ஒரு துறவியும், அவர் சீடர் ஒருவரும் காட்டு வழி நடந்து சென்றனர். இருவரும் ஓர் ஆற்றைக் கடக்க நேர்ந்தது. அப்போது, ஒரு பெண் ஆற்றைக் கடக்கத் தயங்கி நின்றுகொண்டிருந்தாள். தனக்கு உதவி செய்யுமாறு அவள், அவர்கள் இருவரையும் கேட்க, துறவறம் கொண்டபின் பெண்ணைத் தொட்டுத் தூக்குவதா என்று சீடன் யோசிக்க, துறவி சட்டென்று அந்தப் பெண்ணைத் தூக்கிக்கொண்டு ஆற்றைக் கடந்து, அந்தப் பக்கம் இறக்கி விட்டு விட்டார்.
சீடனுக்குப் பெரும் குழப்பம், துறவி எப்படி அந்தப் பெண்ணைத் தொட்டுத் தூக்கலாம் என்று. துறவியும் சீடனும் நெடுநேரம் நடந்து, நெடுந்தூரம் கடந்தபின்னும் சீடனுக்கு குழப்பம் தீரவில்லை. சரி கேட்டு விடுவோம் என்று, "குருவே அந்தப் பெண்ணை நீங்கள் தூக்கியது துறவறத்துக்கு இழுக்கல்லவா?" என்று கேட்க, குரு சொன்னாராம், "சீடனே நான் அந்தப் பெண்ணை அப்போதே இறக்கி விட்டு விட்டேனே, நீ இன்னுமா சுமந்து கொண்டிருக்கிறாய்?" என்று!
இப்படித்தான் நம்மில் பலரும் பிறர் மீதான கோபத்தை, நாமாக உருவாக்கிக் கொண்ட அபிப்ராயத்தைச் சுமந்து கொண்டு இருக்கிறோம். நீ என்னைப் பற்றி என்ன நினைத்துக் கொண்டிருக்கிறாய், அது இப்படியில்லை, இது இப்படிதான் நடந்தது, அப்படி புரிந்துக் கொள்ளப்பட்டது என்று பேசினாலே பல விஷயங்களுக்கு விளக்கம் கிடைத்துவிடும். மன்னிப்பிலும், விளக்கத்திலும் சில விஷயங்கள் தெளிந்து விடும், காலபோக்கில் சிலது நீர்த்து விடும். ஆனால் நாம் பேச விரும்புவதில்லை, கேள்விக் கேட்க விரும்புவதில்லை, நாமே நமக்கு அறிவாளி, பிறர் எல்லாம் கோமாளி என்ற ரீதியிலேயே நமது நினைப்பும், செயலும் அமைந்து விடுகிறது.
ஒருவரைப் பற்றிய கருத்துக் கொண்டவுடன், அவன்/அவள் அப்படிச் சொன்னான்(ள்), இப்படி எழுதினாள்(ன்) என்று நமக்கு நெருங்கிய ஒரு வட்டத்திற்குள் கதைக்கத் தொடங்குகிறோம், ஒரு புள்ளிக்குக் கொஞ்சம் கொஞ்சமாக உருவம் கொடுத்து நிறைவு செய்கிறோம். இப்படியே உண்மை விளம்பிகளாக நாம் கிசுகிசுப்பில் லயித்து, ஏதோ ஒருவனை அல்லது ஏதோ ஓர் அமைப்பை பற்றிய ஓர் உருவகம் அல்லது மனபிம்பம் கொள்கிறோம்.
இந்த முறையில் ஏதோ ஒரு மனம் புண்படலாம், ஏதோ ஓர் அமைப்புச் சிதைந்திடலாம், ஏதோ ஒரு தற்கொலை நிகழ்ந்திடலாம், எங்கோ ஓர் உறவு பிரிந்திடலாம். அத்தனையும் செய்தவர்கள், இந்தப் பிரிவையோ, பிளவையோ சரி செய்திட முடியாது, போன உயிரையும் திருப்பித் தர இயலாது!
தனி மனிதர்களாக நம்முடைய தெளிவுப்படுத்திக் கொள்ளாத சிந்தனையும் செயல்களும் பல்வேறு தாக்கங்களை நம்மை சுற்றி உள்ளவர்களுக்கு உடனடியாகவே ஏற்படுத்தும். தேவையில்லா ஒரு கிசுகிசுப்பு ஏதோ ஓர் அண்டை வீட்டாரைப் பாதித்திடலாம், ஏதோ ஒரு தற்கொலைக்கு தூண்டலாம். உதாரணத்திற்குப் பக்கத்துக்கு வீட்டில் ஒரு பெண் யாரையோ ஓடிப் போய்த் திருமணம் செய்தால், அண்டை வீட்டார் அந்தப் பெற்றவருக்கு ஒரு தைரியத்தையோ, துணிவையோ, தெளிவையோ தருகிறார்களோ இல்லையோ, அதற்குள் ஒரு மிகப்பெரிய திரைக்கதையை இயற்றி, அதை விநியோகித்தும் இருப்பார்கள்.
தவறான தகவல்களால் உருவான வதந்தி, அவர்களைப் பொருத்தவரை தொலைக்காட்சித் தொடரை விட ருசிகரமானது. கொஞ்ச காலம் அந்தப் பெண்ணும் குடும்பமும் தான் எல்லோர் வீட்டுக்கும் விளம்பர இடைவேளை இல்லாத ஒரு தொலைக்காட்சித் தொடர். அத்தனை சுவாரசியம் அந்தத் தலைப்பு! வதந்தி காட்டு தீ போல் மெல்ல மெல்ல பரவி, சொல்பவரின் நாக்கை நெருப்பாக்கி, கேட்பவரின் புத்தியை கருப்பாக்கி விடுகிறது.
சரி தனி நபர் இப்படி என்றால், மக்கள் சாதனக் கருவிகள், அமைப்புகள் என்ன செய்கின்றன? பத்திரிக்கை / தொலைக்காட்சி செய்யும் புரளிகள், ஒரு பெரும் தாக்குதலையே ஏற்படுத்தி விடும்..
ஏதோ ஓர் 56 வயது பெண்ணையும், அவருடைய மகனையும் ஒருவன் கொலை செய்திட, உடனே அந்தப் பெண்ணுடைய கள்ளக்காதலன் சுமார் இத்தனை மணிக்கு வந்தான், இருவரும் உல்லாசமாய் இருந்தார்கள், அப்புறம் அவர்களுக்குள் தகராறு, பெண்ணைக் கள்ளக்காதலன் கொலை செய்ய, மகன் குறுக்கே பாய அவனும் கொல்லப்பட்டான். இப்படியாகப் போகும் அந்தக் கதை.
காவல் துறையினருக்குக் கூடத் தெரியாத விஷயமெல்லாம், கொலை நடந்த உடனே இவர்களுக்குத் தெரிந்து விடுகிறது, பிறகு மொத்தக் குடும்பத்தையும் அலசி ஆராய்ந்து, அவர்கள் வீட்டுக் கொள்ளுப் பாட்டியில் இருந்து, அந்த வீட்டில் பழைய சோறு தின்ற நாய்க்குட்டி வரை அத்தனை பேரின் வரலாறும், புகைப்படங்களும் பிரசுரித்து ஒரு மிகப் பெரிய சாதனை படைப்பார்கள். எதிர் வீடு, பக்கத்து வீடு, பக்கத்து வீட்டுக்கு எதிர் வீடு, எதிர் வீட்டுக்கு பக்கத்து வீடு என எல்லாருடைய கருத்துகளையும் வாங்கிப் போடுவார்கள்.
காவல் துறை புலனாய்வு செய்து, அந்தப் பெண்ணின் கணவருக்கும், கொலைகாரனுக்கும் ஏற்பட்ட பகையில் நடந்த கொலை இது என்று வழக்கை முடிக்க, ஒரு சிறு மன்னிப்பு கூட இல்லாமல், அந்தச் செய்தியையும் போடும், ஒளிபரப்பும் இந்த ஊடகங்கள். நிற்க. இது ஓர் உதாரணமே. மிகப்பெரிய ஊடகங்களிலும் மனிதர்கள் தாங்களாக தெரிந்து கொண்ட செய்திகளை, தெளிவுப்படுத்திக் கொள்ளாமல் ஏதோ ஒரு பரபரப்பிற்காக, பணம் பெருக்கும் காரணத்திற்காக பரப்புரை செய்து விட்டு, மன்னிப்பு கேட்கும் ஒரு அறம் கூட இல்லாமல் போவதுதான் வேதனையான விஷயம்.
உண்மையில் இந்த நிகழ்ச்சிகளுக்கு/ நிகழ்வுகளுக்குப் பின்னே இருப்பது என்ன? ஒரு விதமான மனச்சிதைவு! ஏதோ ஒரு வடிகால், ஒரு குறுகுறுப்பு.
கேள்வி கேட்க வேண்டிய இடத்தில் நமக்குக் கேள்விக் கேட்க முடியவில்லை என்றாலும் அதை நெருக்கமானவர்களிடம் பேசி தொலைத்து, மறந்து விடலாம், ஆனால் கேட்க உரிமை உள்ள இடத்தில், அல்லது வாய்ப்பு உள்ள இடத்தில் கேட்காமல் விடுவது, உண்மையில் கேள்வி கேட்க நாம் விரும்பாததையும், அந்தக் கேள்விக்கு வரும் பதில் சுவாரசியம் இல்லாமல் போய்விடுமோ என்ற சில நிலைப்படும் காரணமாய் இருக்கலாம், அல்லது ஓட்டுப் போட்டு விட்டு எப்போதும் அல்லாடும் ஒரு சாதாரணக் குடிமகனாய் இருக்கலாம் அல்லது ஏதோ ஒரு பகையைத் தீர்த்துக்கொள்ள, ஒரு வளர்ச்சியைத் தடுக்க அல்லது ஓர் உறவை முறிக்கப் பயன்படுத்தும் ஓர் ஆயுதமாகக் கருதியும் கேட்காமல் இருக்கலாம்!
வாழ்க்கைக்கு, சுதந்திரத்திற்கு ஆதாரமான எதையும் கேட்கவும், தெளிவுப்படுத்தி கொள்ளவும் நமக்கு நேரமில்லை. மாறாக இந்தச் சமுதாயம், நடிகையின் தொப்புளைப் பற்றிய கிசுகிசுப்பில் லயித்துக் கிடக்கும், திரைப்படம் வெளி வரவில்லை என்றால் பெரும் போராட்டம் நிகழ்த்தும், காந்தி ஜெயந்திக்குச் சாராயக் கடை திறந்தால் என்ன என்று விவாதிக்கும், வாங்கிய வரியில் மக்களுக்கு என்ன நன்மை நடந்தது என்று கேட்கத் தவறும், கேட்டாலும் சட்டங்கள் பாயும், சட்டம் படித்த வல்லுனர்களும் வாய்தா வாங்கிப் போராடிக் கொண்டிருப்பார்கள், சாதி மதம் எனப் பிளவுபட்டு, ஒற்றுமை இழக்கும், வளர்ச்சியை இழக்கும், நிலத் தரகர்களின் பிடியில் விவசாயியைக் கொல்லும், உள்ளூர் வியாபாரிகளைக் கொன்று விட்டு, சீனத்து வணிகம் வளர்க்கும், பிறகு சீனா, அருணாச்சலத்தை அளக்க பதற்ற நாடகம் செய்யும், தமிழர்களின் ஓட்டு கேட்கும், மறுபக்கம் ஆயுதம் தந்து அவர்களைக் கொல்லும், சாலை விதிகளைப் பற்றிய சட்டம் இயற்றும், சாராயக் கடைகளும் அதுவே நடத்தும், படித்தவனைக் கடினமாகப் பிழியும், அதிகாரி ஆக்கும், பதவி பெற்ற ஏதோ ஒரு ரௌடிக்கோ, ஊழல் செய்யும் ஒரு பெருசாளிக்கோ அவனைச் சேவகம் செய்யச் சொல்லும், மரம் வளர்க்கச் சொல்லும், மறுபக்கம் சுரங்கம் தோண்டி காடு அழிக்கும், வளங்கள் திருடும்.
எத்தனை எத்தனையோ இந்தச் சமுகத்தில் நிகழ்ந்துக் கொண்டுதான் இருக்கும். சில கேள்விகள், சிலரின் போராட்டங்கள் எங்கோ சிலருக்கு நீதியை பெற்று தந்துக் கொண்டும் இருக்கும்.
பேசமுடியாத இந்த சமூகத்தில் உள்ள சட்ட அமைப்பும், தவறு செய்பவனை விட, பாதிக்கப்படுவனைத் தான் இங்கே அதிகம் போராட வைக்கிறது என்பதே பொதுஜனம் புரிந்து கொண்ட நிதர்சனம்.
குறைந்தபட்சம் நம்மை நாம் திருத்திக் கொள்ள வேண்டி இருக்கிறது, வளரும் தலைமுறைக்கு ஒரு வழிக்காட்டுதல் தேவை இருக்கிறது. அந்த வழிகாட்டுதல் இல்லாத வரை, நீதி இரத்தம் சிந்திக் கொண்டுதான் இருக்கும் இந்த ஊமையான சமூகத்தில்.
புரையோடிப் போனவற்றைப் போராட்டமும், மக்களுக்கான சட்டமும் சரி செய்யட்டும், வளரும் இளந்தலைமுறைக்கேனும் வழிகாட்டுதலை வீட்டில் இருந்தே துவங்குங்கள், குழந்தை வளர்க்கும் போதே, இன்று என்ன நடந்தது என்று தினம் கேட்க வேண்டும், குற்றம் குறைகளைக் குழந்தைச் சொல்லும் போது, அந்தக் குழந்தையைச் சரியானபடி வழி நடத்த வேண்டும், அதனுடைய சந்தேகங்களைத் தீர்க்க வேண்டும், நண்பர்களுடன் அந்தக் குழந்தைக் கொண்ட ஊடலை, தானே பேசித் தெளிவுப்படுத்திக் கொள்ளச் சொல்ல வேண்டும், இல்லை சம்பந்தப்பட்ட எல்லாக் குழந்தைகளையும் அழைத்து, அவர்களுக்குப் பேசித் தெளிவுப்படக் கற்றுக் கொடுக்க வேண்டும். அதை விடுத்து, அந்தக் குழந்தையைத் திருப்பி அடி, அந்தக் குழந்தையுடன் சேராதே, ஆம்பிளைப் பசங்க அப்படிதான், பெண் பிள்ளைக்கு அடக்கம் வேண்டும், இந்தச் சாதி, அந்த மதம் எல்லாம் அப்படிதான் என்று தப்பும் தவறுமாகச் சொல்லிக் கொடுக்கும் அடிப்படையில் உருவாகிறது தீவிரவாதம், தீவிரவாதிக்கு பொறுமையில்லை, கேட்டு தெளியும் அறிவும் இல்லை. பொறுமையும் அறிவும் இல்லாதவருக்கு வன்முறை ஒன்றே ஆயுதம்!
பின்னாளில் இவர்களில் ஒருவர் குற்றவாளியாகலாம், ஒரு பெண்ணைச் சிதைக்கலாம், அல்லது வாழும் வீட்டை நரகமாக்கலாம். இவர்கள் அதிகாரிகளானால், அரசியலில் ஈடுபட்டால், கொள்ளைகளும் கொலைகளும் தொடரலாம். அதனால் ஒரு பாதுகாப்பற்றச் சமுதாயம் உருவாகும், போராட்டங்கள் தொடரும்.
கேள்விக் கேட்க வேண்டிய இடத்தில் கேள்விக் கேட்க வேண்டும், தெளிவு பெற வேண்டும். கேட்கும் தன்மையையும் தெரிந்து கொள்ள வேண்டும், இல்லையென்றால் நம் நாட்டில் இனிவரும் காலங்களில் அதிகமான காவலர்களும், மருத்துவர்களும் மட்டுமே தேவைப்படுவர்.
ஒவ்வொரு அரசியல்வாதியும், அதிகாரியும், சாதி மதத் தலைவர்களும், ரௌடியும், கொலைகாரனும், கொள்ளைக்காரனும், வாய்முடிக் கிடக்கும் ஊடகங்களும், குடிமகனும் தங்களுக்கும் சாவு வரும், தன் தலைமுறை தன்னால் சேதப்படுத்தப்பட்ட இந்தப் பூமியில் தான் வாழ வேண்டும் என்ற நினைப்புக் கொண்டு, இனியேனும் திருந்தினால் தான் அடுத்த தலைமுறை வாழ்ந்திடும், கேட்டு, அறிந்து, ஆய்ந்து தெளிந்திடும்.
விதை பழுது ஆனால், விருட்சம் எப்படி வளரும்? வருங்காலம் வளமாக இருக்க, உங்கள் வீட்டில் குழந்தைகள் மனதில் நல்லதை விதையுங்கள். அன்பையும் அறிவையும் உரமாக்குங்கள்.
அடுத்த தலைமுறை கையில் பூக்களோடும், புத்தகங்களோடும் இருக்க வேண்டுமா அல்லது கத்தியோடும், கறையோடும் இருக்க வேண்டுமா?
முடிவு உங்கள் கையில்.
மு. அமுதாவின் வலைப்பதிவுத் தளம் http://amudhamanna.blogspot.in
| தி இந்து வலைத்தளத்தின் 'வலைஞர் பக்கம்' பகுதிக்காக கட்டுரைகளை அனுப்ப விரும்புவோர் webadmin@kslmedia.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு படைப்புகளை அனுப்பலாம். உங்களின் முழுப் பெயர், தொடர்பு எண், வலைப்பதிவுத் தள முகவரி அவசியம். ஏற்கெனவே வெளியிடப்படாத கட்டுரைகளுக்கே முன்னுரிமை அளிக்கப்படும் |
முக்கிய செய்திகள்
வலைஞர் பக்கம்
13 hours ago
வலைஞர் பக்கம்
1 day ago
வலைஞர் பக்கம்
4 days ago
வலைஞர் பக்கம்
5 days ago
வலைஞர் பக்கம்
6 days ago
வலைஞர் பக்கம்
7 days ago
வலைஞர் பக்கம்
9 days ago
வலைஞர் பக்கம்
9 days ago
வலைஞர் பக்கம்
12 days ago
வலைஞர் பக்கம்
19 days ago
வலைஞர் பக்கம்
21 days ago
வலைஞர் பக்கம்
22 days ago
வலைஞர் பக்கம்
24 days ago
வலைஞர் பக்கம்
24 days ago
வலைஞர் பக்கம்
25 days ago