புது எழுத்து | விநாயக முருகன் - ஐ.டி. களத்தில் இருந்து ஒரு துடிப்பு

By அ.பார்வதி

| தமிழ் எழுத்துலகில் தீவிரம் காட்டத் தொடங்கியவர்களின் அறிமுகம் |

ஐ.டி வாழ்க்கை, மாதத் துவக்கத்தில் பேங்க் அக்கவுண்ட் நிரம்ப சம்பளம், அந்த சம்பளத்துக்கு ஏற்ப மூளையை கசக்கும் வேலை, எப்படியாவது ஒரு நாளைக்கு பன்னிரெண்டு மணி நேரமாவது மானிட்டரில் முகத்தை புதைக்க வேண்டிய கட்டாயம், தூக்கத்தை பற்றி நினைக்கவே கூடாத நைட் ஷிஃபிட்... இப்படி பல தூக்கல்களையும் சிக்கல்களையும் கொண்ட இன்றைய தொழில்நுட்ப உலகிலிருந்து முற்றிலும் வேறுபட்ட மனிதராய் ஒருவர் உருவெடுத்துள்ளார்.

ஓ.எம்.ஆரே கதி என்று இருந்துவிடலாம், ஆனால் இவரோ... வாசிப்பின் மேல் உள்ள அதீத பிரியத்தினாலும், தமிழ் மொழியின் மேல் உள்ள அளவுகடந்த காதலினாலும் 'கோவில் மிருகம்' என்ற தன் முதல் கவிதை தொகுப்பிலேயே பலருடைய கவனத்தை ஈர்த்தவர், அதை தொடர்ந்து மூன்று நாவல்களையும் எழுதியுள்ளார். ஐ.டி. உலகில் இருந்துக்கொண்டே பல தமிழ் எழுத்துலகில் கவனிக்கத்தக்கவராக வலம் வருகிறார் இளம் எழுத்தாளர் விநாயக முருகன்.

"15 வருட ஐ.டி வாழ்க்கை, இன்னும் அதே துறையில்தான் இருக்கிறேன். ஆனால் என்ன செய்ய... குறைகளை நீக்கி நிறைவாக வாழவேண்டும் என்று நினைத்தால், நமக்கான ஒரு மாற்றுப்பாதையை உருவாக்க வேண்டும். அப்படி எனக்குத் தெரிந்தப் பாதையே புத்தகங்கள்.

1993-ல் இருந்து 2003 வரை வளர் தொழில், தமிழ் கம்ப்யூட்டர், கம்ப்யூட்டர் உலகம் போன்ற மாத நாளிதழ்களில் உதவி ஆசிரியராக இருந்தேன். அங்கு பணிபுரியும்போது தகவல் தொழில்நுட்பம் சார்ந்து பல கட்டுரைகள் எழுதியது உண்டு. அதன் மூலம் கிடைத்த வேலையே தற்போது நான் பார்க்கும் பணி" என்று சொல்லும் இவர், காக்னிசன்ட் நிறுவனத்தின் மூத்த மேலாளராகப் பணிபுரிகிறார்.

"கம்ப்யூட்டராய் நாள் முழுவதும் தட்டும் வேலைதான். ஆனால், எனக்கான ஆயுதமான எழுத்தை என்றும் விடவே கூடாது என்று முடிவெடுத்தேன். என் தேடலை நோக்கி பயணித்தேன். நான் பார்த்த, ரசித்த, மனம் கசிந்த எல்லாவற்றையும் எழுதத் தொடங்கினேன், அந்தத் தாக்கத்தின் வெளிப்பாடே என் படைப்புகள்" என்று விவரிக்கும் விநாயக முருகனின் முதல் கவிதைத் தொகுப்பான 'கோவில் மிருகம்' 2009-ல் வெளியானது. அதைத் தொடர்ந்து 2014-ல் வெளியான 'ராஜீவ் காந்தி சாலை' இவரது முதல் நாவல். 2015-ல் 'சென்னைக்கு மிக அருகில்' நாவலும், இந்த ஆண்டு 'வலம்' என்ற நாவலும் வெளியானது.

"கோவில் மிருகத்தில், என் மனதிற்கு நெருக்கமான பல சம்பவங்களை கவிதைகளாக எழுதியிருப்பேன். பூங்குழலி என்னும் தலைப்பில் மின்சார ரயில்களில் பாடிக்கொண்டே பிச்சை எடுக்கும் பார்வையற்ற மாற்றுத் திறனாளிகள் பற்றி எழுதினேன். சில நேரங்களில் அவர்கள் பாடல் வரிகளை மறந்து விடுவார்கள், ஆனால் அதை மிக அழகாக சமாளித்து பாடுவார்கள். இதை பலரும் கவனிப்பது இல்லை... ஏனோ பலரின் ரயில் பயணங்கள் செல்போன் ஸ்க்ரீனிலேயே மூழ்கி இருக்கிறது. இப்படி நான் கண்ட அவலங்களையும் பதிவு செய்துள்ளேன்' என்கிறார். அந்தக் கவிதை...

பூங்குழலி

மின்சார ரயிலில்

பார்வையற்ற சிறுமியொருத்தி

பாட்டுப் பாடியபடியே

பிச்சை எடுத்துக்கொண்டிருந்தாள்.

பூமுடித்தாள் இந்தப் பூங்குழலி

புதுச் சீர் அடைந்தாள் வண்ணத் தேனருவியென்று

தொடங்கினா‌‌‌ள்.

தேனருவியின் வேகம் குறைந்தது.

அம்மம்மா தம்பி என்று நம்பி…

அடுத்த பாடல் பைசா பெறவில்லை.

பூங்குழலி அசரவில்லை.

மூன்றாவது பாடல் பாடினாள்.

தாய் தந்த பிச்சையிலே பிறந்தேனம்மா…

ஜன்னல் பக்கம் சிலர்

திருப்பிக்கொண்டார்கள் முகத்தை.

பல்லாக்கு வாங்கப் போனேன் ஊர்வலம்போக…

நீரோடும் வைகையிலே நின்றாடும் மீனே…

வரிசையாகப் பாடினா‌‌‌ள்.

திடீரென நிறுத்தினா‌‌‌ள்.

இரண்டு நிமிடம் கனத்த மெளனம்.

பாட்டு தீர்ந்துவிட்டதா?

பதறிப்போனது எனக்கு .

சற்று நேரம் தயக்கம் அவளிடம்.

என்ன நினைத்தாளோ?

பூங்குழலி உற்சாகமாய்ப் பாடினாள்.

பூமுடித்தாள் இந்தப் பூங்குழலி

புது சீர் அடைந்தாள் வண்ணத் தேனருவியென்று

மீண்டும் ஆரம்பித்தாள்.

நல்லவேளை…யாரும் கவனிக்கவில்லை.

*

நாவல்களுக்கான களம் குறித்து பகிர்ந்தவர், "என் நாவல்களில் வரும் கதாபாத்திரங்களுக்கு பின்னால் உண்மைச் சம்பவங்களும் உள்ளன. 'ராஜீவ் காந்தி சாலை'யில் வரும் பல கதாபாத்திரங்கள் அவ்வகையையே சாரும். நீங்கள் அவ்வப்போது செய்தித்தாள்களில் வாசிக்கும் "ஐ.டி ஊழியர் தற்கொலை, வேலை பளுவை தாங்காமல் விஷம் குடித்த ஐ.டி ஊழியர்" போன்ற செய்திகளை நாங்கள் தினம் தினம் நேரில் பார்த்து வருகிறோம்.

தற்போதைய நிலையில், ஐ.டி உலகம் சற்று அடக்கிதான் வாசிக்கிறது. ஆனால் வந்த புதிதில்... அதாவது 2010-ல் ஐ.டி உலகம் ஆடிய ஆட்டமே வேறு. உலகமயமாக்கல், பயமுறுத்தும் இஎம்ஐ, அதீத கிரெடிட் கார்டு பயன்பாடு, மேலைநாட்டு கலாச்சாரம், நைட் ஷிஃப்ட், பெண்களுக்கு ஏற்படும் இன்னல்கள், உறவுகளில் ஏற்படும் சிக்கல்கள் என பல கசப்பான உண்மைகள் நிறைந்தது, அதன் தாக்கத்தை என் நாவலில் எழுதினேன்.

2015-ல் "சென்னைக்கு மிக அருகில்" என்ற என் நாவலில் ரியல் எஸ்டேட் பற்றி எழுதிருப்பேன். நீங்கள் அன்றாடம் பார்க்கும் கார் டிரைவர்கள், காவலாளி, ஆபீஸ் பியூன் இவர்கள் எல்லாம் சதாரணமானவர்கள் அல்ல. ஒரு காலத்தில் அவர்களுக்கென்று குறைந்த பட்சம் 5 ஏக்கர் நிலமாவது இருந்திருக்கும். ஆனால் அதை எல்லாம் அடி மாட்டு விலைக்கு வாங்கிவிடும் ரியல் எஸ்டேட். விவசாயம் செய்யாமல், இருந்த நிலமும் இல்லாமல், கிடைத்த சொற்ப காசும் பத்தாமல் பிழைப்புக்காக பலர் சென்னைக்கு வந்து சாதாரண வேலைகளை பார்பார்கள். இப்படி பல உண்மைகலை பேசும் பதிப்பாக இரண்டாவது நாவல் அமைந்திருக்கும்.

"வலம்" சமகால நாவல். சென்னையின் வரலாற்று பக்கங்களை அலசும். நமக்கு தெரியாத மெட்ராஸ் பற்றிய பதிப்பாக கதைக்களம் அமைந்திருக்கும்" என்று உற்சாகத்தோடு தன் புத்தகங்களைப் பற்றி பகிர்கிறார் விநாயக முருகன்.

ஒரு பக்கம் ஐ.டி வேலை இன்னொரு பக்கம் புத்தகம் எப்படி சமாளிக்கிறார்?

"ஆபிசில் 12 மணிநேரம் வேலை பார்க்கவேண்டும், இரவு 8 மணிக்கு வீட்டுக்கு வந்தவுடன் சிறிது ஓய்வுக்கு பின்னர் என் புத்தக வேலைகளை தொடங்குவேன். வார இறுதியில் கண்டிப்பாக கன்னிமரா நூலகம், எழும்பூர் ஆவணக் காப்பகம், ராஜா முத்தையா நூலகம் என சென்று விடுவேன். இதற்கு நடுவில் களப்பணியும் நடக்கும். மனதுக்கு பிடித்த ஒன்றை செய்வதால் களைப்படைவதே இல்லை... இன்னும் வேகம் கூடித்தான் இருக்கிறது, குறைந்தபாடில்லை" என்று சொல்லும் அவரது கண்களில் வாசிப்புக்கான ஈடுபாடும் தெரிகிறது.

புத்தக வாசிப்பை பற்றி கூறும்போது, "நம் நாட்டின் புத்தக வாசிப்பு மிக குறைவு. இன்றைய நிலையில் பல்வேறு பதிப்பகங்கள் முளைத்துவிட்டன, புத்தகங்களும் பெருகிவிட்டன. ஆனால் வாசகர்களின் எண்ணிக்கை இன்னும் பெருகவேண்டும். முகநூல் வாயிலாக பல விவரங்களை தெரிந்துகொள்ளும் நாம், இன்னும் ஆழமாக தெரிந்துகொள்ள புத்தகங்களை நாடவேண்டும். இளைஞர்களும் வாசிப்பில் பங்குபெற வேண்டும்" என்ற தன் கோரிக்கையையும் முன்வைக்கிறார்.

| எழுத்தாளர் விநாயக முருகன் நாவல்கள்: வலம், சென்னைக்கு மிக அருகில், ராஜீவ் காந்தி சாலை - வெளியீடு: உயிர்மை |

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வலைஞர் பக்கம்

7 hours ago

வலைஞர் பக்கம்

1 day ago

வலைஞர் பக்கம்

2 days ago

வலைஞர் பக்கம்

4 days ago

வலைஞர் பக்கம்

5 days ago

வலைஞர் பக்கம்

8 days ago

வலைஞர் பக்கம்

8 days ago

வலைஞர் பக்கம்

10 days ago

வலைஞர் பக்கம்

11 days ago

வலைஞர் பக்கம்

13 days ago

வலைஞர் பக்கம்

13 days ago

வலைஞர் பக்கம்

16 days ago

வலைஞர் பக்கம்

23 days ago

வலைஞர் பக்கம்

25 days ago

வலைஞர் பக்கம்

26 days ago

மேலும்