ந.மு.வேங்கடசாமி நாட்டார் 10

By ராஜலட்சுமி சிவலிங்கம்

தமிழ் பேராசிரியரும், எழுத்தாளருமான ந.மு.வேங்கடசாமி நாட்டார் (Na.Mu.Venkataswamy Nattar) பிறந்த தினம் இன்று (ஏப்ரல் 2). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

* தஞ்சை மாவட்டம் நடுக்காவேரியில் (1884) பிறந்தார். நடுக்காவேரி முத்துச்சாமி வேங்கடசாமி நாட்டார் என்பது முழுப்பெயர். தந்தை தமிழ் அறிஞர், கல்விமான், விவசாயி. அவரைத் தேடி வரும் அறிஞர்களோடு பழகும் வாய்ப்பு சிறுவனுக்கு வாய்த்தது.

* சிறு வயதில் ஏற்பட்ட உடல்நலக் கோளாறு, வேங்கடேசப் பெருமாள் அருளால் நீங்கியதால், சிவப்பிரகாசம் என்ற பெயரை வேங்கடசாமி என மாற்றினர் பெற்றோர். உள்ளூர் திண்ணைப் பள்ளியில் 4-ம் வகுப்பு வரை படித்தார். நெடுங்கணக்கு, இலக்கம், நெல்லிலக்கம், எண்சுவடி, குழிமாற்று என கணக்கு சம்பந்தப்பட்ட அனைத்தையும் கற்றுத் தேர்ந்தார்.

* தந்தையிடம் ஆத்திச்சூடி, கொன்றை வேந்தன், அந்தாதி, கலம்பகம் உள்ளிட்ட நூல்களைக் கற்றார். தமிழ் இலக்கண, இலக்கியங்களை தானாகவே கற்றறிந்தார். மதுரை தமிழ்ச் சங்கத்தின் பிரவேச பண்டிதம், பால பண்டிதம், பண்டிதம் ஆகிய தேர்வுகளை எழுதி முதல் மாணவராகத் தேர்ச்சி பெற்றார்.

* வள்ளல் பாண்டித்துரை தேவரின் கையால் தங்கப் பதக்கம் பெற்றார். 24-வது வயதில் திருச்சி எஸ்பிஜி கல்லூரியில் தமிழ் ஆசிரியராகப் பணியாற்றினார். கோவை தூய மைக்கேல் மேல்நிலைப் பள்ளியில் ஓராண்டு பணியாற்றினார். திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியில் தலைமை தமிழ் பேராசிரியராக 24 ஆண்டுகள் பணிபுரிந்தார்.

* இவரது திறமையைக் கேள்விப்பட்ட அண்ணாமலை அரசர், இவரை அண்ணாமலைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேராசிரியராக நியமித்தார். அங்கு 7 ஆண்டுகள் பணியாற்றிய பிறகு, ஓய்வு பெற்று சொந்த ஊர் திரும்பினார். பின்னர் தமிழ் அறிஞர் உமா மகேஸ்வரரின் விருப்பத்துக்கு இணங்க, கரந்தை புலவர் கல்லூரியில் 4 ஆண்டுகள் ஊதியம் பெறாமலேயே மதிப்பியல் முதல்வராகப் பணியாற்றினார்.

* பாரதியார் 1912-ல் இவரது வீட்டுக்கு வந்து, சிலப்பதிகாரம், தொல்காப்பிய நூல்களில் சில இடங்களுக்குப் பொருள் கேட்டு அறிந்ததாகக் கூறப்படுகிறது. சிறந்த தமிழ் அறிஞரான அ.ச.சரவண முதலியாருடன் இணைந்து திருவிளையாடல் புராணத்துக்கு உரை எழுதினார்.

* அரிய கருத்துகளையும் மாணவர்களுக்கு எளிதாக விளங்க வைப்பதில் வல்லவர். புலவர்களின் நூல்களில் உள்ள பிழைகளை துணிச்சலாக சுட்டிக்காட்டுவார். நிறைய எழுதிக்கொண்டே இருந்தார். பல ஆய்வு நூல்கள், உரை நூல்களைப் படைத்துள்ளார். பல புலவர்களின் வாழ்க்கை வரலாற்றை ஆராய்ந்து பல நூல்களை எழுதினார்.

* தென்னிந்திய சைவ சித்தாந்த நூல் பதிப்புக் கழகத்தார் கேட்டுக்கொண்டதால் தேவாரத் திரட்டு, தண்டியலங்காரப் பழைய உரை, யாப்பருங்கலக் காரிகை உரை ஆகியவற்றுக்கு திருத்தங்கள் செய்து கொடுத்தார். இவரது பல நூல்கள் பல்கலைக்கழகங்களில் பாட நூலாக இடம்பெற்றன.

* சிறந்த சொற்பொழிவாளரான இவருக்கு, சென்னை மாகாண தமிழ்ச் சங்கம் 1940-ல் ‘நாவலர்’ பட்டம் வழங்கியது. புதிய செய்தியோ, புதிய ஆய்வுக் குறிப்போ இல்லாமல் இவரது உரை இருப்பதில்லை. எனவே, இவரது சொற்பொழிவைக் கேட்க பலரும் வெகுதொலைவில் இருந்து நடந்தே வருவார்களாம்.

* ‘நாட்டார் ஐயா’ என்று எல்லோராலும் அன்புடன் அழைக்கப்பட்டார். எளிமையாக வாழ்ந்தவர். அனைவரிடமும் இனிமையாக பழகுவார். வாழ்நாள் முழுவதும் தமிழ்த் தொண்டாற்றிய ‘நாவலர்’ நா.மு.வேங்கடசாமி நாட்டார் 1944-ம் ஆண்டு மறைந்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வலைஞர் பக்கம்

18 hours ago

வலைஞர் பக்கம்

1 day ago

வலைஞர் பக்கம்

2 days ago

வலைஞர் பக்கம்

4 days ago

வலைஞர் பக்கம்

5 days ago

வலைஞர் பக்கம்

8 days ago

வலைஞர் பக்கம்

9 days ago

வலைஞர் பக்கம்

10 days ago

வலைஞர் பக்கம்

11 days ago

வலைஞர் பக்கம்

14 days ago

வலைஞர் பக்கம்

14 days ago

வலைஞர் பக்கம்

16 days ago

வலைஞர் பக்கம்

23 days ago

வலைஞர் பக்கம்

25 days ago

வலைஞர் பக்கம்

26 days ago

மேலும்