ரொக்கப் பரிவர்த்தனை இல்லாத வணிகச் செயல்பாடுகளை ஊக்குவிக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. பொருளாதார நிபுணர்கள் இதுபற்றி விவாதிக்கிறார்கள். ஆனால், 50 வருடங்களுக்கு முன்னால் ரொக்கப் பரிவர்த்தனை இல்லாத வணிகம் தமிழகக் கிராமங்களில் வழக்கில் இருந்தது.
அப்போதெல்லாம் கிராமத்துத் தெருக்களில் தலைச் சுமையிலும், தள்ளுவண்டியிலும் ஈடுபட்டவர்கள், காசு பணத்தைக் கண்ணால் பார்த்ததில்லை. எல்லாம் தானியங்களாகவே பரிமாறிக்கொள்ளப்பட்டன.
வியாபாரி அல்ல கலைஞர்
மோர் விற்கிற பெண்மணி, வீட்டுக்கு வீடு மோர் அளந்து ஊற்றிவிட்டு ஒரே ஒருபிடி அரிசி வாங்கிச் செல்வார். இதைப் போலவே செவ்வாய்க் கிழமைச் செட்டியார் (துணிமணிகள் கொண்டுவந்து விற்பவர்) வாணியச் செட்டியார் (எண்ணெய் விற்பவர்) வளையல் செட்டியார் (வளையல் வியாபாரி) என்று பலரும் பொருட்களைத் தந்துவிட்டு அரிசியாகவும், கம்பு, கேழ்வரகு, தானியங்களாகவும், காய்கறிகளாகவும் வாங்கிச் செல்வது உண்டு. இவ்வாறு விற்பவர்களைச் செட்டியார் என்ற சொல்லால் விளிப்பார்கள். அது சாதியைக் குறிப்பதில்லை.
வளையல் செட்டியார் வெறும் வியாபாரி மட்டும் அல்லர். அழகியலும் ஆன்மிகமும் ஊடாடும் கலைஞர் கள் அவர்கள். அவர்களின் தோற்றமே அலாதியானது.
தொளதொள ஜிப்பா, தொங்கு மீசை, முண்டாசு, வாய்நிறைய வெற்றிலை, உடைந்த வளையலாக வளைந்த கால், தாங்கித் தாங்கி நடந்து வருவார். நெற்றியில் நாமம், ஒரு தோளில் வளையல்களின் மலாரம், (கயிற்றில் கோத்த வளையல்கள்) மறு தோளில் சதுர வடிவப் பெட்டியை வெள்ளைத் துணியில் வைத்துத் தனியாகத் தொங்கவிட்டிருப்பார்.
வளையல் வாசனை!
வளையல் பெட்டியைத் திறப்பார். புத்தம் புது வளையல்களிலிருந்து ஒருவாசம் வீசும். என்ன பொண்ணே செளக்கியமா என்பார் சிரித்தபடி. வாயிலிருந்து வாசனைப் புகையிலை கமகமக்கும்.
காகித அட்டைக் குழாய்களில் கலர் கலராக மின்னும் கண்ணாடி வளையல்கள். மோகனமான மோஸ்தர்களில் டால் அடிக்கும். வானவில்லால் செய்தது போன்ற வர்ண விசித்திரங்கள். கையில் அப்படியே ஒரு கொத்து எடுத்துக் காட்டுவதே ஒரு அழகுதான்!
கையைத் தொடும் உரிமை
பெண்களைத் தொட்டு வளையல் அணிவிக்கும் உரிமை அவருக்கு மட்டுமே உண்டு. ஆணாதிக்கமும் பெண்கள் மீதான சந்தேகமும் புரையோடிப்போன சமூகத்தில் இது எப்படி அனுமதிக்கப்பட்டது என்பது ஒரு புதிர்தான்.
பெண்களின் கையைப் பிடித்து, விரல்களை அப்படியே ஒன்றுசேர்த்து வாழைப்பூ மொக்காகப் பிடித்துக்கொள்வார். பிறகு, கணுக் கையை நீவி வலிக்காமல் வளையலைப் போட்டுவிடுவார். என்ன லாவகம்.. என்ன நளினம்!
பிடி சற்று இறுகி, வளையல் போடும்போது வலித்தால் நிறுத்திவிட்டு, ‘வலிக்காமல் போட்டுவிடுகிறேன் அம்மா’ என்று தெலுங்கில் கொஞ்சிக் கொஞ்சிப் பேசி வளையலைப் போட்டுவிடுவார்.
உடைந்த வளையலுக்குக் காசில்லை
வளையல்கள் அணிவிக்கும்போது உடைந்து விட்டால், அந்த வளையல்களுக்குக் காசு வாங்க மாட்டார். அறிமுகம் இல்லாத பெண்கள் ரொம்பவே கூச்சப்படுவார்கள்.
அப்போது சொல்வார்.. எதற்காகப் பயப்படுகிறாய் அம்மா? சிவபெருமான் திருவிளையாடல் புராணத்தில் வளையல்காரராக வந்து, பெண்களுக்கு வளையல் போட்டுவிடுவார் தெரியுமா? என்னை யார்னு நெனச்சே? சாட்சாத் அந்த சிவனேதான்! என்னை சிவனா நெனச்சுக்கோம்மா என்பார். அங்கிருக்கும் பெண்களின் கண்கள் தளும்பிவிடும்.
ஆளாளுக்குப் போட்டி போட்டுக்கொண்டு கை நீட்டுவார்கள்.
வளையல் சத்தம்
வளையல் சத்தத்துக்குக் கிறங்காத மாப்பிள்ளைகள் உண்டா? வளையல் சத்தம் என்றதுமே வண்ணதாசன் கவிதைதான் நினைவுக்கு வருகிறது.
“ஒண்டுக் குடித்தனக்கார
கூட்டுக் குடும்பஸ்தன்
கண்டுபிடித்தது
ரப்பர் வளையல்.”
வளைகாப்பின்போது முதலில் அரக்கு வளையல்தான் போடுவார்கள். அப்புறம் வேப்பமர ஈர்க்குகளில் வளையல்செய்து அணிவிப்பார்கள். பிறகுதான் கண்ணாடி வளையல்கள், பிறகு வெள்ளி, பொன் வளையல்கள் அணிவிப்பார்கள். வயிற்றிலிருக்கும் குழந்தை, தாயின் கையில் கலகலக்கும் வளையல் சத்தம் கேட்டுச் சிரிக்குமாம்!
பிறந்த குழந்தையின் கைக்கு திருஷ்டிப் பரிகாரமாக கருப்பு - வெள்ளை நிற வளையல்கள் போடுவது உண்டு. பால்பாசி வளையல், வசம்புத் துண்டுகளால் ஆன வளையல் என்று பிஞ்சுக் குழந்தையின் கைகளை அலங்கரிக்கும் வளையல் ஒவ்வொன்றுக்கும் ஒரு அபூர்வ வாசனை.. அழகு!
நாற்று நடும் பெண்கள் வளையல்களுடன் வேலை செய்யும்போது, பூச்சிப் பொட்டுகள் ஓடிப்போகும் என்பதால் கையிலிருந்து கழற்ற மாட்டார்கள். நெல் குத்தும்போது கழற்றிவைத்து விடுவார்கள்! மெட்டி ஒலியும், வளையல்களின் கிணுகிணுப்பும், கொலுசுச் சத்தமும் கேட்ட வீடுகளில் வசிக்க நேர்ந்தவர்களுக்கு வாழ்க்கை சுகானுபவமாக இருந்தது! இப்போதெல்லாம் தெருக்களில் வளையல்காரர்கள் வருவதில்லை. அவரை எதிர்நோக்கிக் காத்திருக்கும் பெண்களும் இல்லை.
வாழ்க்கை தொலைத்துவிட்டது வளையல் வம்சத்தை!
- தஞ்சாவூர்க் கவிராயர் தொடர்புக்கு: thanjavurkavirayar@gmail.com
முக்கிய செய்திகள்
வலைஞர் பக்கம்
8 days ago
வலைஞர் பக்கம்
8 days ago
வலைஞர் பக்கம்
13 days ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago