M.G.R. பத்திரிகையாளர்கள் மீது மிகுந்த மதிப்பும் அன்பும் கொண்டவர். பத்திரிகையாளர்களிடம் நெருக்கமாக பழகுவதோடு, செய்தி சேகரிப்பவர்களுக்கு முழு ஒத்துழைப்பும் கொடுப்பார். பல பத்திரிகையாளர்களுக்கு உதவிகளும் செய்திருக்கிறார். அவரே ஒரு பத்திரிகையாளர்தான்!
‘‘பத்திரிகையாளர்கள் தான் மக்களுக்கும் கலைஞர்களுக்கும் இடையே தொடர்பு பாலமாக இருப்பவர்கள். இது கலை உலகுக்கு மட்டுமல்ல, எல்லாத் துறைக்கும் பொருந்தும். இதை நான் நன்றாகவே உணர்ந்திருக்கிறேன்’’… இந்த வாசகங்கள் எம்.ஜி.ஆர். கூறியவை. தென்னிந்திய சினிமாப் பத்திரிகையாளர்கள் சங்கத்தின் சார்பில், ‘மாதம்தோறும் ஒரு கலைஞர் சந்திப்பு’ என்ற நிகழ்ச்சிக்காக எம்.ஜி.ஆர். அழைக்கப்பட்டு, அதில் அவர் கலந்து கொண்டபோது தெரிவித்த கருத்து இது.
பெரும்பாலான பத்திரிகையாளர்களை தனிப்பட்ட முறையில் நேரடியாகவே எம்.ஜி.ஆர். அறிவார். அதிகாலையில் ராமாவரம் தோட்டத்துக்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டால், ‘‘நான் ராமச்சந்திரன் பேசுறேன்’’ என்று எந்தவித பந்தாவும் இல்லாமல் பல நேரங்களில் அவரே பேசுவார். முக்கியமான விஷயங்களைப் பற்றிக் கேட்டால், சுருக்கமாக இருந்தால் தொலைபேசியிலேயே பதில் சொல்வார். விரிவாக பேச வேண்டும் என்றால் ‘‘நேரில் வாருங்கள்’’ என்று அழைத்து விளக்கம் அளிப்பார்.
நடிகர் சங்கத்தின் தலைவராக இருந்த போது, ‘நடிகன் குரல்’ என்ற பத்திரிகை யைத் தொடங்கி அதன் பதிப்பாசிரியராக எம்.ஜி.ஆர். இருந்தார். ‘சமநீதி’ என்ற பத்திரிகையின் உரிமையை வாங்கி அதன் ஆசிரியராகப் பொறுப்பேற்று நடத்தி வந்தார். ‘அண்ணா’ என்ற பெயரில் நாளிதழ் ஆரம்பித்து அதன் ஆசிரியராகவும் எம்.ஜி.ஆர். இருந்தார்.
சிறுவயதில் எம்.ஜி.ஆர். ஒரு பெண்ணை காதலித்திருக்கிறார். ஆனால், அது நிறைவேறவில்லை. ‘சமநீதி’ பத்திரிகையில் ‘என் காதலி’ என்ற பெயரில் ஒரு தொடர் எழுதி வந்தார். பிறகு, அந்தப் பத்திரிகை நிறுத்தப்பட்டது. அதனால், அவர் எழுதிய தொடரும் நின்றுவிட்டது. இதைப் பற்றி பின்னர் எம்.ஜி.ஆர்., ‘‘நான் ஒரு பெண்ணை காதலித்தேன். அது ஈடேறவில்லை. அதேபோல, ‘என் காதலி’ தொடரை எழுதி முடிக்கும் எண்ணமும் ஈடேறவில்லை’’ என்று நகைச்சுவையாகக் குறிப்பிட்டார்.
‘உலகம் சுற்றும் வாலிபன்’ படத்துக்காக, வெளிநாடுகளுக்குச் சென்று படப்பிடிப்பு நடத்திய அனுபவங்களை ‘பொம்மை’ பத்திரிகையில் ‘திரைக் கடலோடி திரைப்படம் எடுத்தோம்’ என்ற பெயரில் தொடர் கட்டுரையாக எம்.ஜி.ஆர். எழுதி வந்தார். அந்தத் தொடரை ஒவ்வொரு வாரமும் அவரே கைப்பட எழுதி பத்திரிகைக்கு கொடுத்து வந்தார்.
அந்தத் தொடர் வந்து கொண்டிருந்த போது, காஷ்மீரில் ‘இதய வீணை’ படப்பிடிப்பு. அப்போது, ‘பொம்மை’ பத்திரிகையின் ஆசிரியராக இருந்த சாரதியும் உடன் சென்றிருந்தார். ஒருநாள் படப்பிடிப்பு முடிந்து, தான் தங்கியிருந்த ‘ஓபராய் பேலஸ்’ ஓட்டலுக்கு எம்.ஜி.ஆர். திரும்பினார். அவரிடம் அடுத்துவரும் ‘பொம்மை’ இதழுக்கான கட்டுரை குறித்து சாரதி நினைவுபடுத்தினார்.
அந்த சமயத்தில், அடுத்த நாள் படப் பிடிப்பு குறித்து ஆலோசிக்க இயக்குநர் பஞ்சு, வசனகர்த்தா சொர்ணம், தயாரிப்பாளர்களில் ஒருவரான வித்வான் லட்சுமணன் ஆகியோர் எம்.ஜி.ஆரை சந்திக்க வந்தனர். அவர்களோடு எம்.ஜி.ஆர். பேசி முடிக்கவே இரவு 10 மணிக்கு மேல் ஆகிவிட்டது. அன்று அவரது கட்டுரையை வாங்கி காலையில் அனுப்பாவிட்டால் அடுத்து வரும் ‘பொம்மை’ இதழில் அது இடம்பெற முடியாது. தர்மசங்கடத்துடன் இருந்த சாரதியைப் பார்த்து எம்.ஜி.ஆர்., ‘‘என்ன யோசிக்கிறீர் கள்? வாருங்கள், முதலில் சாப்பிடுவோம்’’ என்று சாப்பிட அழைத் துச் சென்றார்.
சாப்பிட்டு முடித்து இரவு 11 மணிக்கு மேல் துளிகூட களைப்போ, சலிப்போ இன்றி, அடுத்து வரவேண்டிய இதழுக்கான தொடரை எம்.ஜி.ஆர். எழுதினார். எப்போதும் பச்சை மையில்தான் அவர் எழுதுவார். ‘தாயே துணை’ என்று முதல் பக்கத்தின் மேலே எழுதிவிட்டு கட்டுரையை எந்தவித தங்கு தடையுமின்றி, அடித்தல் திருத்தல் இல்லாமல் எழுதிக் கொடுத்தார். அப் போது மணி இரவு ஒன்றை நெருங்கிக் கொண்டிருந்தது. இத்தனைக்கும் அதிகாலையில் அவர் படப்பிடிப்புக்கு கிளம்பியாக வேண்டும். எழுதி முடித்து சாரதி கையில் கட்டுரையைக் கொடுத்து, ‘‘இனிமேல் நிம்மதியாக தூங்குவீர்கள் இல்லையா?’’ என்று சிரித்தபடியே எம்.ஜி.ஆர். விடை கொடுத்தபோது, பிரமித்துப் போனார் சாரதி!
தனக்கு எதிரான கருத்துக்களை வெளியிடும் பத்திரிகையாளர்களிடமும் எம்.ஜி.ஆர். கோபம் கொண்டதில்லை. ‘‘அவர்கள் கருத்தை வெளியிடும் உரிமை அவர்களுக்கு உள்ளது’’ என்று கூறுவார். ஒரு பத்திரிகையின் உதவி ஆசிரியரின் சகோதரிக்கு திருமணம். சாரதியிடம் திருமண அழைப்பிதழைக் கொடுத்து எம்.ஜி.ஆரிடம் கொடுத்துவிடச் சொன் னார் அவர். சாரதியும் எம்.ஜி.ஆரை சந்தித்து விஷயத்தைச் சொல்லி அழைப் பிதழைக் கொடுத்தார். அதை எந்த உணர்ச்சியையும் வெளிக்காட்டாமல் எம்.ஜி.ஆர். பெற்றுக் கொண்டார்.
திருமணத்துக்கு முதல்நாள் எம்.ஜி.ஆர். அலுவலகத்தில் இருந்து சாரதிக்கு தொலைபேசி அழைப்பு. அங்கு சென்ற சாரதியின் கையில் ஆர்.எம். வீரப்பன் ஒரு கவரைக் கொடுத்து, ‘‘திருமண அழைப்பிதழைத் தந்த பத்திரிகை நண்பரிடம் கொடுத்து விடும்படி உங்களிடம் எம்.ஜி.ஆர். சொல்லச் சொன்னார்’’ என்றார்.
திருமணத்துக்குச் சென்ற சாரதி, அந்த பத்திரிகை உதவி ஆசிரியரிடம் எம்.ஜி.ஆர். தரச்சொன்ன கவரைக் கொடுத்தார். பிரித்துப் பார்த்த உதவி ஆசிரியர் திகைத்துப் போய்விட்டார். அவர் சிறிதும் எதிர்பார்க்காத பெரும் தொகை அந்தக் கவரில் இருந்தது. திருமண செலவுகளை சமாளிக்க அந்தத் தொகை அவருக்கு பெரிய உதவியாக இருந்தது. ‘‘எம்.ஜி.ஆரிடம் என் நன்றியைத் தெரிவியுங்கள்’’ என்று நன்றிப் பெருக்கோடு சாரதியிடம் தெரிவித்தார் அவர்.
இங்கே ஒரு முக்கியமான விஷயம். அந்த உதவி ஆசிரியர் எம்.ஜி.ஆரைப் பற்றி பத்திரிகையில் விமர்சித்து எழுதுபவர். அதனால் ஏற்பட்ட தயக் கத்தால்தான் அவர், எம்.ஜி.ஆரை நேரில் சந்திக்காமல் அழைப்பிதழை சாரதி மூலம் கொடுத்து அனுப்பினார் என்பதுதான் ‘ஹைலைட்!’
‘ஃபிலிம்ஃபேர்’, ‘இல்லஸ் டிரேட்டட் வீக்லி’ ஆகிய பத்திரிகைகள் எம்.ஜி.ஆரைப் பற்றி சிறப்புக் கட்டுரைகள் வெளியிட முடிவு செய்தன. அதற்காக, வித்தியாசமான புகைப்படம் எடுக்க விரும்பிய புகழ்பெற்ற புகைப்பட நிபுணர் திராஜ் சவுடாவின் வேண்டுகோளை ஏற்று, அதிகாலையில் உதயத்தின் போது சிரமம் பார்க்காமல் சென்னை கடற்கரைக்கு வந்து பின்னணியில் சூரியன் ஒளிர போஸ் கொடுத்தார் எம்.ஜி.ஆர்.!
- தொடரும்...
படங்கள் உதவி: ஞானம், எஸ்.எஸ்.ராமகிருஷ்ணன்
முக்கிய செய்திகள்
வலைஞர் பக்கம்
6 days ago
வலைஞர் பக்கம்
8 days ago
வலைஞர் பக்கம்
9 days ago
வலைஞர் பக்கம்
11 days ago
வலைஞர் பக்கம்
11 days ago
வலைஞர் பக்கம்
12 days ago
வலைஞர் பக்கம்
15 days ago
வலைஞர் பக்கம்
19 days ago
வலைஞர் பக்கம்
20 days ago
வலைஞர் பக்கம்
22 days ago
வலைஞர் பக்கம்
23 days ago
வலைஞர் பக்கம்
25 days ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago