிற்கல்வியின் அவசியத்தை உணர்ந்தவர், இச்சங்கம் சார்பில் செந்தமிழ் கைத்தொழில் கல்லூரியைத் தொடங்கினார். சங்கத்தின் சார்பில் இலவச மருத்துவமனை தொடங்கப்பட்டது.

> ‘தமிழ்ப்பொழில்’ என்ற மாத இதழையும் தொடங்கினார். அதில் ஆராய்ச்சிக் கட்டுரைகள், ஆங்கில மொழிபெயர்ப்புகள், கவிதைகள், தமிழ்க் கலைச் சொல்லாக்கங்கள், வரலாற்றுப் படைப்புகள் ஆகியவை இடம்பெற்றன. பல அரிய தமிழ் நூல்களை வெளியிட்டார். இலவச நூலகம் அமைத்தார்.

> சொற்பொழிவுகள், சொற்போர்கள், நூல் வெளியீடு, நூல் ஆராய்ச்சிகள், இலக்கண, இலக்கிய அறிவு நூல்களையும், பிறமொழியில் உள்ள சிறந்த நூல்களையும் தமிழில் வெளியிடுவது, உடற்பயிற்சி கூடங்கள் நடத்துவது என பல வகையிலும் சமூகத்துக்கு சேவையாற்றினார்.

> மனோன்மணீயம் சுந்தரனாரின் ‘நீராரும் கடலுடுத்த’ பாடலை தமிழ்த்தாய் வாழ்த்தாக அறிமுகம் செய்தது இவர்தான். தமிழுக்காக தனியே பல்கலைக்கழகம் வேண்டும் என்று குரல் கொடுத்தார். இந்தி திணிப்பை எதிர்த்துப் போராடினார். நல்ல பேச்சாளர், எழுத்தாளரான இவர் தனது கருத்துகளை சொற்பொழிவுகள், கட்டுரைகள் மூலம் வெளிப்படுத்தினார்.

> பள்ளிகளில் தமிழ் ஆசிரியர்களை தலைமை ஆசிரியர்களாக நியமிக்க வலியுறுத்தினார். தனது தொடக்கப்பள்ளியின் தலைமை ஆசிரியராக, தமிழ் ஆசிரியரையே நியமித்தார். யாழ்நூல், தொல்காப்பியம் உள்ளிட்ட நூல்களைப் பதிப்பித்தார். சென்னை மாகாண அரசு இவருக்கு ‘ராவ்பகதூர்’ பட்டம் வழங்கியது. செந்தமிழ்ப் புரவலர், தமிழவேள் உள்ளிட்ட பட்டங்களையும் பெற்றார்.

> தனது கரந்தை தமிழ்ச் சங்கம், தாகூரின் சாந்தி நிகேதனுக்கு சமமாக விளங்கவேண்டும் என ஆசைப்பட்டவர், கல்கத்தா சென்று சாந்தி நிகேதனைப் பார்வையிட்டார். காசி இந்து பல்கலைக்கழகத்தையும் பார்வையிட்டார். சென்ற இடத்தில் உடல்நலம் பாதிக்கப்பட்டதால் அயோத்தி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். தமிழ்ப் பணியையும், சமூகப் பணியையும் இறுதிவரை மேற்கொண்ட ‘தமிழவேள்’ உமா மகேஸ்வரன், மருத்துவமனையிலேயே 1941 மே 9-ம் தேதி 58-வது வயதில் மறைந்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வலைஞர் பக்கம்

21 hours ago

வலைஞர் பக்கம்

2 days ago

வலைஞர் பக்கம்

4 days ago

வலைஞர் பக்கம்

6 days ago

வலைஞர் பக்கம்

7 days ago

வலைஞர் பக்கம்

8 days ago

வலைஞர் பக்கம்

9 days ago

வலைஞர் பக்கம்

12 days ago

வலைஞர் பக்கம்

12 days ago

வலைஞர் பக்கம்

14 days ago

வலைஞர் பக்கம்

21 days ago

வலைஞர் பக்கம்

23 days ago

வலைஞர் பக்கம்

24 days ago

வலைஞர் பக்கம்

26 days ago

வலைஞர் பக்கம்

27 days ago

மேலும்