பேரரசின் அதிகாரத்திற்கு எதிரான குரல் | ஜெப் உன்னிஸா

By பால்நிலவன்

எத்தனை நூற்றாண்டுகள் கடந்தாலும் யாரோ ஒருவர் என்றோ ஒருநாள் நினைத்துப் பார்க்கத் தகுதியான வாழ்க்கையை எங்கோ சிலர்தான் வாழ்கிறார்கள். எத்தனை சுகபோகங்கள் அருகிருந்தபோதிலும் ஒரு பக்கீராக, நாடோடியாகப் பாடித் திரிந்த ஜெப் உன்னிஸாவுக்கு அந்த தகுதி சற்று கூடுதலாகவே இருக்கிறது.

தந்தையை விமர்சிக்கக்கூடிய ஒரு மகளாக இருந்தாலும் ஒரு தந்தையாக ஔரங்கசீப்பின் பணிகள் மெச்சக்கூடியதாகவே இருந்தன. குழந்தைப்பருவத்தில் இருந்தே ஜெப் உன்னிஸாவின் சிறந்த அறிவு புலப்படத் தொடங்கியதை அடுத்து, வளர வளர அவருக்குத் தரவேண்டிய கல்வி போதனைகளில் கூடுதல் கவனம் செலுத்தினார் பேரரசர்.

ஏழு வயதிலேயே ஜெப் ஒரு ஹாஃபிஸ் ஆக இருந்தார். அதாவது குரானை முழுவதுமாக மனப்பாடமாக அறிந்திருந்தார். அச்சமயம் நடைபெற்ற பெரிய வைபவம் ஒன்றில் பெரிய விருந்து ஒன்றை அவருக்கு ஔரங்கசீப் அளித்தார். அப்போது முப்பதாயிரம் தங்கக் காசுகள் ஏழைகளுக்கு தானமாக அளிக்கப்பட்டன. இது தவிர ஹாபிஸ் ஆக அங்கீகரிக்கப்பட்ட ஜெப்உன்னிசாவுக்கு வழங்கப்பட்ட சிறப்பு விருந்தை முன்னிட்டு பொது அலுவலகங்களுக்கும் இரண்டு நாட்கள் விடுமுறை வழங்கப்பட்டது.

அதன்பின்னர் மியாபாய் எனும் ஆசிரியை தனியே நியமிக்கப்பட்டு ஜெப்உன்னிசாவுக்கு நான்கு ஆண்டுகள் அரபு பயிற்றுவிக்கப்பட்டது. அதன் பின்னர் அவர் கணிதப் பாடமும் வான சாஸ்திரமும் பயின்றாள். அறிவியலிலும் போதுமான திறமை பெற்றார்.

அதன்பிறகு வளரிளம் பருவத்தில் ஜெப்உன்னிசா அரபிய மொழியில் கவிதைகள் எழுதத் தொடங்கினார். ஒரு அரபிய பண்டிதர் அவரது எழுத்துமுயற்சிகளைப் படித்துப் பார்த்துவிட்டு, இந்தக் கவிதையை யார் எழுதியிருந்தாலும் அது இந்தியராகத்தான் இருக்கமுடியும். இக்கவிதைகள் அறிவும் பாண்டித்யமும் பெற்றுள்ளன. ஆனால் இதன் மரபுத்தன்மை இந்திய வடிவத்தோடு உள்ளது. என்றாலும் வெளிநாட்டினருக்கு அரபுமொழியை சிறப்பாக அறிந்துகொள்வதற்கு இது பெருமளவில் உதவும் என்றார்.

இந்த, பாராட்டு அவருக்கு சரியான இலக்கிய ஆர்வத்தை உருவாக்கிவிட்டது. அதன்பிறகு அவர் தனது தாய்மொழியான பாரசீக மொழியில் எழுதத் தொடங்கினார். இதைத்தொடர்ந்து இவருக்கு சிறந்த கல்வியாளரான ஷா ரஸ்டூம் காஸி எனும் ஆசிரியர் நியமிக்கப்பட்டார். ஷா ரஸ்டூம் காலி இவரை சிறப்பாக உற்சாகப்படுத்தியதோடு இலக்கிய சுவையை சிறந்த திசையில் கொண்டுசென்றார்.

ஜெப்உன்னிசா தனது கவிதைகளை ரகசியமாகத்தான் முதலில் எழுதிப் பார்த்தார், ஆனால் அவர் பயிற்சிக் குறிப்பேடுகளின் மத்தியில் இருந்த கவிதைப் பிரதிகளை அவரது ஆசிரியர் கண்டுபிடித்துவிட்டார்.

அதுமட்டுமின்றி அவரது உன்னத எதிர்காலத்தையும் முன்பே அறிந்த ஒரு தீர்க்கதரிசியாக அவரது தந்தையிடம் சென்று அவரது புலமையைக் குறிப்பிட்டு அகில இந்தியாவிற்கும் பாரசீகத்திற்கும் காஷ்மீரத்திற்கும் சென்று கவிஞர்களைக் கண்டறிந்து அழைத்துவந்து இளவரசிக்கென்று ஒரு இலக்கியவட்டம் நிறுவும்படியும் வலியுறுத்தினார்.

இவை எல்லாமும் அவரது வாழ்க்கையில் சிறப்பாகவே நடந்தது. ஜெப்உன்னிசாவின் ஆசிரியர்கள் சொன்னபடியே தந்தை ஔரங்கசீப்பும் வேண்டிய எல்லாமும் செய்தார். ஆனால் அவரது திருமண வாழ்க்கை அவள் விரும்பியதுபோல அமைய தந்தை அனுமதிக்கவில்லை.

ஒரு சமயம் ஔரங்கசீப்புக்கு உடல்நிலை சரியில்லை. நல்ல காற்றுக்கு இடமாற்றம் தேவை என அவரது மருத்துவர் கூறிவிட்டார். அவர்கள் அரசக் கட்டுப்பாட்டில் இருந்த லாகூருக்கு குடும்பத்தோடு சென்றனர். அங்குள்ள கவர்னர் அகில் கான் கவிதையில் ஈடுபாடுகொண்டவன். கவிதை எழுதும் திறனும் படைத்தவன். முற்றத்தில் இருவரும் சந்தித்து உரையாடியது அனைத்தும் இலக்கிய மதிப்பு மிக்கவை.

ஆனால் இது அரசருக்கு பிடிக்கவில்லை. டெல்லி திரும்பியதும் முதல்வேலையாக திருமண வேலைகளைத் தொடங்கினார்கள். ஆனால் தனக்கு நிச்சயிக்கப்பட்ட மணமகனை மறுதலிக்கும் துணிவும் ஜெப்உன்னிசாவுக்கு இருந்தது. மேலும் அகில்கான் மீது தனக்குள்ள பிரியத்தைப் பற்றியும் சொன்னார். பேரரசருக்கு பெரும் கோபம் மூண்டது. இளவரசி விரும்பியபடியில்லாமல் அவருக்கு எதிராக செயல்பட்டு அகில்கானை வஞ்சம் தீர்த்தார் பேரரசர்.

நாளாக ஆக ஔரங்கசீப்பின் அரச காரியங்களிலும் தனது விமர்சனங்களை முன்வைக்கத் தொடங்கினார் இளவரசி ஜெப் உன்னிசா.... பின்னர் நேரடியாகவே தந்தையின் கொள்கைகளை மறுதலிக்கத் தொடங்கினார். இதனால் கோபம் அடைந்த ஔரங்கசீப் இளவரசி ஜெப் உன்னிசாவை டெல்லியில் உள்ள சாலிம்கர் கோட்டையில் சிறைவைத்தார்.

சிலவருடங்கள் சிறையிலிருந்தவர் வெளியே பக்கீராக போவதென முடிவெடுத்தபிறகு பணம்காசு சேர்த்து வைத்திருக்கும் பழக்கம் இல்லை. அதனால் தனது சேமிப்பிலிருந்த வற்றையெல்லாம் ஏழைகளுக்கு வழங்கிவிட முடிவு செய்தார். அதன்படி மெக்கா சென்று அங்கிருந்து மெதினா செல்லும் யாத்ரீகர்களுக்கு, விதவைகளுக்கு, ஆதரவற்றவர்களுக்கு பொன் பொருள் செல்வத்தையெல்லாம் தானமாக வழங்கினார்.

டேப் அடித்தவாறு கடைவீதிகள், பிரதான வீதிகள் என இறைவனை பாடிப் பரவும் பக்கீர்களோடு சுற்றத் தொடங்கினார் ஜெப் உன்னிசா. தனக்கு தேவையான வெள்ளைத் துறவு ஆடையை தானே வடிவமைத்துக்கொண்டார். குர்திஸ்தான் பெண்கள் அணியும் குர்தாவை இந்தியத் தன்மைக்கேற்ப அவர் வடிவமைத்ததே இன்று இந்திய துணைகண்டமெங்கும் மக்கள் அணியும் குர்தா ஆடையாகத் திகழ்கிறது.

அக்காலத்தில் சூஃபிக் கவிதைகளை இசைத்தபடி ஒரு இசைப்பாணராக பிற்கால வாழ்க்கையை வாழ்ந்த ஜெப் உன்னிஸாவின் கஸல் பாடல்களின் பிரதிகள் அவர் இறந்த பிறகே கண்டெடுக்கப்பட்டன.

ஜெப் உன்னிசாவின் கஸல் பாடல்களில் சொந்த வாழ்க்கையின் கூறுகளே அதிகம் தென்பட்டன. முக்கியமாக காதல் பிரிவு, அதிகாரத்தின் மீதான தனது விமர்சனம், இறைபக்தி ஆகியன அமைந்திருந்தன. அவை யாவும் நேரடியாக இல்லாமல் மறைபொருளாக தத்துவத்தின் உட்பொருளாக அமைந்திருந்தன. இவர் இஸ்லாமிய மதத்தின்மீது பற்றுகொண்டு நபியைத் தொழுது எழுதிய பாடல்களில் பிரதானமாக அமைந்துள்ளன. இந்து மதம், கிறிஸ்தவ மதம், ஜௌராஷ்டிர மதம் உள்ளிட்ட மதங்களைப் பற்றி இவர் நன்கு அறிந்திருந்ததை இவரது பல கவிதைகள் உணர்த்துகின்றன. சர்வமத நேசிப்பை வலுப்படுத்துவனவாகவே இவரது படைப்புகள் அமைந்துள்ளன.

கண்டெடுக்கப்பட்ட பாடல்களை மட்டுமே வைத்து அவரது வாழ்க்கைக் குறித்த துல்லியமான விவரங்களைப் பெறமுடியவில்லை. அக்கால கட்டத்து பேரரசர்களின் எந்த வாழ்க்கை வரலாற்றோடும் அவரது பெயர் இணைக்கப்படவில்லை. அவரது தந்தை ஜெப்உன்னிசாமீது கடும் கோபம் கொண்டிருந்ததால் அரச சபையின் வரலாற்றாய்வாளர்களும் ஜெப் உன்னிசாவைப் பற்றி பேச முற்படவில்லை.

அதனாலென்ன நம்ம ஊர் சித்தர்களை அக்காலத்தின் எந்த அரசுகள்தான் ஏற்றுக்கொண்டன? அவர்களைப் போல ஒரு நாடோடியாக வாழ்ந்த, எந்த மத நிறுவனத்துக்கும் கட்டுப்படாமல், சுதந்திரமாக இறைவனோடு நேரடியாக பேச நினைத்த சூஃபிக்கள் பாடல்கள் நாம் கடந்து செல்லும் வரலாற்றுப் பாதையில் விழும் மேகத்தின் நிழல்களாக படர்ந்துகொண்டுதான் இருக்கும்.

உத்தேசமான மொழிபெயர்ப்பில் ஜெப்உன்னிஸாவின் இரண்டு கவிதைகள்:

1)

நான், என் முக்காட்டை உயர்த்த மாட்டேன் -

ஒருவேளை

நான் அப்படி செய்தால்,

அது யாருக்கு தெரியப் போகிறது?



என் முகத்தைப் பார்ப்பதற்கு

என் அழகும் உங்களுக்கு

உகந்ததாயிருக்கவேண்டும் அல்லவா?



பூவுக்குள் மறைந்திருக்கும்

இனிய நிழாலான இடம்போன்ற

மணம்வீசும் ஆன்மா அவளுடையது....



அதைப் பார்த்தவர் யாருமில்லை

என்றாலும் என்னை எல்லோராலும்

பார்க்கமுடியும்...



கவிதைக்குள்ளிருந்து மட்டும்தான்

நான் எதையும் சொல்லமுடியும்

ஏனெனில்

நான் முக்காட்டை உயர்த்தமாட்டேன்



2)



கவலைகளிலிருந்து விடுபட வேண்டுமென

என்றே நான் ஏங்குகிறேன்.



தீயாய் எரியும் வலிகள்

திரும்பவும் வரக்கூடாதெனவும்.....



முடியட்டும்

எனது எல்லா அழுகையும்

மூச்சற்ற சொர்க்கத்தைநோக்கி....



என் ஆத்மாவுக்கு அமைதி கொடுக்கக்கூடியது

இறுதியாக வரும் மரணம்மட்டும் அல்ல,



அது தீர்ப்பு நாளில் என்றால்

மீறல்களுக்காக நான் வருத்தப்படுகிறேன்..

தீயசக்திகளிலிருந்து காத்தருள நான் பிரார்த்திப்பேன்...



ஏக இறைவனே

பாவங்களைக் கழுவ என் கண்ணீருக்கு

அனுமதி தாருங்கள்...



மாஃபீ, உன் விதிக்காக

மீநிலையாய், கணக்குப் பார்க்கும்நாளில்

அச்சப்படவோ வேதனைப்படவோ வேண்டாம்



ராஜாவைக் காட்டிலும் இங்கு

ஃபக்கீர்கள் இருக்கிறார்கள்

பின்பு உயர்ந்தோரும் இல்லை தாழ்ந்தோரும் இல்லை

எனும்படியாக...

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வலைஞர் பக்கம்

2 days ago

வலைஞர் பக்கம்

4 days ago

வலைஞர் பக்கம்

5 days ago

வலைஞர் பக்கம்

7 days ago

வலைஞர் பக்கம்

7 days ago

வலைஞர் பக்கம்

8 days ago

வலைஞர் பக்கம்

11 days ago

வலைஞர் பக்கம்

15 days ago

வலைஞர் பக்கம்

16 days ago

வலைஞர் பக்கம்

18 days ago

வலைஞர் பக்கம்

19 days ago

வலைஞர் பக்கம்

21 days ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

1 month ago

மேலும்