ஒரு குளம். புனிதக் குளம். ராமதாஸ்பூரில் இருந்த குளம் என்று சொன்னால் யாருக்கும் தெரியாது. இன்று அக்குளத்தின் பெயரே அவ்வூருக்கும் பெயராக இருக்கிறது. ஆம். அமிர்தம் நிரம்பிய குளம் என்று அர்த்தம் பெறும் அமிர்த சரஸ் என்கிற அம்ரித்சர்தான் அந்தக் குளத்தின் பெயர். நகரின் பெயரும் அதுவே!
“எப்போது பார்த்தாலும் நேற்று கட்டியது போன்ற தோற்றத்தைத் தரும் கோயிலது” என்று பல வருடங்களுக்கு முன்னர் ஒரு பஞ்சாபி நண்பர் என்னிடம் சொன்னது கோயிலுக்குள் நுழைந்ததும் ஞாபகம் வந்தது. மேற்கு வாசலில் இருந்து உள்ளே நுழைந்தேன். மக்களே சேவகர்களாகப் பணியாற்றி யாத்திரிகர்களின் செருப்பை வாங்கி வைப்பதைப் பார்க்கையில், பணிவு பேசுவதில் இல்லை; சேவை செய்வதில் இருக்கிறது என்கிற சிந்தனை நம்முள் ஊடுருவுகிறது.
கைகளைக் கழுவி நீர்ப்பாதையில் கால்களைப் பதித்து சுத்தம் செய்து கொண்டு விலாசமான கோயில் வளாகத்தினுள் நுழைந்தால் பிரம்மாண்டமான குளம். நடுவில் தங்கத் தகடுகள் மேவிய ஹர்மந்திர் சாஹிப், குளத்தைச் சுற்றி நடையிடும் ஆயிரக்கணக்கான பக்தர்கள், காற்றில் அலைந்து நம் காதுகளை நிரப்பும் குர்பானி, – பொற்கோயிலின் சூழல் நம் மனதை இலேசாக்கி நெகிழ்வு நிலையை நோக்கிச் செல்ல வைக்கிறது.
ஹர்மந்திர் சாஹிப்பின் இரண்டாம் மட்டத்திலும் மூன்றாம் மட்டத்திலும் பக்தர்கள் அமைதியாக குர்பானியை கேட்டுக்கொண்டோ அல்லது குரு கிரந்த் சாஹிப்பின் சில பகுதிகளை வாசித்துக் கொண்டோ அமர்ந்திருக்கிறார்கள். ஹர்மந்திர் சாஹிப்புக்கு வெளியே பிரசாதம் தரப்படுகிறது. பிரசாதத்தின் இனிப்பு அனுபவத்தின் இனிப்புடன் ஒன்று சேர்கிறது.
ஹர்மந்திர் சாஹிப்புக்கு நேர் எதிராக வரலாற்று முக்கியத்துவமிக்க அகால் தக்த் இருக்கிறது. அங்கும் பக்தர்கள் குரு கிரந்த் சாஹிப்பை வாசித்தவாறு உட்கார்ந்திருக்கிறார்கள். அகால் தக்த் என்றால் ‘காலமில்லா அரியணை’ என்று பொருள். அகால் தக்த் சீக்கிய மதத்தின் மிக உயர்ந்த சமய அதிகார பீடம். சீக்கிய மதத்தின் பத்தாவது குரு – குரு கோபிந்த் சிங் – அகால் தக்தை தோற்றுவித்தார். குரு கோபிந்த் சிங்குடன் 10 குருக்களின் வரிசை முற்றுப் பெறுகிறது. இதற்குப் பின் சீக்கிய மதத்தை வழி நடத்துபவையாக – குரு கிரந்த் சாஹிப்பும், அகால் தக்த்தும், சீக்கிய புண்ணியத்தலங்களும் – இருக்கின்றன.
குளத்திற்கருகே பல நிமிடங்கள் நின்று கொண்டிருந்தேன். புஷ்டியான ஆரஞ்சு நிற மீன்கள் கரைக்கருகே வாய்களை திறந்தவாறு நீந்திக்கொண்டிருந்தன. அக்குளத்தின் நீரைக் கைகளில் பிடித்து சிறிது அருந்தி, தலையில் தெளித்துக் கொண்டேன். நிஷான் சாஹிப் வாசலுக்கருகே விரிக்கப்பட்டிருந்த கம்பளத்தில் சிறிது நேரம் இளைப்பாறினேன்.
சீக்கிய நூலகம் எங்கிருக்கிறது என்று யாத்திரிகர் ஒருவரிடம் கேட்டேன்.
“இன்று ஞாயிற்றுக்கிழமை; நூலகம் திறந்திருக்காது” என்று சொன்னார். நுழைவு வாயிலுக்கு மேல் சீக்கிய அருங்காட்சியகம் இருந்தது. சீக்கியர்களின் வரலாற்றை ஓவியங்கள் வாயிலாக சித்தரித்திருந்தார்கள். பல அரிய தகவல்கள் அறியக் கிடைத்தன.
செருப்பணிவதற்காக போடப்பட்டிருந்த இருக்கையில் அமர்ந்தபோது பக்கத்தில் உட்கார்ந்திருந்த சீக்கியர் ஒருவர் “எங்கிருந்து வருகிறீர்கள்?” என்று கேட்டார். அவரிடம் சில நிமிடங்கள் பேசிக்கொண்டிருந்தேன். மஹாராஷ்டிராவில் உள்ள நந்தேத் நகரிலிருந்து வந்திருக்கிறார்.
(நந்தேத் குரு கோபிந்த் சிங் அமரரான தலம்; புகழ்பெற்ற அஸூர் சாஹிபு குருத்வாரா அங்கு இருக்கிறது.) என்னைப் போலவே அவருக்கும் அம்ரித்சர் வருவது இது தான் முதல்முறை, சீக்கியராக இருந்தாலும் இதற்கு முன் ஹர்மந்திர் சாஹிப் வர சந்தர்ப்பம் அமையவில்லையாம். ‘எனக்கும் தான்’ என்றேன். தன் டர்பனைக் காட்டி “இதை அணிந்தவன் இவ்வளவு காலம் கழித்து வருவது சரியில்லைதானே!” என்று சொல்லி முறுவலித்தார். “நீங்கள் டர்பன் அணிந்திருக்கிறீர்கள் நான் அணிந்திருக்கவில்லை.. அது ஒன்றைத் தவிர வேறு என்ன வித்தியாசம்” என்றேன்.
கணேஷ் வெங்கட்ராமன் - http://hemgan.wordpress.com/
முக்கிய செய்திகள்
வலைஞர் பக்கம்
13 hours ago
வலைஞர் பக்கம்
1 day ago
வலைஞர் பக்கம்
4 days ago
வலைஞர் பக்கம்
5 days ago
வலைஞர் பக்கம்
6 days ago
வலைஞர் பக்கம்
7 days ago
வலைஞர் பக்கம்
9 days ago
வலைஞர் பக்கம்
9 days ago
வலைஞர் பக்கம்
12 days ago
வலைஞர் பக்கம்
19 days ago
வலைஞர் பக்கம்
21 days ago
வலைஞர் பக்கம்
22 days ago
வலைஞர் பக்கம்
24 days ago
வலைஞர் பக்கம்
24 days ago
வலைஞர் பக்கம்
25 days ago