மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலுக்கு வெளியே ஒரு காட்சி. கையில் பூண்போட்ட சிறு கழியுடன் குறி சொல்லிக்கொண்டிருந்தார் ஒரு பெண்மணி. வழக்கமான காட்சிதானே என்று கடந்து போக முடியவில்லை. அந்தப் பெண்ணுக்கு முன்னால் குத்துக்காலிட்டு உட்கார்ந்து கை நீட்டிக் குறி கேட்டுக்கொண்டிருந்தவர் ஒரு வெள்ளைக்காரர். பக்கத்தில் இருந்த ‘கைடு’ அந்தப் பெண்மணியின் சோதிடப் பாடலை மொழிபெயர்க்கத் திணறிக்கொண்டிருந்தார்.
“அந்த அங்காள பரமேஸ்வரிதான் உன்னை இங்கே கொண்டாந்து சேர்த்திருக்கா பூவாடைக்காரி உன் தோமெல்லாம் போக்கிடுவா...”
அழுத்தம் திருத்தமாக அனாயசமாகப் புறப் பட்டு வந்தது குறிசொல்லும் அருள்வாக்கு.
“சூழ்ச்சியாலும் பொறாமையாலும் சுக துக்கங்களாலும் சூழப்படாத மனிதன் இந்த உலகத்தில் எங்கேயாவது இருக்கிறானா?
இதுவரை நீ பட்ட கஷ்டமெல்லாம் வர்ற மாசியோட போயிடும்டா மவனேன்னு சொல்றா மகமாயி” என்று கூறி செக்கச் சிவந்த உள்ளங்கையில் உள்ள ரேகைகளின் மீது தன் குறிசொல்லும் குச்சியால் ஒரு கோடு இழுத்தார். வெள்ளைக்காரர் விழுந்து விழுந்து சிரித்தார். ஒரு முழு நூறு ரூபாயை எடுத்து நீட்டினார்.
அந்தப் பெண் சந்தோஷமாக அதை வாங் கிக்கொண்டு நெற்றியில் கை வைத்து சடசட வென்று நெட்டி முறித்தாரே பார்க்கலாம்.
வெள்ளைக்காரர் என்னைப் பார்த்து புன்னகைத்தார். நான் சங்கோஜத்துடன் அவரைக் கேட்டேன்.
“நீங்கள் இவர் சொன்ன சோதிடத்தை நம்புகிறீர்களா?”
“நம்பவில்லை, ரசிக்கிறேன்” என்று சொல்லிவிட்டு நகர்ந்தார்.
இதே கேள்வியை பல வருடங்களுக்கு முன் நடிகை பானுமதியிடம் கேட்டேன். “உங்களுக்கு சோதிடம் கைரேகை இதிலெல்லாம் நம்பிக்கை இருக்கிறதா?”
பானுமதியின் வாழ்க்கை வரலாற்றை அவர் சொல்லச் சொல்ல ஒரு வாரப் பத்திரிக் கையில் எழுதிக்கொண்டிருந்த காலம் அது.
உள்ளே வாருங்கள் என்று அழைத்துப் போனார். அவர் பீரோ நிறைய சேகரித்து வைத்திருந்த சோதிடம் தொடர் பான கிரந்தங்களையும் புத்தகங்களையும் கைரேகை ஆராய்ச்சி சம்பந்தப்பட்ட நூல் களையும் காண்பித்தார். பழஞ்சுவடிகளையும் அங்கே பார்த்ததாக நினைவு.
“ஸ்ரீசிவலிங்கவீரேசலிங்கம் என்ற சித்த புருஷரின் சிஷ்யை நான். அவரிடம் தான் சோதிடம், கைரேகை எல்லாம் கற்றுக்கொண்டேன். எம்.ஜி.ஆரின் கைரேகையை அந்தக் காலத்திலேயே பார்த்து ஆருடம் சொல்லி இருக்கிறேன் தெரியுமோ?” என்றார்.
“அப்படியா?” என்றேன்.
“ஆமாம் அப்போது நான் தமிழில் மட்டுமின்றி தெலுங்கு, இந்தியில்கூட பிரபல மாகியிருந்தேன். ‘மலைக்கள்ளன்’ படப் பிடிப்பில் எனக்கு எம்.ஜி.ராமச்சந்திரனைப் புதுமுகம் என்று சொல்லி அறிமுகப்படுத்தி வைத்தார்கள். அவர் முகத்தில் ஒரு காந்த சக்தி இருந்ததைக் கவனித்தேன். நடை உடை பாவனைகளில் நாகரிகம் தெரிந்தது. மரியாதையாக என்னை அம்மா என்று குறிப்பிடுவார். பானுமதி என்று சொல்ல மாட்டார்” என்றார் பானுமதி.
அடுத்து சொன்னதுதான் இன்னும் சுவாரஸ்யம்.
“நான் படப்பிடிப்பு இடைவேளையின்போது ‘மிஸ்டர் ராமச்சந்திரன் உங்கள் கையைக் காட்டுங்கள் எனக்குக் கொஞ்சம் கைரேகை ஜோதிடம் தெரியும்’ என்றேன். அவர் கூச்சத்துடன் ‘வேண்டாம் அம்மா எனக்கு இதில் எல்லாம் நம்பிக்கை கிடையாது’ என்றார். சுற்றி இருந்தவர்கள் வற்புறுத்தலால் கையைக் காண்பித்தார். பார்த்த உடனே சொல்லி விட்டேன். ‘மிஸ்டர் ராமச்சந்திரன் நீங்கள் பிற்காலத்தில் பேரும் புகழும் பெறப் போகிறீர்கள். இந்த உலகமே கொண்டாடப்போகும் உன்னத ஸ்தானத்தை அடைவீர்கள். ஆனால் சினிமாவால் அல்ல’. எல்லோரும் கைதட்டினார்கள். அவர் கைகூப்பி வணங்கி, ‘நன்றி அம்மா’ என்றார் புன்னகையுடன். அவரையே யோசனையோடு பார்த்துக்கொண்டிருந்தேன். பின்னர் இந்தச் சம்பவத்தை மறந்துவிட்டேன்.
பல வருடங்கள் கழித்து எம்.ஜி.ஆர். என்ற மந்திரச் சொல்லுக்குக் கட்டுண்டு தமிழக மக்கள் அவரை ஆட்சிக் கட்டிலில் அமர்த்தியபோது கலைத் துறையினர் சார்பாகச் சென்னையில் பிரம்மாண்டமான பாராட்டுக் கூட்டம் நடந்தது. நான் மேடைக்குக் கீழே முன்வரிசையில் அமர்ந்திருந்தேன். உரையாற்றிக்கொண்டிருந்த எம்.ஜி.ஆர். அங்கிருந்து என்னைப் பார்த்துவிட்டு, ‘இந்த நிலைக்கு நான் வருவேன் என்று நானே எதிர்பார்க்காத காலத்தில், அன்றே என் கைரேகையைப் பார்த்து பானுமதி அம்மையார் கணித்துச் சொன்னார். அவரது ஆருடம் பலித்துவிட்டது’ என்றார்” என்று புன்னகையுடன் முடித்தார் பானுமதி. அரங்கத்தில் கைத்தட்டல் அடங்க வெகு நேரம் ஆயிற்றாம்.
பானுமதி அம்மையாரின் ஆருடத்தில் எனக்குள் ஒரு நெருடல். எம்.ஜி.ஆர். திரைத் துறையில் பெரும்புகழ் பெற்ற பின்தான் அரசியலுக்கு வந்தார். அவரது மக்கள் செல்வாக்குக்குத் திரைப்படப் புகழும் காரணம் என்பதை மறுக்க முடியாது.
எழுதுவதை நிறுத்திவிட்டு அவரை நிமிர்ந்து பார்த்தேன். பானுமதி அம்மையார் தியானம் செய்வதுபோல் கண்ணை மூடிக்கொண்டிருந்தார். ஆடும் நாற்காலி முன்னே வருவதும் பின்னே போவதுமாக இருந்தது.
- தஞ்சாவூர்க் கவிராயர், தொடர்புக்கு: thanjavurkavirayar@gmail.com
முக்கிய செய்திகள்
வலைஞர் பக்கம்
8 days ago
வலைஞர் பக்கம்
8 days ago
வலைஞர் பக்கம்
13 days ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago