ஒருமுறை வேலூரை அடுத்த சத்துவாச்சாரிக்கு, ‘தேசிய அணி’யின் பொதுக் கூட்டத்தில் பேசுவதற்காக ஜெயகாந்தன் வந்திருந்தார். கூட்டத்தில் பேசுவதற்குப் போகும் முன் நெசவாளியின் ஓடு வேய்ந்த வீட்டில் அவரைத் தங்க வைத்திருந்தார்கள்.
பின்னாளில் அது என் தங்கை திலகவதியின் புகுந்த வீட்டுக்கு எதிர்வீடாக அமைந்தது. சமீபத்தில் காலமான என் தங்கையின் இறுதி சடங்கின்போது, கொஞ்ச நேரம் நான் அந்த வீட்டுத் திண்ணையில் உட்கார்ந்திருந்தேன் பழைய நினைவுகள் மிதக்கும் மனசுடன். அந்த வீட்டில்தான் ஜெயகாந்தனை அன்று நாங்கள் சந்தித்தோம்.
ஜெயகாந்தன் அன்றைக்கு பேன்ட் அணிந்து, ‘இன்’ செய்து கொண்டு மிக நேர்த்தியாக, ட்ரிம் ஆக இருந்தார். அப்போது அவர் தாடி வைத்திருந்தார். அங்கே இருந்த யாரோ, ‘என்ன… தாடி வைத்துவிட்டீர்கள்?’ என்று கேட்ட னர். ஒரு பெரிய கண்ணாடியில் பார்த்துக்கொண்டே தலைவாரியவாறே, ‘தாடி வைப்பது புரட்சியாளர் மரபு’ என்று பதிலளித்தார்.
அன்றைய சத்துவாச்சாரி கூட்டத்தில் பாலதண்டாயுதமும் பேசினார். அவரது ஆவேசமான பேச்சை ஏற்கெனவே சிலமுறை நான் கேட்டிருந்தேன். ஜெயகாந்தனின் பேச்சு தனித்துவமான ஓர் இலக்கியத் தரத்தில் இருந்தது. திலகரைப் பற்றிப் பேசும்போது, ‘திலகர்னா யார்? இந்தியாவின் வேதாந்தக் கடலில் விளைந்த ஒரு முத்து!’ என்று அவர் பேசியது இன்றளவும் எனக்கு மறக்கவில்லை.
அடுத்தச் சந்திப்பு வேலூரிலேயே விஸ்தாரமாக நடந்தது. 1963-ம் ஆண்டின் கடைசி நாள் அது. மறுநாள் புத்தாண்டுப் பிறப்பின்போது, ஒரு பட்டிமன்ற நிகழ்வு தமிழ் இலக்கியத்தை வளர்த்தது.
‘காதலா… வீரமா..?’ என்று தலைப்பு. குன்றக்குடி அடிகளார்தான் அதற்கு நடுவர். இதே தலைப்பில் இன்னொரு ஊரிலும் இந்தப் பட்டிமன்றம் நடந்த தாம். அந்த ஊர்ப் பட்டிமன்றத்தில் ஜெயகாந்தனும் கலந்துகொண்டு, ‘வீரமே’ என்று வாதிட்டிருந்தார். இப்போது வேலூரில் ‘காதலே’ என்கிற கட்சியில் பட்டிமன்றத்தில் கலந்துகொள்ளவிருந்தார்.
இந்தப் பட்டிமன்றம் நடப்பதற்கு முதல்நாள் மாலையிலேயே நாங்கள் வேலூரில் குவிந்துவிட்டோம். திருப்பத்தூரில் இருந்து மட்டுமே ஐந்தாறு பேர். தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் ஏற்பாடு அது என்று நினைக்கிறேன்.
வேலூரில் தென்னைமரத் தெருவில் பேச்சாளர்களும் விருந்தினர்களும் தங்குவதற்கு என்றே வாடகைக்கு ஒரு வீடு எடுக்கப்பட்டிருந்தது. அங்கே சென்று நாங்கள் ஜெயகாந்தனோடு கலந்தோம். நண்பர்களாகிய எங்களை அந்தப் பற்றாக்குறையான இடத்தில் உபசரிக்க இயலாத ஜெயகாந்தன், எங்களை வெளியே அழைத்துக் கொண்டு வந்தார். எங்கே போனால் நாம் சுதந்திரமாகப் பேசிக் கொண்டிருக்க முடியும் என்று யோசித்து, வேலூர் கோட்டைவெளி மைதானத்துக்கு எங்களைக் கூப்பிட்டுக் கொண்டு வந்தார். அங்கே எல்லோரும் வட்டமாக அமர்ந்து கொண்டோம்.
டிசம்பர் 31 என்றால், அது மார்கழிப் பனியின் நடுப் பகுதி. அன்றைக்கு அந்தப் பனி எங்களுக்கு ஒரு பொருட்டா கப்படவில்லை. எங்கள் ஆர்வங்களின் அக்னி அங்கே எரிந்து கொண்டிருந்ததே அதற்குக் காரணம் ஆகும்.
மிகச் சரியாக 12 மணிக்கு, நாங்கள் 1964-ம் வருட பிறப்பை ஆனந்தமாக வரவேற்றோம். அதற்குப் பிறகும் தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தோம். எதைப் பற்றியெல்லாம் பேசினோம் என்பதை எழுதி மாளாது.
வாழ்வில் அவர் சந்தித்த வகை வகையான மனிதர்களை எல்லாம் அப்போது நினைவுகூர்ந்தார். அவ்வாறு அன்று அவர் சொன்னவற்றில், ஊனமுற்ற, வயதான ஒரு பிச்சைக்காரப் பெண்மணியின் சித்திரம் மறக்க முடியாமல், இன்னும் மனதில் ஒட்டிக் கொண்டிருக்கிறது.
எங்கள் உத்தியோக விவரங்களைக் கேட்டறிந்தார். எனக்குத்தான் நான் இதற்கு முன்பு பார்த்திராத ஒரு கிராமம் என்கிற ஒரு சொர்க்கம் கிடைத்தி ருக்கிறதே, அந்த அனுபவங்களை நான் சொன்னேன். அரசியல் பற்றியும் பேசினோம். அதெல்லாம் அக்காலத்தில் கட்சி அரசியல் சம்பந்தப்பட்டதாக அல்லாமல், ‘லட்சிய அரசியல்’ சம்பந்தப்பட்ட தாகவே இருந்தது.
அதிகாலை 4 மணிக்கு நாங்கள் எழுந்து தென்னைமரத் தெருவில் இருந்த அந்த வீட்டுக்கு வந்தோம். அதற்குள் அதிகாலையின் மாயங்கள் நிகழ ஆரம்பித்துவிட்டன. பெண்கள் வாசலில் சாணம் தெளிக்கும் வேளை யாயிற்று அது.
நாங்கள் ஏழெட்டுப் பேர் அதிகாலை யில் இப்படிக் கும்பலாகப் போவது, கதவு திறக்கும் இல்லத்தரசிகளுக்கு இனிய சகுனம் போலவா இருக்கும்? எனவே, ஜெயகாந்தன் ஓர் ஆலோசனை கூறினார். எல்லோரும் தங்கள் இடுப்பு வேட்டிகளையும் லுங்கிகளையும் அவிழ்த்துத் தலைக்கு முக்காடிட்டுக் கொண்டு, ‘கல்லார்க்கும் கற்றவர்க்கும் களிப்பருளும் களிப்பே!’ என்று பாடிக்கொண்டு போக ஆரம்பித்தோம்.
ஆஹா! அந்த அதிகாலை வேளையே வள்ளலார் ராமலிங்க சுவாமியின் வாக்கு ஆரோகணிக்க ஆரம்பித்துவிட்டது. கோலமிடச் சற்றுக் குனிந்த பெண்கள், நிமிர்ந்து ஒதுங்கி நின்று மரியாதையாக வழிவிட்டனர். அவர்களில் யாரோ ஒருவர் கையெடுத்துக் கும்பிட்ட காட்சியும் என் கண்ணுக்குத் தெரிந்தது.
மறுநாள் பட்டிமன்றத்தில் சில ரஸமான விஷயங்கள் நிகழ்ந்தன. குன்றக்குடி அடி களார் பேசியபோது, முன்பு ஓர் ஊரில் ‘வீரம்’ என்று பேசியவர்கள், ‘காதல்’ என்று இப்போது பேசப் போவதைக் குறிப்பிட்டு, வாதம் செய்வதில் இவர்கள் எவ்வளவு நிபுணர்களாக இருக்கிறார்கள் என்று வியந்தார்.
‘வீரம்’ என்கிற பட்டிமன்றக் கட்சியில் பேசிய ஒருவர் ‘கலிங்கத்துப்பரணி’யில் வரும், ‘எடும் எடும் எடும்’ என்கிற பாடலை மேற்கோள் காட்டிப் பேசினார். அந்த மேற்கோள் மிகவும் தொண்டை கம்மிப் போய் மெல்லியதாக இருந்தது.
ஜெயகாந்தனுக்குப் பொறுக்க வில்லை. எதிர்க் கட்சியினரைப் பார்த்து, ‘உங்கள் கட்சிக்கு ஆதரவான பாடலை இப்படியா பாடுவது?’ என்று கேட்டுவிட்டு, தமது கம்பீரமான குரலில், ‘எடும் எடும் எடும் என எடுத்ததோர் இகல் ஒலி கடல் ஒலி இகக்கவே!’ என்று பாட ஆரம்பித்துவிட்டார். வீரம் பாய்ந்த நெஞ்சினராய் நாங்கள் தொடை தட்ட ஆரம்பித்துவிட்டோம்.
‘வாழ்வின் மீது கொண்ட காத லால்தான்… இலக்கியமே பிறக்கிறது’ என்ற ஜெயகாந்தனின் இறுதி வாதம் பார்வையாளர்களை வியக்க வைத்தது! எனக்குத் தெரிந்து, அதற்கப்புறம் இந்த மாதிரியான பட்டிமன்ற வேடிக்கை களில் அவர் கலந்துக்கொண்டதே இல்லை.
- வாழ்வோம்…
எண்ணங்களைப் பகிர்ந்துகொள்ள
pisakuppusamy1943@gmail.com
முக்கிய செய்திகள்
வலைஞர் பக்கம்
1 day ago
வலைஞர் பக்கம்
2 days ago
வலைஞர் பக்கம்
7 days ago
வலைஞர் பக்கம்
30 days ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago