தலைசிறந்த ஆன்மிகத் தலைவரும் ஆரிய சமாஜத்தைத் தோற்று வித்தவரும், சமூக சீர்திருத்தவாதியுமான ஸ்வாமி தயானந்த சரஸ்வதி (Swami Dayananda Saraswathi) பிறந்த தினம் இன்று (பிப்ரவரி 12). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:
* குஜராத்தை உள்ளடக்கிய அன்றைய பம்பாய் மாநிலத்தில் டங்காரா என்ற இடத் தில் பிறந்தார் (1824). இயற்பெயர் மூல சங்கர். வீட்டிலேயே கல்வி கற்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சமஸ்கிருதம், வேதம், புராணம் ஆகியவற்றை கற்றார்.
* சிறு வயது முதலே ஆன்மிகத்தில் நாட்டம் கொண்டிருந்தார். இவருக்குத் திருமணம் செய்துவைக்கப் பெற்றோர் விரும்பினர். ஆனால் ஆன்மிகப் பாதையிலேயே செல்வது என முடிவு செய்து 1846-ல் வீட்டை விட்டு வெளியேறினார்.
* ஹரித்வார், கேதார்நாத் உள்ளிட்ட இடங்களில் மகான்கள், யோகி களிடம் சாத்திரங்கள், யோகம் கற்றார். மதுராபுரியில் வாழ்ந்த சுவாமி விர்ஜானந்தரிடம் சீடராகச் சேர்ந்தார். தயானந்த சரஸ்வதியாக மாறினார்.
* குருவின் கட்டளையை ஏற்று மக்களிடம் ஞானமும், கல்வியும் பரவச் செய்வதற்காக ஆன்மிக, சமூக சேவைகளில் இறங்கினார். ஏகேஸ்வரவாத் (இறைவன் ஒருவனே) என்பதில் நம்பிக்கை கொண்டிருந்தார். மதங்களின் பெயரால் நடைபெறும் ஏமாற்று வேலைகள், மோசடிகளை மக்களிடம் எடுத்துரைத்தார்.
* கல்வியையும் ஞானத்தையும் மக்களுக்கு போதிக்க 1875-ல் ‘ஆரிய சமாஜம்’ என்ற அமைப்பைத் தொடங்கினார். ஜாதி, மத வேறுபாடுகளைக் களைதல், மகளிருக்கு சம உரிமை, பெண்கல்வி, தீண்டாமை ஒழிப்பு, உள்ளிட்ட முற்போக்கு நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டார். குழந்தைத் திருமணம், மூட நம்பிக்கைகளை எதிர்த்தார், சதி வழக்கத்தைக் கண்டித்தார். விதவைகள் மறுமணத்தை ஆதரித்தார்.
* பிற சமயங்களைச் சேர்ந்தவர்களுக்கும் இந்து சமயத்தின் கதவுகளைத் திறந்துவிட்டார். நமது அனைத்துச் செயல்பாடுகளும் மனித குல நலனையே முதன்மை நோக்கமாகக் கொண்டிருக்க வேண்டும் என்றார். அனாதை இல்லங்கள், விதவைகள் மறுவாழ்வு இல்லங்கள், வேதகல்வியைப் பரப்புவதற்கான குருகுலங்களைத் தொடங்கினார்.
* ஆரிய சமாஜத்தின் கிளைகள் முதலில் பம்பாயிலும் பின்னர் பஞ்சாபிலும் தொடங்கப்பட்டன. வெளிநாடுகளிலும் இதன் கிளைகள் பரவின. ஆங்கிலேயர்களுக்கு எதிராகவும் போராட்டங்கள் நடத்தினார். மக்களிடையே தேசிய உணர்வை ஊட்டப் பிரச்சாரம் செய்தார். ‘ஸ்வராஜ்’ என்ற சொல்லை முதன் முதலில் பயன்படுத்தியவர் இவர்தான்.
* இஸ்லாம், புத்தம், ஜைனம், கிறிஸ்தவம், சீக்கியம் உள்ளிட்ட அத்தனை மத நூல்களையும் கற்றவர். சமஸ்கிருத நூல்களை இந்தியில் மொழிபெயர்த்தார். இவரது ‘பிரதிமா பூஜன் விச்சார்’, ‘பாகண்ட கண்டன்’, ‘ருக்வேத பாஷ்யம்’, ‘பஞ்சமஹாயக்ஞ விதி’, ‘ஆர்யாபிவினய்’, ‘வேதாந்த பிரகாஷ்’ உள்ளிட்ட நூல்கள் குறிப்பிடத்தக்கவை. ‘ருக்வேதாதி பாஷ்யபூமிகா’ என்ற நூல் இவரது அசாதாரண மொழிப் புலமையை வெளிப்படுத்தியது.
* 1874-ல் ‘சத்யார்த்த பிரகாஷ்’ என்ற நூலை எழுதினார். இது உலகம் முழுவதும் பிரபலமடைந்தது. தனது எண்ணங்கள், கருத்துகள், சிந்தனைகளை யாருக்கும் அஞ்சாமல் வெளிப்படுத்தியதால் இவருக்கு நிறைய விரோதிகளும் உருவாயினர். இதுவே இவரது மரணத்துக்கும் காரணமானது. பேராசையால் தனக்கு விஷம் கொடுத்துவிட்டு, பின்னர் மனம்வருந்தி மன்னிப்புக்கேட்ட சமையல்காரனை மன்னித்து அவனுக்குப் பணமும் கொடுத்து தப்பித்துப் போகும்படி கூறி அவனைக் காப்பாற்றினார்.
* மக்கள் இவரை ‘மகரிஷி’ எனப் போற்றினார்கள். ஆன்மிகவாதியாகவும் சமூக சீர்திருத்தவாதியாகவும் விளங்கினார். சிந்தனையாளரும் தத்துவவாதியுமான மகரிஷி ஸ்வாமி தயானந்த சரஸ்வதி 1883-ம் ஆண்டு 59-வது வயதில் மறைந்தார்.
முக்கிய செய்திகள்
வலைஞர் பக்கம்
22 hours ago
வலைஞர் பக்கம்
1 day ago
வலைஞர் பக்கம்
2 days ago
வலைஞர் பக்கம்
3 days ago
வலைஞர் பக்கம்
5 days ago
வலைஞர் பக்கம்
7 days ago
வலைஞர் பக்கம்
9 days ago
வலைஞர் பக்கம்
10 days ago
வலைஞர் பக்கம்
11 days ago
வலைஞர் பக்கம்
12 days ago
வலைஞர் பக்கம்
15 days ago
வலைஞர் பக்கம்
15 days ago
வலைஞர் பக்கம்
17 days ago
வலைஞர் பக்கம்
24 days ago
வலைஞர் பக்கம்
26 days ago