‘காலை பேப்பரும் காபி டம்ளரும் இல்லாமல் எங்களுக்குப் பொழுது விடியாது’ என்று தஞ்சாவூர்க்காரர்கள் பெருமையோடு சொல்லிக்கொள்வார்கள். இந்த இரண்டுக்கும் வழி இல்லாத குக்கிராமங்களிலிருந்து வண்டி கட்டிக்கொண்டு, தஞ்சாவூர் டவுனுக்கு வந்து மங்களாம்பிகா, சரவணபவன், ரயிலடி ஆனந்தா லாட்ஜ் ஆகிய ஓட்டல்களில் காபியைச் சாப்பிட்டுவிட்டு, காலைப் பேப்பருடன் கிராமத்துக்குத் திரும்பும் காபி ரசிகர்கள் இருந்தார்கள். காபி என்பது வயிற்றை நிரப்பும் ஏதோ ஒரு பானம் அல்ல.. அது நல்ல ரசனையின் அடையாளம்!
நல்ல காபியின் லட்சணம்
நல்ல காபியின் லட்சணம் பற்றி தஞ்சாவூர்க்காரரான கவிஞர் நா.விச்வநாதன் இப்படிச் சொல்கிறார்.
“காபியைக் குமுட்டி அடுப்பில்தான் தயாரிக்க வேண்டும். பித்தளை ஃபில்டரில்தான் டிகாக் ஷன் போட வேண்டும். அதிலும் முதல் டிகாக் ஷன் சிலாக்கியம். அதில் சிக்கரி இரண்டு சிட்டிகை போட வேண்டும். தூக்கலான கசப்பும் மிதமான இனிப்புமாய் இருக்க வேணும். பித்தளை டபராவில் சூடாக நுரைத்துப் பொங்கும் காபிக் குமிழ்களில் நம் முகம் தெரிய வேணும். காபி சாப்பிட்ட அடுத்த ஒரு மணி நேரத்துக்கு எதுவும் சாப்பிடக் கூடாது. ஏனென்றால், நாக்கிலும் மனசிலும் தங்கியிருக்கும் காபி ருசியை அது காணாமல் அடித்துவிடும்.
காபியைக் ‘கடித்து’ச் சாப்பிட்டோம்
தஞ்சையில் ‘நந்தி வீட்டு உணவகம்’ என்ற பெயரில் வீட்டுப் பக்குவத்தோடு உணவகம் நடத்திவரும் செல்லத்துரை திருநெல்வேலிக்காரர், அவர் சொல்கிறார்..
“அப்பா என்னை திருநெல்வேலி ராதாபுரத்தில் உள்ள அப்பத்தா வீட்டுக்கு அழைத்துப்போவார். கூரை வீடுதான். எங்களைப் பார்த்துவிட்டு அப்பத்தா பனை ஓலைகளைப் பற்றவைத்து அடுப்பு மூட்டுவார். ஒரு பழைய தகர டப்பாவில் கைவிட்டு காபி வில்லைகளை (ஆமாம்.. காபி வில்லைகள்தான்.. தூள் அல்ல!) ஒன்றிரண்டை எடுத்து பொடித்துப் போட்டுத் தண்ணீர் ஊற்றிக் கொதிக்க வைப்பார். கூடவே, மண் பானையைத் திறந்து கருகருவென்று இருக்கும் கருப்பட்டித் துண்டை எடுத்து உடைத்துப் போடுவார். பனை ஓலை புகையும், காபி வில்லை வாசனையும் கருப்பட்டி மணமும் சேர்ந்து கலந்துகட்டியாக ஒரு நறுமணம் வீட்டுக்குள் கமழும் பாருங்கள்... ஆளுக்கு ஒரு போணி காபி கொடுப்பார். அதில் எங்கிருந்தோ ஒரு முறுக்கை எடுத்து உடைத்துப் போடுவார். காபி குடிக்கும்போது சுவையான முறுக்குத் துண்டுகள் கடிபடும். ஏதோ காபியைக் கடித்துச் சாப்பிடுகிற மாதிரி இருக்கும்.
‘‘சில சமயங்களில், சாயங்கால வேளைகளில் மேய்ச்சலிலிருந்து திரும்பும் பசு மாட்டின் மடியிலிருந்து பாலைப் பீய்ச்சி, நுரைக்க நுரைக்க பச்சைப் பாலை அப்படியே கடுங் காபியில் கலந்து கொடுப்பார் பாருங்கள்... அந்த ருசியை கும்பகோணம் டிகிரி காபியில்கூட நான் அனுபவித்தது இல்லை.’’
காபி தர்பார்!
எதிர்வீட்டில் தினமும் காபி தர்பார் காட்சி அரங்கேறும். அந்தக் குடும்பத் தலைவர் முதலில் ஊஞ்சலில் வந்து உட்காருவார். அன்றைய பேப்பர் அருகில் காத்திருக்கும். மனைவி காபியை ஆற்றி அவர் கையில் டம்ளரைக் கொடுப்பார். காபியை உறிஞ்சுகிறாரா, பேப்பரை உறிஞ்சுகிறாரா என்று சந்தேகம் வந்துவிடும். அப்படி ஒரு லயிப்பு. ஒரு மிடறு. அமெரிக்காவிலிருந்து தாவி ரஷ்ய விமான விபத்தைப் பார்வையிடுவார். அடுத்த மிடறில் இந்தியப் பிரதமர் இந்திய - சீனா எல்லையில் ராணுவ வீரர்களிடம் உரையாற்றுவதை மேய்வார்.
காபி தீர்ந்துவிடும். பேப்பர் தீராது. இவரிடம் ஒரு விசித்திரப் பழக்கம்.. பேப்பரை இவருக்கு முன்னால் யாரும் வீட்டில் படிக்கக் கூடாது. படித்துவிட்டாலோ ரகளைதான். காச்சு மூச்சென்று கத்துவார். எனக்கு பேப்பர் கருக்கழியாம இருக்கணும்.. கொஞ்சம் கசங்கினாலும் படிக்க மாட்டேன் என்பார்.
பைத்தியங்கள் பலவிதம். அதில் இது ஒருவிதம் என்பார் அப்பா அம்மாவிடம்.
கடிதம் எழுதினார்.. கலெக்டர் வந்தார்!
கடைசியாக ஒரு சம்பவத்தைச் சொல்லி முடித்துவிடுகிறேன்.
நாங்கள் வசித்த கிராமத்தில் ஒரு பெரியவர் இருந்தார். அவர் ‘தி இந்து’ ஆங்கில நாளேட்டின் தீவிர வாசகர். திண்ணையில் உட்கார்ந்துகொண்டு பகல் பூராவும் இந்து படிப்பார். அந்தக் கிராமத்துக்கு அவருக்காகவே ஒரு பிரதி டவுனிலிருந்து வந்தது. காலையில் திண்ணையில் வந்து உட்காருவார். அவருக்கு முன்பே இந்து வந்திருக்கும். அவருடைய மருமகள் காபி டம்ளரை அலட்சியமாக அவர் பக்கத்தில் ‘ணங்’கென்று வைத்துவிட்டுப்போவாள். பெரியவர் பாவம், காபியோடு சேர்த்து அந்த உதாசீனத்தையும் விழுங்குவார். “பேப்பர் படிச்சாப்ல ஆச்சா. ஒரு துரும்பை எடுத்து அந்தண்டை போடுறதில்லை. ஒரு பிரயோஜனமும் கிடையாது” மருமகள், பக்கத்து வீட்டுப் பெண்களிடம் இவர் காதிலும் விழட்டும் என்று உரத்தே சொல்வாள். அப்போதெல்லாம் பெரியவர் ‘தி இந்து’ என்கிற பேராற்றில் மூழ்கிவிடுவார்.
ஒரு நாள் ஊருக்குள் புழுதியைக் கிளப்பிக்கொண்டு போலீஸ் ஜீப்புகள் நுழைந்தன. பின்னால், கலெக்டர் காரில் வந்தார். பெரியவர் வீட்டு முன்னால் காரை நிறுத்தி இறங்கினார். சின்னப் பையன்தான். ஆனால், வடக்கத்தி ஜாடை. பெரியவரைப் பார்த்து ‘வணக்கம்’ என்று சிரித்தார்.
இடுப்பிலிருந்து நழுவும் வேட்டியைப் பிடித்துக்கொண்டு கிழவர் திண்ணையிலிருந்து இறங்க முயற்சித்தார். பஞ்சாயத்துத் தலைவர் அவரைத் தாங்கிப் பிடித்தார். கலெக்டர் இங்கிலீஷில் கேட்டார்.
“நீங்கள்தானே இந்துவில் ‘லெட்டர்ஸ் டு எடிட்ட’ரில் உங்கள் ஊர், பக்கத்து ஊரின் குடிநீர்த் திட்டத்தில் சேர்க்கப்படவில்லைன்னு எழுதியது?”
“ஆமாம்…”
‘‘உங்க லெட்டரை சி.எம். படிச்சார்.. உடனே, சேர்க்கச்சொல்லி உத்தரவு போட்டுவிட்டார். இனிமே, உங்க ஊர்ப் பெண்கள் குடிநீருக்காக நீண்டதூரம் நடக்க வேண்டாம்...”
எல்லார் முகத்திலும் பிரமிப்பு.. ஆச்சரியம்!
“எங்களால முடியாதத சாதிச்சுப்புட்டீங்களே!” என்றார் ஊர் பிரசிடெண்ட்.
கையிலிருந்த இந்துவைத் தூக்கிக் காண்பித்தார் பெரியவர். அதற்குள் மாட்டுப்பெண் டிரேயில் காபி டம்ளர்களுடன் வந்தாள்.
கலெக்டர் திடீரென்று யாரும் எதிர்பாராத காரியம் செய்தார். பெரியவர் காலைத்தொட்டு வணங்கினார். வந்திருந்த கூட்டமே கலகலத்துவிட்டது..
மருமகள் முகத்தில் கண்ணோரம் ஈரம். அதை யாரும் கவனிக்கவில்லை.
தஞ்சாவூர்க் கவிராயர் தொடர்புக்கு: - thanjavurkavirayar@gmail.com
ஓவியம்: வெ.சந்திரசேகரன்
முக்கிய செய்திகள்
வலைஞர் பக்கம்
4 hours ago
வலைஞர் பக்கம்
7 days ago
வலைஞர் பக்கம்
9 days ago
வலைஞர் பக்கம்
10 days ago
வலைஞர் பக்கம்
12 days ago
வலைஞர் பக்கம்
12 days ago
வலைஞர் பக்கம்
13 days ago
வலைஞர் பக்கம்
16 days ago
வலைஞர் பக்கம்
20 days ago
வலைஞர் பக்கம்
21 days ago
வலைஞர் பக்கம்
23 days ago
வலைஞர் பக்கம்
24 days ago
வலைஞர் பக்கம்
26 days ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago