சிரிப்புகளும் சிந்தனைகளுமாய் 2008-ல் தங்களுடன் இன்னும் சில சந்திப்புகளுக்கு வாய்ப்பு கிடைத்தது. சினிமா, அரசியல், இலக்கியம் என்று உங்களின் மாறுபட்ட பார்வைகள் பலவற்றை அறிந்தபோது, மிகுந்த வியப்புற்றேன். பெரும்பாலான உரையாடல்கள் ஆன்மீகத் தில்தான் முடிந்தன.
‘மூடநம்பிக்கை’ என்று நீங்கள் கூறிய பல சாஸ்திர, சம்பிரதாயங்களின் பின்னால் இருக்கும் - எனக்குத் தெரிந்த ‘லாஜிக்’கை நான் சொன்னபோது, பொறுமையோடு நீங்கள் செவிமடுத்தீர்கள். தாங்கள் கொட நாடு போவதற்கு முன்பாக, நான் எழுதிய ‘காலச்சக்கரம்’ மற்றும் ‘ரங்கராட்டினம்’ ஆகிய நாவல்களைத் தங்களிடம் அளித்தேன். புத்தகங்களை வாங்கி பார்த்த நீங்கள், இவையெல்லாம் எங்கே எப்போது வெளி யிடப்பட்டது என வினவினீர்கள்.
2007 நவம்பர் மாதத்தில் கவிஞர் வாலியின் கரங்களால் வெளியிடப்பட்டதையும், கனிமொழி முதல் பிரதியைப் பெற்றுக் கொண்டதையும் சொன்னேன். ‘கனிமொழி’ பெயரைச் சொல்லியிருக்க வேண்டாமோ என்றெண்ணி உங்கள் முகத்தைப் பார்த்தபோது, இம்மியும் முக பாவம் மாறாமல், புன்சிரிப்பு மறையாமல்தான் இருந்தீர்கள். ‘கொடநாடு செல்லும்போது, ஓய்வுநேரத்தில் படிக்கிறேன்’ என்று புத்த கங்களை எடுத்துக்கொண்டீர்கள்.
2009-ம் ஆண்டு பிறந்தது... பிறக்கும் போதே நாடாளுமன்றத் தேர்தல் களமும் சூடு பிடித்தது. ஆறு மாத காலம் அரசியல் மும்முரத்தில் இருந்தீர்கள். அவ்வப்போது மின்னஞ்சல் மூலம் சில கருத்துக்களை உரிமையோடு உங்களுக்கு அனுப்பியதுடன் சரி. 2006 சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் போலவே, 2009 நாடாளுமன்ற தேர்தல் முடிவுகளும் உங்களுக்கு சாதகம் இல்லை. பத்தே இடங்கள் உங்களுக்கு! தோல்வியில் இருந்து மீண்டு, வெல்வதற்கான வியூகம் வகுக்கும் தீவிர சிந்தனையோ என்னவோ, வெளி உலகத் தொடர்புகளை நிறுத்திக் கொண்டீர்கள்.
செப்டம்பர் 2, 2009, புதன்கிழமை!
அன்று பொதுநிகழ்வு ஒன்றில் பங்கேற்கச் சென்று, நாட்டு நடப்புகள் எதையும் கவனிக்காமல் இருந்துவிட்டேன். இரவு வீடு திரும்பும்போது மணி ஒன்பதரை இருக்கும். நான் வந்து சேர்ந்து சில நிமிடங்கள் கூட ஆகி இருக்காது. வீட்டு வாசலில் ஒரு கார் வந்து நின்றது. போயஸ் கார்டனிலிருந்து வந்திருப்பதாகச் சொல்லி, அந்தக் காரில் இருந்த கார்த்திகேயன் என்கிற உங்கள் உதவியாளர், ‘‘சார்... கொஞ்சம் வாருங்கள். உடனே வண்டியில் ஏறுங்கள்.!’’ என்று கதவைத் திறந்தபடி நின்றார். ஆர்வ உந்துதலில் ஏதும் கேட்காமல் நான் வண்டியில் ஏறினேன். என் வீட்டருகே இருந்த ஒரு ஒதுக்குபுறமான இடத்தில் காரை நிறுத்தச் சொல்லி, தன் கைபேசியினை இயக்கினார் கார்த்திகேயன்.
எதிர்முனையில் குரல் ஒலித்ததும், ‘‘அம்மா... சார் இங்கே பக்கத்தில்தான் இருக்கிறார்’’ என்று உதவியாளர் கூற, ''கொடுங்க..!'' என்று சன்னமாக எனக்கும் கேட்டது உங்கள் குரல்!
வாங்கி, ‘‘குட் ஈவினிங் மேடம்! ’’ என்றேன்.
''நரசிம்மன்..! நீங்கள் கூறியதுபோல் ஒரு சோகமான சம்பவம் நடந்து விட்டதே... என் மீது நீங்கள் காட்டிய அக்கறைக்கு நன்றி. விரைவில் நேரில் சந்திப்போம். குட் நைட்!'' என்றீர்கள். என்னவென்றே புரியாமல், வேறு கேள்வியும் கேட்கத் தோன்றாமல், ‘‘உங்களை சந்திக்க மறுபடி வாய்ப்பு கிடைத்தால் சந்தோஷம், மேடம்!’’ என்று நான் சொன்னதுமே இணைப்பு துண்டிக்கப்பட்டது.
‘‘அம்மா யாருடனும் போனில் பேசுவது ரொம்ப அபூர்வம், சார்!’’ என்று சொல்லும் போது உதவியாளர் முகத்திலும் பெரும் வியப்பு. என்னை வீட்டில் இறக்கி விட்டுப் போய்விட்டார். பிறகுதான், எனக்குத் தெரிந்தது... அன்று பகலில் நிகழ்ந்த ஹெலிகாப்டர் விபத்தில் ஆந்திர முதல்வர் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி கோர மரணம் அடைந்துவிட்டார் என்று.
சொன்னபடியே மறுபடியும் சந்திக்க வாய்ப்பு கொடுத்த நீங்கள், 2008 பிப்ரவரியில் நான் விடுத்த எச்சரிக்கை, 2009 முடிவதற்குள் பெரும் சோகமாக நடந்தேறியது குறித்து மிகவும் ஆச்சரியப்பட்டீர்கள்.
‘‘நரசிம்மன்... இது எப்படி சாத்தியம்? இப்படி நடக்கக் கூடும் என்று எதை வைத்து யூகித்தீர்கள்...?’’ என்று கேட்டீர்கள்.
‘‘கிரக நிலைகள் அப்படிக் காட்டியது, மேடம். அதோடும் சேர்த்து ஒருவகை உணர்தலும் எனக்கு அந்த எண்ணத்தை உறுதி செய்தது’’ என்று கூறி, 2004-ல் சுனாமி பேரழிவு சமயத்தில் நான் கண்ட ஒரு காட்சியைச் சொன்னேன்.
சுனாமி வருவதற்கு முந்தைய இரவு... அலுவலக பணி முடிந்து வீடு சென்று கொண்டிருந்தேன். மணி நள்ளிரவு ஒன்றரை. சுமார் முப்பது-நாற்பது தெருநாய்கள் கலங்கரை விளக்கம் பகுதியிலிருந்து ஊளையிட்டுக் குரைத்தபடி கடலுக்கு எதிர் திசையில் சாலையைக் கடந்து கூட்டமாக ஓடிக் கொண்டிருந்தன.
‘‘மறுநாள், சுனாமியில் கடலோரம் இருந்த மனிதர்கள் மட்டுமே மாண்டனர். தெரு நாய்கள் தப்பித்தன. அவற்றின் உணரும் ஆற்றலே உயிரை காத்தது. அதுபோல இதுவும் இருக்கலாம், மேடம்’’ என்றேன்.
நீங்கள் அமைதியாகக் கேட்டபடி அமர்ந்தி ருந்தீர்கள். அதோடு நான் நிற்கவில்லை.
‘‘மேடம்! 2006-ம் வருட சட்டமன்றத் தேர்தலில் நீங்கள் ஆட்சிக்கு வரமுடியாதபோது என்ன நினைத்தீர்களோ, தெரியாது. ஆனால், வென்றிருந்தால் இப்போது நீங்கள் முதல்வராக இருந்திருப்பீர்கள். தென்னகத்து முதல்வர்களில் ஒருவரான ராஜசேகர ரெட்டி விமான விபத்தில் காலமாகி இருக்கிறார். அவர் வயது 60. அன்று திருச்சிக்கு விமானத்தில் நீங்கள் செல்ல இருந்தபோது உங்களுக்கும் வயது 60. 2006-ல் வென்றிருந்தால் முதல்வராகத்தானே பறந்திருப்பீர்கள்?” என்று சொல்லிவிட்டு... ‘‘மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு என்பதை இப்படிக்கூட பார்க்கலாம் போலிருக்கிறது, மேடம்!’’ என்றேன்.
வழக்கமான புன்னகையுடன், ''I am convinced!’’ என்று மட்டும் சொன்ன நீங்கள், ‘‘எனக்கும் சில நம்பிக்கைகள் இருக்கிறது... வரும் ஞாயிற்றுக்கிழமை மறுபடி வாருங்கள். என் பூஜையறையை நீங்கள் பார்க்க வேண்டும்’’ என்று கூறினீர்கள்.
ஞாயிற்றுக்கிழமை அதிகாலையே கார்டனிலிருந்து வண்டி வரும் என்று உங்கள் உதவியாளர் சொன்னார். அதன்படியே நானும் தயாராகக் காத்திருந்து, வண்டியில் ஏறி, வந்து சேர்ந்தேன். அன்று நீங்கள் மாம்பழ நிற பட்டு சேலை அணிந்திருந்தீர்கள். உங்கள் தாயின் நினைவு வரும்போதெல்லாம் அந்த சேலையைத்தான் அணிவதாக பிறகு நீங்கள் சொல்லி நான் தெரிந்து கொண்டேன்.
நெற்றியில் செந்தூரக் கோடு பளிச்சிட்டது. அது ஆஞ்சநேயரின் செந்தூரக் கலவை என்றீர்கள். ஹாலைக் கடந்து பூஜை அறையில் நுழைந்ததும், ஒளிர்ந்த கடவுளர் மற்றும் உங்கள் மூதாதையர் படங்களுக்கு நடுவே தனிப்பட்டுத் தெரிந்த அந்த ஒரு படத்தைப் பார்த்து... புதிராக நான் நின்றுவிட்டேன்...
- தொடர்வேன்...
தொடர்புக்கு: narasimhan.ta@thehindu.co.in
முக்கிய செய்திகள்
வலைஞர் பக்கம்
9 days ago
வலைஞர் பக்கம்
9 days ago
வலைஞர் பக்கம்
14 days ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago