ஹரி அவுத் 10

By ராஜலட்சுமி சிவலிங்கம்

இந்தி இலக்கியப் படைப்பாளி

இந்தி இலக்கியப் படைப்பாளியான அயோத்யாசிங் உபாத்யாய் ‘ஹரி அவுத்’ (Ayodhya Singh Upadhyay ‘Hari Oudh’) பிறந்த தினம் இன்று (ஏப்ரல் 15). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

* உத்தரப் பிரதேச மாநிலம் நிஜாமாபாத் நகரில் (1865) பிறந்தார். தந்தை பண்டிதர். சொந்த ஊரிலேயே கல்வி பயின்றார். 5 வயதாக இருந்தபோதே மாமாவிடம் பாரசீகம் கற்கத் தொடங்கினார். பள்ளிப் படிப்புக்குப் பிறகு காசி குயீன்ஸ் கல்லூரியில் ஆங்கிலம் கற்றார்.

* உடல்நலம் சரியில்லாததால் கல்லூரிப் படிப்பு பாதியில் நின்றது. வீட்டிலேயே சமஸ்கிருதம், உருது, பாரசீகம், ஆங்கிலம் கற்றார். நிஜாமாபாத்தில் இருந்த நடுநிலைப் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றினார். பின்னர், அரசு வேலை கிடைத்தது. பல மொழிகளில் தேர்ச்சி பெற்ற இவருக்கு இயல்பாகவே இலக்கியத்தில் ஆர்வம் இருந்தது.

* எழுதும் ஆர்வமும் சிறு வயது முதலே இருந்தது. முதலில் கவிதைகள் எழுதத் தொடங்கினார். ‘கடிபோலி’ மொழியின் தலைசிறந்த படைப்பாளிகளில் ஒருவராகப் போற்றப்பட்டார். இவர் இயற்றிய ‘சோகே சௌபதே’ இம்மொழியின் முதல் மகாகாவியம்.

* அடுத்து வெளிவந்த இவரது ‘ப்ரிய ப்ரவாஸ்’ இவருக்கு இலக்கிய உலகில் பெயரையும் புகழையும் பெற்றுத்தந்தது. ‘வைதேஹி வனவாஸ்’ இவரது குறிப்பிடத்தக்க காவியங்களில் ஒன்று. வ்ரஜபாஷாவில் இவர் படைத்த காவியத் தொகுப்பு ‘ரஸ்கலஷ்’ மிகவும் பிரபலமடைந்தது. இதில் இவரது ஆரம்பகாலக் கவிதைகளும் இடம்பெற்றிருந்தன.

* கதை, கவிதை, காவியம், நாடகம் விமர்சன நூல்கள், குழந்தை இலக்கியம் என இலக்கியத்தின் பல களங்களில் முத்திரை பதித்தாலும், கவிஞராகவே பிரபலமடைந்தார். இந்திக் கவிதையின் வளர்ச்சிக்கு முக்கியப் பங்காற்றினார். இந்தி இலக்கிய முன்னோடியான பாரதேந்துவுக்குப் பிறகு மிகவும் பிரபலமான கவிஞர் எனப் போற்றப்பட்டார்.

* காவியங்கள், கவிதைகள், நாவல்கள், விமர்சன நூல்கள் என ஏராளமாக எழுதினார். அவை இந்தி இலக்கியத்துக்கு வளம் சேர்த்தன. நிறைய மொழிகளை அறிந்திருந்ததால் பிற மொழிகளின் தலைசிறந்த படைப்புகளை இந்தியில் மொழிபெயர்த்தார். இவரது படைப்புகள் பல பிரபல இதழ்களில் வெளிவந்தன.

* கவிதை, உரைநடை இரண்டிலுமே மகத்தான பங்களிப்பை வழங்கியுள்ளார். ‘பிரத்யும்னன் விஜய்’, ‘ருக்மணி பரிணய்’ என்ற 2 நாடகங்களும் எழுதினார். இவரது ‘ப்ரிய ப்ரவாஸ்’ காவியத்துக்கு ‘மங்களா பாரிதோஷிக்’ விருது கிடைத்தது. இந்தி இலக்கிய வரலாற்றில் இது ஒரு யுகாந்தர நிகழ்வு என்று பிரபல படைப்பாளி துவாரிகா பிரசாத் குறிப்பிட்டுள்ளார்.

* பணி ஓய்வுபெற்ற பிறகு, காசி இந்து பல்கலைக்கழகத்தின் இந்தி மொழித் துறையில் சம்பளம் பெறாமல் பல ஆண்டுகள் பேராசிரியராகப் பணியாற்றினார். பின்னர், சொந்த ஊர் திரும்பியவர், அங்கேயே வாழ்ந்துவந்தார். இந்தி சாகித்ய சம்மேளனத் தலைவராகவும் செயல்பட்டார். அந்த அமைப்பு இவருக்கு ‘வித்யா வாசஸ்பதி’ என்ற பட்டம் வழங்கியது.

* சாமானியர்கள்கூட படித்து புரிந்துகொள்ளும் வகையில் எளிமையாக எழுதுவார். மொழி அறிஞர்கள், புலவர்கள் மட்டுமே புரிந்துகொள்ளும் வகையில் கடினமான நடையிலும் எழுதுவார். தாராள மனம் படைத்தவர். அனைவரிடமும் இனிமையாகப் பழகுவார். ஆனாலும் தனிமை விரும்பி.

* இவரது காவியங்கள் அமரத்துவம் வாய்ந்தவையாகக் கருதப்படுகின்றன. இந்தி இலக்கியத்துக்கு மகத்தான பங்களிப்பை வழங்கிய அயோத்யாசிங் உபாத்யாய் ‘ஹரி அவுத்’ 82-வது வயதில் (1947) மறைந்தார்.





VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வலைஞர் பக்கம்

4 days ago

வலைஞர் பக்கம்

4 days ago

வலைஞர் பக்கம்

9 days ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

மேலும்