லைனஸ் பாலிங் 10

By ராஜலட்சுமி சிவலிங்கம்

நோபல் பெற்ற அமெரிக்க வேதியியல் அறிஞர்

வேதியியல், அமைதி என 2 துறைகளில் நோபல் பரிசு பெற்ற அமெரிக்க மேதை லைனஸ் கார்ல் பாலிங் (Linus Carl Pauling) பிறந்த தினம் இன்று (பிப்ரவரி 28). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

* அமெரிக்காவின் ஆரிகன் மாநிலம் போர்ட்லேண்ட் நகரில் (1901) பிறந்தார். மருந்துக்கடை உரிமையாளரான தந்தை, இவரது 9-வது வயதில் இறந்தார். பள்ளிப் பருவத்திலேயே வேதியியல் சோதனைகளில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார் பாலிங்.

* வீட்டிலேயே சோதனைக்கூடம் அமைத் தார். 15 வயதில் ஆரிகன் மாநிலப் பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார். வறுமை யால் படிப்பு பாதியில் நின்றது. பல இடங்களில் வேலை செய்து வருமானம் ஈட்டிய பிறகு, பல்கலைக்கழகத்தில் மீண்டும் சேர்ந்து படித்தார்.

* வேதியியல், கணிதம், இயந்திர வடிவமைப்பு, சுரங்கம், வெடிபொருள் நுட்பம், நவீன ஆங்கிலம் உள்ளிட்டவற்றைக் கற்றார். படிப்பு முடிந்ததும் அதே கல்லூரியில் ஆசிரியராகப் பணியாற்றினார். அணுக்களின் மின்கட்டமைப்பு, மூலக்கூறு பிணைப்பின் கட்டமைப்பு குறித்து ஆராய்ச்சி செய்தார்.

* பொருட்களின் இயற்பியல், வேதியியல் பண்புகள், அவை உருவான அணுக்களின் கட்டமைப்போடு எவ்வாறு தொடர்பு கொண்டுள்ளன என்பது குறித்து ஆராய்ந்தார். இதன்மூலம் ‘குவான்டம் வேதியியல்’ என்ற புதிய அறிவியல் துறையை உருவாக்கியவர்களில் ஒருவராகப் புகழ்பெற்றார். ரசாயனப் பொறியாளராக 1922-ல் பட்டம் பெற்றார்.

* கலிபோர்னியா தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தில் (கால்டெக்) இயற்பியல், வேதியியல், கணித இயற்பியலில் முனைவர் பட்டம் பெற்றார். மூலக்கூறுகளின் கட்டமைப்பில் குவான்டம் கோட்பாட்டைப் பயன்படுத்துவதில் வெற்றி கண்டார். கால்டெக் நிறுவனத்தில் கோட்பாட்டு வேதியியல் துறைப் பேராசிரியராக நியமிக்கப்பட்டார். எக்ஸ்ரே படிக ஆராய்ச்சிகள், குவான்டம் மெக்கானிகல் கணக்கீடுகள் குறித்த ஆராய்ச்சிகளில் ஈடுபட்டார்.

* வாயு, எலெக்ட்ரான் சிதறல் குறித்து பல விஷயங்களைக் கற்றார். எதிர்மின்னூட்ட கருத்துருவை அறிமுகம் செய்தார். இவர் எழுதிய ‘தி நேச்சர் ஆஃப் தி கெமிக்கல் பாண்ட்’ என்ற நூல் 5 தொகுதிகளாக வெளிவந்து, அந்த நூற்றாண்டின் சிறந்த வேதியியல் நூலாகப் பிரபலமடைந்தது. பாடப்புத்தகமாகவும் பயன்படுத்தப்பட்டது.

* நவீன வேதியியல், தற்போது மூலக்கூறு உயிரியல் எனக் குறிப்பிடப்படும் துறைகளுக்கு வித்திட்டார். மூலக்கூறுகளின் அமைப்பு, அவற்றின் வேதிப் பிணைப்புகளைக் கண்டறிந்ததற்காக 1954-ல் நோபல் பரிசு பெற்றார். 1942-ம் ஆண்டு முதல் அணு ஆயுதப் பரவலுக்கு எதிரான இயக்கத்தில் தீவிரமாகப் பங்கேற்றார்.

* உலக அமைதிக்காகப் பேசியும் எழுதியும் வந்தார். இவரது ‘நோ மோர் வார்’ என்ற நூல் குறிப்பிடத்தக்கது. 1962-ல் அமைதிக்கான நோபல் பரிசு பெற்றார். இதன்மூலம், வெவ்வேறு 2 துறைகளில் நோபல் பரிசு பெற்றவர் என்ற பெருமையைப் பெற்றார்.

* சிறந்த மனிதநேயர், காந்தி அமைதிப் பரிசு, தேசிய அறிவியல் பதக்கம், லெனின் அமைதிப் பரிசு உட்பட பல விருதுகள், பரிசுகளைப் பெற்றுள்ளார். வாழ்நாள் முழுவதும் அறிவியல் ஆராய்ச்சியில் ஈடுபட்டுவந்த இவர், 1,200-க்கும் மேற்பட்ட கட்டுரைகள், நூல்களை எழுதியுள்ளார்.

* அறிவியல் வரலாற்றில் இதுவரையிலான மிகச் சிறந்த 20 அறிவியல் அறிஞர்களில் ஒருவர் என்ற தனிப்பெருமை வாய்ந்தவர். 20-ம் நூற்றாண்டின் அறிவியல் களத்தில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கிய லைனஸ் கார்ல் பாலிங் 93-வது வயதில் (1994) மறைந்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வலைஞர் பக்கம்

4 days ago

வலைஞர் பக்கம்

4 days ago

வலைஞர் பக்கம்

9 days ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

மேலும்