ருசியியல் சில குறிப்புகள் 7: பாதி பழுத்த வாழைப் பழம்

By பா.ராகவன்

எனது ஸ்தூல சரீரத்தின் சுற்றளவைச் சற்றுக் குறைக்கலாம் என்று முடிவு செய்து அரிசிசார் உணவினங்களில் இருந்து கொழுப்புசார் ருசியினத்துக்கு மாறியதைச் சொன்னேன் அல்லவா? அப்போது எனக்கு அறிமுகமாகி நண்பரானவர், சவடன் பாலசுந்தரன். எனக்கு நிகரான கனபாடிகளாக இருந்தவர். நடந்து செல்கிற சமூகத்தின் ஊடாக உருண்டு செல்கிற உத்தமோத்தமர் குலம். ஏதோ ஒரு கட்டத்தில் விழித்தெழுந்து, கொழுப்பெடுத்தால் கொடியிடை அடையலாம் என்பதைத் தெரிந்துகொண்டு கட்சி மாறியவர். எண்ணி ஆறு மாதங்களில் சுமார் 35 கிலோ எடையைக் குறைத்த பெரும் சாதனையாளர்.

அவர்தான் எனக்கு அட்சதையைப் போட்டு முதல்முதலில் விரதத்துக்குப் பிடித்துத் தள்ளினார். ‘‘வயித்த மடிச்சிக் காயப் போடுங்க சார்!’'

நமக்குத் துணி மடிக்கக்கூட வராது. இதில் வயிற்றை எங்கே மடிப்பது? அப்புறம் காயப் போடுவது?

‘‘பண்ணிப் பாருங்க சார். ஒடம்பு சும்மா காத்து மாதிரி லேசாயிடும். அப்ப முன்னவிட நல்லா சாப்டுவீங்க!'’

ஆ! இதைச் சொன்னாரே, இது நல்ல விஷயம். இயல்பில் நான் அதிகம் உண்பவனல்ல. ஆனால், அரை வாய் சாப்பிட்டாலும் அது அரச போஜனமாக இருந்தாக வேண்டும். நான் வளர வழியுண்டோ இல்லையோ, நா வளர நாலு பக்கமும் வாசல் திறந்து வைத்தவன்.

ஒரு சமயம் திம்மம் என்ற ஊருக்குப் போயிருந்தேன். ஊர் சின்னதுதான். ஆனால், சரியான மலைக்காடு. ஒரு கடை கண்ணி கண்ணில் படவில்லை. நான் போன முகூர்த்தத் தில் மாநிலம் தழுவிய கடையடைப்பு வேறு நடந்துகொண்டி ருந்தபடியால், சுத்தம். ஒரு மாதிரி மதியம் 3 மணி வரை வெறும் தண்ணீர் குடித்து சமாளித்துக்கொண்டிருந்தேன். அதற்குமேல் தாங்கவில்லை. ‘‘இனி பொறுப்பதில்லை தம்பீ, என்னத்தையாவது கொண்டு வா!’’ என்று ஒரு பழங்குடியின் குடிசை வாசலில் உட்கார்ந்துவிட்டேன்.

அங்கிருந்த ஒரு சபரிக் கிழவி அன்று என் பசியைத் தீர்த்தாள். பாதி பழுத்த வாழைப் பழத்தை வேகவைத்துச் சாப் பிட்டிருக்கிறீர்களா? அன்று எனக்குக் கிடைத்தது அதுதான். இனிப்பின் சாயலோடு இட்லியின் மிருதுத்தன்மை சேர்ந்த உணவு.

இதற்குத் தொட்டுக்கொள்ள என்னவாவது கிடைத்தால் சிறப்பாக இருக்குமே?

ஆனால், கிழவி பார்த்த பார்வை சரியில்லை. இதற்கெல் லாமா ஒரு ஜென்மம் தொட்டுக்கொள்ளக் கேட்கும்? ‘‘வேண்டு மானால் சர்க்கரை தருகிறேன்’’ என்றாள். ம்ஹும். அது சரிப் படாது. உப்புமாவுக்கு சர்க்கரை கேட்கிறவர்களையே தேசப் பிரஷ்டம் செய்ய வேண்டுமென்று நினைப்பவன் நான். இதில் வேகவைத்த வாழைப் பழத்துக்குச் சர்க்கரையாவது? அபசாரம்.

‘‘வேறென்ன இருக்கிறது?’’ என்று கேட்டேன். ‘‘முதல் நாள் வைத்த ரசத்தைத் தவிர ஒன்றுமில்லை’’ என்று சொல்லிவிட்டாள்.

ஒரு கணம் யோசித்தேன். வாழைப் பழத்துக்கு ரசம்! ஒரு முயற்சி செய்து பார்த்தால்தான் என்ன? அசட்டுத்தனத்துக்கு ஓர் அழகுண்டு. அதைத் திருட்டுத்தனமாக ரசிக்கவும் முடியும்.

‘‘அம்மா, கோபித்துக்கொள்ளாமல் அந்த ரசத்தை எடுத்து வருவீர்களானால் கோடி புண்ணியம் உமக்குண்டு.”

அவர் பார்த்த பார்வைதான் கொஞ்சம் நாராசமாக இருந்தது. ஆனால், அந்த ரசம் பிரமாதம். நிறையப் பூண்டு இடித்துப் போட்ட காரசாரமான தூதுவளை ரசம். மறு கொதிப்பில் அதன் ருசி மேலும் கூடியிருக்க வேண்டும்.

நான் அந்த வேகவைத்த பழங்களை ரசத்தில் பிய்த்துப் போட்டேன். இரண்டு நிமிடம் ஊறவிட்டு ரசம் சோறு போலவே அள்ளி அள்ளி உண்டேன். வாழ்நாளில் அப்படியொரு ருசி மகா சமுத்திரத்தில் அதன்பின் முக்குளித்தெழ வாய்க்கவில்லை.

இப்போது யோசித்துப் பார்த்தால், அந்த அபார ருசியை எனக்கு அன்றைய முழுப்பட்டினிதான் அதில் அளித்திருக்க வேண்டும் என்று படுகிறது. ஒரு முழு 24 மணி நேரத்தை நீரால் மட்டுமே வயிற்றை நிரப்பி, 25-வது மணிநேரம் வழக்கமாகச் சாப்பிடுவதைச் சாப்பிட்டுப் பாருங்கள்! வழக்கத்தைவிடப் பல மடங்கு ருசிக்கும்.

நம்மூரில் ஒரு பழக்கம். என்னத்தையாவது நல்ல விஷயத்தைச் சொல்லிவைக்க நினைத்தால், உடனே அதை பக்தி பார்சலில் சுற்றிக் கொடுத்துவிடுவார்கள். திங்களானது சிவனுக்குரியது. செவ்வாய் முருகனுக்கு உகந்த தினம். வியாழன் என்றால் குரு. வெள்ளிக்கிழமைக்குத் திருமதி மகாவிஷ்ணு. சனியென்றால் திருமலையப்பன். மற்ற தினங்களில் மேற்படி தெய்வங்கள் சிறு விடுப்பு விண்ணப்பம் அனுப்பிவிடுவார்களா என்றெல்லாம் கேட்கப்படாது. சஷ்டி விரதம். சபரிமலை விரதம். ஏகாதசி விரதம். கிருத்திகை விரதம். எது மிச்சம்? எத்தனையோ இருக்கிறது. இஷ்டத்துக்கு ஏதேனும் ஒன்றைத் தேர்ந்தெடுத்துக்கொள்ள வேண்டியதுதான்.

நான் ஏகாதசியைத் தேர்ந்தெடுத்துக்கொண்டேன். சும்மா ஒரு இதுக்குத்தான். உண்மையில் எனது ஏகாதசி விரதம் எம்பெருமானுக்கே அத்தனை சரியாகப் புரியாது என்று நினைக்கிறேன்.

விளக்குகிறேன்.

பொதுவாக ஏகாதசி விரதம் என்பதை நமது மகாஜனம் அணுகும் விதம் வேறு விதமானது. ‘ஒரு பொழுது' என்பதற்கு உண்மையான அர்த்தம், ஒருவேளை மட்டும் சாப்பிடுவது என்பது. ஆனால், ஒருவேளை மட்டும் சாப்பாடு, மற்றவேளை வளைத்துக்கட்டி டிபன் என்று ஆல்டர் செய்யப்பட்டுவிட்டது அது. சிலர் காலை உணவை மட்டும் தவிர்த்துவிட்டு மதியம் சாப்பிடுவார்கள். இரவுக்கு இரண்டு பழங்கள், பால்.

இதுவா விரதம்? இதில் அக்கிரமம் என்னவென்றால், ஏகாதசியன்று கொலைப் பட்டினி கிடந்த மாதிரி மறுநாள் காலை சேர்த்து வைத்து கபளீகரம் செய்துவிடுவார்கள். சும்மா சொல்லிக்கொள்ளவேண்டியது. நானும் விரதம் இருந்தேன்.

இந்த மரபான அக்கிரமத்தை ஒரு வழி பண்ணிவிடுவது என்று முடிவு செய்தேன். எனவே என்னுடைய ஏகாதசி விரதத்தை இவ்வாறாக வகுத்துக்கொண்டேன்:

ஏகாதசிக்கு முதல் நாள் ராத்திரி திருப்தியாகச் சாப்பிட்டுவிடுவது. அதற்குப் பிறகு எதுவும் கிடையாது. தாகமெடுத்தாலும் தண்ணீர், பசித்தாலும் தண்ணீர். ஒன்றுமே தெரியாவிட்டாலும் ஒரு மணி நேரத்துக்கு ஒரு தம்ளர் தண்ணீர்.

பொதுவாக ஏகாதசிக்கு விரதமிருப்பவர்கள் மறுநாள் காலைதான் விரதம் முடிப்பார்கள். நமக்கு அதெல்லாம் இல்லை. நான் விரதம் முடிக்கும் நேரம்தான் எனக்கு ஏகாதசியும் முடியும். எனவே அன்றிரவே. என் கணக்கு சரியாக 24 மணிநேரம். முடிந்தது கதை.

ஒரு 200 கிராம் பனீர். இன்னொரு 200 கிராமுக்கு நெய்யில் சமைத்த என்னவாவது ஒரு காய்கறி. இட்டமுடன் தொட்டுக்கொள்ள இதமான வெண்ணெய். சவுகரியம் இருந்தால் சாலட் அல்லது சூப். போதவில்லையா? 25 கிராமுக்கு ஒரு சீஸ் க்யூப். அப்புறம் ஒரு கப் தயிர்.

எனது ஏகாதசி விரதமானது ஏகாதசி தினத்தன்றே இரவு சுமார் 10 மணிக்குப் பூரணமடையும். அந்த முழுக் கொழுப்புணவுக்குப் பிறகு துவாதசிக் கொண்டாட்டமெல்லாம் கிடையாது. மறுநாள் காலை வெறும் தண்ணீர்.

இதனை என் ஈரோட்டு நண்பர் ஒருவரிடம் சொன்னபோது, ‘‘அட என்னய்யா நீர்! விரதம் முடிக்கத் தெரியாதவராக இருக்கிறீரே. நான் அனுப்புகிறேன் பாரும், எனது விரத முடிப்பு மெனுவை'’ என்று ஒன்றை அனுப்பிவைத்தார்.

மிரண்டு போனேன். நாவுக்குச் சேவகம் செய்வதில் நானெல்லாம் அவரிடம் மடிப் பிச்சை ஏந்தவேண்டும். அந்த மகானுபாவரைப் பற்றி அடுத்த வாரம் சொல்கிறேன்.

- மேலும் ருசிப்போம்

எண்ணங்களைப் பகிர்ந்துகொள்ள: writerpara@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வலைஞர் பக்கம்

5 days ago

வலைஞர் பக்கம்

7 days ago

வலைஞர் பக்கம்

8 days ago

வலைஞர் பக்கம்

10 days ago

வலைஞர் பக்கம்

11 days ago

வலைஞர் பக்கம்

11 days ago

வலைஞர் பக்கம்

15 days ago

வலைஞர் பக்கம்

18 days ago

வலைஞர் பக்கம்

19 days ago

வலைஞர் பக்கம்

21 days ago

வலைஞர் பக்கம்

22 days ago

வலைஞர் பக்கம்

25 days ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

1 month ago

மேலும்