கேரளாவைச் சேர்ந்த தலைசிறந்த படைப்பாளியும் நவீன மலையாள இலக்கியத்தின் முக்கிய ஆளுமையுமான காக்கநாடன் (Kakkanadan) பிறந்த தினம் இன்று (ஏப்ரல் 23). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:
* கேரள மாநிலம், திருவல்லாவில் பிறந்தார் (1935). தந்தை, மதபோதகர். இவரது முழுப்பெயர் ஜார்ஜ் வர்கீஸ் காக்கநாடன். பள்ளிப் படிப்பு முடிந்ததும் கொல்லம் எஸ்.என். கல்லூரியில் பி.எஸ்சி. வேதியியலில் பட்டம் பெற்றார். பின்னர் இரண்டாண்டுகள் ஆசிரியராகப் பணியாற்றினார்.
* 1957-ல் தென்னக ரயில்வே வேலையில் சேர்ந்தார். நான்கு வருடங்கள் தமிழ்நாட்டில் பணியாற்றினார். பின்னர், 1961 முதல் 1967 வரை தில்லியில் ரயில்வே அமைச்சகத்தில் பணியாற்றினார். இலக்கிய ஆர்வம் கொண்டிருந்த இவர், அவ்வப்போது எழுதியும் வந்தார். அப்போது இவரது முதல் நாவல் ‘வசூரி’ வெளிவந்தது.
* இவரது இரண்டாவது நாவல் ‘சாட்சி’ இவருக்கு நல்ல படைப்பாளி என்ற அந்தஸ்தைப் பெற்றுத்தந்தது. இதற்கிடையே ஆக்ரா பல்கலைக்கழகத்தின் காசியாபாத் எம்.எம்.ஹெச். கல்லூரியில் எம்.ஏ. பயின்றார். ஜெர்மனியில் இலக்கிய ஆய்வுகள் மேற்கொள்ள உதவித்தொகை கிடைத்தது. 1967-ல் ஜெர்மன் சென்றார். அங்கே ஆறு மாத காலம் ஜெர்மன் மொழி கற்றார்.
* 1968-ல் கேரளா திரும்பிய இவர் இறுதிவரை கொல்லத்தில் வாழ்ந்து வந்தார். கொல்லத்திலிருந்து வெளிவந்த எஸ்.கே. நாயரின் ‘மலையாள நாடு’ வாரப் பத்திரிகையில் 1971-லிருந்து ஆசிரியர் குழு உறுப்பினராகப் பணியாற்றினார்.
* ஏறத்தாழ இருபதாண்டு காலம் மலையாள இலக்கிய உலகை இவர் தனது நியோ - ரியலிச (neo-realism) பாணியால் ஆதிக்கம் செலுத்தினார். கேரள இலக்கியத்தில் நவீனத்துவத்தை அறிமுகப்படுத்திய முன்னோடி எனப் போற்றப்பட்டார்.
* இவரது தனித்துவம் வாய்ந்த, புதுமையான எழுதும் பாணி, அபார மொழிநடை ஆகியவை இளைஞர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றது. வாழ்க்கையின் யதார்த்தம், மக்களின் வாழ்க்கை முறையை இவரது படைப்புகள் பிரதிபலித்தன. மலையாள நாடு விருது, விஸ்வதீப விருது, இந்தியன் அசோசியேஷன் ஷார்ஜா விருது, கேரளா எழுத்தாளர்கள் அமைப்பு விருது ஆகிய விருதுகளையும் பெற்றார்.
* 1984-ம் ஆண்டின் சிறந்த புதினத்துக்கான கேரள சாகித்ய அகாடமி விருது இவரது ‘ஒரோத’ என்ற நாவலுக்குக் கிடைத்தது. 1996-ம் ஆண்டு ‘உஷ்ண மேகல’ என்ற நாவலுக்கு ‘முட்டத்து வர்க்கி’ என்ற விருது கிடைத்தது. ‘அஸ்வத்தாமாவின்டே சிரி’ என்ற சிறுகதைத் தொகுப்புக்காக 1980-ல் கேரள சாகித்ய அகாடமி விருது பெற்றார். ‘ஜாபணா புகையில’ என்ற நூலுக்காக 2005-ம் ஆண்டில் மத்திய சாகித்ய அகாடமி பரிசும் பெற்றவர். கேரள சாகித்ய அகாடமியின் ஃபெலோஷிப்பும் இவருக்குக் கிடைத்தது.
* ‘ஒரோத’, ‘இரண்டாம் பிறவி’, ‘கோழி’, ‘அபிமன்யு’, ‘சாட்சி’, ‘ஏழாம் முத்திரா’, ‘உஷ்ண மேகலா’ உள்ளிட்ட நாவல்கள், ‘யுத்தாவசானம்’, ‘புரதேக்குள்ளே வழி’, ‘அஸ்வத்தாமாவிண்டே சிரி’, ‘சக்ரம்’ உள்ளிட்ட சிறுகதைகள் குறிப்பிடத்தக்கவை.
* இவரது பல படைப்புகள் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. இவரது ‘பரங்கிமலா’, ‘அடியாரவு’ ஆகிய நாவல்களும் ‘சித்தாலுக்கள்’ என்ற சிறுகதையும் திரைப்படங்களாக எடுக்கப்பட்டு மாபெரும் வெற்றிபெற்றன.
* நாவல்கள், சிறுகதைகள் மட்டுமல்லாமல் பயண நூல்களையும் கட்டுரைகளையும் எழுதியுள்ளார். நவீன மலையாள இலக்கியத்துக்கு வித்திட்டவர் எனப் போற்றப்படும் ஜார்ஜ் வர்கீஸ் காக்கநாடன் 2011-ம் ஆண்டு 76-வது வயதில் மறைந்தார்.
முக்கிய செய்திகள்
வலைஞர் பக்கம்
23 hours ago
வலைஞர் பக்கம்
1 day ago
வலைஞர் பக்கம்
3 days ago
வலைஞர் பக்கம்
5 days ago
வலைஞர் பக்கம்
7 days ago
வலைஞர் பக்கம்
8 days ago
வலைஞர் பக்கம்
10 days ago
வலைஞர் பக்கம்
10 days ago
வலைஞர் பக்கம்
13 days ago
வலைஞர் பக்கம்
13 days ago
வலைஞர் பக்கம்
15 days ago
வலைஞர் பக்கம்
22 days ago
வலைஞர் பக்கம்
24 days ago
வலைஞர் பக்கம்
25 days ago
வலைஞர் பக்கம்
27 days ago