ஒருபக்கம் நெடுவாசல், தாமிரபரணி, நீட் தேர்வு விவகாரங்களுக்கான ஹேஷ்டேக் உடன் கருத்துகளும் கோபங்களும் தெறிக்கும் போராட்டக் களமாக இருந்தது தமிழில் எழுதும் சமூக வலைதள உலகம். அதேநேரத்தில், மறுபக்கம் பாடகர், நடிகர் சுசித்ராவின் ட்விட்டர் பக்கத்துடன் தொடர்புடைய கலாய்ப்பு, காரசார பகிர்வுகள் மீதான ஹேஷ்டேக் இந்திய அளவில் முன்னிலை வகித்தது. அதாவது, நொடிக்கு நூற்றுக்கணக்கான பதிவுகள் அதுகுறித்து கொட்டப்பட்டன.
இதுதான் சமூக வலைதளத்தின் நிஜ முகம். இது குறைகூறத்தக்கது அல்ல. ஆனால், கவனித்து விவாதிக்கத்தக்கது. எப்போதும் போலவே இதுவும் இணையத்தில் ஒருசேர ஒலிக்கும் குரலை மடைமாற்றிவிடும் சதி என்ற அளவில் மட்டும் பார்த்துவிட முடியாது. சுசித்ரா ட்விட்டர் ஹேண்டில் பகிர்வுகள் கற்றுத் தரும் பாடங்களை கொஞ்சம் கூர்ந்து உள்வாங்க வேண்டும்.
* பிரபலங்களின் அந்தரங்க புகைப்படங்கள், வீடியோ காட்சிகளை கசியவிட்டதாக சொல்லப்படும் சுசித்ராவின் ட்விட்டர் ஹேண்டில் உண்மையிலேயே ஹேக் செய்யப்பட்டதா?
* அப்படி ஹேக் செய்யப்பட்டு மீட்ட பிறகும் மீண்டும் மீண்டும் ஹேக் செய்யப்பட்டு அந்தரங்கப் பதிவுகள் பகிரப்படும்போது, அந்தக் கணக்கையே உடனடியாக அதன் சொந்தக்காரர் அதிகாரபூர்வமாக முடக்கவைக்கலாமே?
* ஏதோ ஒரு வகையில் மனரீதியாக பாதிப்புக்கு ஆளாக்கப்பட்டதன் விளைவாக, பொதுவெளியில் மேற்கொள்ளப்பட்டும் பழிதீர்க்கும் செயலா? அல்லது இந்த விவகாரத்தின் பின்னணியில் கோலிவுட் கரங்கள் ஏதேனும் மறைந்திருக்கிறதா?
* முன்னணி நடிகர்கள், இயக்குநர்களிடம் வாய்ப்புகள் வேண்டி 'அட்ஜஸ்ட்' செய்வதற்காக எடுத்துக்கொள்ளப்பட்ட படங்கள் - வீடியோக்கள் என்று சொல்லும் சுசித்ராவின் ட்விட்டர் ஹேண்டில் நபர், உண்மையிலேயே அந்த நடிகைகளின் மீது அக்கறை இருந்தால் அவர்களது அந்தரங்கங்களை அம்பலப்படுத்தியிருப்பாரா?
* 'அட்ஜஸ்ட்மென்ட்' எனச் சொல்லும் பதிவுகளைத் தாண்டி, சம்பந்தப்பட்ட தரப்புகளின் ஒருமித்த சம்மதத்துடன் பதிவு செய்யப்பட்டவையும் பகிர்ந்தன் பின்னணி சொல்வது என்ன?
இந்தக் கேள்விகளுக்கான பதில்களைத் தேடுவது நமக்கு அந்தந்த நேரத்தில் ஏதோ ஒருவகையில் நம் தகவல் பசியைப் பூர்த்திசெய்துகொள்ள உதவலாம். அவ்வளவுதான். ஆனால், உணவு - உடை - உறைவிடத்துக்கு முன்பாக ஸ்மார்ட்ஃபோனை அத்தியாவசியமாகக் கொண்டு வாழும் காலத்தில், நாமும் தொடர்புடைய பார்வையில் இந்த விவகாரத்தை அணுகுவது அவசியமாகிறது.
ஸ்மார்டஃபோன் தொழில்நுட்பமும், இணையம் தரும் கட்டற்ற சுதந்திரமும் சங்கமிக்கும்போது, நம் தனிப்பட்ட விஷயங்களுக்கு பாதுகாப்பு என்ற ஒன்றே துளியும் இல்லை என்பதை உணர வேண்டும்.
இ-மெயிலில் பகிரப்படும் தரவுகள், ஃபேஸ்புக், ட்விட்டர் முதலான சமூக வலைதளங்களில் தனிப்பட்ட முறையில் இன்பாக்ஸில் பகிரப்படுபவை, வாட்ஸ் அப் முதலான குறுஞ்செய்தி சமூக ஊடகங்களில் நண்பர்களுடன் பகிரக் கூடியவை அனைத்துமே சம்பந்தப்பட்ட நாம் மட்டுமே சென்றடையும் பகிர்வுகள் என்று நாம் நம்பிக்கொண்டிருக்கிறோம். ஆனால் அதுவும் ஒருவித மூடநம்பிக்கையே.
நேர்மறைக் காரணங்களுக்காக ஹேக்கிங் தொழில்நுட்பத்தில் ஈடுபடுவோரை விட எதிர்மறை நோக்கத்துடன் ஹேக்கிங்கில் வல்லுநர் ஆவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருப்பது தெளிவு. பூட்டுக்கு இன்னொரு சாவி செய்வது எவ்வளவு எளிதோ அதைப் போன்றதே ஒருவரின் கணக்குக்குள் ஊடுருவி தரவுகளை அடைவதும். எனவே, தொழில்நுட்ப ரீதியில் ஃபேஸ்புக், கூகுள் முதலான பெரிய தலைகள் எல்லாம் நமக்கு அளிக்கும் தனிப் பாதுகாப்பு உறுதிகளை ஆறுதல் மொழியாகவே எடுத்துக்கொள்ள வேண்டும்.
தொழில்நுட்ப ரீதியிலான ஓட்டைகள் ஒருபக்கம் இருக்கட்டும். கருத்து ஒருமித்த இருவருக்குள் நிகழும் அந்தரங்க பகிர்வுகள் எல்லாம் நடக்கும் சூழல்களையும், அதன் பின்விளைவுகள் எனக் கணிக்கக் கூடியவற்றையும் உளவியல் ரீதியில் இன்னும் ஆழமாகப் பார்ப்போம்.
வாழ்வாதாரத்துக்காக வெளிநாட்டில் பிழைப்பவர்கள் தங்களுக்குக் கிடைக்கக் கூடிய அன்பாலான இன்பத்தை மனைவியிடம் இருந்து பெறவும் தரவும் 'வெர்ச்சுவல்' எனப்படும் மெய்நிகர் வாழ்க்கையின் துணையை நாடுவதும் நடக்கிறது. ஆனால், அதுபோன்ற பகிர்வுகள் கூட எளிதில் களவாடப்பட்டு, கண்ட கண்ட வலைதளங்களில் தனிப் பிரிவுகளில் காட்சிப்படுத்தப்படுவதும் இதே இணையத்தில்தான் நடக்கிறது.
அதீதக் காதலின் அடையாளமாக தங்களை முழுமையாக ஒப்படைத்து விடுவதையும் காதலர்கள் சிலர் நிழலாகப் பதிவு செய்கின்றனர். அது பேரன்பின் வெளிப்பாடாகவும் இருக்கலாம். ஆனால், பிற்காலத்தில் நேர்வதற்கு சாத்தியமான பிரிவும் முறிவும் பழிவாங்கல் என்ற பெயரில் பகீர் செயலுக்கு வித்திடும் என்பது அவர்களுக்கு ஆனந்த தருணங்களில் அலசி ஆராய்ந்திட நேரம் இருப்பது இல்லை.
உண்மையோ பொய்யோ, சூழல்களால் உருவாகும் மாற்றுக்காதல் தரும் நம்பிக்கைகளில் எதற்கும் துணிவதும் அபாயமானதுதான். களிப்புடன் விளையாட்டாக பதிந்து பகிரும் அந்தரங்கங்களும் இப்படி பொதுவெளிக்கு வெவ்வேறு காரணங்களால் கசிவதும் நடக்கிறது.
இணையம் குறித்த அறிமுகமே இல்லாத நபர்களைவிட, இந்தத் தொழில்நுட்பத்தில் மலிந்துள்ள ஓட்டைகள் குறித்து முற்றிலும் அறிந்தவர்கள்தான் குருட்டுத் துணிச்சலில் பெரும் பாதிப்புக்கு ஆளாகின்றனர் என்பதுதான் இங்கே நகைமுரண்.
'லிவ் த மொமன்ட்' என்று கடைப்பிடிக்கத்தக்க தாரகமந்திரம்தான். ஆனால், அது நாமே படம்பிடிக்கத்தக்கதா? படம்பிடிக்க அனுமதிக்கத்தக்கதா?
'நாம் பாதிக்கப்படவில்லையே, இதுபற்றி நமக்கு என்ன கவலை' என்று நினைக்கலாம். 'ஒருவேளை பாதிப்பு ஏற்பட்டால் என்ன ஆகும் என்று யோசித்துப் பாருங்கள்; உங்கள் நேசத்துக்குரியவர்களுக்கும் பாசத்துக்கு உரியவர்களுக்கும் இந்த நிலை ஏற்பட்டால் உங்கள் நிலைப்பாடு என்னவாக இருக்கும்?' - இது அப்பட்டமான மிகவும் பழைய பாணி அறிவுரைக் கேள்விதான்.
ஆனால், இப்படிப்பட்ட தங்களுக்கே தெரிந்த விழிப்புணர்வுகளையும் அறிவுறுத்தல்களையும் சாதாரணமாகக் கருதி அலட்சியப்படுத்தியவர்கள், தங்களுக்கு அந்தப் பாதிப்பு வந்ததும் மன உளைச்சலுடன் பதறி வாடுவதைக் கண்கூடாகப் பார்க்க முடிகிறது.
இங்கே அதிகாரபூர்வ 'போர்ன்' விஷயங்களை ரசித்துத் திளைத்தல் பற்றி எந்தக் கருத்தையும் பதியவில்லை. மாறாக, நம் நான்கு சுவற்றுக்குள் அனுபவித்த மகிழ்ச்சி, யாரோ ஒருவரின் கிளர்ச்சித் தேவையைப் பூர்த்திச்செய்ய நாமே வித்திடுவது குறித்த பார்வையைதான் முன்வைக்கிறேன்.
இது, இந்த விஷயங்களில் ஆர்வம் மிக்கவர்களுக்கு மட்டும் அல்ல; எனக்கும் பொருந்தக் கூடிய ஒன்றுதான் என்ற தகுதியே இந்தப் பாடங்கள் குறித்து உங்களில் பலருக்கும் தெரிந்தவற்றை மீண்டும் ஒருமுறை நினைவூட்ட தூண்டுகோலாக இருந்தது என்பது நிஜம்.
- சரா சுப்ரமணியம் | தொடர்புக்கு siravanan@gmail.com
முக்கிய செய்திகள்
வலைஞர் பக்கம்
9 days ago
வலைஞர் பக்கம்
9 days ago
வலைஞர் பக்கம்
14 days ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago