‘சுத்தமான, சுவையான உண்மையான உணவு என்பது பதப்படுத்தப்பட்டு, பெட்டிகளில் அல்லது பைகளில் வருவதில்லை. அவை பூமியில் இருந்து, கடலில் இருந்து, வயலில் இருந்து அல்லது பண்ணையில் இருந்து வருபவை!’ - சூசன் சோமர்ஸ்
உலக வரைபடத்தில் சுண்டைக் காய் அளவு இருக்கும் நாடான ஜப்பான், 2020 ஒலிம்பிக் போட்டியைத் தன்னுடைய தலைநக ரான டோக்கியோவில் அரங்கேற்ற இருக்கிறது. 51 வருஷங்களுக்குப் பிறகு இரண்டாவது முறையாக இந்த கவுரவம் அந்த நாட்டுக்குக் கிடைத்திருக்கிறது.
டோக்கியோவின் ‘ஷிபுயா’ மாகாணத் தில் 10 பாதைகளில் வாகனங்கள் பறந்துகொண்டிருந்தன. அந்த இடத்தில் சிக்னல் விழும்போது, குறுக்கே நடந்து செல்லும் பாதையில் ஒரே சமயத்தில் 2,500 பாதசாரிகள் ஒவ்வொரு முறையும் கடந்து செல்வார்கள். இதை ஓர் உணவகத்தின் மேல் மாடியில் இருந்து பார்க்கும் சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொண்டேன். அடடா… சுறுசுறுப்பான தேனீக்களின் கூட்டம்! ஒன்றோடு ஒன்று இடித்துக் கொள்ளாமல், தோளோடு தோள்கள் உரசிக்கொள்ளாமல் சில நொடிகளில் சாலையைக் கடந்து அவரவர் இலக்குகளை நோக்கி செல்வதைக் கண்டு ஆச்சரியத்தில் முழ்கினேன்.
அளவில் அந்த நாடு சிறிதாக இருந்தால் என்ன? அதன் சுறுசுறுப்பு பெரிதாக இருக்கிறதே! ‘முர்த்தி சிறுசு… கீர்த்தி பெருசு’ என்று சும்மாவா சொல்லியிருக்கிறார்கள்!
அந்தத் தேடல்
உணவகத்தின் உள்ளே, அந்த ஜப்பானிய அன்பருக்குக்குப் பின் னால் பலி ஆடுகளைப் போல பயந்துகொண்டே சென்றோம். என் னுடைய கண்கள் வெளிநடப்பு வாயில் எங்கே இருக்கிறது என்று தேடியது. எதாவது எக்குத்தப்பாக நம் டேபிளுக்கு வந்தால் ஒட்டம் எடுக்கத்தான் அந்தத் தேடல்.
இரண்டு நடுத்தர அளவுள்ள கிண்ணங்களில் கொதிக்க கொதிக்க சூப் போன்ற திடத்தில் நூடூல்ஸ் மிதக்க ஓர் உணவு வந்தது. ‘‘இதன் பெயர் சோபா (soba). இது பக் கோதுமையினால் ஆன நூடுல்ஸ்… சாப்பிட்டுப் பாருங்கள்’’ என்றவுடன் தயக்கத்துடன் ஒரு ஸ்பூன் எடுத்துச் சுவைத்தேன்.
‘‘சிவா, உண்மையாகவே நன்றாக இருக்கிறது’’ என்று சொல்லி தலையை நிமிராமல் சாப்பிடத் தொடங்கினேன். பலவிதமான சாஸுகள் சேர்க்கப்பட்டு செய்யப்பட்டிருந்த அந்த சோபாவே பின் நாட்களில் என்னுடைய முக்கிய உணவாக மாறிப்போனது.
கிறங்க வைக்கும் சுவை
டெம்புரா (tempura) என்று மாவில் தோய்தெடுத்து, எண்ணெயில் பொரித்து எடுக்கப்பட்ட இறால்கள் சுவையில் என்னை கிறங்க வைத்தன. இந்த வகையில் பலவிதமான காய்கறி களையும் மொறு, மொறு என்று பொரித்துத் தருகிறார்கள்.
சோபாவைப் போலவே, யுடான் என்று கோதுமையினால் செய்யப்பட்ட நூடூல்ஸ் சூப்புகளும் கிடைக்கிறது. பக் கோதுமை என்றால் வெள்ளாவியில் வைக்கப்பட்ட கோதுமையாம். இத னால்தான் சோபா நூடூல்ஸ் அவ்வளவு மென்மையாக இருக்கிறது என்று எண்ணிக் கொண்டேன்.
‘‘இது எங்க ஊர் ஓனிகிரி (onigiri) சுவைத்துப் பாருங்கள்’’ என்றவுடன் பிளேட்டில் ஆவி பறக்க முட்டைகளைப் பொரித்து எடுத்ததைப் போன்று வந்த வஸ்துகளை சந்தேகத்துடன் உற்று நோக்கினேன். ‘‘சிவா, இவை எந்த ஜந்துவின் முட்டைகளோ தெரியவில்லை’’ என்று முனகினேன். என் கணவரும் திரு திரு என்று முழிக்க, ‘‘பயப்படாதீங்க. இவை எல்லாம் ரைஸ் பால்ஸ். அதாவது சோற்று உருண்டைகள்’’ என்றார். வேக வைத்த அரிசியை உருட்டி அதனுள்ளே வெள்ளரிக்காய், பிளம் துண்டுகள், தக்காளித் துண்டுகளை வைத்து எண்ணெயில் பொரித்து எடுத்தால், அல்லது கிரில் (grill) செய்து கொடுத்தால் அதுவே ஓனிகிரி.
இப்படி சோற்று உருண்டைகளின் உள்ளே அடைபடும் பொருட்கள், இறால், பன்றி கறி, மாட்டிறைச்சி, ஆக்டோபஸ் என தேவைக்கேற்ப மாறும்.
‘‘இந்த நாசுவை (Nasu) ஓனி கிரிக்கு சைடுடிஸ் ஆக வைத்துக் கொள்ளுங்கள்’’ என்றார் அந்த ஜப்பானிய அன்பர். நம்ம ஊர் கத்திரிக்காயைப் பதமாக தீயில் வாட்டி, சாஸில் தோய்த்து எடுத்தால் அதுதான் நாசு டிஸ்.
‘‘அப்பாடி! வயிறு நிறைந்துவிட்டது. ஜப்பானுக்கு வந்த இரண்டு நாட்களில் இன்றுதான் வயிறு முட்ட சப்பிட்டோம். மிகவும் நன்றி!’’ என்றார் என் கணவர்.
ஒரு நீண்ட உரை
‘‘அடடா, கிரீன் டீ ஐஸ்கிரீம் சாப்பிடாமல் எப்படி உங்கள் சாப்பாடு முழுமை அடையும்? உங்களுக்கு ஒன்று தெரியுமா? நவம்பர் 14-ம் தேதி 2009-ம் ஆண்டில் எங்கள் நாட்டுக்கு யு.எஸ். பிரெசிடெண்ட் பாரக் ஒபாமா வந்தார். டோக்கியோவின் சண்டோரி ஹாலில் வெளிநாட்டு கொள்கைகளைப் பற்றி பேசும்போது, சிறுவயதில் தன் தாயாருடன் ஜப்பானுக்கு வந்ததைப் பற்றியும், அப்போது கடற்கரை நகரமான காமகூராவில் கிரீன் டீ ஐஸ்கிரீம் சாப்பிட்டதையும், அது மிகவும் சுவையானதாக இருந்ததையும் நினைவுகூர்ந்தார். அதுமட்டும் அல் லாமல் அந்த சமயத்தில் பிரதம மந்திரியாக இருந்த யுகியோ ஹடோயமா வரவேற்பு விருந்தில், ஒபாமாவுக்கு கிரீன் டீ ஐஸ்கிரீமை டெசர்ட்டாக பரிமாற செய்ததற்காக நன்றி கூறினார்” என்று ஒரு நீண்ட உரையை ஆற்றி முடித்தார் நண்பர்.
நாங்களும் கிரீன் டீ பவுடரினால் செய்யப்பட்ட ஐஸ்கிரீமை சாப்பிட்டோம். ஒபாமாவைப் போலவே எங்கள் மனதிலும் நாக்கிலும் அதன் சுவை பதிந்துப்போனது.
‘சோபா’ நூடுல்ஸை சுவைக்கும் சாந்தகுமாரி
இந்த அனுபவங்களுக்குப் பிறகு ஜப்பானில் இருந்த நாட்களில் வயிறு காயாமல் சாப்பிடக் கற்றுக் கொண்டோம். உணவு விடுதிகளுக்கு செல்வதற்கு முன்னால், அதன் நுழைவாயிலில் வைக்கப்பட்டிருக்கும் கண்ணாடி கேஸுகளில் அன்றைக்கு விற்கப்படும் உணவு வகைகளைப் பொம்மைகளாக செய்து வைத்திருப்பதை பார்த்து, வேண்டியதை ஆர்டர் செய்து... வேண்டாததை ஒதுக்கக் கற்றுக் கொண் டோம்.
குசிமோனோ (kushimono) என்று தாமரைத் தண்டுகள், காளான்கள், பலவிதமான காய்கறிகளை வறுத்து குச்சிகளில் குத்திக் கொடுக்கிறார்கள். டல்கன் (dalkon) என்று முள்ளங்கிகளை வேகவைத்துத் துருவி, சாலட்டாகவும் ஊறுகாய்களாகவும் தருகிறார்கள். மாமி (mame) என்று சோயா பீன்ஸ்கள், பீன்ஸ் கொட்டைகள் வறுவலாகவோ அல்லது வேக வைத்தோ சாப்பிடக் கொடுக்கிறார்கள். பீன் தயிரில் தயாரிக்கப்படும் டோபுவோடு கடல் பாசி, காய்கறிகள் கலந்து சாலட்டாக கிடைக்கிறது. யமிமோ (yamimo) என்ற ஜப்பானிய கருணைக்கிழங்கு, நம்ம ஊரு உருளைக்கிழங்கும், பூசணிக்காயும் கிடைக்கிறது. எப்படி என்றால் வறுத்து, வேகவைத்து, பச்சையாக துருவி, தூவப்பட்டு. ‘‘வாவ்!’’ என்று கூவத் தோன்றுகிறது அல்லவா! மரக்கறி உண்பவர்களும் தைரியமாக ஜப்பானை வலம் வரலாம்!
- பயணிப்போம்….
எண்ணங்களைப் பகிர்ந்துகொள்ள: shanthisiva12@gmail.com
முக்கிய செய்திகள்
வலைஞர் பக்கம்
22 hours ago
வலைஞர் பக்கம்
3 days ago
வலைஞர் பக்கம்
3 days ago
வலைஞர் பக்கம்
5 days ago
வலைஞர் பக்கம்
12 days ago
வலைஞர் பக்கம்
14 days ago
வலைஞர் பக்கம்
15 days ago
வலைஞர் பக்கம்
17 days ago
வலைஞர் பக்கம்
18 days ago
வலைஞர் பக்கம்
18 days ago
வலைஞர் பக்கம்
22 days ago
வலைஞர் பக்கம்
25 days ago
வலைஞர் பக்கம்
26 days ago
வலைஞர் பக்கம்
29 days ago
வலைஞர் பக்கம்
1 month ago