புது எழுத்து | ல‌க்‌ஷ்மி சரவணக்குமார் - எழுத்தாளர் ஆன நாடோடி!

By அ.பார்வதி

தமிழில் ஒரு நாவல் சர்ச்சைக்குள்ளாகும் போதுதான் அந்த நாவலுக்கான கவனம் இன்னும் அதிகமாகிறது. அப்படி பார்த்தால், இளம் எழுத்தாளரான ல‌க்‌ஷ்மி சரவணக்குமார் எழுதிய ஒவ்வொரு நாவலுக்கும் பல எதிர்ப்புகளும் விவாதங்களும் பல்வேறு கோணங்களில் அணுகப்பட்டிருக்கிறது.

ஒரு புத்தகம் மக்களிடையே பல கேள்விகளையும் விவாதங்களையும் எழுப்புகிறது, அது அந்த புத்தகத்துக்குக் கிடைத்த அங்கீகாரம் என்றே சொல்லலாம். அப்படி 2014-ல் வெளியாகி அதிகம் விவாதிக்கப்பட்ட ஒர் நாவல்தான் 'கானகன்'. இந்த நாவலுக்கு சாகித்ய அகாடமியின் 'யுவ புரஸ்கார்' விருதும் இப்போது கிடைத்துள்ளது.

அன்றாட மனித வாழ்க்கையில் நடக்கும் வேட்டையை ஒப்பிட்டு எழுதியுள்ள இக்கதையில், வேட்டையாடுதல் பற்றியும், காடுகள் பற்றியும் பல குறிப்புகள் அடங்கியுள்ளன. இப்படி நாம் அதிகம் கவனிக்கப்படாத சமூகக் கதைக்கருக்களை எடுத்துக்கொண்டு மிக கவனத்துடன் எழுதும் முக்கியமான எழுத்தாளர்களுள் ஒருவர் ல‌க்‌ஷ்மி சரவணக்குமார்.

பள்ளிப் படிப்பையோ கல்லூரிப் படிப்பையோ இவர் முழுதாக முடிக்கவில்லை, எல்லாம் அரைகுறைதான். ஆனால் வாழ்க்கை கற்றுக்கொடுத்த பாடத்தை வைத்து பல நல்ல படைப்புகளை தந்துள்ளார். அவர் கடந்து வந்த வாழ்வின் கதையைப் பற்றி கேட்கும் முன் வாழ்த்துகளைத் தெரிவித்தோம்.

"விருதுகள் ஒர் எழுத்தாளரின் பயணத்தில் கிடைக்கும் சிறிய அங்கீகாரம்தான். இன்னும் கடக்க வேண்டிய பாதை எவ்வளவோ இருக்கிறது" என்று தன்னடக்கத்துடன் பேசுகிறார்.

மார்க்சியம், மதச்சார்பின்மை, கடவுள் மறுப்பு, பகுத்தறிவு போன்ற தனக்கான கோட்பாடுகளை தன் புத்தகங்களின் அடிநாதமாய் கொண்டுள்ள இவரின் எழுத்துலகப் பயணமே மிகவும் சுவாரசியமானது. குடும்பச் சூழ்நிலை காரணமாக வீட்டைவிட்டு வெளியேறியவர். இதுவரை முப்பதுக்கும் மேலான சிறுசிறு வேலைகளை தன் இளம் பருவத்தில் செய்துள்ளார்.

"நான் சின்ன வயதில் பார்க்காத வேலையே கிடையாது, கிளீனராக இருந்திருக்கிறேன், பாரில் வேலைப் பார்த்திருக்கிறேன், பாப்கார்ன் விற்றிருக்கிறேன், ஊர்ஊராகச் சென்று நாட்டுமருந்து விற்றுள்ளேன், பிளாஸ்டிக் பொறுக்குவேன்... இது போன்று எண்ணில் அடங்கா பல வேலைகளைப் பார்த்துள்ளேன். படிக்க வேண்டும் என்ற ஆசை மனது நிறைய இருக்கும்... ஆனால் அந்தக் காசுதான் இல்லை” என்று தான் பணமின்றி பயமின்றி திரிந்த நாடோடி காலத்திற்கேச் செல்கிறார்.

“அப்படி நான் பாரில் வேலைப் பார்கும்போது ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. அதிகம் குடிப்பவர் ஆனால் அதை விட அதிகம் படிப்பவர். ஆங்கில இலக்கியங்கள் பற்றியும் அரசியலைப் பற்றியும் என்னிடம் அதிகம் பேசுவார். மண்ட்டோ படைப்புகள், மார்க்சிய சிந்தனைகள் சார்ந்த பல புத்தகங்களையும் அவர் எனக்கு அறிமுகப்படுத்தினார். அப்போதுதான் தீவிர வாசிப்பிற்குள் இறங்கினேன். இளம் வயது என்பதால் அறிவுப் பசி இன்னும் அதிகமாக இருந்தது. எது கிடைத்தாலும் வாசிப்பேன், மேடைப் பேச்சுகளை கவனிப்பேன். பின்பு தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் சங்கத்தில் ஐக்கியமானேன். இப்போது அந்தத் தீவிர வாசிப்புதான் என்னை ஒர் எழுத்தாளனாக மாற்றியுள்ளது” என்கிறார்.

குழப்பமான சிறுவனாக இருந்து, உலக இலக்கியங்களின் ரசிகனாக மாறி பின்பு அதையே தீவிரமாகப் படித்த இவர், தன் 17 வயதிலேயே தீக்கதிர், செம்மலர் போன்ற இதழ்களில் கவிதைகள் எழுதியுள்ளார். ''எஸ்.திருநாவுக்கரசுக்கு 25 வயது ஆனபோது'' என்ற சிறுகதையின் மூலம் அதிகம் கவனிக்கப்பட்டார். அதற்கடுத்து பல சிறுகதைகளையும் எழுதியுள்ளார்.

2009-ல் அவரது முதல் சிறுகதை தொகுப்பான ‘நீலநதி’ வெளியானது. தொடர்ந்து 2010-ல் 'யாக்கை' என்ற சிறுகதை தொகுப்பும், 2011-ல் தன் முதல் நாவலான ‘உப்பு நாய்கள்’ அதே வருடத்தில் இன்னுமொரு சிறுகதை தொகுப்பான ‘வசுந்தரா என்னும் நீல வண்ணப் பறவை’, 2012-ல் 'மச்சம்' என்ற சிறுகதை தொகுப்பு, 2013-ல் 'உப்பு நாய்'களின் இரண்டாவது பதிப்பு, 2014-ல் கானகன் நாவல், 2015-ல் 'மயானக் காண்டம்' என்ற சிறுகதை தொகுப்பும் கடைசியாக 2015ல் 'நீலப்படம்' என்ற நாவலையும் எழுதியுள்ளார்.

இதுவரை தன் வாழ்க்கையில் நடந்த பல சுவாரஸ்யமான பதிவுகளையே தன் நாவலில் எழுதியிருக்கும் இவர், தனக்கு மிகவும் நெருக்கமான 'உப்பு நாய்கள்' நாவலைப் பற்றி பேசுகிறார். “என் வாழ்கையை மாற்றிய அனுபவப் பதிவே 'உப்பு நாய்கள்', சென்னையில் நான் தெருத்தெருவாக அலைந்துத் திரிந்த காலக்கட்டத்தில் நான் பார்த்து வியந்த சம்பவங்களை இந்த நாவலில் பதிவு செய்திருக்கிறேன்.

வட மாநிலங்களில் இருந்து நூறுக்கும் ஐந்நூறுக்கும் வேலைப்பார்க்கும் கூலித் தொழிலாளர்களைப் பற்றிய கதை இது. தமிழ் தெரியாமல் எங்கிருந்தோ வந்து இங்கு வேலைப் பார்த்து பல கஷ்டங்களை தினம்தினம் அனுபவிக்கும் அவர்களது கதைகளைப் படித்து பலரும் பராட்டினார்கள். நாவலில் இருக்கும் ஒவ்வொரு கதாப்பாத்திரத்திற்கும் ஆழமான கதை இருக்கிறது” என்று சொல்லும் இவர், சமூகத்தில் விளிம்புநிலை வாழ்க்கை வாழ்வோரின் கசப்பான பக்கங்களைப் பற்றி பதிவு செய்திருக்கிறார். பிக்பாக்கெட், விபச்சாரம், குழந்தைக் கடத்தல், போதை விற்பனை என்று போகும் இக்கதையில், சமூகத்தின் மேல் இவருக்கு இருக்கும் கோபங்ளை தன் எழுத்தால் வெளிக்கொண்டு வந்திருப்பதைப் பார்க்க முடியும்.

லக்‌ஷ்மி சரவணக்குமாரின் இரண்டாவது படைப்பான 'கானகன்', முழுக்க முழுக்க காடு மற்றும் வேட்டையைப் பற்றி பேசும் நாவலாக அமைந்திருந்துள்ளது. வேட்டையாடுதல் தொடர்பான நூல்கள், தமிழில் மிகக் குறைவாக இருக்கும் நிலையில் கானகன், ஒர் அற்புதமான படைப்பு.

“வேட்டையாடுதலை இரக்கமற்ற கொலை என்பதை மறந்து, அதை ஒரு தீரச் செயலாக பார்க்கின்றனர். இங்கு கருணைக்கு இடமில்லை. இயல்பான வாழ்க்கையிலும், தேவைகளுக்காக போராடத் துவங்கும் மனிதன், தன் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்வதற்கு எதையும் செய்கிறான். அதைத் தான் வாழ்வின் வெற்றியாகவும் கருதுகிறான். இங்கும் வெற்றியைத் தவிர மற்றவைக்கு இடமில்லை. இதை சிறப்பாகப் படம்பிடித்து காட்டுகிறது கானகன் நாவல்” என்று எழுத்தாளர் ஜெயமோகனிலிருந்து பல எழுத்தாளர்கள் இந்த நாவலை பற்றி பேசுகின்றனர்.

கானகன், காட்டில் இருக்கக்கூடிய பழங்குடி மக்கள் மற்றும் அந்தப் பழங்குடி மக்கள் எப்படி காட்டிலிருந்து துரத்தப்படுகிறார்கள், பெருமுதலாளிகளின் ஆசைக்காக அவர்கள் எப்படி சுரண்டப்படுகிறார்கள் என்பதைப் பற்றி விலாவாரியாகப் பேசும் இந்த நாவலைப் பற்றிய தன் அனுபவங்களை பகிர்ந்துகொள்கிறார், “இந்தப் புத்தகத்தை எழுதும்போது நான் இயக்குனர் வசந்தபாலனிடம் பணிபுரிந்தேன், அப்போது படப்பிடிப்பிற்காக மேற்கு தொடர்ச்சி மலைகள், சாத்தூர், செங்கோட்டை, தேனி மாவட்டம் போன்ற பல ஊர்களில் சுற்றித் திரிந்தோம். அப்போது அலி சாச்சா என்ற ஒருவர் தான் எனக்கு தங்கப்பன் என்னும் வேட்டைக்காரனைப் பற்றிய கதையை சொன்னார். அப்படி நான் கேட்ட கதையில் இன்னும் தீவிரமாக இறங்கி பல கட்ட கள ஆய்வுகள் செய்த பிறகுதான் கானகன் உருவானது” என்று சொல்லும் இவர் வெறும் இரண்டே நாட்களில் இந்தப் புத்தகத்தை எழுதியுள்ளார். அதைப் பற்றி கேட்ட போது...

“ஆம் இரண்டே நாட்கள்தான்! ஆனால் பல மாதங்களாக கள ஆய்வு செய்து வந்தேன், அதற்கான குறிப்புகளை உடனுக்குடன் டைப் செய்து விடுவேன், சினிமாவில் எப்படி எடிட் செய்வார்களோ... அப்படித் தான் என் குறிப்புகளைத் தொகுத்தேன். உட்கார்ந்து எழுதும் பழக்கமில்லை, வேகமாக மடிக்கணினியில் டைப் செய்துகொள்வேன்” என்று காலத்திற்கு ஏற்ப வேகமாகவும் இருக்கிறார்.

இவரின் மூன்றாவது நாவலான 'நீலப்படம்' பெண்களின் நிலையைப் பற்றி பேசுகிறது. பி கிரேட் நடிகைகள் என்று நாம் சொல்லும் பல பெண்களைப் பற்றிய அழுத்தமான பதிவு இதில் அடங்கியுள்ளது. வெறும் காமத்திற்காக பெண்களை சதைப்பிண்டமாகப் பார்க்கும் கேவல எண்ணம் கொண்ட பல ஆண்களுக்கு சவுக்கடி கொடுக்கும் நாவலாக இது அமைந்துள்ளது.

மேலும் இவர் இயக்கிய ‘மயானத் தங்கம்’ குறும்படம், 2015-ல் கென்யாவில் நடைபெரும் 'ஸ்லம் ஃபிலிம் ஃபெஸ்டிவல்' (Slum film festival)-ல் திரையிடப்பட்டுள்ளது. இவர் முதன்முதலில் 'கானகன்' என்னும் நாவலை ப.சிங்காரத்தின் நாவல் போட்டிக்கு தான் அனுப்பியுள்ளார், பிறகு தான் அது புத்தகமாக வெளிவந்து சாகித்ய அகாடமி விருது வரை பெற்றுள்ளது. 2011ல் 'உப்பு நாய்கள்' நாவலுக்கு சுஜாதா விருது கிடைத்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.

சினிமா மற்றும் எழுத்துலகில் குறிப்பிடத்தக்கவராக இருக்கும் லஷ்மி சரவணக்குமாரிடம், கலை மற்றும் இலக்கியத் துறையில் சமகாலப் போக்கைப் பற்றி கேட்டோம்.

“மற்ற மாநிலங்களைப் பார்க்கும் போது, தமிழ்நாட்டில் தான் சினிமாவுக்கான முக்கியத்துவம் அதிகமாக இருக்கிறது. இன்றைய இளைஞர்கள் எல்லா விஷயங்களையும் சினிமா பார்வையிலேயே பார்கிறார்கள். எனவே மிகவும் கவனமான பொறுப்பில் நான் இருக்கிறேன் என்றே உணர்கிறேன். மேலும் வாசிப்பில் நல்ல மாற்றங்கள் இடம்பெற்றுள்ளன, ஐந்து வருடங்களுக்கு முன்பு நம் வாசிப்பு மிகக் குறைவாக இருந்தது. ஆனால் அந்தநிலை தற்போது மாறியிருப்பது வரவேற்க வேண்டிய நிகழ்வு. மேலும் இந்த உலகத்தை நான் எப்படிப் பார்க்கிறேனோ அதையே படமாக எடுக்கவும் ஆசைப் படுகிறேன், பல நேரங்களில் நாம் காட்சி வழியாக சொல்லும் பல செய்திகள் அதிக கவனத்திற்கு உள்ளாகிறது, இதே நிலை புத்தக வாசிப்பிலும் வர வேண்டும்” என்ற வேண்டுகோளோடு விடைபெறுகிறார்.

லக்‌ஷ்மி சரவணக்குமாரின் நூல்கள்:

கானகன் - மலைச்சொல் | நீல நதி, மயானக் காண்டம் - உயிர்மை பதிப்பகம் | யாக்கை, உப்பு நாய்கள், வசுந்திரா என்னும் நீல வண்ணப் பறவை, மச்சம் - உயிர் எழுத்து பதிப்பகம் | உப்பு நாய்கள் (இரண்டாவது பதிப்பு) - விதை | நீலப்படம் - டிஸ்கவரி புக் பேலஸ்

அ.பார்வதி, தொடர்புக்கு parvathysaran95@gmail.com

முந்தைய அத்தியாயம் >>புது எழுத்து | விழியன் - சிறுவர் இலக்கியத்தின் இளம் குரல்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வலைஞர் பக்கம்

8 hours ago

வலைஞர் பக்கம்

1 day ago

வலைஞர் பக்கம்

2 days ago

வலைஞர் பக்கம்

4 days ago

வலைஞர் பக்கம்

5 days ago

வலைஞர் பக்கம்

8 days ago

வலைஞர் பக்கம்

8 days ago

வலைஞர் பக்கம்

10 days ago

வலைஞர் பக்கம்

11 days ago

வலைஞர் பக்கம்

13 days ago

வலைஞர் பக்கம்

13 days ago

வலைஞர் பக்கம்

16 days ago

வலைஞர் பக்கம்

23 days ago

வலைஞர் பக்கம்

25 days ago

வலைஞர் பக்கம்

26 days ago

மேலும்