டூர் கலாட்டா: பயம் ஒரு பயணம்

By எஸ்.ரவிகுமார்

இதை நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை. வாசல்படியில் கால் வைத்ததுதான் தாமதம்.. ‘அப்பீ’ என்று இரு குழந்தைகளும் ஓடிவந்து காலைக் கட்டிக்கொண்டார்கள். நிமிரவும், அதிர்ச்சி. வாசலுக்கே வந்து நின்றிருந்தாள் தர்மபத்தினி. கூடவே சிரித்துக்கொண்டும்.

வழக்கமாக ரெண்டு பெரிய காய்கறி பைகள், லஞ்ச் பேக், ஹெல்மெட், அதற்குள் இடுக்கிய நிலையில் செல்போன் என்று நான் பயங்கர பரிதாபமாக வந்தால்கூட, கிச்சனில் இருந்து தலையை மட்டும் நீட்டி எட்டிப் பார்த்துவிட்டு உள்ளே போய்விடுவாள். இப்போது, ‘கொண்டாங்க சூட்கேஸை’ என்று அன்போடு வெடுக்கென்று பறித்தாள்.

‘நான் வெந்துவிட்டேன்’ என்று குக்கர் இட்லி பெரிதாக விசில் ஊதிக்கொண்டிருந்தது. வெங்காய சட்னியை அப்போதுதான் அரைத்து விட்டு ஓய்ந்திருந்தது மிக்ஸி.

இதுபோன்ற வித்தியாசமான சூழல்கள் தென்பட்டால், விட்டுவிட்டோ, தொடர்ச்சியாகவோ பலத்த முதல் மிக பலத்த வரையிலான சம்பவங்கள் வீட்டுக்குள் நடக்கப்போகிறது என்பது பொது நியதி.

அன்றும் அதற்கான அறிகுறிகளே தெரிந்தன.

முகம் கழுவி, தட்டு முன்பு உட்காரும் வரை என்னையே சுற்றிச் சுற்றி வந்த குழந்தைகள், என் வாயில் இருந்து வரும் ‘ஓகே’வுக்காக, இட்லிகளையும் கடந்து என் வாயையே பார்த்துக் கொண்டிருந்தனர். அந்த அளவுக்கு என்னமோ சொல்லி அவர்களை உசுப்பேற்றி வைத்திருக்கிறாள்!

வழக்கமான பூகம்பங்கள்போல இதுவும் அதே வார்த்தையுடன்தான் ஆரம்பித்தது.

‘ஒண்ணுல்ல.. போன சம்மருக்கே எங்கயும் போகலயாம். குழந்தைங்க (குழந்தைங்க!) குறைப்படறாங்க. காலாண்டு லீவுலயாவது..’

உள்ளுக்குள் பெருமூச்சு விட்டு சற்று ஆசுவாசப்படுத்திக் கொண்டேன்.

அப்பாடி..! சர்வலட்சணமான பட்டு, வைர அட்டிகை, வெள்ளி குத்துவிளக்கு என்று பெரிய அளவுக்கு போகவில்லை. மெரினா, கிண்டி பார்க், வண்டலூர், ஒரு விஜய் படம், ஒருவேளை ஹோட்டல்.. பரவால்ல.. மீடியமான பட்ஜெட்தான். ஜஸ்ட் எஸ்கேப்!

பெருமூச்சு பாதிதான் வெளியேறி யிருக்கும். அதற்குள் அடுத்த அதிர்ச்சி தயாரானது.

‘ஏ சின்னக்குட்டி! அந்த பேப்பர எடுத்துட்டு வா.’

இவள் நல்ல மூடில் இருந்தால் ‘சின்னக்குட்டி’. இல்லாவிட்டால், ‘சின்ன எருமை’.

சின்ன எருமை அங்கவஸ்திரம் சைஸில் ஒரு பேப்பருடன் வந்தான்.

எனக்கு பக்கென்று இருந்தது.

எந்தெந்த ஊருக்கு டூர் என்று மோடி பி.ஏ. போல பெரிய லிஸ்ட் போட்டிருந்தார்கள்.

‘இருக்குற கஷ்டத்துல இந்த டூர் தேவையா?’

‘அரையாண்டு லீவுல பார்த்துக்கலாம்.’

‘ஆபீஸ் லோன் இப்பதான் முடிஞ்சுது.’

‘உங்கப்பா பணம் தருவாரா?’

மிகவும் தைரியத்தை வரவழைத் துக்கொண்டு, இப்படிப்பட்ட பதில்களில் ஏதாவது ஒன்றை சொல்லலாம் என்று எனக்கும் நப்பாசைதான். ஆனால், அடுத்த இட்லி என் தட்டில் விழுவதற்கான சாத்தியக்கூறுகள் குறைந்துவிடும். பசிவேளையில் அந்த சிற்சில இட்லிகளை தவறவிடுவதில் என் வயிற்றுக்கு இஷ்டமில்லை.

ம்! ஓகே!

இட்லியிடம் தோற்று, சொல்லிவைத்தேன்.

‘ஹே..’ கோஷமிட்டவாறே ஓடின குழந்தைகள்.

‘ஏய்! அவர் ஓகே சொல்லிட்டார். புதன்கிழமை கிளம்பி வர்றோம். நாலு நாள் அங்கேதான்.’ - பைசாவுக்கு பயனில்லாத என் மச்சினனிடம் என் ஓகேவை கன்ஃபார்ம் செய்துவிட்டு வந்தாள்.

‘ஆபீஸ்ல லீவு கேக்கல. டிக்கெட் போடல. அதுக்குள்ள..?’

‘எல்லாம் என் தம்பி பாத்துக்குவான். நீங்க கவலைப்படாம இருங்க. நீங்களும் ஆபீஸ்ல டென்ஷன், டென்ஷன்றீங்க. உங்களுக்கும் ஒரு ரிலாக்ஸ் வேணும்ல. ராஜா மாதிரி நாலு நாள் நிம்மதியா இருந்துட்டு வரலாம். போக வர டிக்கெட், அங்க சுத்திப் பாக்கிறதுக்கு ஏற்பாடு எல்லாம் அவனே பாத்துக்கறதா சொல்லிட்டான். எப்படியாச்சும் லீவு வாங்கற வழியப் பாருங்க.’

வழக்கம்போல, அன்றும் இறுதி தீர்ப்பை அவளே வழங்கினாள்.

அடுத்த நாளில் இருந்தே வீட்டில் நெய் மணம் கமகமத்தது. பாதாம் பிரஷ்யன் ஹல்வா, பிஸ்தா மிக்ஸ்டு கேஷ்யூ சாக்கோ கேக் என்று இதுநாள் வரை நான் பார்த்தேயிராத பண்டங்கள் டப்பா டப்பாவாக தயாராகிக் கொண்டிருந்தன. ஹால், அடுப்பங்கரை, பெட்ரூமில் டப்பாக்களுக்கு நடுவே கால் வைத்து தாண்டித் தாண்டிப் போவது ஒரு சாகசமாகவே இருந்தது. அண்ணாச்சி கடையில் நெய் யும் முந்திரியுமாக ஏறிக்கொண்டே இருக்கும் அக்கவுன்ட்டும் அவ்வப் போது நினைவுக்கு வந்து பீதி கிளப்பியது.

எல்லா ஏற்பாடுகளும் முடிந்து, இதோ ஊருக்கும் புறப்பட்டாகிவிட்டது. அவளைப் போலவே பீப்பாய் பீப்பாயாக ஏழெட்டு பைகள். என் உடைகளை ஒரு கேரிபேக்கில் முடிச்சு போட்டு, ஒரு கட்டைப் பையில் திணித்து வைத்திருந்தாள்.

ஆட்டோ வந்தது. ‘இனா சார் வூடு காலி பண்றீங்களா’ என்றார் ஆட்டோக்காரர். சம்பந்தமே இல்லாமல் என்னை முறைத்தாள். ஆட்டோவில் ஃபுட்போர்டு அடிப்பது இந்த லோகத்திலேயே நான் ஒருவனாகத்தான் இருக்கும்.

சென்ட்ரல் ஸ்டேஷனும் வந்தாகி விட்டது. சுமார் மூஞ்சிப் பெண்கள்கூட கண்ணை மட்டும் விட்டுவிட்டு, துணியை சுற்றிக்கொண்டு டூவீலரில் போவார்களே, அதுபோல கண்ணை மட்டும் விட்டுவிட்டு, மற்ற அனைத்து இடங்களிலும் எவர்சில்வர் டப்பா, தூக்குவாளி, டிராவல் பேக்குகளால் நிரம்பி வழிந்தேன். ஒரு குத்துமதிப்பாக காலைத் தடவித் தடவி அடியெடுத்து வைத்து நடந்தேன்.

என்னில் ஏற்றப்பட்டிருந்த சரக்கு களை ஒவ்வொன்றாக வெளியே எடுத்து ரயில் பெட்டியை நிரப்பினாள். டிடிஆர் டிக்கெட்டை வாங்கிப் பார்த்துவிட்டு, ‘இன்னும் ஒருத்தர் எங்கே?’ என்பதையே திருப்பித் திருப்பி கேட்டுக்கொண்டிருந்தார். சிவப்பு சட்டை போட்டுவந்தது என் தப்பு.

வழக்கம்போல, தண்ணீர் பாட்டில், என் மச்சினன் குழந்தைக்கு பிஸ்கெட் பாக்கெட், வழிக்கு ரஸ்தாளி எல்லாம் ரயில் ஹாரன் அடிக்கிற நேரத்தில்தான் நினைவுக்கு வந்து, இறங்கி ஓடி, பறித்துக்கொண்டு மூச்சிரைக்க மீண்டும் ரயில் ஏறினேன்.

‘‘ஹாய்! நீவு ஹெகிதீரா? நீனு எள்ளி ஹொகுத்திடியா?’’ என்று யாரோ பேசிக்கொண்டிருந்தனர். இது தெலுங்கு போல தெரியவில்லையே.. ரயில் மாறி ஏறிட்டோமா என்ற பதற்றத்துடன் மனைவியிடம் ஓடினேன்.

‘இது திருப்பதி எக்ஸ்பிரஸ்தானா.. நல்லா பாத்தியா?’

‘திருப்பதியா?’

‘ஆமா, உன் தம்பி அங்கதான இருக்கான்?’

‘நாசமாப் போச்சு. அவன் டிரான்ஸ்ஃபராகி ஆறு மாசமாச்சு. ஆங்.. இன்னொரு விஷயம் சொல்ல மறந்துட்டேன். அன்னிக்கு டிக்கெட் போடறதுக்கும், டூர் செலவுக்கும் உங்க நெட்பேங்கிங் நம்பர்தான் தம்பிகிட்ட கொடுத்திருக்கேன்’ என்றாள்.

மெல்ல 20 கி.மீ. வேகத்தில் எனக்கு தலை சுற்ற ஆரம்பித்தது. ‘ஆமா, என் தம்பிக்கு பெங்களூருக்குதான் டிரான்ஸ்ஃபர் கிடைச்சிருக்குன்னு உங்கள்ட்ட சொன்னேனோ இல்லியோ!’ என்றாள் கூலாக. தலை சுற்றல் டாப் கியரெடுத்தது!

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வலைஞர் பக்கம்

2 days ago

வலைஞர் பக்கம்

9 days ago

வலைஞர் பக்கம்

11 days ago

வலைஞர் பக்கம்

12 days ago

வலைஞர் பக்கம்

14 days ago

வலைஞர் பக்கம்

14 days ago

வலைஞர் பக்கம்

15 days ago

வலைஞர் பக்கம்

18 days ago

வலைஞர் பக்கம்

22 days ago

வலைஞர் பக்கம்

23 days ago

வலைஞர் பக்கம்

25 days ago

வலைஞர் பக்கம்

26 days ago

வலைஞர் பக்கம்

28 days ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

1 month ago

மேலும்