சொல்லத் தோணுது 8 - மேரேஜ் எனும் திருமணம்!

By தங்கர் பச்சான்

தமிழர்கள் அடையாளத்தை இழந்து வருவது போலவே திருமண அழைப் பிதழ்களும் அதன் தோற்றத்தை இழந்து கொண்டு வருகின்றன. ஒரு சாதாரண மஞ்சள் தாளில் அச்சடித்திருந்த அந்தப் பழைய அழைப்பிதழ்களில் இருந்த உயிரும் நெருக்கமும் புதிதில் இல்லை. பழைய அழைப்பிதழ்கள் நடை பெறவிருந்த திருமணத்தை மட்டும் நினைவுப்படுத்தின. புதிய பத்திரிகைகள் நமக்குத் தொடர்பில்லாத, ஆடம்பர விழாவுக்கு அழைப்பது போலவே தோன்றுகின்றன.

ஒருவர்கூட தவறாமல் ஆங்கிலத்தில் அழைப்பிதழ் அச்சடிப்பதை வாடிக் கையாகக் கொண்டிருப்பதன் நோக்கம் விளங்கவேயில்லை. அழைப்பிதழ் களில் இருக்கிற அந்நியத்தனத்தை அப்படிப்பட்டத் திருமணங்களுக்குச் செல்லும்போது உணர்கின்றேன். வரவேற்பு எனும் பெயரில் நடக்கும் நிகழ்வுகள் திரைப்படப் படப்பிடிப்புப் போலவே எனக்குத் தோன்றுகிறது. மகிழ்ச்சியோடு பேசி, உறவாடும் நிலை இல்லாமல் போய்… வாசலில் நிற்கிற முன்பின் தெரியாத இளம் பெண் களிடமும் குழந்தைகளிடமும் பொய் சிரிப்பை உதிர்த்துவிட்டு, சந்தனத்தை எடுத்து தடவிக் கொள்வதிலிருந்து திருமணக் கூடத்தை விட்டு வெளி யேறுவது வரை எல்லாமும் செயற் கையாகவே நடந்தேறுகிறது.

இசைக் கச்சேரி எனும் பெயரில் நடத்தப்படுகிற அந்தக் கொடுமையான பாட்டையும், சத்தத்தையும் எப்படி இந்த மக்கள் ரசிக்கிறார்கள்? நாம் யாரைப் பார்க்கப் போகிறோமோ, அவர் மணமக்களின் பக்கத்தில் நின்று கொண்டு வீடியோ கேமராவுக்கும், புகைப்படக் கேமராவுக்கும் ஒத்துழைப்புக் கொடுத்து மணமக்களிடத்தில் விருந்தினர்களை அறிமுகப்படுத்திக்கொண்டே இருப்பார். போட்டோவுக்கு பேசாமல் முறைத்துக் கொண்டிருப்பது போலவே, வீடியோ கேமராவுக்கும் நிற்கிற நம் மக்களின் முகத்தைப் பார்க்கிறபோது எனக்குப் பரிதாபமாக இருக்கும். இயல்பான நிகழ்வுகளைப் படம் பிடிக்கத் தெரியாத வர்களையும், இயல்பாக கேமரா முன் இருக்கத் தெரியாத நம் மக்களை யும் எவ்வளவு காலமாற்றம், கண்டு பிடிப்புகள் நிகழ்ந்தாலும் மாற்றவே முடியாது.

பாட்டுக்காரர்கள் போடுகிற சத்தத்தில் யார் பேசுவதும் யாருக்கும் கேட்பதில்லை. ஒரு சிலரைத் தவிர எவரும் மணமக்களை வாழ்த்துவதும் இல்லை. வாக்குச் சாவடிகளில் வரிசை யில் நிற்கிற மாதிரி நின்று, மொய் உறையைக் கொடுத்துவிட்டு கேம ராவைப் பார்த்து முறைத்துவிட்டுச் சென்றுவிடுகிறார்கள். அதேபோல் பளபளப்புத் தாள் சுற்றப்பட்ட மலர்க் கொத்தைக் கொடுப்பதும், வாங்கிய வேகத்திலேயே மணமக்கள் அடுத்த விருந்தினருக்குத் தயாராவதையும் பார்க்கும்போது, எதற்காக இதனை எல்லாம் நடத்திக் காட்ட வேண்டும் எனும் கேள்வி எனக்கு எழுகிறது.

இவை முடிந்து, சாப்பிடப் போனால் ஹோட்டலுக்குத்தான் சாப்பிட வந்திருக்கிறோமா என்பது போலவே கூலிக்கு அமர்த்தப்பட்ட முன்பின் தெரியாதவர்கள், சமைத்த உணவுப் பண்டங்களை இலையில் வைத்துக் கொண்டே போவார்கள். பின் அவற்றில் பாதிக்கு மேல் குப்பையில் கொண்டு போய்க் கொட்டுவதும் சகித்துக்கொள்ள முடியாதது.

வந்த விருந்தினர்களுக்கு விருந்து படைப்பது அவசியம்தான். அதற்காக அவர்கள் விரும்புகிறார்களோ, இல்லையோ தொடர்ந்து ஒருவர் பின் ஒருவராக வந்து கொட்டி, வீணாக்கப் படுகிற உணவுப் பண்டங்களைப் பற்றி யாராவது நினைத்துப் பார்க்கிறார்களா? பரிமாறப்படும் உணவுப் பண்டங்களின் பெயர்களே நம் மக்களில் பாதி பேருக்குத் தெரியாது.

இந்தப் பண்டங்கள் இந்த இலைக்கு எவற்றையெல்லாம் கடந்து வந்திருக்கிறது எனத் தெரியுமா? உழவுக்கு முன்னும் பின்னும் நிலம் காத்துக் கிடக்கின்ற காலம், பின் விதைப்பு, களையெடுப்பு, இரவு பகலாக பாம்பு, பூச்சி எனப் பார்க்காமல் நீர்ப் பாய்ச்சல், உரம், பூச்சி மருந்துத் தெளிப்பு, அதன்பின் அறுவடை! இதோடு முடிந்து விடுவதில்லை. சுத்தப் படுத்தி பல கைகளுக்கு மாற்றப் பட்டு எவ்வளவோ கணக்கற்ற உழைப்பு களுக்குப் பின் பக்குவமாக சமைத்து பரிமாறப்படும் உணவுப் பண்டங்களை, ஒரு நொடிகூட சிந்திக்காமல் மூடி வைத்துவிட்டு வந்து விடுகிறோமே… இது குற்றச்செயல் இல்லையா?

பணக்கார விருந்துகளில் வீணாக் கப்படும் உணவுப் பண்டங்களை மிச்சப் படுத்தினாலே கோடிக் கணக்கான மனிதர்கள் உயிர் வாழ முடியுமே! பகட்டுத்தனத்துக்காக உணவுப் பண்டங்களை வீணாக்குபவர்கள் யாரும் படிக்காதவர்கள் இல்லை. தங்கள் பண பலத்தை காண்பிப்பதற்காகவே இன்றைக்குப் படித்தவர்களின் திரு மணங்கள் அரங்கேறுகின்றன.

படிக்காத மற்றும் ஏழை, எளிய மக்களின் திருமணங்கள்தான் தன் சுற்றத் தோடும், ரத்த உறவுகளோடும் எளிய முறையில் நடந்தேறுகின்றன. உண் மையான அன்பையும், நெருக் கத்தையும், மனமகிழ்ச்சியையும் அந்த வியர்வை வழியும் மக்களிடம்தான் கவனிக்க முடிகிறது. நம் கலாச்சாரத்தில் இல்லாத கேரளக்காரர்களின் செண்டை மேளம் இல்லை. காதைப் பிளக்கும் பாட்டுக் கச்சேரி இல்லை. கண்கள் கூசும் விளக்கொளிகள் இல்லை. ஆடம் பர உடைகள் இல்லை. சாப்பிட முடியாமல் மூடி வைத்துவிட்டுப் போகும் அளவுக்கு விருந்தோம்பல் இல்லை. ஆனால், அந்த எளிய மஞ்சள் பத்தி ரிகை மாதிரி உண்மையான திருமண மாக இருக்கிறது.

ஒருநாள் வாடகையை மிச்சப்படுத்து வதற்காகத்தான் அண்மைக் காலமாக உருவாக்கப்பட்டது இந்த ரிசப்ஷன் எனும் வரவேற்பு.

சென்ற ஆண்டு, நண்பர் ஒருவருடைய மகள் திருமணத்துக்குச் சென்றிருந்தேன். கட்டுக்கடங்காதக் கூட்டம். எந்தெந்த வகைகளிலெல்லாம் செலவு செய்ய முடியுமோ, அவ்வாறெல்லாம் செலவு செய்திருந்தார். 60 லட்சம் ரூபாயில் மணமகனுக்கு ஆடம்பரக் கார் பரிசளித்திருந்தார்.

வெளிநாட்டில் தொழில் செய்யும் அந்த நண்பரின் மகளை இரண்டு மாதங் களுக்கு முன்பு சென்னை விமான நிலையத்தில் பார்த்தேன். அவளின் அப்பா பற்றி விசாரித்துவிட்டு மாப்பிள்ளைப் பற்றியும் விசாரித்தேன். பதில் சொல்லாமல் போய்விட்டாள். என் விமானத்தில்தான் பயணித்தாள். கோயம் புத்தூரில் இறங்கி வெளியேறும்போது என்னிடம் வந்து பேசினாள். வரவேற்பு முடிந்த அன்று இரவு நண்பர்களுடன் வெளியில் சென்றபோது கார் விபத்தில் தலையில் அடிபட்டு நினைவு இழந்து போனாராம் அவளுடைய மாப்பிள்ளை. இதுவரை அவர் குணம் அடைய வில்லையாம். திருமணம் நின்று போனதும், அப்பா வேறு திருமணத்தை நடத்தி வைக்க முயன்றும் அவள் ஏற்றுக் கொள்ளவில்லையாம். இனி அவர் தேறி வரமாட்டார் எனத் தெரிந்தும் அவளால் அவரை மறக்க முடியவில்லை. திருமணத்துக்கு முன்பாக நான்கு மாத காலம் நெருங்கிப் பழகியதால் மட்டு மல்ல; திருமண வரவேற்பே தனக்கு திருமணம் போல்தான் இருந்தது. தாலி மட்டும்தான் அவர் எனக்குக் கட்டவில்லை என அவள் சொன்னாள்.

அதன்பின் நண்பரிடம் தொலை பேசியில் தொடர்பு கொண்டேன். மாப்பிள்ளையை மறக்க முடியவில்லை என மகள் அழுகிறாள். திருமணத்துக்கு முன்பு மாப்பிள்ளையிடம் நேரில் சந்திக் கவும், போனில் பேசவும் மகளை அனுமதித்ததே பெரும் வினையாகி விட்டது. ஒரு வழியாக சமாதானம் சொல்லி வேறொரு மாப்பிள்ளை தயார் படுத்தியிருக்கிறேன். கண்டிப்பாக நீங்கள் திருமணத்துக்கு வரணும். இந்த முறை வரவேற்பெல்லாம் கிடை யாது. முதலில் திருமணம் அதன் பின் மாலையில்தான் வரவேற்பு எனச் சொன்னார். அந்த மேரேஜை விட இந்தத் திருமணம் நண்பரின் மகளுக்கு இனிதாக அமைய எனக்குள் வேண்டிக் கொள்கிறேன்.

- இன்னும் சொல்லத் தோணுது...

எண்ணங்களைத் தெரிவிக்க: thankartamil@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வலைஞர் பக்கம்

1 hour ago

வலைஞர் பக்கம்

1 day ago

வலைஞர் பக்கம்

2 days ago

வலைஞர் பக்கம்

4 days ago

வலைஞர் பக்கம்

5 days ago

வலைஞர் பக்கம்

8 days ago

வலைஞர் பக்கம்

8 days ago

வலைஞர் பக்கம்

10 days ago

வலைஞர் பக்கம்

11 days ago

வலைஞர் பக்கம்

13 days ago

வலைஞர் பக்கம்

13 days ago

வலைஞர் பக்கம்

15 days ago

வலைஞர் பக்கம்

23 days ago

வலைஞர் பக்கம்

25 days ago

வலைஞர் பக்கம்

26 days ago

மேலும்