நோபல் பெற்ற இங்கிலாந்து மருத்துவர்
மருத்துவத்துக்கான நோபல் பரிசு பெற்ற இங்கிலாந்து அறிவியல் அறிஞர் சர் ரொனால்டு ராஸ் (Sir Ronald Ross) பிறந்த தினம் இன்று (மே 13). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:
* பிரிட்டிஷ் இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலம் அல்மோராவில் (1857) பிறந்தார். தந்தை ராணுவ அதிகாரி. கல்வி கற்பதற்காக 8 வயதில் இங்கிலாந்துக்கு அனுப்பப்பட்டார். பள்ளி, கல்லூரிக் கல்வியை அங்கேயே முடித்தார்.
* சிறு வயதில் கவிதை, இலக்கியம், இசை, கணிதம் ஆகியவற்றில் அதிக ஆர்வம் கொண்டிருந்தார். தந்தையோ தன் மகன் இந்தியாவில் மருத்துவ சேவையில் ஈடுபட வேண்டும் என விரும்பினார். அறிவுக்கூர்மை மிக்க மாணவரான இவர், தந்தையின் விருப்பப்படி லண்டனில் உள்ள மருத்துவக் கல்லூரியில் சேர்ந்தார்.
* மருத்துவப் படிப்பை முடித்த பிறகு, இந்தியா, பர்மா, அந்தமான் தீவுகளில் தற்காலிகமாக மருத்துவராகப் பணியாற்றினார். மதராசப்பட்டினத்திலும் (சென்னை) சிறிது காலம் மருத்துவராகப் பணியாற்றினார். பிறகு, நோய்க்கான காரணங்களைக் கண்டறிவதில் கவனம் செலுத்தத் தொடங்கினார்.
* இங்கிலாந்து ராயல் மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து டிப்ளமோ படித்தார். அப்போது, பாக்டீரியாக்கள் குறித்த ஆய்வில் ஈடுபட்டார். பின்னர் பெங்களூரில் பணியாற்றியபோதும், மருத்துவ ஆராய்ச்சியில் ஈடுபட்டார். 1892-ல் மலேரியா குறித்த ஆராய்ச்சியில் ஈடுபட்டார். பணிமாற்றலாகி ஊட்டி சென்றபோது மலேரியாவால் பாதிக்கப்பட்டார்.
* இதன்பிறகு, மலேரியா ஆராய்ச்சியில் இவரது கவனம் அதிகரித்தது. ஹைதராபாத் உஸ்மானியா பல்கலைக்கழகத்தில் மலேரியா குறித்த ஆராய்ச்சியைத் தொடர்ந்தார். நோய்கள் பரவும் விதம் குறித்த மாதிரிகளைத் தயாரிப்பதற்கு, இவரது கணித அறிவு வெகுவாக உதவியது.
* கொசுக்களால் மனிதர்களுக்கு பல்வேறு நோய்கள் உண்டாவதையும், கொசுக்கள் வெகு வேகமாக நோய்களைப் பரப்புவதையும் கண்டறிந்தார். அதுகுறித்து பல கட்டுரைகளை வெளியிட்டார். செகந்திராபாத்துக்கு பணியிட மாற்றம் பெற்றார். கொசுக்கள் மூலம் மலேரியா எவ்வாறு பரவுகிறது என்பதை விளக்கிக் கூறினார்.
* இந்தியாவில் மருத்துவ சேவையில் இருந்து விடுபட்டு 1899-ல் இங்கிலாந்து திரும்பினார். வெப்பமண்டல நாடுகளுக்கான மருத்துவம் தொடர்பாக அங்கு புதிதாக தொடங்கப்பட்ட லிவர்பூல் மருத்துவக் கல்லூரியில் விரிவுரையாளர், பேராசிரியர், துறைத் தலைவர் என படிப்படியாக உயர்ந்தார். அங்கு மலேரியா சிகிச்சை, ஆராய்ச்சிகளுக்காக பல திட்டங்களை வகுத்தார்.
* மலேரியா கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மேம்படுத்தினார். எகிப்து, பனாமா, கிரீஸ், மொரீஷியஸ் உட்பட பல்வேறு நாடுகளின் அழைப்பை ஏற்று மலேரியா நோய்க் கட்டுப்பாடு, சிகிச்சை வழங்குதல் என பல வகையிலும் மருத்துவ சேவையாற்றினார். கவிதைகள், நாடகங்கள், பாடல்கள் எழுதுவது, இசைக்கருவிகளை வாசிப்பது ஆகியவற்றிலும் ஆர்வம் கொண்டிருந்தார்.
* எழுத்தாற்றலும் மிக்கவர். மருத்துவம் தொடர்பான நூல்கள், கட்டுரைகள் மட்டுமல்லாமல், பல நாவல்களையும் எழுதியுள்ளார். மலேரியா நோய் குறித்த கண்டுபிடிப்புகளுக்காக 1902-ம் ஆண்டின் மருத்துவத்துக்கான நோபல் பரிசைப் பெற்றார். லண்டன் ராயல் சொசைட்டி உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன் துணைத் தலைவராக சிறிதுகாலம் செயல்பட்டார்.
* சர் பட்டம் பெற்றார். பல கல்லூரிகள் இவருக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கின. கணிதவியலாளர், நோயியல் அறிஞர், சுகாதார நிபுணர், நாவலாசிரியர், கவிஞர், இசைக் கலைஞர் என பன்முகப் பரிமாணம் கொண்டிருந்த சர் ரொனால்டு ராஸ் 75-வது வயதில் (1932) மறைந்தார்.
முக்கிய செய்திகள்
வலைஞர் பக்கம்
3 days ago
வலைஞர் பக்கம்
4 days ago
வலைஞர் பக்கம்
9 days ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago