உலக மகளிர் தினம்
*
சாலைகளில் ஆதரவற்று இருக்கும் மனிதர்களுக்கு நம்மால் முடிந்த உதவியை பணமாகவோ, உணவாகவோ எப்போதாவது அளிப்போம்.
ஆனால் அந்த உதவி ஒரு நாளுடன் முடிந்துவிட்டு ஆத்ம திருப்தியை அடைந்து விடுவோம். நம்மிடம் நாளை என்ற நாள் இருப்பதுபோல, அந்த ஆதரவற்ற உள்ளங்களுக்கும் நாளை என்ற நாள் இருக்குமல்லவா? அந்த நாள் அவர்களுக்கு உணவு கிடைக்கலாம் அல்லது கிடைக்காமலும் போகலாம்.
இவ்வாறு நிச்சயமற்று வாழ்வை சாலைகளில் கடந்து கொண்டிருக்கும் அந்த ஆதரவற்ற உள்ளங்களுக்காக இயங்கி வரும் தொண்டு நிறுவனம்தான் ’ஃபுட் பேங்க் இந்தியா’.
சென்னையின் முக்கிய பகுதிகளில் தினந்தோறும் குழுக்களாக பிரிந்து சாலைகளில் ஆதரவற்று இருக்கும் மக்களின் பசியை போக்கி அவர்களுக்கான வாழ்வாதாரத்தை உருவாக்கி வருகிறது ஃபுட் பேங்க் இந்தியா.
சமூக வலைதளங்கள் மூலமாக இளம் தலைமுறையினரிடம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள ஃபுட் பேங்க் இந்தியாவின் பயணம் எவ்வாறு ஆரம்பமானது என்பதை அதன் நிறுவனர் மகளிர் தினத்தன்று சினேகா மோகன்ந்தாஸ் பகிர்ந்து கொள்கிறார்.
’ஃபுட் பேங்க் இந்தியா ‘ஆரம்பித்து இரண்டு வருடங்கள் ஆகின்றது. ஆனால் சென்னை வெள்ளத்தின்போதுதான் நிறைய தன்னார்வலர்கள் இணைந்தார்கள்.
சென்னை வெள்ளத்தில் சிக்கிக் கொண்ட மக்களுக்கு தேவையான நிவாரண உதவிகளை தொடர்ந்து செய்து கொண்டிருந்தோம்.
வெள்ளத்தின்போது மட்டுமே 1,00,000க்கு அதிகமான உணவுகளை கொண்டு சென்று வழகினோம். சென்னை மட்டுமல்லாது அதன் புறநகர் பகுதிகளில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவுகளை வழங்கினோம்.
சென்னை வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் ஃபுட் பேங்க் இந்தியாவின் தன்னார்வலர்கள்
எங்கள் தொண்டு நிறுவனத்தை பொறுத்தவரை நாங்கள் யாரிடமும் பணம் பெறுவதில்லை. அதற்கு பதிலாக நீங்கள் சமைத்து கொடுக்கலாம். அல்லது உணவு பொருட்களான அரிசி, பருப்பு போன்ற சமையல் பொருட்களை வழங்கலாம்.
முதலில் ஃபுட் பேங்க் இந்தியா ஃபேஸ்புக்கில்தான் எங்கள் தொண்டு நிறுவனத்தை பற்றி தகவல் நிறைய பேருக்கு சென்று சேர்ந்தது.
எங்கள் நிறுவனத்தை பற்றிய செய்திகள் பல்வேறு செய்தி இணைய தளங்களிலும் வர ஆரம்பித்ததைக் கண்டு புனே, ஹைதராபாத், டெல்லி, நிசாம்பாத் (தெலுங்கான) மும்பையிலிருந்து நாங்களும் இதில் இணைந்து பணியாற்ற வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தனர். பின்னர் அவர்களுக்னென்று வாட்ஸப் குழு மற்றும் தனித்தனியான ஃபேஸ்புக் பக்கங்கள் உருவாக்கப்பட்டன.
இவை அனைத்து புட்பேங்க் இந்தியாவின் கிளை பிரிவுகள் ஆகும். ஃபுட் பேங்க் சென்னை ஃபேஸ்புக் பக்கத்தில் மட்டும் 20,000க்கு மேற்பட்ட உறுப்பினர்கள் உள்ளனர். இதில் 500-க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் உள்ளனர்.
மாணவர்கள், வேலைக்கு செல்பவர்கள், இல்லத்தரசிகள், தகவல் தொழில் நுட்ப பிரிவில் பணியாற்றுபவர்கள் என அனைவரும் மனதார இத்தொண்டு நிறுவனத்தில் தன்னார்வலர்களாக சேவை செய்து வருகின்றனர்.
ஃபுட் பேங்க் இந்தியாவின் தன்னார்வலர்களின் பணி என்ன?
ஃபுட் பேங்க் இந்தியாவை பொறுத்தவரை இதில் தன்னார்வலர்களாக உள்ளவர்கள் இரு பிரிவுகளாக உள்ளனர். ஒரு பிரிவினர் ஆதரவற்றவர்களுக்கு தேவையான உணவுகளை சமைத்துக் கொடுப்பவர்கள். மற்றொரு பிரிவினர் அவ்வாறு சமைக்கப்பட்ட உணவை உரியவர்களுக்கு கொண்டு சேர்ப்பது தொடர்பான பணியை செய்கின்றனர் ( அவர்கள் எந்த வகையில் உதவுகிறீர்கள் என்பது அவர்களது விருப்பம்).
அடுத்ததாக, ஃபுட்பேங்க் இந்தியா எவ்வாறு உதவுகிறது என்றால்? நாங்களும் உதவி செய்றோம் என்ற நோக்கில் நாங்கள் யாருக்கும் உதவுவது கிடையாது.
வயதானவர்கள், உடல் நலம் பாதிக்கப்பட்டவர்கள்,மனநலம் பாதிக்கப்பட்டவர்கள், தங்களால் வேலை செய்ய முடியாத நிலையில் உள்ளவர்களுக்கு மட்டுமே ஃபுட் பேங் உணவளித்து வருகிறது.
ஃபுட் பேங் இந்தியாவின் தன்னார்வலர்கள்
நாங்கள் ஆதரவற்றவர்களுக்கு அளிக்கும் உணவில் முக்கியமாக கடைப்பிடிப்பது தன்னார்வலர்களிடமிருந்து பெறப்படும் உணவு வீட்டில் மிச்சமான உணவாக இருந்தால் பெற்றுக் கொள்ள மாட்டோம். அதேபோன்று ஒட்டலில் வாங்கப்பட்ட உணவையும் நாங்கள் பெற்றுக் கொள்ளவது இல்லை.
அத்துடன் நீங்கள் எங்கள் தொண்டு நிறுவனத்துக்கு பணம் உதவிகள் செய்ய வேண்டாம். உதவி செய்ய விரும்பினால் அதனை அரிசி, பருப்பு போன்ற உணவுப் பொருட்களாக வாங்கித் தர கூறுவோம். அந்த உணவு பொருட்கள் எங்கள் தன்னார்வலர்களால் சமைக்கப்பட்டு ஆதரவற்றவர்களுக்கு சென்றடையும்.
இதன் முக்கிய நோக்கமே, மீதமான சாப்பாடு என்றால் அதனை ஆதரவற்றவர்களுக்குதான் வழங்க வேண்டும் என்ற எண்ணம் மாற வேண்டும். அவர்களும் நல்ல உணவு சாப்பிடுவதற்கு உரிமை உடையவர்கள்தான் என்ற எண்ணம் நமக்குள் உருவாக வேண்டும்.
அதுமட்டுமில்லாது மீதமான உணவுகளால் அவர்களின் உடல் நலமும் பாதிக்கபடலாம் அக்காரணத்துக்காகவும் நாங்கள் அதை தவிர்க்கிறோம்.
பணம் ஏன் பெறுவது இல்லை என்றால்? வெறும் பணமாக நாங்கள் பெற்றால் எங்கள் மீதான நம்பகத்தன்மை கேள்விக்குரியாகலாம்? அவர்களுடைய பணம் சரியான கைகளில் சேர்ந்துள்ளதா? உண்மையில் நாங்கள் ஆதரவற்றவர்களுக்கு உதவுகிறோமா? போன்ற சந்தேகங்கள் எழுவது இயல்புதானே. அதை தவிர்ப்பதற்காகவே நாங்கள் பணம் பெறுவது இல்லை.
மேலும் தன்னார்வலர்கள் சம்பந்தப்பட்ட இடத்துக்கு நேரில் வந்து உதவுவதன் மூலம் ஆதரவற்றவர்களின் நிலையையும் உணர முடியும். இதனை நாங்கள் கடுமையாக பின்பற்றி வருகிறோம்.
ஃபுட்பேங்க் இந்தியாவில் தன்னார்வலர்களாக இணைவதற்கு வயது வரம்பு ஏதும் இல்லை. குழந்தைகள் முதல் பெரியவர்கள்வரை இங்கு தன்னார்வலர்களாக உள்ளனர்.
சென்னை, தாம்பரத்தைச் சேர்ந்த 75 வயதான ஸ்ரீநாத் என்பவர் ஃபுட் பேங்க் இந்தியாவில் தன்னார்வலராக உள்ளார். அவர் ஒவ்வொரு ஞாயிறும் 100 சாப்பாடுகளை அவர் கைகளாலே சமைத்து உற்சாகமாக அளித்து வருகிறார்.
ஸ்ரீ நாத் போன்றவர்கள்தான் ஃபுட் பேங்க்குக்கு உயிரூட்டிக் கொண்டிருக்கிறார்கள் என்று ஆனந்தத்தில் சிறிது இடைவெளிவிட்ட சினேகவிடம்,
தினமும் உணவளித்து வருகிறீர்களா?
ஆம் வாரத்தில் உள்ள எழு நாட்களும் உணவளித்து வருகிறோம். ஆனால் ஒவ்வொரு நாளும் உணவளிக்கும் இடம் மாறும். வியாழக்கிழமை அண்ணா நகர் என்றால் ஞாயிற்றுக்கிழமை தாம்பரம் இப்படி ஒவ்வொரு இடமாக தேர்ந்தெடுத்து உணவளித்து வருகிறோம்.
ஃபுட் பேங்க் இந்தியாவுக்கு உதவ வருகிறவர்கள் எப்படி தங்களுக்கான பங்களிப்பை அளிப்பது?
நீங்கள் உணவளிக்க விரும்பினால் எங்களுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் உறுப்பினராக இணைந்து உங்களுக்கு எழும் சந்தேகங்களை கேட்கலாம். மேலும் நீங்கள் உணவளிக்க விரும்பிரிகிறீர்கள் என்றால்? நாங்கள் வழக்கமாக உணவளிக்கும் இடங்களுக்கு வந்து அளிக்கலாம்.
அதிக எண்ணிக்கையில் (10 முதல் 20 வரை) உணவு தருகிறீர்கள்; உங்களால் எங்களை தொடர்பு கொண்டு அளிப்பது சிரமமாக இருக்கிறது என்றால் எங்களது தன்னார்வலர்கள் தாங்கள் இருக்கும் இடத்துக்கே வந்து பெற்றுக் கொள்வார்கள்.
பிறருக்கு உணவளிப்பது என்பது நாம் அனைவரும் செய்யும் உதவிதான். அதனை இந்தக் கால தலைமுறைக்கு ஏற்றவாரு பெரிய அளவில் செய்ய எண்ணினேன்.
அன்னதானம் நாம் எப்போதாவது வழங்குவோம் அல்லவா? அதனை தினமும் கொடுத்தால் எப்படி இருக்கும் என்று தோன்றியது. என்னைப் பொறுத்தவரை நான் ஒவ்வொரு வியாழக் கிழமையும் ஆதரவற்றவர்களுக்கு உணவளித்து வந்தேன். என்னை போன்றவர்கள் ஒன்றினைந்து தினமும் ஆதரவற்றவர்களுக்கு உணவளிக்கலாமே என்று யோசித்தபோது ஃபேஸ்புக் இதனை கொண்டுச் செல்ல சிறந்த தளமாக அமைந்தது. இதன் மூலம் நிறைய இளம் தலைமுறையினர் ஃபுட் பேங்க் இந்தியாவில் இணைந்தார்கள். தற்போது ஃபுட் பேங்க் இந்தியா அங்கீகரிக்கப்பட்ட தொண்டு நிறுவனமாக மாறியுள்ளது. என்று கூறும் சினேகா முதுகலையில் சமூகப் பணி ( MASTER OF SOCIAL WORK ) படித்துக் கொண்டிருக்கிறார்.
ஃபுட் பேங்க் இந்தியாவின் அடுத்தக் கட்ட பணி என்ன?
உணவு மட்டுமே தொடர்ந்து அளித்துக் கொண்டிருக்கால் ஆதரவற்றவர்களுக்கான வேலை வாய்ப்புகளையும் உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம். கண்பார்வையற்ற 7 பேருக்கு வேலை வாங்கித் தந்திருக்கிறோம். ஒருவருக்கு செருப்புக் கடை வைத்து தந்திருக்கிறோம். பிசிஒ தொலைபேசி மையம் வைத்துக் கொடுத்து இருக்கிறோம்.
அடுத்தக் கட்டமாக இந்த புத்தாண்டுக்கு உறுதி மொழி ஒன்றை ஏற்று இருக்கிறோம். இந்த வருடத்திற்குள் 5,00,000 ஆதரவற்ற மக்களுக்கு உணவளிக்க வேண்டும். இதன் மூலம் நேரடியாக 5,00,000 ஆதரவற்ற மக்களை நாங்கள் சந்திக்க முடியும். அவர்களுக்கு உணவளித்து அவர்களால் வேலை செய்ய முடியும் என்றால் அவர்களுக்கான வாழ்வதாரத்தை ஏற்படுத்திக் கொடுக்கவும் எண்ணம் கொண்டுளோம்.
தற்போது 3 பெண்களுக்கு தள்ளுவண்டி கடை வைத்து கொடுத்திருக்கிறோம். அவர்கள் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் எங்களுக்கு 10 சாப்பாடுகள இலவசமாக அளித்து வருகிறார்கள்.
இவர்கள் அனைவரும் சென்னை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள் இன்னும் சென்னையின் நடைபாதைகளில்தான் வாழ்த்து கொண்டிருக்கிறார்கள்.
சாலைகளில் வாழ்த்து கொண்டிருக்கும் அனைவரும் அவர்களது விருப்பதினால் அங்கு இருப்பதில்லை அவர்களது சூழல்தான் அவர்களை இந்த நிலைக்கு தள்ளுகிறது. அவர்களில் பல பேர் பிறரிடம் கை ஏந்தாமல் வாழ வேண்டும் என்றுதான் விரும்புகிறார்கள். ஆனால் அவர்களுக்கான வாய்ப்புதான் உருவாக்கப்படவில்லை. அத்தகைய நபர்களை கண்டறிந்து அவர்களுக்கான வாய்ப்புகளை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம்.
இதற்கு என்னுடைய குழுவில் உள்ள நபர்கள் அனைவரும் முக்கிய பங்கு வகிக்கின்றன.
ஃபுட் பேங்க் இந்தியா ஆரம்பித்து இரண்டு வருடங்கள் கடந்து விட்டன. உங்களால் மறக்கமுடியாத உணர்வுபூர்வ சம்பவங்கள்?
மனிதர்கள் அனைவரிடத்திலும் நட்பு பாராட்டும் தன்மை இருக்கிறது. அதுவும் கைவிடப்பட்ட சூழலில் உள்ளவர்களுக்கு உதவினால் அவர்களது நட்புப் பட்டியலில் முதலிடம் பிடித்து விடுவீர்கள். அதுதான் எனக்கு நிகழ்ந்தது ஏராளமான நண்பர்கள் கிடைத்துள்ளர்கள், பார்வையற்றவர்கள் பலர் எனக்கு நண்பர்களாக மாறியுள்ளனர்.
என்னுடை பிறந்தநாளன்று நான் உணவளிக்க சென்று இருந்தேன். அவர்கள் எனக்காக பாடல் பாடி முழு அன்போடு வாழ்த்தினார்கள் அதனை என்னால் மறக்க முடியாது.
சமீபத்தில் நான் கல்லூரிக்குச் சென்றுக் கொண்டிருந்தபோது சாலையில் ஓரத்தில் ஒரு வயதான பாட்டி உட்கார்திருந்தார். நான் எப்போதுமே என்னுடைய வண்டியில் பிஸ்கெட், பிரட் போன்ற உணவுப் பொருட்கள் வைத்திருப்பேன். அந்த பாட்டியிடம் அதனை வழங்கினேன். நான் அளித்தை அவர் சட்டென்று தூக்கி ஏறிந்து விட்டார்.
அப்போதுதான் தெரிந்தது அவர் மன நலம் பாதிக்கப்பட்டவர் என்று. அவர் எறிந்ததை சிக்னலில் நின்றுகொண்டிருந்த அனைவரும் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
அங்கிருப்பவர்களுக்கு நாம் உதவி செய்ய வந்தாலும் இவர்கள் இப்படித்தான் நடந்து கொள்வார்கள் என்ற தயக்கம் வரும் அல்லவா. அந்த இடத்தில் நான் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்ற பக்குவம் முக்கியமானது என்று எனக்கு தோன்றியது.
அதனால் நான் திரும்பவும் அந்த பாட்டி என்னை அடித்தாலும் பரவியில்லை என்று அவரிடம் உணவுப் பொருட்களை கொடுத்து அந்த பாட்டியை சாப்பிட வைத்தேன். இந்தச் சம்பவத்தையும் என்னால் மறக்க முடியாது.
இறுதியாக, பெண்கள் தினத்தன்று நீங்கள் கூறும் உங்கள் மந்திரச் சொல்?
என்னை பொறுத்தவரை பெண்களுக்கு சுய உந்துதல் முக்கியமானது. நமக்கான உத்வேகத்தை பிறரிடம் எதிர்பார்க்கக்கூடாது அது நமக்குள்ளேயே தாராளமாக இருக்கிறது. யார் என்ன சொன்னாலும் , நம்மை அவமானப்படுத்தினாலும் நமக்கு சரி என்று படுகிற செயல்களை துணிச்சலாக செய்ய வேண்டும். யாருக்கும் பயப்படவேண்டாம், நல்லதை செய்வோம் என்று விடைபெற்றார்.
தொடர்பு கொள்ள: > ஃபுட் பேங் இந்தியாவின் சென்னை ஃபேஸ்புக் பக்கம்
முக்கிய செய்திகள்
வலைஞர் பக்கம்
8 days ago
வலைஞர் பக்கம்
8 days ago
வலைஞர் பக்கம்
13 days ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago