மருத்துவத்துக்கான நோபல் பரிசு பெற்ற இங்கிலாந்தைச் சேர்ந்த உயிரி இயற்பியலாளர் சர் ஆலன் லாயிட் ஹட்ஜ்கின் (Sir Alan Lloyd Hodgkin) பிறந்த தினம் இன்று (பிப்ரவரி 5). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:
* இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டுஷயர் பகுதியில் உள்ள பான்பரி என்ற இடத்தில் (1914) பிறந்தார். ராணுவத்தில் பணியாற்றிய தந்தை ஒரு போரில் உயிரிழந்தார். அப்போது இவருக்கு 4 வயது.
* அறிவியலில் அதிக ஆர்வமும், திறனும் கொண்டிருந்தார். தந்தைவழி உறவினர்கள் பலரும் வரலாற்று அறிஞர்கள் என்பதால், வரலாற்றிலும் அதிக நாட்டம் ஏற்பட்டது. பள்ளிக்கல்விக்குப் பிறகு, எதை தேர்ந்தெடுப்பது என்ற குழப்பம் ஏற்பட்டது.
* வரலாற்றைவிட, இயற்கை வரலாற்றிலேயே கூடுதல் ஆர்வம் இருந்ததால், டிரினிட்டி கல்லூரியில் உயிரியல், வேதியியல் கற்றுத் தேர்ந்தார். விலங்கியல் ஆசிரியர் அறிவுறுத்தியதால் கணிதம், இயற்பியலையும் கற்றுக்கொண்டார். அப்போது, கல்லூரி சோதனைக்கூடத்தில் ஒருசில ஆய்வுகளை மேற்கொண்டார். விலங்குகளின் நரம்பு அமைப்புகள் குறித்தும் ஆராய்ந்தார்.
* முதலில் ஆராய்ச்சி மாணவராகவும், பின்னர் டிரினிட்டியின் ஃபெல்லோவாகவும் ஆய்வுகள் மேற்கொண்டார். அங்கு பல அறிவியல் அறிஞர்களைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. நியூயார்க் ராக்ஃபெல்லர் நிறுவன சோதனைக்கூடத்தில் ஆராய்ச்சி மேற்கொள்ளும் வாய்ப்பும் தேடிவந்தது.
* 1938-ல் கேம்பிரிட்ஜ் திரும்பினார். 2-ம் உலகப்போரின்போது, ராணுவத்தில் இணைந்தார். ரேடார் கருவியை மேம்படுத்தும் ஆய்வில் முக்கியப் பங்காற்றினார். இரவு நேரங்களில் போரிடுவதற்கேற்ப, ரேடார் ஸ்கேனிங், டிஸ்ப்ளே அமைப்புகளை மேம்படுத்தினார். போர் முடிந்து, மீண்டும் கேம்பிரிட்ஜ் திரும்பியதும் உடலியல் சோதனைக்கூட ஆசிரியராக நியமிக்கப்பட்டார்.
* அங்கு ஏற்கெனவே பணியாற்றிவந்த சகாக்களுடன் இணைந்து உயிரினங்களின் அயனி இயக்கங்கள், நரம்பு இழைகள் குறித்து ஆராய்ந்தார். கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் உயிரிஇயற்பியல் பேராசிரியராக 17 ஆண்டுகளும், பிறகு லீசெஸ்டர் பல்கலைக்கழக வேந்தராக 13 ஆண்டுகளும் பணியாற்றினார். நீண்டதூரப் பயணம், மீன்பிடித்தல் ஆகிய இரண்டும் அவருக்கு மிகவும் பிடித்த பொழுதுபோக்கு.
* நரம்பு இழைகளின் ரசாயன, மின் பண்புகள் குறித்த ஆராய்ச்சிகளில் ஈடுபட்டார். மூளையின் நரம்பு செல்கள் இடையே நரம்பு இழைகள் மூலம் மின்தூண்டுதல்கள் கடத்தப்படுவதைக் கட்டுப்படுத்தும் ரசாயன செயல்பாடுகள் குறித்த கண்டுபிடிப்புக்காக சர் ஜான் எக்கல்ஸ், ஆண்ட்ரூ ஃபீல்டிங் ஹக்ஸ்லி ஆகிய இருவருடன் இணைந்து மருத்துவத்துக்கான நோபல் பரிசை 1963-ல் பெற்றார்.
* இவர் கண்டறிந்த, நரம்பு செல் சவ்வுகளின் உயிரி மின் தூண்டுதல்களை விவரிக்கும் தொடர் மின் முனைவு மாற்றம் இவரது பெயரிலேயே ‘ஹட்ஜ்கின் சுழற்சி’ எனப்படுகிறது. அதீத உணர்வுத் தூண்டல் காரணமாக நரம்பு சவ்வு முறிவு ஏற்படுவதைக் கண்டறிய இது உதவியது. ராயல் சொசைட்டியின் ஃபெல்லோவாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
* ராயல் சொசைட்டியின் ஆராய்ச்சிப் பேராசிரியராகப் பணியாற்றினார். பல நூல்களை எழுதி வெளியிட்டார். மருத்துவ கவுன்சிலில் உறுப்பினராகவும் செயல்பட்டார். ராயல் சொசைட்டியின் காப்ளே பதக்கம் வென்றார். 1972-ல் சர் பட்டம் பெற்றார்.
* அமெரிக்காவிலும் இங்கிலாந்திலும் பல்வேறு அறிவியல் அமைப்புகளின் உறுப்பினராகவும் செயல்பட்டார். பல பல்கலைக்கழகங்கள் இவருக்கு கவுரவ டாக்டர் பட்டங்கள் வழங்கின. உயிரி இயற்பியல் களத்தில் மகத்தான பங்களிப்பை வழங்கிய ஆலன் லாயிட் ஹட்ஜ்கின் 84-வது வயதில் (1998) மறைந்தார்.
முக்கிய செய்திகள்
வலைஞர் பக்கம்
4 days ago
வலைஞர் பக்கம்
4 days ago
வலைஞர் பக்கம்
9 days ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago