நோபல் பெற்ற அமெரிக்க உயிரியலாளர்
நோபல் பரிசு பெற்ற அமெரிக்க உயிரியலாளர் ஹாவர்டு ராபர்ட் ஹார்விட்ஸ் (Howard Robert Horvitz) பிறந்தநாள் இன்று (மே 8). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:
# அமெரிக்காவின் சிகாகோ நகரில் (1947) பிறந்தவர். தந்தை கணக்காளர். பெற்றோர் இருவருமே நன்கு கற்றவர்கள் என்பதால், கல்வியின் மதிப்பை இவருக்குள் ஆழமாக விதைத்தனர். குழந்தையாக இருந்தபோதே, வண்ணத் துப்பூச்சி போன்ற பூச்சிகள் சேகரிப்பில் ஈடுபட்டார். இறந்த உயிரினங்களை வகைப்படுத்துவதிலும் ஈடுபட்டார்.
# சிறு வயதுமுதல் தன்னை அறிவியலில் நாட்டம்கொள்ளச் செய்து, ஒவ்வொரு கட்டத்திலும் உற்சாகமூட்டியதும், பல்வேறு சோதனைகளை தனிப்பட்ட முறையிலும் பள்ளியிலும் மேற்கொள்ளச் செய்ததும் தனது தாய்தான் என்று குறிப்பிட்டுள்ளார்.
# பள்ளிப் படிப்பை முடித்ததும், மசாசூசெட்ஸ் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜியில் (எம்ஐடி) சேர்ந்து, கணிதம், பொருளாதாரத்தில் இரு இளங்கலைப் பட்டங்கள் பெற்றார். அறிவியல் ஆராய்ச்சியில் ஆர்வம் கொண்டிருந்தாலும் பல்வேறு வழிகளில் வருமானம் ஈட்டுவதில் அதிக ஈடுபாடு காட்டினார். வியாபாரம், பத்திரிகை நடத்துவது மட்டுமல்லாமல், பகுதிநேர வேலைகளிலும் ஈடுபட்டார்.
# புத்தகங்கள் வாசிப்பதில் அதிக ஆர்வம் கொண்டவர். இவரை மூலக்கூறு அறிவியல் துறை ஈர்த்தது. ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் உயிரியல் பயின்றார். இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் மூலக்கூறு உயிரியல் சோதனைக்கூடத்தில் ஆராய்ச்சியாளராக சேர்ந்தார்.
# எம்ஐடி-யில் உயிரியல் துறைப் பேராசிரியராக பணியில் சேர்ந்ததும், ஆராய்ச்சிகளில் கவனம் செலுத்தினார். ஒட்டுண்ணி அல்லாத நூற்புழுவை மாதிரி உயிரினமாகக் கொண்டு ஆராய்ச்சிகளை மேற்கொண்டார். இதில் நரம்பணு வளர்ச்சி உட்பட பல்வேறு வளர்ச்சி குறித்து ஆராய்ந்தார்.
# நூற்புழுக்களைக் கொண்டு செல் உயிரிழப்புகளைக் கட்டுப்படுத்தும் மரபணுக்களைக் கண்டறிந்து வகைப்படுத்தினார். இதற்காக 2002-ல் சிட்னி பிரென்னர், ஜான் சல்ஸ்டன் ஆகியோருடன் இவருக்கும் கூட்டாக மருத்துவத்துக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.
# மரபியல், மூலக்கூறு உயிரியல், உயிரிவேதியியல், எலெக்ரோ ஃபிசியாலஜி, லேசர் மைக்ரோசர்ஜரி, ஃபார்மகாலஜி ஆகிய களங்களைப் பயன்படுத்தி, நரம்பு மண்டல அமைப்பை மரபணுக்கள் கட்டுப்படுத்துவதையும், நரம்பு மண்டல அமைப்பு, நமது நடத்தையைக் கட்டுப்படுத்துவதையும் ஆராய்ந்தார்.
# பிற ஆராய்ச்சியாளர்களுடன் இணைந்து, நூற்புழுவின் மரபணுவில் உள்ள 100 மைக்ரோ ஆர்என்ஏக்களின் தொகுப்பை வகைப்படுத்தினார். ஹெட்ரோக்ரானிக் மரபு பிறழ்வு, செல் பிரிவு, செல் வளர்ச்சி, செல் வரிசையின் மற்ற அம்சங்கள், சமிக்ஞை கடத்திகள், உருவத் தோற்றம், நரம்பு வளர்ச்சி ஆகியவை தொடர்பாக ஏராளமான நுட்பங்களை ஆராய்ந்து கட்டுரைகள் எழுதினார். செல் உயிரிழப்பின் காலகட்டத்தைக் கட்டுப்படுத்தும் காரணிகளை அடையாளம் கண்டார்.
# புற்றுநோய் உட்பட பல நோய்களுக்கான சிகிச்சை தொடர்பான ஆராய்ச்சிகளுக்கும் நோய் அறிகுறிகளைக் கண்டறியவும் இவரது கண்டுபிடிப்புகள் பயன்படுகின்றன. உயிரி மருத்துவ அறிவியல் கழகத்தின் வில்லே பரிசு, நரம்பணு உயிரியலின் ஸ்பென்சர் விருது, இங்கிலாந்து மரபணுக் கழகத்தின் மெண்டல் பதக்கம், குருபர் அறக்கட்டளையின் மரபணுப் பரிசு உட்பட ஏராளமான பரிசுகள், பதக்கங்களைப் பெற்றுள்ளார்.
# தனியாகவும், பிற அறிஞர்களுடன் இணைந்தும் பல நூல்களை எழுதியுள்ளார். 250-க்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளை வெளியிட்டுள்ளார். தற்போது எம்ஐடி உயிரியல் துறையில் கவுரவப் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார். உயிரியல் ஆராய்ச்சியில் மகத்தான பங்களிப்பை வழங்கியுள்ள ஹாவர்டு ராபர்ட் ஹார்விட்ஸ் இன்று 70 வயதை நிறைவுசெய்கிறார்.
முக்கிய செய்திகள்
வலைஞர் பக்கம்
21 hours ago
வலைஞர் பக்கம்
2 days ago
வலைஞர் பக்கம்
4 days ago
வலைஞர் பக்கம்
6 days ago
வலைஞர் பக்கம்
7 days ago
வலைஞர் பக்கம்
8 days ago
வலைஞர் பக்கம்
9 days ago
வலைஞர் பக்கம்
12 days ago
வலைஞர் பக்கம்
12 days ago
வலைஞர் பக்கம்
14 days ago
வலைஞர் பக்கம்
21 days ago
வலைஞர் பக்கம்
23 days ago
வலைஞர் பக்கம்
24 days ago
வலைஞர் பக்கம்
26 days ago
வலைஞர் பக்கம்
27 days ago