அதிசய உணவுகள் - 13: தேன் கலந்த கிரேக்க தயிர்!

By சாந்தகுமாரி சிவகடாட்சம்

‘‘நன்றாக விரும்பி சாப்பிடும் மனிதர்களே எப்போதும் மிகச் சிறந்த மனிதர்களாக இருக்கிறார்கள்!’’- ஜூலியா சைல்ட்

பழைய கிரேக்க நாட்டின் மரபு வழி கதை ஒன்று உண்டு. அதாவது கடவுள், உலகை படைக்க தொடங் கியபோது ஒரு சல்லடை வழியாக மண்ணைச் சலித்து பூமியின் மீது விழச் செய்தார். ஒவ்வொரு நாட்டுக்கும் நல்ல மண் கிடைத்த பின், சல்லடையில் கரடுமுரடான கற்களே மிஞ்சி இருந்தன. இவற்றை கடவுள் தன் தோளுக்கு மேலே வீச, அது பூமியில் விழுந்தது, உடனே கிரேக்க நாடு தோன்றியதாம்.

எங்கள் விமானம் வட்டமடித்து கிரேக்கத் தீவு ஒன்றில் தரையிறங்கத் தொடங்கியபோது, ஜன்னல் இருக்கை களுக்கு அருகே அமர்ந்திருந்த எனக்கு அந்தப் பழங்கதை நூற்றுக்கு நூறு உண்மையாகத்தான் சொல்லப்பட்டிருக் கிறது என்று தோன்றியது. கிரேக்க நாட்டுக்குச் சொந்தமான இரண்டாயிரத் துக்கும் சற்று அதிகமான தீவுகள், அதில் 170 தீவுகளில் கிரேக்க மக்கள் வாழ்கிறார்கள். கிரேக்கத் தீவுகள், அழகில் பார்ப்போரை அசர வைக்கும் என்று கேள்விபட்டிருந்ததால், அவற்றில் மூன்று தீவுகளைத் தேர்ந்தெடுத்தேன். முதலில் மைக்கோனஸ் தீவில் கால் பதிக்கும்முன் கிரேக்கத் தீவுகளை அரவணைத்து செல்லும் ஏஜியன் கடலின் மீது கொலுவிருந்த தீவுகளின் தோற்றங்களும், வடிவங்களும் என்னைப் பிரமிப்பில் ஆழ்த்தின.

நீண்டு படுத்திருக்கும் முதலையைப் போன்று ஒன்று, ஆமை தோற்றத்தில் மற்றொன்று, சதுரம், வட்டம், ஸ்டார் மீனைப் போல, இறக்கை விரித்து பறக்கும் பறவையோடு... அம்மம்மா! கற்பனா சக்தியை மீறிய தோற்றங்களை கொண்ட தீவுகளை முடிந்தவரை எண்ணி, பிறகு ஓய்ந்து போனேன்.

கிரேக்க மண்ணில் என் முதல் காலடியை எடுத்து வைத்ததுமே உடலும் உள்ளமும் ஒருசேர சிலிர்த்துக் கொண்டது. எப்படிப்பட்ட, காலத்தால் அழியாத சரித்திரம் படைத்த மகா புருஷர்கள் வாழ்ந்த பூமி!

பிளாட்டோ, அரிஸ்டாட்டில், சாக்ர டீஸ், டெமோகிரடஸ் போன்ற தத்துவ ஞானிகள்; இலியட், ஒடிசியை இயற் றிய காவிய கவிஞர் ஹோமர்; கணித மேதை பிதாகரஸ்; மருத்துவ மேதை ஹிப்போகிரடஸ்; இயற்பியலாளர், பொறியாளர், கண்டுபிடிப்பாளர், வானிய லாளர் என்ற பல பெருமைகளுக்கு உரித்தான ஆர்க்கிமெடிஸ்; உலகின் பெருவாரியான நாடுகளை தன் ஆட்சிக் குக் கீழ் கொண்டுவந்த அலெக்ஸாண்டர் தி கிரேட் என்று பட்டியலிட்டு மாளாத... பெருமக்கள். இவர்கள் எல்லோருமே கிரேக்க நாடு ஈன்றெடுத்த மாணிக்கங்கள்!

பெருமைவாய்ந்த மக்களோடு ஜன நாயகம், மேற்கத்திய தத்துவம், ஒலிம்பிக் விளையாட்டு, அரசியல் அறிவியல், வரலாற்றியல், முக்கிய கணிதக் கோட்பாடுகள், மேற்கத்திய இலக்கியம், சோகம் மற்றும் நகைச்சுவை சம்பந்தமான மேற்கத்திய கோட்பாடுகள் என்று அத்துனைக்கும் பிறப்பிடம் கிரேக்க நாடுதான்!

இப்படிப்பட்ட உன்னதமான நாட்டில் 10 நாட்களுக்கு மேலாக வலம் வந்து கண்ணாறக் கண்ட காட்சிகளும், பெற்ற அனுபவங்களும் உண்ட உணவுகளும் என்றைக்கும் என்னுள் நிலைத்து நிற்கும். மைக்கோனஸில் நாங்கள் தங்க இருந்த ஹோட்டலை நோக்கி, எங்களை சுமந்துக்கொண்டு அந்த கார் வேகமாக சென்றுகொண்டிருந்தது. அந்தத் தீவில் இருந்த எல்லா கட்டிடங்களும் வெள்ளை வெளேர் என்று வண்ணம் அடிக்கப்பட்டிருந்தன. ஜன்னல்கள், கதவுகள் மற்றும் தேவாலயங்களின் கூரைகளுக்கும் நீலநிறம் அடிக்கப் பட்டிருந்தன. சைகிலேடஸ் என்றழைக் கப்படும் ஏஜியன் கடலில் இருக்கும் தீவுகளில் வாழும் கிரேக்க மக்களுக்கு, தீயசக்திகளை நீலநிறம் விரட்டும் என்ற நம்பிக்கை இருப்பதால் இந்தத் தீவுகளில் எல்லா வீடுகளுமே இப்படியான வண்ணத்தில்தான் மின்னுமாம்!

சிறிதுநேரத்தில் ஹோட்டலை அடைந்தோம். இயற்கை சூழ்நிலையில், ஏஜியன் கடலைப் பார்த்தாற்போல எங்கள் அறை இருந்தது. சூரியன் அஸ்தமனம் என்பது சைகிலேடஸ் தீவுகளில் கிடைக்கும் கண்கொள்ளாக் காட்சியாக இருக்கிறது. தங்கத் தட்டாக, கடலுக்குள் சிறிது சிறிதாக மறையும் சூரியனைக் கண்டு மகிழ்ந்தோம்!

மைக்கோனஸ் தீவில் உள்ள காற்றாலைகளுக்கு அருகில் சாந்தகுமாரி

மைக்கோனஸ் தீவை எளிதில் அடையாளம் கண்டுகொள்ள முடிகிற வகையில்... பல ஹாலிவுட், பாலிவுட், கோலிவுட் படங்களில் நாயகன் - நாயகி டூயட் பாடும் காட்சிகளின் பின்னணியில் கொலுவிருக்கிற காற்றாலைகளைப் (wind mill) பார்க்கப் புறப்பட்டோம்.

வெகுதொலைவு நடந்து தூங்கா தீவான மைகோனஸின் குறுகிய தெருக் களையும், கடைகளையும் கடந்து காற்றாலைகளைப் பார்த்துவிட்டு திரும் பும்போது பசித்தது. ஒரு உணவகத்தில் இருந்த பலகையில் பலவித உணவு வகைகளைப் பற்றி எழுதியிருந்தனர். அதில் ஓர் உணவின் பெயர் வெகுவாக கவர்ந்தது. இங்கே கிரேக்க தயிர் (yogurt) தேனோடு கிடைக்கும் என்பதுதான் அது!

பல நாடுகளுக்குப் பயணப்பட்ட நான், வாழைப்பழச் சுவையோடு கூடிய தயிர்; செர்ரி, திராட்சை, மாம்பழச் சுவையோடு கூடிய தயிர் என்று பல வகை தயிர்களைச் சாப்பிட்டுள்ளேன். நம் நாட்டில் மோர், தயிர், லஸ்ஸி என சாப்பிட்டுள்ளேன். ஆனால் தயிரும் தேனுமாக சாப்பிட்டது இல்லை.

ஆர்டர் கொடுத்துவிட்டு அமர்ந் திருந்தோம். என் கணவருக்கு ஃபுரூட் சாலட்டும், எனக்குத் தயிரும் தேனும் கிண்ணங்களில் வந்து சேர்ந்தன. வெண்ணெய்யின் திடத்துடன் ஐஸ்கிரீம் கட்டியைப் போல காட்சி அளித்த அதனுடைய மேல் பாகத்த்தில் நம்ம ஊர் தேனைப் போல பத்து மடங்கு திடத்துடன் தேன் வழிந்துகொண்டிருந்தது.

ஸ்பூனால் தேனோடு சேர்த்து கிரேக்கத் தயிரை ஒரு விழுது எடுத்து வாயில் போட்டேன். அம்மம்மா... அதன் சுவையை எப்படி சொல்வேன்! அமிர்தம் என்று சொல்வார்களே... அது இதுபோன்றுதான் இருக்குமோ!

என் மனம் இஷ்ட தெய்வமான கிருஷ்ணரை நினைத்தது. ‘அப்பனே! உனக்குத் தயிர் என்றால் உயிராச்சே... இந்தக் கிரேக்கத் தயிரை உனக்குப் படைக்கிறேன்’ என்று மனதார அர்ப்பணம் செய்தேன். பிரபஞ்சத்தின் தலைவனுக்கு கிடைக்காத தயிரா... என உள்மனம் அறிவுறுத்தியது. ஆனாலும் உதடுகள் ‘கிருஷ்ணார்ப்பணம்’ என்றது.

அன்றுமுதல் கிரேக்க நாட்டில் இருந்த அத்தனை நாட்களிலும் மூன்று வேளையும் என் முக்கிய உணவாக ‘யோகர்ட் வித் ஹனியே’ ஆனது. மீண்டும் கிரேக்கம் செல்லத் துடிக்கிறேன். கிரேக்கத் தயிரோடு கிரேக்கத் தேனையும் சுவைக்க!

- பயணிப்போம்...





VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வலைஞர் பக்கம்

22 hours ago

வலைஞர் பக்கம்

3 days ago

வலைஞர் பக்கம்

3 days ago

வலைஞர் பக்கம்

5 days ago

வலைஞர் பக்கம்

12 days ago

வலைஞர் பக்கம்

14 days ago

வலைஞர் பக்கம்

15 days ago

வலைஞர் பக்கம்

17 days ago

வலைஞர் பக்கம்

18 days ago

வலைஞர் பக்கம்

18 days ago

வலைஞர் பக்கம்

22 days ago

வலைஞர் பக்கம்

25 days ago

வலைஞர் பக்கம்

26 days ago

வலைஞர் பக்கம்

29 days ago

வலைஞர் பக்கம்

1 month ago

மேலும்