ஓர் எழுத்தாளர் என்பவர் வாசகனுக்குள் சென்று அவனுடன் உரையாடலை உண்டாக்க வேண்டும். வாசகர்களின் நாடித் துடிப்பை உணர்ந்து சொற்களை விதைக்க வேண்டும். கதையில் வரும் கதாப்பாத்திரத்தில் வாசகர்கள் தங்களைக் காண வேண்டும். அப்போதுதான் அந்த எழுத்து வாசகருக்கும் எழுத்தாளருக்கும் இடையே நட்புப் பாலத்தை உருவாக்கும். எல்லாவற்றுக்கும் முதன்மையாக எழுத்தாளன் தனது புத்தகத்தின் வாயிலாக வாசகர்களை நண்பனாக்கிக் கொள்ள வேண்டும்.
இவ்வாறுதான் வாகர்களிடம் தனக்கான இடத்தை அறிந்து கொண்டு படைப்புகளை உருவாக்குகிறார் இளம் எழுத்தாளர் ஆர். அபிலாஷ்.
ஆனால், இலக்கிய உலகில் தனக்கான இடத்தைப் பிடிக்க அபிலாஷ் கடந்து வந்த பாதை அவ்வளவு எளிதாக அமைந்துவிடவில்லை.
சிறுவயதில் போலியோ கட்டிப்போட்ட போதிலும் அதிலிருந்து மீண்டு தனது கட்டுப்பாடற்ற இலக்கியப் பயணம் எப்படி தொடங்கியது என்பதை அபிலாஷே நம்மிடம் கூறுகிறார்.
எழுத்தாளர் அபிலாஷ்வுடனான நேர்காணல்….
"கன்னியாகுமாரி மாவட்டம் பத்மநாபபுரம்தான் என் சொந்த ஊர். ஒருவயது இருக்கும்போது போலியோ தாக்கியது. இதனால் எனது வாழ்க்கை வீட்டுக்குள்ளே முடங்கிப் போனது. வீட்டுக்குள் இருந்து கொண்டு வெளி உலகத்தை ரசிக்க ஆரம்பித்தேன்.
பள்ளிக்கூடம் சென்றபின்தான் நண்பர்கள் கிடைத்தார்கள். இருந்தாலும் இயற்கையாகவே எனது வாழ்வில் தனிமை வந்துவிட்டது.
என்னுடைய பள்ளிப் பருவம் முதல் கல்லூரிவரை மாற்றுத் திறனாளிகளுக்கான என்ன பிரச்சினை இருக்குமோ அது எனக்கும் இருந்தது" என்று அபிலாஷ் கூறும்போது, மாடிப் படிகளையே தன் வாழ்வின் மிக பெரிய தடையாக கொள்ளும் மாற்றுத் திறனாளி ஒருவர். என்று 'அப்பாவின் புலிகள்' சிறுகதைக்கு அவர் மேற்கோளிட்ட வார்த்தைகள் நினைவுக்கு வருவதை தவிர்க்க முடியவில்லை.
தனது தடைகளை சிற்பியைப் போலவே அபிலாஷ் உடைத்து எறிந்திருக்கிறார், இதோ அபிலாஷின் இலக்கிய பயணம்.
"என் அப்பாவுக்கு நிறைய புத்தகம் படிக்கும் பழக்கம் இருந்தது. அதன் மூலமாக எனக்கும் புத்தகங்கள் அறிமுகமானது. அப்பழக்கம் தீவிரமாகவும் தொடர்ந்தது.
சிறுவயதில் நமக்கு நிறைய நேரங்கள் இருக்கும் அல்லாவா? அந்த நேரங்களில் நான் எனக்கே கதை சொல்லிக் கொள்வேன். அதன்பின் கவிதைகள் எனக்கு அறிமுகமாயின. 12 வயது முதலே மரபுக் கவிதைகள், புதுக்கவிதைகள் படிக்க ஆரம்பித்தேன்.
அந்தக் காலக்கட்டத்தில் எனக்கு அரசியல் கட்சி சார்ந்த புத்தகக் கடை ஒன்று அறிமுகமானது. அதில் நிறைய இலக்கியம் சார்ந்த கூட்டங்கள் நடக்கும். அப்போது பெரிய எழுத்தாளர்களை சந்திக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. ஜெயமோகன் போன்ற எழுத்தாளர்களை நான் சந்தித்தேன். என் வாழ்க்கையில் பெரிய மாறுதலை கொண்டு வந்தது அந்த காலக்கட்டம்தான்.
கூடுதல் சந்தோஷத்துக்கு காரணமான நாட்களாகவும் அவை இருந்தன. காரணம், எனக்காக பைக் ஒன்று வாங்கித் தரப்பட்டது. எனது முதல் சுதந்திரத்தை அனுபவிக்கத் தொடங்கினேன் என்று பள்ளி கூட சிறுவனாய் மாறியிருந்த அபிலாஷிடம் எப்போது பேனாவை பிடித்தீர்கள் என்று கேட்டேன்.
அதே புத்துணர்ச்சியுடன் தனது பேச்சைத் தொடர்ந்தார், "நவீன இலக்கியங்கள் மீது கொண்ட ஆர்வத்தால் தொடர்ந்து இலக்கிய உலகில் பயணிக்க ஆரம்பித்தேன். ஆரம்பத்தில் எல்லாவற்றையும் விமர்சிக்க வேண்டும் என்று நினைத்தேன். எனது ஆத்மார்த்த எழுத்தாளரான ஜெயமோகனிடம் கூட மதம் சார்ந்து அவர் பேசியவைகள் குறித்து விவாதங்கள் நடத்தியிருக்கிறேன்.
ஏன் ஒரு எழுத்தாளன் மதம் சார்ந்து பின்னோக்கிச் செல்ல வேண்டும் என்று கூட கேட்டிருக்கிறேன். ஆனால் அதற்கெல்லாம் ஜெயமோகன் தனக்கான விளக்கத்தைக் கொடுத்து எப்போதும்போல புன்னகையுடன் சென்று விடுவார்.
எனது வாழ்க்கையில் இரண்டு விதமான அனுபவங்கள் எனக்கு கிடைத்தன. இவைதான் நான் எழுத்துலகில் இயங்கக் காரணம் என்று கூறலாம். ஒன்று அந்த நூலகத்தின் வாயிலாக நான் பெற்ற இடதுசாரி நண்பர்கள், மற்றொன்று அதற்கு முற்றிலும் எதிர்மறையான ஜெயமோகன் போன்றவர்கள். இருவேறு சிந்தனை கொண்ட நபர்களின் துண்டுதலின்பேரில் புத்தங்கள் படிக்க ஆரம்பித்தேன். இதனால் இரண்டும் சேர்ந்த ஓர் ஆளுமையாக நான் உருவாகினேன்.
சுந்தர ராமசாமி, மனுஷ்யபுத்திரன் போன்ற எழுத்தாளர்களை எனது சிறிய வயதிலேயே சந்தித்து விட்டேன். இவர்களை நான் சந்திக்கவில்லை என்றால் எனது பாதை வேறு திசையாக இருந்திருக்கலாம்.
அதன்பின் கல்லூரியில் ஆங்கில இலக்கியம் பயின்றேன். அதன் மூலமாக ஆங்கில இலக்கியங்களின் அறிமுகமும் நேரடியாக கிடைத்தன.
அதனைத் தொடர்ந்து சென்னைக்குச் சென்றேன். எழுத்துப் பயணத்துடன் ஆசிரியராகவும் இருந்தேன். எழுதுவதைத் தவிர்த்து எனக்கு ஆசிரியராகப் பணியாற்றுதல் மிக பிடிக்கும்.
மனுஷ்யபுத்திரனின் ’உயிர்மை’ தளத்தில் கவிதைகள் மற்றும் கட்டுரை எழுத ஆரம்பித்தேன். என்று தொடர்ந்த அபிலாஷிடம் அவரது முதல் நாவலான கால்கள் உங்களது அனுபவத்திலிருந்து உருவானதா என கேட்டபோது,
"ஆம் என்னுடைய வாழ்க்கை அனுபவம் 30% இருக்கிறது. ஆனால் முக்கிய கதாப்பாத்திரத்தை பெண்ணாக வடிவமைத்திருந்தேன். ஆணின் உலகத்திலிருந்து பெண்ணின் உலகம் 100% வேறுபாடனாது. இதனால் எனக்கு அந்த கதாப்பாத்திரத்தை வடிவமைக்க சுதந்திரமாக இருந்தது.
'கால்கள்' நாவலில் வரும் மதுக்ஷரா என்ற மாற்றுத்திறனாளியான பெண்ணின் கதாப்பாத்திரத்தை அவர்கள் உலகத்தில் உணர்வுபூர்வமாக அளித்திருப்பார் அபிலாஷ்.
உடல் குறைபாட்டையும் அதனால் உண்டாகும் மனக் கஷ்டங்களையும் 'கால்கள்' நாவல் பேசுகிறது.
அபிலாஷின் 'கால்கள்' நாவலுக்காக சாகித்திய அகாடமி 2014-ம் ஆண்டுக்கான யுவ புரஸ்கார் விருதை வழங்கி சிறப்பித்தது. அதனைத் தொடர்ந்து இதே நாவலுக்கு பாரதிய பாஷா பரிஷத் விருது 2016-ம் ஆண்டு வழங்கப்பட்டது என்ற தகவலுடன் நேர்காணலைத் தொடர்கிறேன்.
எழுத்துலகில் உங்கள் முன்னுதாரணம் யார்? என்ற கேள்விக்கு சற்றும் இடைவேளையின்றி ஜெயமோகன்தான் என்று கூறிய அபிலாஷ் அவருடன் தான் கொண்ட முரணையும் பகிர்ந்து கொண்டார்.
"நான் முன்னுதாரணமாகக் கொண்ட எழுத்தாளர் ஜெயமோகன்தான். அவர் மீது எனக்கு முரண்பாடுகள் இருந்தபோது ஒரு எழுத்தாளர் எப்படி இருக்க வேண்டும் என்று நான் ஜெயமோகனிடம் கற்றுக் கொண்டேன். இருப்பினும் நாம் ஒருவரை முன்னுதாரணாமாக கொள்ளும்போது அவர்களது எழுத்துச் சாயல் நம்மை எளிதாக தொற்றிக் கொள்ளும். அதில் நான் கவனமாக இருந்தேன். ஜெயமோகனுக்கு எதிரான தளத்தில்தான் நான் எழுதத் தொடங்கினேன். தொடர்ந்து எழுதியும் வருகிறேன்"
எழுத்தாளர் ஆர்.அபிலாஷின் படைப்புகளில் சில
ஆர். அபிலாஷ் இதுவரை எட்டு புத்தங்களை வெளியிட்டுள்ளார். அவை ஒவ்வொன்றுமே அவருக்கான தனி அடையாளத்தை பெற்றுத் தந்துள்ளது. கவிதை, சிறுகதை, கட்டுரை, நாவல் இவ்வாறு பல பரிமாணங்களில் தன்னை நிரூப்பித்துக் காட்டியுள்ள எழுத்தாளர் அபிலாஷிடம் நாவல்கள்தான் ஒரு எழுத்தாளரை முழுமையாக்குகிறதா என்று கேட்டேன்,
"நாவல்கள்தான் எழுத்தாளரை முழுமையாக்குகிறாதா...? இது தமிழில் இருக்கக் கூடிய பொதுவான நம்பிக்கையா? என்று தெரியவில்லை. ஆனால் நாவல்கள் எழுதாத மிகச் சிறந்த எழுத்தாளர்கள் பலர் உள்ளனர். நாவலுக்கு நிகரான கவிதைகள் எழுதும் பல கவிஞர்கள் தமிழில் உள்ளனர். ஆகையால் நாவல்கள்தான் எழுதாளனை முழுமையாக்குகிறது என்று கூற முடியாது.
என்னைப் பொறுத்தவரை நாவல்கள், கட்டுரைகள், கவிதைகள், சிறுகதைகள் அவற்றுக்குரிய தனியான மொழியைக் கொண்டுள்ளன. கவிதைகளால் சொல்லக்கூடிய ஒன்றை நாவல்களில் சொல்ல முடியாது, நாவல்களில் சொல்லக் கூடிய ஒன்றை கவிதைகளில் சொல்லவே முடியாது என்பதுதான் உண்மை. நாவல்கள் எழுதும்போது பலவிதமான உலகங்களை நீங்கள் எதிர் கொள்வீர்கள் மற்றதில் இது இல்லை என்று கருதுகிறேன்"
வாசகனுக்கான எழுத்தாளர் நீங்கள், எழுத்தாளர் வாககர்களுக்கான உரையாடல் எப்படியிருக்க வேண்டும் என்று கருதுகிறீர்கள்?
"சுதந்திரமாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். உதாரணத்துக்கு எழுத்தாளர்கள் ஒரு கண்ணோட்டத்தில் எழுதியதை வாசகர்கள் வேறு ஒரு பொருளில் அர்த்தம் கொள்வார்கள், அதற்காக நாம் நீங்கள் சரியாக புரிந்து கொள்ளவில்லையென்று சண்டையிட முடியாது. என்னைப் பொறுத்தவரை வாசகனுக்கு அவன் பார்க்காத உலகத்தை கொடுத்தீர்கள் என்றால் அவன் ரசித்துப் படிப்பான் அவ்வளவுதான்"
வாசகனை இவ்வளவு நெருக்கமாக புரிந்து வைத்துள்ள அபிலாஷிடம் நீங்கள் வாசகனாக ரசிக்கும் எழுத்தாளர்கள் பற்றி கேட்டேன்,
"தமிழில் பிடித்தமான எழுத்தாளர்கள் என்றால், புதுமைப் பித்தன், சுந்தர ராமசாமி, அசோகமித்திரன், ஜெயமோகன், மனுஷ்யபுத்திரன், இமையம், என பட்டியல் நீண்டு கொண்டே போகும்" என்று கூறும் அபிலாஷ் தனக்கு பிடித்தமான எழுத்தாளராக ரஷ்ய எழுத்தாளர் லியோ டால்ஸ்டாயின் பெயரை குறிப்பிட்டார்.
ஃபியோதர் தஸ்தாயெவ்ஸ்கியையும் தான் தாமதமாக ரசித்த எழுத்தாளர் என்று இடைமறித்துக் குறிப்பிட்டார்.
உங்களுக்கு கிடைத்த மறக்கமுடியாத பாராட்டு பற்றி, "என்னுடைய கால்கள் நாவல் நிறைய பெண்களுக்கு பிடித்திருந்தது. அதனைப் பற்றி விரிவாக என்னிடம் குறிப்பிடுவார்கள், நாம் நிறைய எழுதியிருப்போம் அது கட்டுரையாக இருக்கலாம், கவிதையாக இருக்கலாம் நீங்கள் 10 வருடங்களுக்கு முன்பு எழுதியதை யாராவது குறிப்பிடுவார்கள்,
நீங்கள் மறந்துபோன வரியை யாராவது ஞாபகப்படுத்துவர்கள். என்னைப் பொறுத்தவரை வாசகன் எழுத்தாளர் மறந்த வரிகளை நினைவுப்படுத்துவதுதான் மிகச் சிறந்த பாராட்டு என்று கருதுகிறேன். இதில்தான் வாசகன் உங்கள் எழுத்தையும், மொழியையும் எவ்வாறு உள்வாங்கிக் கொண்டிருக்கிறான் என்பது தெரியும். அந்த இடத்தில் எழுத்தாளனாக நீங்கள் ஜெயித்து விட்டீர்கள்.
இதைத் தவிர்த்து இதுதான் நான் படித்த சிறந்த புத்தகம் என்று மதிப்பீடு செய்வதில் எனக்கு உடன்பாடு இல்லை" என்று கூறும் அபிலாஷ் எழுத்தளர்களுக்கு வழங்கப்படும் விருதுகளுக்கு தனக்கே உரித்தான பதிலை தெரிவித்தார்,
விருதுகளை நாம் பொருட்படுத்தக் கூடாது என்று கருதுகிறேன். சாகித்ய அகாடமி போன்ற விருதுகள் அப்போது எனது பொருளாதார தட்டுப்பாட்டை நீக்க உதவியது அவ்வளவுதான்.
இன்னும் விருதுகள் பெறாத சிறந்த எழுத்தாளர்கள் தமிழில் உள்ளனர். அவர்கள் எல்லாம் விருதுகளைத் தாண்டியும் பல மடங்கு சாதித்து விட்டார்கள் என்றுதான் நான் கருதுகிறேன். யார் தொடர்ந்து வாகர்களிடம் தொடர்ச்சியான உறவில் இருக்கிறார்களோ, யார் ஒருவரை வாசகர்கள் நினைவில் வைத்து கொள்கிறார்களோ அதுதான் எழுத்தாளர்களுக்கான மிகப் பெரிய விருது.
இறப்புக்குபின் உங்களை யாரென்றே தெரியாதவர்கள், உங்களது படைப்புகளை படித்து மகிழ்ச்சியடைய வேண்டும் அதுதான் ஒரு எழுத்தாளனுக்கான அங்கீகாரம்"
இளம் எழுத்தாளராக நீங்கள் கூறும் அனுபவவுரை?
இணையம் இன்று எல்லோருக்குமான எழுதும் தளத்தையும், சுதந்திரத்தையும் கொடுத்திருக்கிறது. முன்பு இருந்த எழுத்து கூச்சம் தற்போது நீங்கியுள்ளது. நீங்கள் ஏதோ விதத்தில் தொடர்ந்து எழுதிக் கொண்டே இருக்கிறீர்கள்.
சமூக ஊடகத்தின் வாயிலாக அனைத்துப் பிரச்சினைகளுக்கு தங்களது நிலைப்பாட்டை தெரிவிக்க முயல்கிறார்கள், இதன்முடிவு அவர்களிடம் எழுத்துக் கூர்மை தவறுகிறது. நீங்கள் உங்களுக்கான விஷயத்தை தேடிச் செல்ல வேண்டும். அதில் கவனமாக இருக்க வேண்டும்.
அனைத்தையும் விவாதிக்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள் ஆனால் அதன் மையத்தை தவற விடுகிறார்கள். உங்களது எழுத்து ஒரே புள்ளியை நோக்கிச் செல்ல வேண்டும். அப்போதுதான் அடையாளம் காணப்படுவீர்கள். உங்களது படைப்புகள் உடனடியாக கொண்டாடப்பட வேண்டும் என்று எண்ணாமல் உங்களது எழுத்து வாழ்வு முழுவதும் உங்களை அடையாளப்படுத்தகூடிய ஒன்றாக நீங்கள் அமைத்து கொள்ள வேண்டும்.
யார் படித்தாலும், படிக்காவிட்டாலும் நமக்கு எதும் முக்கியம் என்று தோன்றுகிறதோ அதனை தொடர்ச்சியாக எழுதிக் கொண்டே இருக்க வேண்டும். பத்து வருடங்களுக்கு பின்னால் உங்களது படைப்புகளைப் படிக்கும்போது அந்த எழுத்துக்கு மதிப்பு இருக்க வேண்டும் அது ஒன்றுதான் எழுத்தாளனாக உங்களை நிலைநிறுத்தும். இல்லையேல் வரலாற்றில் மறக்கப்படுவீர்" என்று கூறும் அபிலாஷ் அடுத்த படைப்பாக நாவல் ஒன்றை உருவாக்கி வருகிறார். அத்துடன் நடிகர் ரஜினி பற்றிய தெரியாத பிம்பத்தை புத்தகமாக எழுத இருக்கிறேன் என்று பகிர்ந்து கொண்டு எந்த ஆர்ப்பரிப்பும் இல்லாமல் நம்மிடமிருந்து விடைபெற்றார் அபிலாஷ்.
ஆர். அபிலாஷின் படைப்புகள்
கால்கள் - உயிர்மை பதிப்பகம் | புரூஸ்லீ சண்டையிடாத சண்டை வீரன் - உயிர்மை பதிப்பகம் | ரசிகன் - உயிர்மை பதிப்பகம் | அப்பாவின் புலிகள் – உயிர்மை | இன்றிரவு நிலவின் கீழ் - உயிர்மை | கிரிக்கெட்டின் மாறும் நிறங்கள் - கட்டுரைத் தொகுப்பு, உயிர்மை | இன்னும் மிச்சமுள்ளது உனது நாள் - 2014 - உயிர்மை
முந்தைய அத்தியாயம் > >புது எழுத்து | கார்த்திக் புகழேந்தி - தெற்கத்தி கதை சொல்லி
தொடர்புக்கு > indumathy.g@thehindutamil.co.in
முக்கிய செய்திகள்
வலைஞர் பக்கம்
6 days ago
வலைஞர் பக்கம்
8 days ago
வலைஞர் பக்கம்
9 days ago
வலைஞர் பக்கம்
11 days ago
வலைஞர் பக்கம்
11 days ago
வலைஞர் பக்கம்
12 days ago
வலைஞர் பக்கம்
15 days ago
வலைஞர் பக்கம்
19 days ago
வலைஞர் பக்கம்
20 days ago
வலைஞர் பக்கம்
22 days ago
வலைஞர் பக்கம்
23 days ago
வலைஞர் பக்கம்
25 days ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago