ராணி மேரிக் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படிக்கும்போதும், இதழியல் முதுகலைப் பிரிவில் படிக்கும்போதும் தொடர்ந்து ஐந்து ஆண்டுகளாக ரயிலில் பயணிக்கிறேன். ரயில் பயணங்களின்போது பலவிதமான மனிதர்களை பார்த்துள்ளேன். ஆனால், என் கவனத்தை எப்போதும் ஈர்ப்பவர்கள்... ரயிலில் பூ, பழங்கள், கைக்குட்டைகள், பிஸ்கெட்டுகள் போன்றவற்றை வியாபாரம் செய்யும் சிறு வியாபாரிகள்தான். இவர்களின் பெரும்பாலோனார் பெண்களாகத்தான் இருக்கிறார்கள். நாள் ஒன்றுக்கு 50 ரூபாய் முதல் 80 ரூபாய் வரைதான் இவர்களின் வருமானம். இந்தப் பணம் பெரும்பாலும் அவர்களின் அன்றாடத் தேவைகளை பூர்த்தி செய்யவே போதுமானதாக இருக்குமா என்பதே சந்தேகம்தான்.
நுங்கம்பாக்கம் முதல் கோட்டை வரை இவர்களுடன் பயணம் செய்வேன். கடந்த சில நாட்களாக ரயில்வே போலீஸுக்காக பயந்து இவர்கள் ஓடுவதும் பொருட்களை மறைத்து வைப்பதுமாக இருந்தனர். போலீஸிடம் பிடிபட்டு அபராதம், பிடிப்பட்ட பொருட்களை ஏலம் விடுவது போன்றவை அதிகமாக நிகழ்ந்ததே இதற்குக் காரணம்.
ஊழல், லஞ்சம், திருட்டு போன்ற சமுதாய சிரழிவு போன்றவை நடக்கும் இந்நாட்டில் தங்களுடைய சொந்த உழைப்பின் மூலம் குடும்பத்தை காக்க நினைப்பவர்கள் இப்படி அல்லல்படுவது அதிக வேதனையை அளிக்கிறது. நுங்கம்பாக்கத்தில் பூ வியாபாரம் செய்யும் வனஜாவிடம் பேச்சுக்கொடுத்தேன். “நான் பத்து வயசுல இருந்து இந்த வியாபாரம்தாம்மா செய்யறேன். மண்டையில படிப்பு ஒண்ணும் ஏறலைம்மா. அதனால் எங்கம்மா அதுகூடவே என்னை வேலைக்கு கூட்டிப்போயிடுச்சு. இப்ப எனக்கு ரெண்டு புள்ளைங்க. அதுல பொண்ணை போலீஸ் ஆக்கணும் ரொம்ப ஆசை. அதுக்காகதான் இப்படி ரயிலு ரயிலா ஏறி இறங்கி அவஸ்தைபடுறேன். எப்படியும் அவளை நல்லா படிக்க வெச்சு போலீஸ் ஆக்கிடுவேன். ஆனா, என்னைப்போல ஏழை பாழைங்ககிட்ட பிடுங்கி திங்கிற போலீஸா அவ இருக்கமாட்டா...” என்றார் வைராக்கியமாக!
வனஜாவிடம் நான், “ஆனால், இதுமாதிரியான ரயில்வே ஏரியாவில் வியாபாரம் செய்வது சரியா?” என்று கேட்டேன். “அது சரியா தப்பான்னு என்னை மாதிரி எழுதப் படிக்க தெரியாத பொம்பளைக்கு எப்படிம்மா தெரியும். சரியோ தப்போ எங்கம்மா காலத்துல இருந்து 35 வருஷமா இங்கதான் வியாபாரம் பண்றேன். போலீஸ்காரங்க வருவாங்க. இந்த மாதிரி வியாபாரம் பண்ணக்கூடாதும்பாங்க. கேஸ் போடுவாங்க. சாமானை எல்லாம் தூக்கிட்டு போய் ஏலம் விடுவாங்க. ஒருமுறை முத்துங்கிற போலீஸ் எங்களை எல்லாம் எக்மோர் ஸ்டேஷன்ல வெச்சு அடி பின்னிட்டாங்க. என்னா பண்றது எல்லாம் எங்க தலையெழுத்து” என்றார் வேதனையோடு!
எனது ரயில் பயணத்தில் முக்கியமானவர் தேவி. ஏனெனில், நான் கல்லூரிக்கு சென்றுக்கொண்டிருந்தபோது, அவர் பள்ளி முடித்து பகுதி நேர பணியாக மாலை நேரத்தில் பூ விற்றுக்கொண்டிருந்தார். நடுவில் என்ன ஆனது என்றுத் தெரியவில்லை... சில மாதங்களாக தேவி என் கண்ணில் படவில்லை. நான் இறுதியாண்டு படிப்பை முடிக்கும் தருவாயில் திடீரென ஒருநாள் தேவி என் கண்ணில் பட்டார். அப்போது அவருக்கு திருமணமாகி ஒரு குழந்தையும் பிறந்திருந்தது.
“என்னாச்சு தேவி ஆளையே பார்க்க முடியலை” என்றேன் அவரிடம். “ஸ்கூல்ல எட்டாவது படிக்கிறப்பேயே அம்மாகூட வியாபாரத்துக்கு வந்துட்டேன். நடுவுல அம்மா நெஞ்சுவலியில செத்துப்போயிடுச்சு. அதுக்கு அப்புறம் தனியா என்னால ரயில்ல வியாபாரம் பார்க்க முடியலை. ஒருநாள் ஸ்டேஷன்ல தனியா உட்கார்ந்துட்டு இருந்தப்ப ரயில்வே போலீஸ்காரங்கள் என்னை ஒரு கவர்மெண்ட்டு ஹோம்ல கொண்டுபோய் விட்டுட்டாங்க. அப்புறம் கொஞ்சநாள் கழிச்சு எங்க பாட்டி வந்து என்னை கூட்டிட்டுப்போய் கல்யாணங்கட்டிக் கொடுத்துருச்சு. அது சரியா வேலைக்கு போறது இல்லை; அப்படியே போனாலும் சம்பாதிச்ச காசை குடிச்சே அழிச்சிடுது. அதான், திரும்பவும் ரயில்ல பூ வியாபாரம் பண்ணலாமான்னு போலீஸ்காரங்ககிட்ட கேட்கலாம்னு இருக்கேன்” என்றார் அப்பாவியாக.
ஆனால், எழும்பூர் ரயில் நிலைய போலீஸ் கமிஷனர் ஜெகஷீஷ், “சட்டப்படி இப்படி வியாபாரம் செய்வது தவறு. பயணிகளுக்கு இடையூறு ஏற்படுவதால் ரயிலில் வியாபாரம் செய்வதோ பிச்சை எடுப்பதோ தண்டனைக்குரியக் குற்றம்” என்றார்.
நடைபாதை வியாபாரிகள் சங்கத் தலைவர் கருணாநிதியிடம் இதுபற்றிக்கேட்டேன். “நடைபாதை வியாபாரிகளுக்கு நல வாரியம் அமைச்சு அடையாள அட்டை எல்லாம் கொடுத்து அவங்களை முறைப்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுச்சு. ஆனா, அது என்னாச்சுன்னு தெரியலை. சொல்லப்போனா ரயில்ல வியாபாரம் பண்றவங்களும் எங்களை மாதிரி கஷ்டப்படுற வியாபாரிங்கதான். ரயில்ல விற்கிறதுக்கு சட்டத்துல இடம் இல்லைன்னாலும் காலம் காலமா ரயிலையே நம்பி இருக்கிற அவங்களுக்கு உபயோகமா வேற ஏதாவது மாற்று ஏற்பாடு செய்யணும்...” என்றார்.
ரயில் ஓடிக்கொண்டே இருக்கிறது? இவர்களின் வாழ்க்கை?
முக்கிய செய்திகள்
வலைஞர் பக்கம்
2 days ago
வலைஞர் பக்கம்
2 days ago
வலைஞர் பக்கம்
4 days ago
வலைஞர் பக்கம்
5 days ago
வலைஞர் பக்கம்
7 days ago
வலைஞர் பக்கம்
7 days ago
வலைஞர் பக்கம்
10 days ago
வலைஞர் பக்கம்
17 days ago
வலைஞர் பக்கம்
19 days ago
வலைஞர் பக்கம்
20 days ago
வலைஞர் பக்கம்
22 days ago
வலைஞர் பக்கம்
22 days ago
வலைஞர் பக்கம்
23 days ago
வலைஞர் பக்கம்
26 days ago
வலைஞர் பக்கம்
30 days ago