ஞாயிற்றுக்கிழமை பாரதி விழா. சனிக்கிழமை வருவதாக ஜெயகாந்தன் சொல்லி யிருந்தார். வியாழக்கிழமை இரவு பூராவும் வையவனும் நானும் விழாவுக்கான சுவரொட்டிகளை ஒட்டினோம். விடியும் நேரம் நெருங்கியபோது, நாலு மணி அளவில், ‘‘சரிப்பா… போய்த் தூங்க லாம். நல்லா காலை 10 மணி வரைக்கும் தூங்குவோம். நான் பத்தரை மணிக்கு மேல வர்றேன்!’’ என்று வையவன் விடைபெற்றுச் சென்றார். நானும் வீட்டுக்குப் போய்ப் படுத்து அயர்ந்துத் தூங்க ஆரம்பித்தேன்.
அதிகாலை ஆறே கால் மணிக்கெல்லாம், வையவன் கூப்பிடுவதாக அம்மா வந்து எழுப்பினார். எனக்குத் தூக்கக் கலக்கமும் குழப்பமும்!
‘பத்தரை மணிக்குத்தானே வருவதாகச் சொன்னார்? இவ்வளவு சீக்கிரம் வந்து எதற்கு எழுப்புகிறார்?’ என்று கண்ணைக் கசக்கியவாறே தெருவாசலை எட்டிப் பார்க்கப் போனேன். எங்கள் உள் வீட்டுக்கும், தெரு வாயிற்படிக்கும் இடையில் அறுபதடி நீளம் மூன்றரை அடி அகலத்துக்குச் சந்து போல இருக்கும்.
அங்கே போய்ப் பார்த்தபோது ஏற்பட்ட ஆச்சரியத்தில் தூக்கமும் சோர்வும் பளிச்சென அகன்றன. தெரு வாயிற்படியின் நாலடி சதுரக் கடைசிக் கல்லின் மீது வையவனோடு ஜெயகாந்தன் நின்றிருந்தார். சனிக்கிழமை வருவதாகச் சொல்லியிருந்தவர் வெள்ளிக்கிழமை அதிகாலையிலேயே வந்து நிற்கிறாரே!
ஓடிப் போய், வணக்கம் சொல்லி, ‘‘வாங்க… வாங்க…’’ என்று வரவேற்றேன்.
திருப்பத்தூர் வருகிற ஒரு பாசஞ்சர் ரயிலில் பிரயாணப்பட்டு வந்து, பொழுது நன்கு விடியும் முன் வெள்ளவாய்க்கால் தெருவிலிருந்த வையவன் வீட்டுக்கு வழி விசாரித்துக்கொண்டுச் சென்றிருக்கிறார். அங்கிருந்து எங்கள் வீட்டுக்கு வந்திருக்கிறார்கள்.
இப்படி முன்கூட்டி வருவார் என்பதை நாங்கள் சிறிதும் எதிர்பார்க்கவில்லை. இதில் எங்கள் ஆச்சரியத்தைவிட சந்தோஷமே அதிகமாக இருந்தது. சொன்னதற்கு ஒருநாள் முன்னதாகவே நிகழ்ந்த அந்த வருகை, ஒரு மாபெரும் பரிசுப் பொருளை மறைமுகமாகக் கொண்டுவந்ததைப் போன்ற சங்கேதத்தைக் கொண்டிருந்தது.
சென்னையில் பார்த்துவிட்டு வந்து சில நாட்கள் பிரிவுக்குப் பின்பு, மறுபடியும் அவரைக் கண்களால் காண்பதென்பது நெடுநாள் பிரிவும், அதன்பின் உறவும் கொண்ட ஒருமித்த உணர்ச்சிகளை உண்டாக்கின.
அப்புறம், எங்கள் தெருவுக்கும் வீட்டுக்கும் அருகேயிருந்த எல்லாருக்கும் அறிமுகமாகியிருந்த, அந்தக் கால நண்பர் ஒருவரின் அறையில் கொண்டுபோய், தரையில் விரித்த பாயில் அவரை உட்காரவைத்தோம். அந்த அறை நண்பர், ஒரு பிரம்மச்சாரி என்பதுதான் அங்கேயிருந்த பெரும்சவுகரியம். ஆனால், அவர் நேருவை வெறுக்கும் லோகியாவின் சீடர். அதுதான் அங்கிருந்த அசவுகரியம். நண்பர்களுக்குத் தகவல் பறந்தது ஒவ்வொருவராக வந்து குழுமினர்.
அவர்கள் ஒவ்வொருவரைப் பற்றியும் இப்போது நான் விவரமாகச் சொல்ல முற்படவில்லை. பின்னால் வரும் அத்தியா யங்களில் தகுந்த இடங்களில் அவர்களை அறிமுகம் செய்கிறேன். இப்போது அவர்களை, ஒரு சிறுநகரின், இலக்கியம் மற்றும் மாறுபட்ட அரசியல் கருத்துகளில் ஆர்வம்கொண்டு, ஆனாலும் இணக்கமாக இயங்கும் ஒரு சிறு குழு என்று பொதுவாகப் புரிந்துகொள்ளலாம்.
அவர்கள் எல்லாருமே ஜெயகாந்தனை நேரடியாக இப்போதுதான் சந்திக்கிறார்கள். ‘சரஸ்வதி’ பத்திரிகையில் வந்த கதைகள் எல்லாம் ஜெயகாந்தனை, ஓர் அதிசயப் பிறவி போலவே பார்க்க வைத்தன. அதே நேரத்தில், அனுபவமின்மையால், அவரிடம் எப்படி பேசுவது, என்ன விசாரிப்பது, என்னவெல்லாம் கேட்பது என்று தெரியாமல் சில அசட்டுத்தனமான கேள்விகளைக் கேட்பவர்களாகவும் இருந்தார்கள்.
கேள்விகளுக்கு அவர் பதிலளித்தவிதம் பென்சில் சீவுவது போல் இருந்தது. கம்யூனிஸ்ட் கட்சி பிளவுபடாத காலம் அது. கேரளாவில் முதல் கம்யூனிஸ்ட் ஆட்சியை நேரு கலைத்துவிட்ட பாவத் தைத் தோழர்கள் எல்லாரும் வெளியில் பேசிக் கொண்டிருந்த காலம். எங்கள் எல்லோரிலும் மூத்தவரும், உள்ளூர் கம்யூனிஸ்ட்மான தோழர் கிருஷ்ணசாமி, (எங்களில் அவரைத் தவிர வேறு யாரும் கம்யூனிஸ்ட் கட்சியில் அப்போது உறுப்பினர்களாக இல்லை) அவர் கேரளாவைப் பற்றிப் பிரஸ்தாபித்து அங்கலாய்த்தார். கம்யூனிஸ்ட்களுக்கே, ‘தாங்கள் டிஸ்மிஸ் செய்யப்படுவதே நல்லது ’ என்று உள்ளூர ஒரு கருத்து இருந்த உண்மை நிலவரத்தை ஜெயகாந்தன் அவருக்கு எடுத்து ஓதிப் பதிலளித்தார்.
தமிழாசிரியர் ஒருவர் வந்து, பிறமொழிச் சொற்களைக் கலந்து எழுதுவது பற்றியும், தனித்தமிழ் பற்றியும் ஜெயகாந்தனிடத்தில் பிரஸ்தாபித்தார். இவ்வாறான போக்குக ளுக்கு எதிரான கருத்து நிலைகள் எங்களுக்கு ஏற்கெனவே ஏற்பட்டுயிருந்தன. எனவே, இத்தகையோரின் கேள்விகளுக்கு ஜெயகாந்தன் அளித்த விளக்கமான பதில்கள் எங்களால் ஆர்வமாகக் கவனிக்கப்பட்டன.
‘‘ஜோஸப் சைக்கிளில் போனான், டியூப் பஞ்சராகிவிட்டது என்பதையெல்லாம் எப்படி தனித்தமிழில் எழுதுவீர்கள்’’ என்று ஜெயகாந்தன் அந்தத் தமிழாசிரியரை கேட்டபோதும், ‘குடிக்கிற காபியை கொட்டை வடிநீர்’ என்றும் ‘கட்டுகிற டையை கழுத்துக் கோவணம்’ என்றும் குறிப்பிடுவதை அவர் கிண்டலடித்தபோதும், நாங்கள் அடக்க முடியாமல் சிரித்தோம்.
குதர்க்கமான கேள்விகளுக்கு அவரது கோபமான எதிர்வினைகள், அவ்வாறான வர்களை வாயடைக்க வைத்தது. காலை உணவாகவும் மதிய உணவாகவும் அவருக்கு என்னென்ன வழங்கினோம், எவ்வாறு உபசரித்தோம் என்பதெல்லாம் ஞாபகத்தில் இல்லை.
ஆனால், ஆடம்பரத்தை விரும்புதல், உபசாரத்தில் குறை காணுதல் முதலிய இடைஞ்சலான பண்புகள் எதுவும் அவரிடம் அறவே இல்லை என்பதை அவர் வந்த முதல் நாளிலேயே அவர் நிரூபித்துவிட்டார். சொல்லப் போனால், அதீதமாக உபசரிப்பதைத்தான் அவர் ஒரு தொல்லையாகக் கருதினார்.
ஒரு சிறிய அறையிலேயே நாள் முழுக்கவும் இரவு பூராவும் அடைப்பட்டி ருக்க வேண்டாம் என்று, நாங்கள்தான் அன்று மாலையில் அவரை ஒரு குதிரை வண்டியில் ஏற்றி, திருப்பத்தூரில் இருந்து இரண்டு கிலோ மீட்டருக்கும் அருகில் இருந்த வெங்களாபுரம் என்கிற கிராமத்துக்கு அழைத்துச் சென்றோம்.
அந்த ஊரில், எங்கள் நண்பர்களில் ஒருவரான மாணிக்கம் இருந்தார். அவர் அப்போது ஓர் ஆரம்பப் பள்ளியின் தலைமையாசிரியர். ‘எழுத்து’ பத்திரிகைக்கு எங்கள் ஊரில் சந்தா கட்டிய முதல் நபர் அவர்தான். ஆனந்த விகடனில் ‘இராமா’ என்கிற புனைப்பெயரில் ஒரு கதைகூட அவர் எழுதியுள்ளார். பிற்காலத்தில், திருப்பத்தூரில் பிரபலமானதும் வெற்றிகரமானதுமான பல வியாபார நிறுவனங்களை நடத்துபவராகத் திகழ்ந்தவர் அவர்.
பல சகோதரர்களைக் கொண்ட பெரிய கூட்டுக் குடும்பம் அது. ஒரு மிகப் பெரிய வாசலில், ஓர் ஓரமாக, நண்பர் மாணிக்கத்தின் படிப்பதற்கான தனியறை இருந்தது. குயவர் ஓடுகளால் வேயப்பட்ட கூரை கொண்டது அது. அங்கே தங்கியிருப்பதென்பது சுகமாக இருந்தது.
அந்த வாணிப சமூகத்தின் வீட்டு விருந்தில், சுத்தமான எள்ளெண்ணெய்யின் ஆட்சி நிலவியது. மாணிக்கத்தின் வயது முதிர்ந்த தாயார் பார்த்துப் பார்த்து உபசரிக்க, நாங்கள் பெரியபெரிய வாழை யிலைகளில் உணவருந்தினோம்.ஜெயகாந்தனுக்குப் பாந்தமாக இருப்பிடம், உணவு, படுக்கை, நண்பர்க ளோடு அளவளாவும் தனிமை என்கிற அனைத்தும் அவரது திருப்பத்தூர் விஜயத்தின் முதல் நாளில் மிகவும் திருப்தி கரமாக அமைந்துவிட்டன.
அதற்காக, சமீபத்தில் காலஞ்சென்ற மாணிக்கம் அவர்களுக்கு நாங்கள் இன்றளவும் நன்றி தெரிவித்துக் கொண்டி ருக்கிறோம். அவர் அன்றைக்கு ஒரு சடையனின் சாயல் கொண்டிருந்தார்.
- வாழ்வோம்…
எண்ணங்களைப் பகிர்ந்துகொள்ள: pisakuppusamy1943@gmail.com
முக்கிய செய்திகள்
வலைஞர் பக்கம்
2 days ago
வலைஞர் பக்கம்
2 days ago
வலைஞர் பக்கம்
4 days ago
வலைஞர் பக்கம்
11 days ago
வலைஞர் பக்கம்
13 days ago
வலைஞர் பக்கம்
14 days ago
வலைஞர் பக்கம்
16 days ago
வலைஞர் பக்கம்
17 days ago
வலைஞர் பக்கம்
17 days ago
வலைஞர் பக்கம்
21 days ago
வலைஞர் பக்கம்
24 days ago
வலைஞர் பக்கம்
25 days ago
வலைஞர் பக்கம்
27 days ago
வலைஞர் பக்கம்
28 days ago
வலைஞர் பக்கம்
1 month ago