ஜெயகாந்தனோடு பல்லாண்டு - 6

By பி.ச.குப்புசாமி

வெங்களாபுரத்தில் அன்று இரவு பூராவும் நாங்கள் எளிதில் உறங்கினோமா என்ன?

இரவின் பெரும்பகுதியைப் பேசிப் பேசிக் கழித்தோம். ஜெயகாந்தனைப் பாடவும் வேண்டினோம். இந்த முறை சென்னையில் அவர் பாடாத பல புதிய பாடல்களும் சேர்ந்தன.

அப்போது, ‘பாதைத் தெரியுது பார்!’ படத்தில் வரும் எம்.பி.சீனிவாசன் இசையமைத்த, ஜெயகாந்தனின் ‘தென்னங்கீற்று ஊஞ்சலிலே, தென்றலில் நீந்திடும் ஓலையிலே, சிட்டுக்குருவி ஆடுது, தன் பெட்டைத் துணையைத் தேடுது’ என்கிற பாடல் நாடெங்கும் பிரபலமாகியிருந்த ஒரு பாடலாகும்.

நாங்கள் ‘பாதைத் தெரியுது பார்’ படத்தை ஏற்கெனவே பார்த்திருந்தோம். அது பற்றிய மேலும் சில விவரங்களை ஜெயகாந்தன் கூறினார். விருப்பமில்லாமலேயே அதில் ஒரு காட்சியில் அவர் கலெக்டராக நடிக்க வைக்கப்பட்டதாகவும், படத்தின் நீளத்தைக் குறைக்கவேண்டும் என்கிற பிரச்சினை வந்தபோது, தான் நடித்த காட்சிகளையே முதலில் நீக்கிவிடுமாறு அவர் கூறிவிட்டதையெல்லாம் நாங்கள் தெரிந்துகொண்டோம்.

பாரதியின் பாடல்களை வேறு குரல்களில் கேட்டிருந்த எங்களுக்கு, அவற்றை அவர் பாடியபோது அதுவரை அனுபவித்திராத அற்புதமாக இருந்தது. பாடலின் பாவத்தை அவர் குரலும் முகமும் அழகாகப் பிரதிபலித்தன. பிறகு எவ்வாறோ படுத்து உறங்கினோம்.

நகரின் சூழ்நிலையிலிருந்து ஒதுங்கியிருந்தது வெங்களாபுரம். அதன் அருகில், திருப்பத்தூரின் பெரிய ஏரி. அதன் கோடிக்குப் போனால் நீர் ஓடுகிற ஒரு சிறிய ஆறும் இருந்தது. காலைப்பொழுது, அதன் கரையிலும் மரங்களின் அடியிலும் கழிந்தது,

ஜெயகாந்தன் வருகையில் அதிக ஆர்வம் கொண்டிருந்த நெருங்கிய நண்பர்கள் சிலர் மட்டும் நகரிலிருந்து அவ்வப்போது வந்து அவரைப் பார்த்துச் சென்றனர். நாங்கள் அதுவரை அறிந்திராத சுவையான சம்பாஷணைக் கலையில் இரண்டு நாட்களாகத் தோய்ந்திருந்தோம்.

சரியான சூழ்நிலையில் வைத்தால்தான் கலைஞர்கள் உற்சாகமாகச் செயல்படுவார்கள் என்பது சரியன்று! அவர்களோடு உடனிருப்பவர்களை வைத்தே அவர்கள் அந்த உற்சாகத்தைப் பெறுகின்றனர். அது கானாறாயினும், களர்நிலமாயினும், கடும்பாலையாயினும் சரியே! தோழமை என்பது ஒரு நந்தவனம் போல அவ்வவ்விடங்களில் பூத்துச் சொரிய ஆரம்பித்து, அவர்கள் அதில் உலா வருகிறவர்கள் ஆகிவிடுகின்றனர்!

ஞாயிற்றுக்கிழமை காலை, திருப்பத்தூர் மீனாட்சி தியேட்டரில் பாரதி விழா! அதற்கான ஏற்பாடுகளை எங்கள் நண்பரும் செயலூக்கம் மிக்கவருமான வா.சீ.வேங்கடாசலம் போன்றவர்கள் கவனித்துக்கொண்டிருந்தனர். நண்பர் வையவனும் நானும் ஜெயகாந்தனுக்குத் துணையாக இருப்பதற்காக அந்த வேலைகளிலிருந்து விலக்குப் பெற்றிருந்தோம்.

ஜெயகாந்தனோடு, நண்பர் வையவன்

தான் பிரதானமாகப் பேச்சுக் கொடுத்து கொண்டிருந்தார். அவருக்குத்தான் அதற்கான விஷய ஞானம் இருந்தது. ஒரு பையனான நான், பெரும்பாலும் பார்த்தும் கேட்டும் ரசித்துக்கொண்டிருந்தேன்.

பாரதி விழாவில் ஜெயகாந்தன், பாரதிதாசனைப் பற்றியும் நிறையப் பேசினார்.

நாங்கள் கேட்ட அவரது முதல் சொற்பொழிவு அதுதான். மேடையில் ஆவேசமாகவும் உணர்ச்சிகரமாகவும் பேசுவதை இதற்கு முன்பு தோழர் ஜீவானந்தத்திடம் நாங்கள் பார்த்திருக்கிறோம். அவர் பேச்சைவிடவும் ஜெயகாந்தனின் பேச்சு நன்றாக இருப்பதாக நான் நினைத்தேன்.

இந்த அபிப்ராயம் ஜீவாவைக் குறைவுபடுத்துவது ஆகாது. ஜீவாவை மட்டும் அல்லாமல், தமிழில் மேடையேறிப் பேசும் வேறு யார் பேச்சை நினைத்துப் பார்த்தாலும், ஜெயகாந்தனின் பேச்சு தனித்துவம் மிக்கதாயிருந்தது.

அவரது சொற்பொழிவு, யோசித்து யோசித்துப் பேசுவது போலவும், ஏதோ ஒப்பிப்பது போலவும் இல்லாமல் சிருஷ்டியின் கணங்கள் தெறித்துத் தெறித்துச் செல்லும் திறம் கொண்ட ஒரு தொடராயிருந்தது.

அன்று நாங்கள் ஜெயகாந்தனோடு ஒரு போட்டோ ஸ்டுடியோவுக்குச் சென்று, ஒரு குரூப் போட்டோ எடுத்துக்கொண்டோம். அந்த போட்டோ எடுக்கப்படும்போது ஒரு சிறு சுவாரஸ்யமான சம்பவம் நிகழ்ந்தது.

ஜெயகாந்தன் வேட்டியோடு இருந்தார். அவரது இரு கால்களுக்கும் இடையில் அது மடிந்து தவழ்ந்து வீழ்ந்திருந்தது. போட்டோகிராபர், அதைச் சரியாகஇழுத்துவிடுமாறு தனது தொழில்ரீதியானதோர் உத்தரவைப் போட்டார். ஜெயகாந்தனுக்கு முகம் மாறிற்று. கண்டிப்பான குரலில், “அது அப்படித்தான் இருக்கும்... நீர் எடும்!’’ என்று கூற, போட்டோகிராபர் பேசாமலாகிவிட்டார். அந்தப் படத்தில் ஜெயகாந்தனின் வேட்டி மிக அழகாகத்தான் பதிவாகியிருந்தது. போட்டோகிராபர் சொன்ன மாதிரி செய்திருந்தால், ஏதோ டேராவை இழுத்துக் கட்டியது போல இருந்திருக்கும். இந்தப் புகைப்படம் இன்றளவும் எங்கள் நண்பர்களிடம் இருக்கிறது.

இந்த சம்பவத்தில் எங்களுக்குப் பாரதியார் நினைவுக்கு வந்தார். அவர் ஒரு போட்டோவில், போட்டோகிராபர் சொன்னார் என்பதற்காகத் தன் கையில் இருந்த கோலைத் தாழ்த்திப் பிடிக்கச் சம்மதியாமல், விநோதமாகக் கொஞ்சம் உயர்த்திப் பிடித்துக்கொண்டிருப்பார்.

மூன்று நாட்கள் திருப்பத்தூரில் தங்கியிருந்து, பாரதி விழாவில் பேசுகிற கடமையை முடிந்துவிட்டு, ஞாயிறன்று இரவு அவர் சென்னைக்கு அதே பாசஞ்சர் ரயிலில் புறப்பட்டுப் போனார். அந்த மூன்று நாட்களும் ஏதோ மந்திரிக்கப்பட்ட நாட்கள் போல் மாறிவிட்டிருந்தன.

அவரை வழியனுப்ப நாங்கள் ரயில்வே ஸ்டேஷனுக்குச் சென்றோம். ரயில் வருவதற்கு முன்பாக, திறந்தவெளி பிளாட்பாரத்தின் சிமெண்டுப் பெஞ்சில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தோம்.

அப்போது அங்கே காலில்லாத ஒரு பிச்சைக்காரர் வந்தார். ஒரு சிறு பலகைக்குச் சக்கரங்கள் அமைத்து, அந்தப் பீடத்தின் மீது உட்கார்ந்து உருட்டிக்கொண்டு வந்தார். அவருக்கு ஒரு பத்து பைசா (1960-ல்) கொடுக்குமாறு ஜெயகாந்தன் கூறினார். நண்பர்களில் ஒருவர் அதைக் கொடுக்கவே, அந்த பிச்சைக்காரருக்கு ஏக சந்தோஷமாகிவிட்டது. கிளுகிளுத்தவாறே ஏதோ பாடிக்கொண்டு தனது சிறுவண்டியை உருட்டிக்கொண்டு சென்றார்.

திருப்பத்தூரில் நாங்கள் அவருக்குச் செய்த உபசாரமெல்லாம், மிகவும் எளிமையானவை. அந்த இடத்துக்கு, இந்த இடத்துக்கு என்று தெருவெல்லாம் அவரை நடக்க வைத்துத்தான் அழைத்துச் சென்றோம். ஒரு பொருட்டில்லாத மனிதரை எல்லாம், அவர்கள் எதிர்பட்டுவிட்டார்களே என்பதற்காக அவருக்கு அறிமுகம் செய்து, அவரை ஆயாசப்படுத்தினோம். எந்த சங்கடமும் காட்டிக்கொள்ளாமல் அவர் எல்லாவற்றையும், ராஜ்யச் சுற்றுலா வந்த ஒரு மன்னரைப் போல ஏற்றுக்கொண்டார்.

அந்த பாசஞ்சர் ரயிலுக்கு ஷோரனூர் பாசஞ்சர் என்று பெயர். அப்போதெல்லாம் ரயிலில் மூன்று வகுப்புகள் இருந்தன. நாங்கள் அவருக்கு ஓர் இரண்டாம் வகுப்பு டிக்கெட் எடுத்திருந்தோம்.

ரயில் வந்ததும் ஏறி, வாயிற்படியிலேயே நின்று, ரயில் புறப்படும்வரை எங்களிடம் பேசிக் கொண்டிருந்தார். ரயில் நகர்ந்து வேகமெடுக்கலாயிற்று. மறுபடியும் எப்போது பார்ப்போம் என்கிற ஆவலாதியைத் தூண்டிவிட்டு அது தூரமாகச் சென்று மறைந்தது. அவரைச் சென்னை சென்றுதான் மறுபடியும் பார்க்க வேண்டும் என்று பேசியவாறு ரயில்வே ஸ்டேஷனிலிருந்து நாங்கள் வெளியே வந்தோம்.

- வாழ்வோம்…

எண்ணங்களைப் பகிர்ந்துகொள்ள: pisakuppusamy1943@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வலைஞர் பக்கம்

1 day ago

வலைஞர் பக்கம்

2 days ago

வலைஞர் பக்கம்

7 days ago

வலைஞர் பக்கம்

30 days ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

மேலும்