எம்ஜிஆர் 100 | 94 - மாணவர்கள் மீதான மதிப்பு

By ஸ்ரீதர் சுவாமிநாதன்

நாட்டின் எதிர்காலத் தூண்களான மாணவர்கள் மீது மிகுந்த அன்பு கொண்டவர். அவர்களின் கோரிக்கைகளுக்கும் உணர்வுகளுக்கும் மதிப்பளிப்பவர். அவரது படங்களில் மாணவர்களுக்கு அறிவுரைகள் கூறும் காட்சிகளும் பாடல்களும் இடம்பெறும். தன் ரசிகர்களான மாணவர்கள் பொறுப்புள்ள குடிமக்களாய் உருவாக வேண்டும் என்பதில் அக்கறை செலுத்துவார்!

அதிமுகவை எம்.ஜி.ஆர். தொடங்கிய பின், 1974-ம் ஆண்டில் திருவொற்றியூர் நகரச் செயலாளராக இருந்தவர் மீது கட்சியின் கொள்கைகளுக்கு புறம் பாக செயல்பட்டார் என்று புகார்கள் வந்தன. அதிமுகவில் இருந்து அவர் நீக்கப்பட்டதாக அறிவிக்கப்பட் டது. ஆனால், அவர் மீது வேண்டு மென்றே பொய்யான புகார் கொடுக்கப் பட்டுள்ளதாக திருவொற்றியூர் பகுதியின் அதிமுக மாணவர் அமைப்பைச் சேர்ந்தவர்கள் கொந்தளித்தனர்.

மாணவர் அமைப்பில் இருந்த எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகரான செல்வ குமார் என்பவர் தலைமையில் ராமாவரம் தோட்டத்துக்கு மாணவர்கள் குழுவாகச் சென்றனர். வெளியே புறப்படத் தயாராகும் முன் காத்திருந்தவர்களை எம்.ஜி.ஆர். சந்தித்தார். "திருவொற்றியூர் நகரச் செயலாளர் மீது எந்தத் தவறும் இல்லை. அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டது தவறு. நீங்கள் விசாரித்து நியாயம் வழங்க வேண்டும்" என்று அவரிடம் செல்வகுமார் கூறினார். நகரச் செயலாளர் நீக்கத்தால் கோபம், எம்.ஜி.ஆரை நேரில் பார்த்த மகிழ்ச்சி, அவரிடம் பேசும்போது ஏற்பட்ட பதற்றம் எல்லாம் சேர்ந்த கலவையாய் உணர்ச்சிக் குவியலாய் இருந்த செல்வகுமாரை எம்.ஜி.ஆர். உற்றுப் பார்த்தார்.

"விசாரிச்சு தப்பு ஒண்ணும் இல்லைன்னா மறுபடி அவரை கட்சியிலே சேர்த்துக்கலாம்" என்று எம்.ஜி.ஆர். புன்முறுவலுடன் கூறினார். "அவரைவிட, எல்லா வகையிலும் சிறியவனான எனது பேச்சுக்கு மதிப்பளித்து, கட்சியில் இருந்து நீக்கப்பட்ட செயலாளரை மீண்டும் எம்.ஜி.ஆர். சேர்த்துக் கொண்டார். என்னிடம் பேசும்போது என் தோளைத் தட்டியபடியே சொன்னார். அது எனது வாழ்நாள் பாக்கியம்" என்று நெகிழ்கிறார் அப்போது மாணவராக இருந்து, இப்போது பேராசிரியராக இருக்கும் செல்வகுமார்!

‘நாளை நமதே’ படத்தின் சில காட்சி கள் பெங்களூரில் படமாக்கப்பட்டன. அதற்காக விமானம் மூலம் சென்னை யில் இருந்து எம்.ஜி.ஆர். பெங் களூர் சென்றார். விமான நிலையத்தில் ஏராளமான மக்கள் திரண்டனர். அவர் வரு வதை அறிந்து வினோத் என்பவர் தலைமையில் கல்லூரி மாணவர்கள் சிலரும் சென்றனர். மக்களின் வர வேற்பை ஏற்றுக் கொண்டு கும்பிட்டபடியே எம்.ஜி.ஆர். சென்றுவிட்டார்.

படத்தின் சில காட்சிகள் ‘ஈஸ்ட் வெஸ்ட்’ என்ற ஓட்டலில் படமாக்கப்பட் டன. அங்கும் மாணவர்கள் சென்றனர். வினோத் மட்டும் காவலாளியிடம் கெஞ்சி கூத்தாடி உள்ளே சென்றுவிட்டார். தூரத்தில் இருந்தபடியே படப்பிடிப்பில் எம்.ஜி.ஆர். நடித்த காட்சிகளைப் பார்த்தார். படப்பிடிப்பு முடிந்தும் எம்.ஜி.ஆரை மாணவர்கள் விடாமல் துரத்திச் சென்றனர். அவர் தங்கியிருந்த ‘வெஸ்ட் எண்ட்’ ஓட்டலுக்குச் சென்றனர்!

தனது அறையில் ஓய்வாக இருந்த எம்.ஜி.ஆர். பின்னர், டிரைவர் ராமசாமி மூலம் மாணவர்கள் வந்திருப்பதை அறிந்து அவர்களை உள்ளே விடச் சொன் னார். வினோத் உட்பட மாணவர்கள் எல் லோரும் நேராகச் சென்று எம்.ஜி.ஆரின் கால்களில் விழுந்தனர். அவர்களை எழுப்பி விசாரித்த பின்னர், எம்.ஜி.ஆர். கேட்ட கேள்வியால் வினோத், மயக்கம் போட்டு விழாத குறையாக தலைசுற்றி நின்றார். "காலையில் உங்களை விமான நிலையத்தில் பார்த்தேன். பின்னர், படப் பிடிப்பு நடக்கும் இடத்திலும் பார்த்தேன். இங்கும் வந்திருக்கிறீர்கள். வந்தது மகிழ்ச்சி. ஆனால், எங்கே பார்த்தாலும் நான் அதே ராமச்சந்திரன்தான். படிக்கும் வயதில் நீங்கள் என் பின்னாடியே அலை யலாமா?" என்று கேட்டார். எவ்வளவோ கூட்டத்திலும் ஒவ்வொருவரின் முகத் தையும் மறக்காத எம்.ஜி.ஆரின் கவனிப்புத் திறனைக் கண்டு வினோத்தும் மாணவர்களும் அதிசயித்தனர்!

பின்னர், "நன்கு படித்து எதிர்காலத் தில் உங்கள் குடும்பத்துக்கும் சமூகத்துக் கும் சேவையாற்ற வேண்டும்" என்று தங் களை எம்.ஜி.ஆர். வாழ்த்தி அனுப்பி யதை நெகிழ்ச்சியுடன் நினைவு கூர்கிறார் வினோத்!

எம்.ஜி.ஆர். முதல்முறை முதல்வ ரான பிறகு, தமிழகத்தின் பல பகுதிகளில் வெள்ளம். மதுரையில் வெள்ள சேதத்தைப் பார்வையிடுவதற் காக, பக்கத்து மாவட்ட சுற்றுப் பய ணத்தை முடித்துக் கொண்டு விருந்தினர் விடுதிக்கு எம்.ஜி.ஆர். வந்து சேர்ந்தார். மாவட்ட கலெக்டருடன் வெள்ள பாதிப்பு கள் குறித்து ஆலோசனை நடத்தினார்.

முதல்வர் வருவதை அறிந்து, சவுராஷ்டிரா பள்ளி மாணவர் தலைவராக இருந்த ஏ.ஜி.எஸ். ராம்பாபு தலைமையில் மாணவர்கள் சிலர் முதல்வரை சந்தித்து வெள்ள நிவாரணத்துக்காக தாங்கள் திரட்டிய நிதியை அவரிடம் அளிக்க காத்திருந்தனர். முதல்வரை சந்திக்க முன்கூட்டியே அனுமதி பெறவில்லை. அவர்களை போலீஸார் தடுத்து, உள்ளே அனுமதிக்க மறுத்தனர்.

மாணவர்களுக்கோ, முதல்வரிடம் நிதியை கொடுக்க வேண்டும் என்று ஆர்வம்.

எம்.ஜி.ஆருடன் சுற்றுப் பயணத்தில் கூடவே சென்றிருந்த புகைப்படக் கலைஞர், இதைப் பார்த்துவிட்டு மாணவர்களுக்கு உதவ முடிவு செய்தார். மாவட்ட கலெக்டர் வெளியே வந்ததும் சடாரென முதல்வர் அறையில் நுழைந்து விஷயத்தைச் சொன்னார். அதைக் கேள்விப்பட்ட எம்.ஜி.ஆர்., "என்னிடம் யாரும் சொல்லவில்லையே. அவர்களை வரச் சொல்லுங்கள்" என்றார்.

மகிழ்ச்சியுடன் உள்ளே வந்த பள்ளி மாணவர்களிடம் படிப்பு, குடும்ப நிலவரம் குறித்து எம்.ஜி.ஆர். விசாரித்தார். பின்னர், "எவ்வளவு நிதி கொடுக்கப் போகிறீர்கள்?” என்று கேட்டார். மாணவர்கள் திரட்டி வந்த நிதி வெறும் 901 ரூபாய். அவர்களுக்காக சிபாரிசு செய்த புகைப் படக் கலைஞருக்கு சங்கடமாகிவிட்டது. "இதை வைத்துக் கொண்டா முதல்வரை சந்திக்க வந்தீர்கள்?" என்று ஒரு மாணவரிடம் முணுமுணுத்தார்.

அது எம்.ஜி.ஆர். காதில் விழுந்து விட்டது. புகைப்படக் கலைஞரைப் பார்த்து, "எவ்வளவு தொகை என்பது முக்கியமல்ல. பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ வேண்டும் என்ற இந்த மாணவர்களின் நல்லெண்ணத்தைப் பாராட்டுகிறேன். எப்போதும் இந்த உதவும் உள்ளம் தொடர வேண்டும்" என்று கூறி மாணவர்களை வாழ்த்தி வழியனுப்பினார்.

‘பெற்றால்தான் பிள்ளையா?’ படத்தில் எம்.ஜி.ஆர். பாடி நடிக்கும் சூப்பர் ஹிட் பாடல்...

‘நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி

இந்த நாடே இருக்குது தம்பி!’

- தொடரும்...

படங்கள் உதவி:செல்வகுமார், எஸ்.எஸ்.ராமகிருஷ்ணன்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வலைஞர் பக்கம்

6 days ago

வலைஞர் பக்கம்

8 days ago

வலைஞர் பக்கம்

9 days ago

வலைஞர் பக்கம்

11 days ago

வலைஞர் பக்கம்

11 days ago

வலைஞர் பக்கம்

12 days ago

வலைஞர் பக்கம்

15 days ago

வலைஞர் பக்கம்

19 days ago

வலைஞர் பக்கம்

20 days ago

வலைஞர் பக்கம்

22 days ago

வலைஞர் பக்கம்

23 days ago

வலைஞர் பக்கம்

25 days ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

1 month ago

மேலும்