'ரஜினி அரசியலுக்கு வரமாட்டார். ரஜினி அரசியலுக்கு வருவது நல்லதல்ல. ரஜினி அரசியலுக்கு வந்தால் மக்கள் ஆதரிக்க மாட்டார்கள்; தோற்றுவிடுவார். ரஜினி அரசியலுக்கு வருவது நல்லதல்ல. ரஜினி அரசியலுக்கு வரவே கூடாது!'
இப்படியெல்லாம் வாத, பிரதிவாதங்கள் தமிழ் கூறும் நல்லுலகில் கடந்த சில மாதங்களாக ஒலித்துக் கொண்டிருக்கிறது. இந்த வாதத்தில் கம்யூனிஸ்டுகள், மார்க்சிஸ்டுகள், திமுக, அதிமுகவினர் என யாரும் விதிவிலக்கல்ல. காங்கிரஸ் கொஞ்சம் அமைதி காக்கிறது. பாஜக ரஜினியை வா, வா என்று தொடர்ந்து அழைத்துக் கொண்டே இருக்கிறது.
இதையெல்லாம் தாண்டி அரசியல் தலைவர்களில் திருமாவளவன் மட்டும் அவர் வருவதை ஆதரித்துப் பேசியிருக்கிறார். அரசியல் அறிவு ஜீவி என்று சொல்லத்தக்க குழுவில் முன்னணி வகிக்கும் தமிழருவி மணியன் ரஜினியை சந்தித்து விட்டு வந்து ரஜினியின் அரசியல் ஊதுகுழலாகவே மாறியிருக்கிறார். சிஸ்டம் கெட்டுப்போச்சு, போர் வரட்டும் பார்த்துக்கலாம் என்ற இரண்டு அரசியல் பஞ்ச் டயலாக் மட்டும் பேசிய ரஜினிக்கு கிடைத்த அரசியல் அங்கீகாரம் இவையெல்லாம் என்பது ஒரு பக்கம் ஆச்சரியம்.
இன்னொரு பக்கம் இந்த பஞ்ச் டயலாக் பேசிவிட்டு 'காலா' படப்பிடிப்புக்குப் போன ரஜினியை இடையில் வாய்ப்பு கிடைத்தபோதெல்லாம் பத்திரிகையாளர்கள் வாயைக் கிளறினார்கள். முதலில், 'இப்போதைக்கு அரசியல் பேசும் ஐடியா இல்லை' என்றார். கட்சி ஆரம்பிப்பீர்களா என்றபோது, 'தேர்தல் வரட்டும்!;' என்றார்.
'காலா' படப்பிடிப்பு இடைவேளை சென்னை திரும்பிய பின்பும் அரசியல் பற்றி நோ கமெண்ட் சொன்ன ரஜினி அந்தர் பல்டியாக விவசாயிகள் போராட்டத்தை முன்னெடுத்ததில் பிரபல்யப்பட்ட அய்யாக்கண்ணுவை சந்திக்கிறார். இமக போன்ற லெட்டர் பேடு கட்சித் தலைவர்களையும் பார்க்கிறார்.
காலங்காலமாய் காத்திருக்கும் ரசிகர்களுக்கு கிடைக்காத வாய்ப்பு இவர்களுக்கு சட்டென்று கிடைத்து விடுகிறது. அப்படி வாய்ப்பு கிடைத்தவர்கள் வெளியே வந்து ரஜினியுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை வெளியிட்டு, கங்கை காவிரி இணைப்புக்கு ரூ.1 கோடி கொடுக்கச் சொல்லி வலியுறுத்தினேன் என்கிறார் ஒருவர்.
இன்னொருவர் ரஜினி தனிக் கட்சி தொடங்குவார். பாஜகவில் சேரமாட்டார் என சொல்கிறார். இன்னும் சில நடிகைகள் சந்திக்கிறார்கள். அவர்களும் வெளியே வந்து அரசியலே பேசுகிறார்கள். ரஜினி மட்டும் கப்சிப். இது என்ன ஜூஜூபி.
ஒரு முறை பிரதமர் நரேந்திர மோடியே இவர் இல்லம் வந்தார். இருவரும் பேசினார்கள். அதேபோல் பாஜகவின் தேசியத்தலைவர்கள் எல்லாம் ரஜினியை சந்தித்துப் பேசினார்கள். அந்த சந்திப்பு குறித்து மோடி பேசினார்.
தேசியத் தலைவர்கள் பேசினார்கள். ரஜினி பேசினாரா? அவ்வளவு ஏன்? திமுக தலைவர் கருணாநிதி குடும்பத்தில் விவகாரம். அப்போது அழகிரி ரஜினியை சந்தித்தார். அப்போது கூட அழகிரிதான் ரஜினியின் சந்திப்பு குறித்து மீடியாக்களிடம் ஓரிரு வரிகள் பேசினார். ரஜினி மீடியாக்கள் மத்தியில் பேசினாரா? இப்படி யாராவது இருக்க முடியுமா? ஒரு நாட்டின் பிரதமர், அல்லது நாட்டின் பிரதம வேட்பாளர் சந்திக்கிறார், ஆனானப்பட்ட தலைவர்கள் எல்லாம் சந்திக்கிறார்கள். அப்போதெல்லாம் வாசல் வரை வந்து அந்த ஆனானப் பட்டவர்களையெல்லாம் இன்முகத்தோடு வழியனுப்பி வைப்பவர் பேசுவதேயில்லை.
பேசினாலும் ஒற்றை வார்த்தை அபூர்வம். என்ன கொடுமை இது. இவர் பேசவில்லை என்றால் அவர் அரசியலுக்கு வரவில்லை என்று அர்த்தமா? வரமாட்டார் என்று அர்த்தமா? வரவே கூடாது; அரசிலுக்கு அவர் தகுதியில்லை! என்று அர்த்தமா? திரும்ப இந்தக் கட்டுரையின் முதல் வரிக்கு செல்லுங்கள். படியுங்கள். பிறகு ரஜினியை சந்தித்த அரசியல் தலைவர்களையெல்லாம் யோசியுங்கள்.
ரசிகர்களை சந்திப்பதில் அவருடைய படம் ஓட வேண்டிய பிசினஸ் இருக்கிறது என்று வைத்துக் கொண்டாலும், அரசியல் தலைகள் எல்லாம் சந்திப்பதில் என்ன இருக்கிறது. பிரதமர், முதல்வர், வேறு நாட்டு ஜனாதிபதி போன்றவர்கள் சந்திப்பதில் கூட வருமான வரி, வெளிநாட்டில் பிசினஸ் விவகாரங்கள் இருக்கலாம். சின்ன கட்சிகளும், அறிவு ஜீவி என்று சொல்லிக் கொள்ளும் அரசியல்வாதிகளும், நக்மா, கஸ்தூரி போன்ற நடிகைகளும் இவரை சந்தித்துவிட்டு வந்து வெளியில் அரசியல் பேசுவதற்கு என்ன காரணம் இருக்க முடியும்?
இதுதான் ரஜினியின் புதுமாதிரி அரசியல். இத்தனை அசுர சக்திகள் வந்து சந்திக்கும் போதும், அவர்களை சந்திக்க சம்மதம் தெரிவித்து வரச்சொன்ன போதும் எதையுமே வெளியில் பேசாமல் இருப்பதற்கு ஒரு ஆற்றல் வேண்டும். வேறொருவராக இருந்தால் இப்படியிருப்பார்களா? அஜித் இல்லையா, கமல் இல்லையா என்று நடிகர்களை கை நீட்டலாம். அவர்கள் எல்லாம் இப்படி ஒரு வித அமுக்கமான அரசியலில் ஈடுபடவில்லையே. இப்போது காமராஜரிலிருந்து ஆரம்பியுங்கள்.
அண்ணாதுரை, கருணாநிதி, எம்ஜிஆர், வி.என். ஜானகி, ஜெயலலிதா, பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிசாமி, ஸ்டாலின், விஜயகாந்த், வைகோ.. யாராகினும் அரசியலை வெளிப்படையாக பேசாமல் இருந்திருக்கிறார்களா? அதையும் மீறி ஒற்றை வார்த்தையை மட்டும் கொளுத்திப்போட்டு விட்டு இமயமலைக்கோ, 'காலா' படப்பிடிப்பிற்கோ சாவகாசமாக ஓடிப்போயிருக்கிறார்களா? எதுவுமே நடக்காதது போல் அங்கே தானுண்டு தன் வேலையுண்டு என்று ஈடுபட்டிருக்கிறார்களா? கிடையவே கிடையாது.
இமயமலைக்குப் போனால் பயந்து ஓடிட்டார். 'காலா' படப்பிடிப்புக்கு போய் விட்டால் பணம்தான் குறி. ரசிகர்களை சந்திக்க ஏற்பாடு செய்தால் பிசினஸ் நடக்க வேண்டும் என்றெல்லாம் ரஜினிக்கு உள்நோக்கம் கற்பிப்பது ஒரு பக்கம். இன்னொரு பக்கம் ரஜினிக்கு ஒன்றுமே தெரியாது. அரசியல்னா பயம். பணம் சம்பாதிக்கிறதிலேயே குறியாக இருப்பவர், எப்படி கட்சி ஆரம்பித்து பணத்தை இழப்பதற்கு சம்மதிப்பார். நெவர் என்று வாதிடுவது வாடிக்கையாகிப் போனது.ஒருவர் பேசி எதிராளி பேசாதிருந்தால் ஒருவர் பேசியதற்கு எதிராளி சம்மதித்தார் என்று பொருள். அதை மெளனம் சம்மதம் என்றும் நம் மொழிப் பண்பாட்டில் அர்த்தப்படுத்துவார்கள்.
ஆக, ரஜினி பேசாமலே இருக்கிறார்; மற்றவர்கள் பேசிக் கொண்டே இருக்கிறார்கள். அப்படியானால் மற்றவர்கள் பேசுவதில் ரஜினிக்கு சம்மதம் என்று அர்த்தமா? அப்படித்தான் பலர் நினைத்துக் கொள்கிறார்கள். இதன் வெளிப்பாடு ரஜினிக்கு நடிப்பதை தவிர, ஸ்டைல் செய்வதை தவிர ஒன்றுமே தெரியாது என்ற எண்ணத்தை உருவாக்கி விடுகிறது. உடனே அவருக்கு ஆளாளுக்கு அட்வைஸ் மழையாகப் பொழிந்து தள்ளிவிடுகிறார்கள். கடந்த 1996 தொடங்கி நேற்றைய செய்தித்தாள்கள் வரை ரஜினி பேசுபொருளான காலங்களில் என்ன நடந்திருக்கிறது என்று எடுத்துப் பாருங்கள். அரசியல் ரஜினிக்கு 10 அட்வைஸ், தொடங்கி 100 யோசனைகள் வரைக்கும் சொல்லியிருப்பார்கள்.
1996ல் பிறந்து நேற்று மீடியாவிற்குள் வந்த இளைஞர் கூட தற்போது 'காலா' ரஜினிக்கு அரசியல் அட்வைஸ் எழுதுகிறார் என்றால் அவரை எப்படியெல்லாம் குறைத்து மதிப்பிடுகிறார்கள் என்று எண்ணிப்பாருங்கள். இந்த கற்பிதம்தான் வாட்ஸ் அப், முகநூல், ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்களிலும் கூட ரஜினி ஒரு கிண்டல் பொருளாகவே சித்திரிக்கப்பட்டு வருகிறார். நம் மனிதர்களுக்கு நகைச்சுவை உணர்வு அதிகம்தான். அதிலும் நம் அரசியல்வாதிகளை கார்ட்டூன் போட்டு கிண்டல் செய்தால் அலாதி சுகமடைபவர்கள் நம்மூர் மக்களாகத்தான் இருப்பர்.
அப்படி கார்ட்டூன் அதிகம் போடாமலே தமிழகத்தில் இந்த நூற்றாண்டில் அதிகமாக அரசியல் எள்ளலுக்கும், கிண்டலுக்கும் உள்ளானவர் ரஜினியாகத்தான் இருப்பார். ஆக, பேசாமலே, கார்ட்டூன் போடாமலே அதீதமான அரசியல் விளம்பரங்கள் ரஜினிக்கு கிடைத்து விடுவதே கூட ஒரு வகை புதுவித அரசியல்தான். சரியோ தவறோ. ஒரு மனிதன் பேசப்பட வேண்டும். அப்போதுதான் அவன் செல்வாக்கு பெற்றவன் ஆகிறான்.
பூலான்தேவி, சந்தனக்கட்டை வீரப்பன் கூட அப்படித்தான் ஆனார்கள். பூலான்தேவி அரசியலுக்கே வந்தார். வீரப்பனை காட்டுக்குள் இருந்தபோது அரசியலுக்கு வரச் சொன்னார்கள். அவர் காட்டுக்குள் இருந்து கேசட் மூலமே அரசியல் பேசினார் என்பது இன்னொரு வகை அரசியல். ஆக, நாம் எல்லோருமே ஏதாவது ஒரு வகை அரசியலுக்கு ஆட்பட்டுத்தான் அமர்ந்திருக்கிறோம். நம் அரசியலுக்குள் நம் குடும்பம், நம் உறவுகள், நண்பர்கள் தாண்டி ஓரிருவர் மட்டுமே வந்து போகிறார்கள். கருணாநிதிக்கும், ஜெயலலிதாவுக்கும் கோடிகள் எண்ணிக்கையில் வந்து போனார்கள். அதனால் வென்று நின்றார்கள்.
கருணாநிதி நெகட்டிவ் என்றால் ஜெயலலிதா பாசிட்டிவ். ஜெயலலிதா நெகட்டிவ் என்றால் கருணாநிதி பாசிட்டிவ். இவர்கள் தவிர்த்து மாற்று ஒருவரை ஏன் ஏகோபித்த ஜனங்கள் நினைவில் நிறுத்தவில்லை. அரசியல் பலம், பணபலம், செல்வாக்கு பலம். அரசியலில் ஈடுபட்டு ஆட்சியைப் பிடிப்பதற்கு இந்த மூன்றில் எது முக்கியம்? மூன்றும் முக்கியம்தான். ஆனால் மேற்சொன்ன தலைவர்களுக்கு முதலில் வந்தது எது? செல்வாக்கு பலம்தானே? பிறகு அரசியல் பலம்? கடைசியாகவே பணபலம் வந்தது என்றால் ஒப்புக் கொள்வீர்களா?
எம்ஜிஆரை எடுத்துக் கொள்ளுங்கள். அவருக்கு திரைத்துறை செல்வாக்கே முக்கிய அங்கம் வகித்தது. அத்துடன் திமுகவில் ஈடுபட்டதன் அரசியல் செல்வாக்கு துணை நின்றது. இரண்டும் கூடி கனிந்தபோது தனிக்கட்சி ஆரம்பித்தார். அதீதமான தனிமனித செல்வாக்கு, அதீதமான அரசியல் செல்வாக்கு பார்த்து தமிழகத்தின் தனிமனிதர்கள் கட்சி நிதியை நேரடியாகவும் மறைமுகமாகவும் கொண்டு வந்து எம்ஜிஆருக்கு கொட்டினார்கள். அதை தேர்தல் செலவுக்கு பயன்படுத்தினார்.
அதே சமயம் இவருக்கு இணையான அரசியல் பலத்துடன் இருந்த காங்கிரஸ், திமுக கட்சி தலைவர்களுக்கும் நிதி கொடுக்க வேண்டிய கட்டாயம் தொழிலதிபர்களுக்கு இருந்ததுதான். ஆனால் மக்கள் செல்வாக்கு யாருக்கு என்று பார்த்தே நிதி கொடுப்பதை கூட்டவும் குறைக்கவும் செய்தனர் அவர்கள். இன்றைக்கும் ஒரு தொழிலதிபர் பெரிய கட்சி, அதற்கடுத்த கட்சி, சின்ன கட்சி, கடைகோடிக் கட்சி பார்த்தே நிதி அளவை அளக்கிறார் என்பது அரசியலில் உள்ளவர்கள் எல்லோருக்கும் தெரியும்.
ஆக, மக்கள் செல்வாக்கு, அரசியல் செல்வாக்கு மிக்க தலைவர்கள் தமிழகத்தில் இல்லை; செயல்பாட்டில் இல்லை என்பது நிதர்சனம். அதற்கடுத்த மக்கள் செல்வாக்கு ரஜினிக்கு வந்து விடுகிறது. அதேசமயம் அரசியல் செல்வாக்கு என்பது ஏற்கெனவே 21 ஆண்டுகளாக திட்டமிட்டு வளர்த்த தமிழகத்திற்கு சுத்தமாக மாறுபட்ட எதிர்மறை அரசியல் ரஜினிக்கு பயன்படப் போகிறது. இந்த இரண்டும் அணி சேர்ந்து கட்சியாக மாறும்போது பணபலம் தானாக வரப்போகிறது. பெரும்பாலோர் நினைக்கிறார்கள்.
நரேந்திர மோடி வந்து போனார். சுப்பிரமணியசுவாமி வந்து போனார். அமித்ஷா வந்து சென்றார். தமிழருவி மணியன் பார்த்தார். வேறு பல பத்திரிகையாளர்கள் பார்த்தனர். சோ ஆலோசகராக இருந்தார். ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம், பிரபு போன்றவர்களெல்லாம் பேசிக் கொண்டிருக்கிறார்கள். இவர்கள் எல்லாம் ரஜினிக்கு ஆலோசனை சொல்கிறார்கள். அவர்களை எல்லாம் அழைத்து கருத்து கேட்கிறார் ரஜினி என்றுதான் யோசிக்கிறார்கள்.
உண்மை அது அல்ல. மற்றவர்கள் சொல்லி ரஜினி கேட்பதில்லை. மற்றவர்கள் சொல்வதை கேட்டுக் கொள்கிறார் அவ்வளவே. மற்றபடி முடிவை தானே எடுத்து அமல்படுத்துகிறார். அவர் அமல்படுத்துவதை மற்றவர் பின்பற்றினால் மட்டுமே ஏற்றுக் கொள்கிறார். இல்லாவிட்டால் அவர் பாஷையில் கதம், கதம்தான்... தனக்குள் பல விஷயங்களை யோசிக்கிறார். தீர்க்கமாய் சிந்திக்கிறார். கூடவே பல புத்தகங்களை தேடித்தேடி படிக்கவும் செய்கிறார். மார்க்ஸ், ஏங்கெல்ஸ் எழுதியிருப்பதையோ, சாவர்க்கர் கோடி காட்டியதையோ, சித்தர்கள் அருளியதையோ யாரும் அவருக்கு எடுத்துச் சொல்ல வேண்டியதில்லை.
அதையெல்லாம் அவர் படித்துக் கொண்டுதான் இருக்கிறார். ஆனால் படியாதவர் போல் உள்வாங்கிக் கொண்டு அமைதியாக இருக்கிறார். இல்லாவிட்டால் சில இடங்களில் திடீர் குட்டிக் கதைகளை மேடையில் சொல்ல முடியாது. ஆகவே அவரைக் குறைத்து மதிப்பிடுவது சரியானதாகாது. இதையெல்லாம் எழுதுவதால் அவர் கட்சி ஆரம்பித்தால், ஆட்சியை பிடித்து, நல்லதை அரங்கேற்றி, தீயதை அகற்றி சிறப்பாக ஆட்சி புரிந்திடுவாரா என்ன? நல்லதே நினைப்போம். தமிழகத்துக்கு எது நல்லதோ அதுவே நடக்கட்டும்.
முக்கிய செய்திகள்
வலைஞர் பக்கம்
12 days ago
வலைஞர் பக்கம்
12 days ago
வலைஞர் பக்கம்
17 days ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago