பள்ளி மாணவர்களிடையே பரவும் ஜாதிக் கயிறு கலாச்சாரம்!

By ரா.தாமோதரன்

சமீபத்தில் மூன்று காட்சிகள் என் கண்ணில்பட்டன. ஆசிரியராகிய எனக்கு அது பேரதிர்ச்சியாக அமைந்துவிட்டது. இதை உன்னிப்பாகப் பார்க்கும் யாருக்கும் பேரதிர்ச்சியாகத்தான் அமையும். உம். இந்தப் பிள்ளைகள் வாழ்க்கை என்ன ஆகப்போகிறதோ? என்று நீங்கள் சொல்லத் தோன்றும்.

பள்ளிக்கு வரும் மாணவன் குளித்துவிட்டு, ஒழுக்கமாக உடை அணிந்து, புத்தகங்களைக் கொண்டு வரவேண்டும் என்பதுதான் எல்லாருடைய விருப்பம். அதற்கு மாறாக இன்றைய பெரும்பாலான மாணவர்களின் தலைமுடி முதல் காலணிவரை இருப்பது எல்லாம் நாகரிகம் என்ற போர்வையில் ஒழுக்கமின்மைதான். குறிப்பாக அரசுப் பள்ளி மாணவர்களிடம் இந்த விஷயம் கை ஓங்கி இருக்கிறது. (இது எல்லாம் எங்கள் பள்ளியில் இல்லை என்பவர்களுக்கு வாழ்த்துகள்).

முதல்காட்சி. பள்ளிக்கு வரும் ஒரு சில மாணவர்களின் பாடநூல்களில், எழுதும் குறிப்பேடில் அவருடைய பெயருடன் ஜாதிப்பெயரை எழுதி வருவது. இதை முதன்முதலில் பார்த்த எனக்குத் திக்கென்று வாரிபோட்டது. இந்த உலகம் என்ன என்று புரியாத பிஞ்சு மனதில் ஏதோ ஒரு விஷவிதையை அந்த மாணவனின் ஜாதிய அபிமானிகளால் விதைக்கப்பட்டுவிட்டது. என்னிடம் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவனிடம் இதைப் பற்றிக் கேட்டால், பத்தாம் வகுப்பு படிக்கும் என் அண்ணன்தான் எழுதச் சொன்னான் என்கிறான். அவனிடம் கேட்டால், எங்கள் ஊர் ஜாதி அமைப்பைச் சேர்ந்த கல்லூரி அண்ணன்கள் எழுதச் சொன்னார்கள் என்கிறான். எது எப்படியோ, சின்னஞ்சிறு பிஞ்சுக் கையால் பெயருடன் ஜாதி எழுதப்பட்டுவிட்டது. கண்டிப்பாகச் சமூகத்தைக் கெடுக்கும் சீர்கேட்டிற்கு அந்தச் சின்னஞ்சிறு மாணவன் காரணமில்லை என்பது நமக்குத் தெரியும். இப்படி எழுதாலாமா? என்கிற கனிவான கேள்விக்கு, அந்த மாணவனின் பதில், வெறும் அழுகை மட்டும்தான். அவனது அழுகை, இன்னதென்று புரியாமல் தவறு செய்துகொண்டிருக்கும் சமூகத்தின் ஒட்டுமொத்த அழுகையாகத்தான் பார்க்கிறேன்.

இரண்டாவது காட்சி. மாணவனின் வலது கையில், கைப்பட்டை அணிவது. அதுவும் சாதாரணக் கைப்பட்டை அல்ல. ஜாதி நிறத்தில் அமைந்த கைப்பட்டை. இது ஒரு குறிப்பிட்ட ஜாதி மாணவர்கள் மட்டும்தான் செய்கிறார்களா என்றால் இல்லை. அந்தந்த பள்ளியில் இருக்கும் ஒரு சில மாணவர்கள், தம் ஜாதிக் கட்சியின் பட்டையை (பேண்ட் - Band) அணிகிறார்கள். ப்ரெண்ட்ஷிப் பேண்ட் அணிவது, ரெட் ரிப்பன் பேண்ட் அணிவது கேள்விப்படிருக்கிறோம். இந்தப் புதிதான பேண்ட் பேஷனை நினைத்தால். சிரிப்புடன், அந்த மாணவர்கள்மீது பரிதாபம்தான் எழுகிறது. கைகளில் சாமிக் கயிறுபோய், வெள்ளை இரும்பு வளையம்போய், செம்புவளையம்போய், ரப்பர் பேண்ட் போய், தற்போது கருப்பு-வெள்ளை, சிவப்பு-பச்சை, வெள்ளை-மஞ்சள், சிவப்பு-மஞ்சள், நீலம்-வெள்ளை, நீலம்-சிவப்பு கலந்த ஜாதிக் கயிறுகள் அணிந்திருக்கிறார்கள், நாளைய சமுதாயத்தை முன்னேற்றப்போகிற மாணவர்கள்.

மூன்றாவது காட்சி. குழுவாக அமையும் மாணவர்கள் தம் பெயரைக் கைகளில் எழுதிக் கொள்வது. ஏதோ பேனாவில் எழுதுவது என்று தயவுசெய்து நினைத்துக்கொள்ளாதீர்கள். முதலில் காம்ப்பஸ் (compass) எடுத்துக் கொள்ளவேண்டும். எழுதப் போகும் மாணவனின் கையை இன்னொரு மாணவன் பிடித்துக்கொள்ளவேண்டும். கை நடுநடுங்கக் கூடாது. காம்பஸை முனையைக் கொண்டு, வலதுகை அல்லது இடதுகையில் மெதுவாக, ரத்தம் அதிகமாக வெளியேறபடி கீறிக்கீறி எழுதவேண்டும். வலியைப் பொறுத்துக்கொள்ளும்படி எழுதவேண்டும். பீட்ருட் நிறம்போல எழுத்து அமையவேண்டும். எழுதி முடித்தபின் சந்தோஷத்தில் குதிக்கவேண்டும். இரண்டுநாள் கழித்துப் புண் ஆறிவிட்டபின், பொக்குவை நீக்கிவிட்டுப் பார்த்தால், உங்கள் பெயர் உங்கள் கையில் தழும்பாக அமையும். எவ்வளவு அற்புதம் இது. இந்த அற்புதத்திற்குத் தலைகுனியவேண்டியவர்கள் நம் பெற்றோர்கள். இரண்டாவதாகத் தலைகுனியவேண்டியவர்கள் ஆசிரியர்கள். பெற்றோர்கள் தம் பிள்ளைகளைக் கண்டிக்கமுடியாததற்காகத் தலைகுனியவேண்டும். அறிவுரை கூறியும் திருந்தாத மாணவர்களை நினைத்து ஆசிரியர்கள் தலைகுனியத்தான்வேண்டும்.

இந்த மூன்று காட்சிகளைப் பார்த்தபின் நமக்குச் சில கேள்விகள் எழத்தான் செய்யும். அதில் முதல் கேள்வி, ஆசிரியர்கள் என்னதான் செய்கிறார்கள்? என்பது. அரசுப் பள்ளியைப் பொறுத்தவரை, ஆசிரியர்கள் அறிவுரையும் கலந்தாலோசனையும்தான் தரமுடியும். அந்த மாணவர்களின் ஜாதிக் கைப்பட்டையை அறுத்தால், ஆசிரியர்களுக்கு ஷாக் அடித்துவிடும். எந்த ஆசிரியர் ஒரு மாணவனின் கைப்பட்டையை அறுக்கிறாரோ, அவர் ஒழுக்கத்தைப் பேணுபவர் ஆகமாட்டார். அவர் அந்த ஜாதியத்திற்கு எதிரானவர். மாற்று ஜாதியைப் பள்ளியில் மறைமுகமாகத் தூண்டுபவர் என்று பார்க்கப்படுகிறது. ஓருவேளை அதே ஜாதி என்றால், உறவுப் பகை உருவாகிவிடுகிறது. எனவே, ஆசிரியர்களின் வார்த்தைகள் – இந்த மாதிரி எல்லாம் பள்ளிக்கு வரக்கூடாது. பள்ளிக்கு வெளியே அணிந்துகொள். பள்ளிக்குள் வேண்டாம். நீ படிக்கிற பையன். உங்கள் வீட்டில் கேள்விப்பட்டால் வருத்தப்பட மாட்டார்களா?. நீ நல்ல பையன்தானே– என்பதுதான். இதை மீறி கண்டித்தாலோ, மாணவனுக்கு ஏதாவது நேர்ந்தாலோ ஆசிரியர்களின் பணிக்கு உத்தரவாதம் இல்லை. அடிப்படையாக ஒரு மனிதனுக்குப் பணி பாதுகாப்பு அவசியம் என்பதை நீங்கள் புரிந்துகொள்ளவேண்டும்.

இதைச் சரி செய்ய நாம் என்ன செய்யவேண்டும்? இதைச் சரி செய்ய ஆசிரியர்கள், மாணவப் பெற்றோர்களின் உறவு முக்கியமானது.

பெற்றோர்களைப் பொறுத்தவரை, தன்னுடைய பிள்ளையின் (மாணவனின்) ஒழுக்கச் செயல்பாடு என்ன? சமீபத்தில் மாறி இருக்கிறதா? அவனுடைய பேச்சில், நடையில் எந்த மாற்றம் நிகழ்கிறது? அவனுடைய நண்பர்களின் தன்மை எப்படி? பிள்ளையின் கவனம் படிப்பிலா, பொறுக்கித்தனத்திலா? அவனைத் தனியாக அழைத்து அன்புடன் பேசுகிறேனா? இது சரி, இது தவறு என்று சொல்கிறேனா? என்பதில் கவனம் கொள்ளவேண்டியுள்ளது.

அறிவுரையுடன் ஆசிரியர்கள் நின்றுவிடாமல், மாணவனை அழைத்துக் கலந்தாலோசிக்கவேண்டும். உங்களால் மாற்றத்தை ஏற்படுத்த முடியவில்லை எனில். தலைமையாசிரியர் வழியாகப் பெற்றோரிடம் தகவலைத் தெரிவித்துவிடவேண்டியதான். தவறு செய்யும் மாணவனைக் கண்டிப்பதோ, தண்டிப்பதோ ஆசிரியரின் பணி இல்லை. மாறாக ஒழுக்கத்தைக் கற்றுத்தரவேண்டும் நாம். ஒழுக்கம் தவறினால், கண்டிப்பாகப் பெற்றோரிடம் முறையிடுவது நமது கடமை. அதுவும் நாம் நேரடியாக இல்லாமல், தலைமையாசிரியர் வழி அமையவேண்டும்.

ஆசிரியர்கள், மாணவப் பெற்றோர்களின் உறவு சரியாக அமையும் பட்சத்தில் பிரச்சினை அதிகமாக வளர வாய்ப்பில்லை. மாணவர்களின் கல்வி அதிகமாகப் பாதிப்பதில்லை. இதுபோன்ற சமூகச் சீர்க்கேட்டினால் பாதிக்கப்படுவது ஆசிரியரோ, பெற்றோரோ, ஜாதியோ இல்லை. மாணவர்கள் மட்டும்தான். அவர்களுடைய ஒழுக்கம், கல்வி பாதிக்கப்படுகிறது.

கோயில் செல்கிறோம். அங்கு அனைவரும் ஒன்றாகத்தான் சாமி கும்பிடுகிறோம். ஹோட்டல் செல்கிறோம். ஒன்றாகத் தான் சாப்பிடுகிறோம். பேருந்தில் ஒன்றாகப் பயணிக்கிறோம். அங்கு சாதிப் பார்க்கப்படுவதில்லை. பள்ளி என்பது கோயில் போன்றது. இங்கு கல்விதான் கடவுள். ஜாதியம் அல்ல. பள்ளியில் மாணவர்கள் கல்வியை வளர்க்க ஆசிரியர்கள் பாடுபடுகிறார்கள். வெளியே பிள்ளைகளை வளர்க்க பெற்றோர்கள் பாடுபடுகிறார்கள். நடுவில் நுழைந்திருக்கும் ஜாதி நரிக்கூட்டம்தான் பிள்ளைகளைக் கெடுக்கிறது.

பெற்றோர்களே! உங்கள் பிள்ளைகளைத் தயவுசெய்து காப்பாற்றிக்கொள்ளுங்கள். ஆசிரியர்களே! எப்போதும்போல், மாணவர்களுடன் அன்புடன் உரையாடி புத்திமதி கூறித் திருத்துங்கள். ஜாதிய அபிமானிகளே! உங்கள் அரசியலுக்கு மாணவர்களைப் பலிகடா ஆக்காதீர்கள். அவர்கள் படித்து முன்னேறவேண்டும். அவர்கள் கைகள் இப்போதைக்குச் சுமக்க வேண்டியது புத்தகம்மட்டும்தான். உங்கள் ஜாதி பேண்ட் அல்ல. ஜாதிகளுக்கு மாணவர்கள் ஒன்றும் ஜாதிப்பரப்புச் செயலாளர்கள் இல்லை. அவர்கள் மாணவர்கள். இந்த பரந்த இந்தியாவைத் தாங்கப் போகிறவர்கள். தயவுசெய்து யாராக இருந்தாலும் ஜாதியத்தை மாணவர்களிடம் புகுத்தாதீர்கள்.

மாணவப் பருவம் என்பது வாழ்க்கையின் முக்கியமான பருவம். அந்த சமயத்தில், அவர்களை ஜாதியின் பெயரால் மடை மாற்றி குழப்பத்தை ஏற்படுத்தாதீர்கள்.

நல்ல எதிர்காலம் அமையவேண்டும் என்றால், தயவு செய்து ஜாதி என்கிற விஷவிதையை மாணவர்களின் மனதில் யாரும் விதைக்காதீர்கள். அது நிச்சயமாக வருங்காலத்தில் நல்ல கனியையோ, நிழலையோ தரப்போவதில்லை.

ரா.தாமோதரன்- தொடர்புக்கு raa.damodaran@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வலைஞர் பக்கம்

7 days ago

வலைஞர் பக்கம்

8 days ago

வலைஞர் பக்கம்

13 days ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

மேலும்