புது எழுத்து | விழியன் - சிறுவர் இலக்கியத்தின் இளம் குரல்!

By அ.பார்வதி

"குழந்தைகள் சொல்கின்றனர்... எங்களுக்கு புத்தகங்களை தாருங்கள். எங்களுக்கு சிறகுகள் தாருங்கள். வலுவாகவும் சக்திவாய்ந்தவர்களாகவும் இருக்கும் நீங்கள், எங்களை தூர தேசத்துக்கு தப்பிக்கவிடுங்கள். மாயமந்திர தோட்டங்கள் இருக்கும், அங்கே நீண்ட மாளிகைகளை எங்களுக்கு கட்டித் தாருங்கள். நிலவொளியில் தேவதைகள் மிதப்பதைக் காட்டுங்கள், பள்ளியில் கற்பிக்கப்படுவதை எல்லாம் நாங்கள் கற்றுக்கொள்கின்றோம், ஆனால் எங்கள் கனவுகளை நசுக்கிவிடாதீர்கள்” - என்று சிறுவர் இலக்கியத்தின் முன்னோடியான ஹசார்ட் மிக அழகாக குழந்தைகளின் மவுன அவலத்தைப் பற்றி சொல்லியிருப்பார். அதில் ஆழ்ந்த அர்த்தமும் உண்டு.

ஆம்! குழந்தைகளின் உலகமே வேறு... அதில் பறவைகள் இருக்கும், பட்டாம்பூச்சிகள் இருக்கும், கனவுகள் இருக்கும், கற்பனைகள் இருக்கும். அதைப்புரிந்து கொண்டு, நாமும் அவர்களோடு சேர்ந்து பயணிக்க வேண்டும். ஆனால், இன்றைய நிலையோ பெற்றோர்கள் ஒருபக்கம் கைபேசியிலும், குழந்தைகள் மறுபக்கம் முட்டாள் பெட்டியிலும் மூழ்கி இருக்கின்றனர். இந்த அவல நிலையின் எழுத்துலக மீட்பர்களில் ஒருவராகவும் சமகால கதைசொல்லியாகவும் உருவெடுத்துள்ளார் சிறுவர் இலக்கிய எழுத்தாளர் விழியன் என்கிற உமாநாத் செல்வன்.

தொழில்நுட்பத் துறையில் இருந்துகொண்டே சிறுவர் இலக்கியத்தில் கவனத்தை ஈர்க்கும் ஓர் படைப்பாளியாக மாறியுள்ளார். 2005-ல் 'தோழியே உன்னைத் தேடுகிறேன்" என்ற தன் முதல் புத்தகத்தின் மூலம் எழுத்துலகில் அடியெடுத்து வைத்த விழியன், அதன் பிறகு சிறுவர் இலக்கியத்தில் மட்டும் 10 புத்தகங்களை வெளியிட்டுள்ளார்.

காலப் பயணிகள், பென்சில்களின் அட்டகாசம், அந்தரத்தில் நடந்த அபூர்வ கதை, பென்சில்ஸ் டே அவுட், டாலும் ழீயும், மாகடிகாரம், வளையல்கள் அடித்த லூட்டி, உச்சி முகர், அக்னிச் சுடர்கள், திரு. குரு ஏர்லைன்ஸ் என இவர் சிறுவர்களுக்காக எழுதிய பத்து புத்தகங்களும் கவனத்துக்குரியவை.

தன் எழுத்துலகப் பயணம் குறித்து பேசத் தொடங்கும் முன் என்னிடம் அவர் முன்வைத்த கேள்வி... "நீங்கள் எவ்வளவு நேரம் உங்கள் குழந்தைகளோடு டைம் ஸ்பெண்ட் பண்றீங்க?"

கேள்விக்கான பதிலைச் சொன்ன பின்..., "சரி, கல்யாணம் ஆன பிறகு, குழந்தைகள் வந்த பிறகு, கூச்சல் நிரம்பிய உங்கள் உலகில் அவர்களை இழுக்காமல், அவர்களது உலகில் நீங்கள் செல்லுங்கள்" என்று பொதுவாகச் சொல்லிவிட்டு தொடர்ந்தார்...

"நான் கடந்த 15 ஆண்டுகளாகத் தொழில்நுட்பத் துறையில் இருக்கிறேன். ஆபிசில் இருந்தால் கம்ப்யூட்டர் மானிட்டர், வீட்டுக்கு வந்தால் கைபேசி மானிட்டர் என்று மனிதர்களின் முகத்தை கூடப் பார்க்க முடியாத நிலைக்கு நானும் வந்துவிடக் கூடாது என்பதில் தெளிவாக இருந்தேன். என் தந்தையும் 25 ஆண்டுகளாக சமூகப் பணி, அறிவியல் - அறிவொளி ஆகிய இயக்கங்களில் செயல்பட்டு வருபவர். அதனால்தான் என்னவோ எனக்கும் மனிதர்கள் மேல் உள்ள பிணைப்பு அதிகமாகவே இருந்தது. அந்தப் பிணைப்பு அப்படியே குழந்தைகளின் மேல் பரவியது.

குழந்தைகளின் இன்றைய இயந்திரத்தனமான நிலையைப் பார்த்து வருந்தினேன். பெற்றோர்களும் ஒரு சின்ன காக்கா கதை கூட சொல்ல முடியாத, நேரத்தின் பின்னால் ஓடும் ரோபோக்களாக மாறி இருப்பதைப் பார்த்து வருந்தினேன். சிறுவர்களுக்கான எழுத்தாளர்களும் குறைந்துகொண்டே வருவதை உணர்ந்தேன்... இப்போது அவர்களுக்காகவே எழுதத் தொடங்கிவிட்டேன்" என்று புன்னகையோடு சொல்கிறார்.

இவர் எழுதிய பல புத்தகங்களுக்கு விருதுகளும் கிடைத்துள்ளன. 2013-ல் "அந்தரத்தில் நடந்த அபூர்வ கதை" நாவலுக்கு தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் சிறந்த சிறுவர் இலக்கியத்திற்கான விருதை வழங்கியது. 2014-ல் "மாகடிகாரம்" என்னும் புத்தகத்துக்கு, ஆனந்த விகடனின் சிறந்த சிறுவர் இலக்கியத்திற்கான விருது கிடைத்தது. இளம் சிறுவர் இலக்கிய படைப்பாளி விருதான சேஷன் சன்மான் விருதையும் 2015-ல் இவர் பெற்றுள்ளார்.

"முதலில் சிறுவர் இலக்கியம் என்றாலே என்னவென்று தெரியாத பல பெற்றோர்களுக்கு புரிதலை ஏற்படுத்த முயற்சிகளைத் தீவிரப்படுத்தி வருகிறேன். குழந்தைகளும் வாசிப்பார்கள், அவர்களுக்காகவும் எழுத்தாளர்கள் இருக்கிறார்கள் என்பதை உணர்த்துவதே படாதபாடாக இருக்கிறது. கல்கி, மங்கையர் மலர், சுட்டி விகடன், துளிர் போன்ற இதழ்களில் தொடர்ந்து குழந்தைகளுக்காக எழுதிவருகிறேன்.

சிறுவர் இலக்கியம் என்பது பேசத் துவங்கும் குழந்தை முதல் சுமார் பதினான்கு வயது வரையிலான குழந்தைகளுக்கான இலக்கியம் என்று வரையறுத்துக்கொள்ளலாம். ஏழு வயது வரையிலானோர்க்கான இலக்கியத்தைக் குழந்தை இலக்கியம் என்றும், அதற்கு அதிகமான வயதினருக்கானதைச் சிறுவர் இலக்கியம் என்று வகைப்படுத்துகின்றனர். அதிகம் கவனிக்கபடாத சிறுவர் இலக்கியத்தில் இருந்தும் பல படைப்பாளிகள் உருவெடுத்துள்ளனர், வாண்டு மாமாவை நம்மால் மறக்க முடியுமா? சுப்பாண்டி, சண்டா மாமா போன்ற காமிக் புத்தகங்களில் வரும் கதாபாத்திரங்களை அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியாது."

குழந்தைகளின் கற்பனை உலகை புரிந்துக்கொள்வதற்காகவே அவர்களோடு அதிக நேரம் செலவிடும் இவரை, இவரை நவீன கதை சொல்லி என்றும் சொல்லலாம். இவரது வாட்ஸ்அப் குரூப் ஒன்றில் மட்டும், சுமார் 600 பெற்றோர்கள் மொய்க்கிறார்கள். எங்களிடம் கதை சொல்ல எதுவுமில்லை, கதைகள் சொல்லத் தெரியவில்லை என்று வரும் பெற்றோர்களுக்கு, இவரே தனிப்பட்ட முறையில் இரவு நேர கதைகளை மெசேஜாக தட்டி விடுகிறார். அவ்வப்போது ஆடியோ மெசேஜாகவும் அனுப்பி குழந்தைகளை குஷிப்படுத்துகிறார். மேலும், குழந்தை வளர்ப்பு முறை, கதை சொல்லும் பழக்கம் என பல கட்டுரைகளையும் தொடர்ந்து எழுதி வருகிறார்.

இவரது ஒரு கதையில், 'பாபு என்ற ஓர் இளைஞன் தன் நண்பன் மோகனிடம் ஐந்து ரூபாய் சில்லறை கேட்கிறான். சில்லறை இல்லாத நிலையில், எப்படியோ அலைந்து திரிந்து கடைக்காரருக்கு கொடுக்க வேண்டிய சில்லறையை கொடுத்துவிடுகிறான். சிறிது நேரம் பிறகு, தன் நண்பனின் பாக்கெட்டில் ஐந்து ரூபாய் இருப்பதைப் பார்க்கிறான். நண்பர்களுக்குள் வாதம் ஏற்படுகிறது. பாபு கொஞ்சம் அதிகமாகவே திட்டிவிட்டான். அமைதியாக அந்த இடத்தை விட்டு கிளம்பிய மோகன், தன் அறைக்குள் சென்றுவிட்டு, கிழிந்து அந்த ஐந்து ரூபாய் தாளை பார்க்கிறான்... வறுமையில் வாடும் தன் அம்மா, அப்பா, தம்பி, தங்கையின் முகங்கள் அவனுக்கு தெரிகிறது. காந்தி புன்னகைக்கிறார்' என்று அமைதியாக முடிக்கிறார் அந்த கதையை.

ஏழ்மை, வறுமை, நட்பு, குடும்பம், இயலாமை போன்ற பெரிய பெரிய கருத்துக்களை மிக அழகாக தன் கதைகளில் அடக்கிவிடுகிறார். குழந்தைகளின் மொழியை அறிந்து அதற்கு ஏற்ப இவர் எழுதுவதில் உள்ள மாயாஜாலமே தனி.

2009-ல் வெளிவந்த "காலப் பயணிகள்" என்னும் நாவலில், பயணங்களைப் பற்றியும், இயந்திர வாழ்க்கையிலிருந்து தப்பிக்க பயணம் தான் ஒரே வழி என்பதையும் மிக அழகாக விவரித்திருப்பார். அக்கதையில் வரும் கதாபாத்திரங்கள், ராமாயணக் காலத்துக்கும் மகாபாரத கலாத்துக்கும் பயணிப்பார்கள். கதைக்குள்ளேயே அவர் சொல்ல வரும் கருத்துகளையும் சொல்லி இருப்பார். அப்படி ஒரு சுவாரசிய படைப்பு.

"குழந்தைகளுக்காக கதை எழுதுவது அவ்வளவு எளிதான விஷயம் அல்ல, நல்ல கருத்துகள் பல சொன்னாலும், தப்பான ஒரு கருத்தை சொல்லிவிடக் கூடாது. பிஞ்சு நெஞ்சில் எளிதில் பதியக்கூடிய விஷயங்கள் என்பதால் மிக கவனமாகக் கையாள வேண்டும். நமது மனமும் சம நிலையில் இருக்க வேண்டும், இல்லையேல் சிக்கல்தான். மேலும் பேசிக்கொண்டே இருந்தால் தான், அவர்கள் பயன்படுத்தும் வார்த்தைகளை தெரிந்துகொள்ள முடியும்" என்று தன் அனுபவங்களை அடுக்கிகொண்டே போகிறார்.

என்ன தான் ஆபிசில் அதிக வேலை இருந்தாலும், தன் மனதை என்றுமே துள்ளலாக வைத்துள்ள விழியனிடம், தமிழில் சமகால சிறுவர் இலக்கியத்தில் உள்ள சவால்களையும் சிக்கல்களையும் பற்றி கேட்டேன்.

"என்னதான் இருந்தாலும் நீ குழந்தைகளுக்கு எழுதுபவன்தானே என்ற ஏளனப் பார்வை பரவலாக இருப்பது உண்மைதான். குழந்தைகளுக்கான புத்தகம் என்பதால், வரைபடங்கள், ஓவியங்கள் என பலரின் பங்களிப்பு இதில் தேவைப்படுகிறது. பப்ளிஷர்களும் இங்கு குறைவு. எல்லாவற்றையும் விட மிக முக்கியமானது, குழந்தை எழுத்தாளர்களுக்கான அங்கீகாரம் இன்னும் கிடைக்கவில்லை என்பதே மனதை நெருடுகிறது" என்றார் விழியன்.

எனினும், இந்த எதிர்மறையான சூழல்களால் சிறுவர்களுக்காக எழுதித் தள்ளும் உத்வேகத்தை மட்டும் குறைத்துக்கொள்ளப் போவதில்லை என்று உற்சாகத்துடன் விடைபெற்றார் விழியன்.

எழுத்தாளர் விழியனின் நூல்கள்: காலப் பயணிகள் I பென்சில்களின் அட்டகாசம் I அந்தரத்தில் நடந்த அபூர்வ கதை I பென்சில்ஸ் டே அவுட் I டாலும் ழீயும் I மாகடிகாரம் I வளையல்கள் அடித்த லூட்டி I உச்சி முகர் I அக்னிச் சுடர்கள் I திரு. குரு ஏர்லைன்ஸ் - வெளியீடு - புக் ஃபார் சில்ரன்

- அ.பார்வதி, தொடர்புக்கு parvathysaran95@gmail.com

முந்தைய அத்தியாயம் >>புது எழுத்து | சைபர்சிம்மன் - நெட்டிசன்களின் விக்கிப்பீடியா

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வலைஞர் பக்கம்

8 hours ago

வலைஞர் பக்கம்

1 day ago

வலைஞர் பக்கம்

2 days ago

வலைஞர் பக்கம்

4 days ago

வலைஞர் பக்கம்

5 days ago

வலைஞர் பக்கம்

8 days ago

வலைஞர் பக்கம்

8 days ago

வலைஞர் பக்கம்

10 days ago

வலைஞர் பக்கம்

11 days ago

வலைஞர் பக்கம்

13 days ago

வலைஞர் பக்கம்

13 days ago

வலைஞர் பக்கம்

16 days ago

வலைஞர் பக்கம்

23 days ago

வலைஞர் பக்கம்

25 days ago

வலைஞர் பக்கம்

26 days ago

மேலும்