என்னருமை தோழி...!- 22: உங்களால் கிடைத்த வாய்ப்பு!

By டி.ஏ.நரசிம்மன்

உங்களுடனான எனது சந்திப்புகளின் போது பெரும்பாலும், உங்களது திரைப்பட வாழ்க்கை, இலக்கியப் பணிகள் மற்றும் அரசியல் வாழ்க்கைஎன்று பல தகவல்களை பகிர்ந்துள்ளீர்கள். இடையிடையே தங்களது சிறு வயது நிகழ்வுகளையும், தங்களது ஆன்மீக நம்பிக்கைகளையும் பகிர்ந்துள்ளீர்கள். திரைப்பட உலகில் நீங்கள் நட்சத்திரமாக ஜொலித்த காலங்களே, குதூகலமும், மகிழ்ச்சியும் நிறைந்த நாட்கள் என்று பலமுறை நீங்கள் கூறியது உண்டு.

திரைப்பட உலகில் தங்களின் அனுபவங்கள் பற்றிய அரிய தகவல்களையும் தெரிவித்தீர்கள். அவை சுவையானவை மட்டுமல்ல, வெளியுலகுக்கு தெரிந்திராதவை. எனவேதான், முதலில் உங்களது திரை வாழ்க்கைக்கு இந்த தொடரில் முக்கியத்துவம் அளித்து

வருகிறேன். தங்களது அரசியல் வாழ்வை பற்றி எப்போது எழுதப்படும் என்று மின்னஞ்சல் வாயிலாகவும், தொலைபேசி மூலமும் ஏராளமான வாசகர்கள் கேட்கின்றனர்.

ராமாயணத்தில் சுந்தர காண்டம் விவரிக்கப்பட்ட பிறகுதானே யுத்த காண்டத்திற்கு போகமுடியும்? தங்களது அரசியல் யுத்த காண்டம் துவங்குவதற்குமுன், தங்களை வீழ்த்தி வனவாசம் அனுப்ப முயன்ற ஆரண்ய காண்டத்தை பற்றிக்கூட தாங்கள் விவரித்தீர்கள் அல்லவா?

இதோ தங்களது அரசியல் வாழ்வில் திருப்பத்தை ஏற்படுத்தக் காரணமான ‘அடிமைப் பெண்’ திரைப்படம் பற்றி தாங்கள் கூறிய

விவரங்களுடன், தங்களது வாழ்வில் பிரச்சினைகளை உண்டாக்கிய ஆரண்ய காண்டமும் துவங்குகின்றது.

1966-ம் வருடத்தில் ‘அடிமைப் பெண்’ துவக்கியிருந்த எம்.ஜி.ஆர். பின்னர் அந்த படப்பிடிப்பினை நிறுத்திவிட்டார். கதாநாயகியாக சில காட்சிகளில் நடித்திருந்த சரோஜாதேவி திருமணம் செய்துகொண்டு சென்றது ஒரு காரணம். அதில் நடித்திருந்த நடிகை ரத்னா

படப்பிடிப்பின்போது, குதிரை ஒன்றிலிருந்து விழுந்து அடிபட்டு கொண்டதும் ஒரு காரணம். 1968-ல் மீண்டும் அந்த படப்பிடிப்பினை துவக்கிய எம்.ஜி.ஆர். முன்பு எடுத்திருந்த பகுதிகளை நீக்கி விட்டு, புதிதாக சில மாற்றங்களுடன் படத்தை தயாரிக்க முடிவு செய்தார். கதா

நாயகி சரோஜாதேவிக்கு பதிலாக தங்களையே ஜீவா பாத்திரத்தில் கதாநாயகியாக ஒப்பந்தம் செய்தார். ஏற்கனவே, ஒப்பந்தமானபடி பவளவல்லி என்கிற அரசி பாத்திரத்தையும் தாங்களே செய்தீர்கள். ஆக, உங்களுக்கு படத்தில் இரட்டை வேடம்.

ரத்னா நடித்த பாத்திரத்தில் ஜோதி லட்சுமியை எம்.ஜி.ஆர். ஒப்பந்தம் செய்தார். முத்தழகி பாத்திரத்தில் நடித்த கே.ஆர்.விஜயாவுக்கு பதிலாக நடிகை ராஜயை தேர்ந்தெடுத்தார். மந்திரவாதி பாத்திரத்தில் சோவை வழக்கம் போல் நடிக்க வைத்தார். அப்போதுதான், வைத்தியர் பாத்திரம் ஒன்றிற்கு யாரை போடுவது என்கிற பேச்சு எழுந்தது.

அப்போது நீங்கள், எம்.ஜி.ஆரிடம் ஒரு வேண்டுகோளை வைத்தீர்கள், ‘‘நடிகர் சந்திரபாபுவையே வைத்தியர் பாத்திரத்தில் நடிக்க வைக்கலாமே?’’ என்று நீங்கள் சொன்னதும் எம்.ஜி.ஆர். உங்களை உற்று நோக்கினார்.

நடிகர் சந்திரபாபுவிற்கும், எம்.ஜி.ஆருக்கும் அப்போது சுமூக உறவு இல்லாத சமயம். அவர்கள் இருவரிடையே ‘மாடி வீட்டு ஏழை’ படம் தொடர்பாக பிரச்சினை மூண்டிருந்தது. அந்த படத்தை நண்பர்களுடன் தயாரித்து, தானே அதை இயக்கிக்கொண்டிருந்தார் சந்திரபாபு.

எம்.ஜி.ஆரைப் பற்றியும் அவரது நடிப்பு பற்றியும் கேலியும் கிண்டலும் செய்து கொண்டிருந்த சந்திரபாபு தனது படத்துக்கு எம்.ஜி.ஆரையே கதாநாயகனாக போட்டார்! நாயகி, சந்திரபாபுவின் நெருங்கிய நண்பர் நடிகை சாவித்ரி. முதல் நாள் பட பூஜைக்கு சாவித்ரிதான் 25 ஆயிரம் ரூபாயை அளித்திருந் தார். முதல் நாள் பூஜைக்கு வந்த எம்.ஜி.ஆர். பின்னர், சில நாட்கள் சில காட்சிகளில் நடித்தார். பல படங்களில் நடித்ததால் ‘பிஸி’யாக இருந்த அவர், படப்பிடிப்பு தேதிகள் தொடர்பாக தனது ‘கால்ஷீட்’ குறித்து தன் அண்ணன் எம்.ஜி.சக்ரபாணியிடம் பேசுமாறு சந்திரபாபுவிடம் கூறியிருந்தார்.

அந்த சமயம், சென்னை கிரீன்வேஸ் சாலை, கேசவப்பெருமாள்புரத்தில் சந்திரபாபு சொகுசு பங்களா ஒன்றை கட்டி வந்தார். 48 ஆயிரம் சதுர அடியில் கட்டப்பட்ட அந்த பங்களாவில் மாடியில் இருந்த தன் படுக்கையறைக்கு சாலையில் இருந்து நேராக செல்லும்படி ஒரு பாதை வேறு அமைத்திருந்தார். ‘மாடி வீட்டு ஏழை’ படத்துக்காக விநியோகஸ்தர்களிடம் வாங்கியிருந்த பணத்தையும் போட்டு பங்களா கட்டிவந்தார் என்றும் பேச்சுக்கள் எழுந்தன.

எம்.ஜி.ஆரின் ‘கால்ஷீட்’ விஷயமாக சக்ரபாணியிடம் பேச, தனது வெளிர் பச்சை நிற பியட் காரில் சந்திரபாபு சென்றார். அங்கே சக்ரபாணியுடன் தகராறு ஏற்பட்டு அவரை நாற்காலியினால் தாக்கப் போக, நிலைமை ரசாபாசம் ஆகிவிட்டது. ‘‘அருகிலிருந்த நண்பர்கள் தடுத்திருக்காவிட்டால் ஒன்று நாற்காலி உடைந்திருக்கும். அல்லது...’’ என்று சந்திரபாபு இந்த சம்பவத்தைப் பற்றி பின்னாளில் குறிப்பிட்டார்.

நட்பு பாதிக்கப்பட்ட நிலையில், சந்திரபாபுவும் எம்.ஜி.ஆரை அணுகவில்லை. எம்.ஜி.ஆரும் அவருடன் இதுபற்றி பேசவில்லை. ‘மாடி வீட்டு ஏழை’ படம் நின்று போனது. ஆனாலும், பிறகு சந்திரபாபுவின் நிலை அறிந்து ‘பறக்கும் பாவை’, ‘கண்ணன் என் காதலன்’ ஆகிய தனது படங்களில் சந்திரபாபுவுக்கு எம்.ஜி.ஆர். வாய்ப்பளித்தார். என்றாலும், சந்திரபாபுவுக்கே உரித்தான அவரது கிண்டல், கேலிகள், இருவருக்குமிடையே இடைவெளியை உண்டாக்கின.

இம்மாதிரி சூழ்நிலையில்தான், நீங்கள் எம்.ஜி.ஆரிடம், வைத்தியர் வேடத்திற்கு சந்திரபாபுவை போடலாம் என்று கூறினீர்கள்.

எம்.ஜி.ஆர். தங்களை விசித்திரமாக பார்த்தார்.

‘‘அம்மு! பாபு என் அண்ணனை அவமதித்திருக்கிறார். அதற்காக மன்னிப்பும் கேட்கவில்லை. தொடர்ந்து என்னை அவமதிக்கும் வகையில் கருத்து கூறி வருகிறார். அப்படி யிருக்கும்போது, வைத்தியர் வேடத்தில் அவரை போடும்படி கூறுகிறாயே?....’’ என்று சற்றே வெறுப்பும் உஷ்ணமுமாகக் கூறினார்.

‘‘உணர்வுகளின் உந்துதலில் பலர் தவறுகள் செய்கிறார்கள். உங்களை துப்பாக்கியால் சுட்ட எம்.ஆர். ராதா மீதே உங்களுக்கு அவ்வளவு கோபம் இல்லையே. சந்திரபாபு சற்றே ஆர்வக் கோளாறினால் சில சமயம் எல்லை மீறிவிடுகிறார்...’’ என்று சொல்லி, ஜனாதிபதி மாளிகையில் நடந்த நிகழ்ச்சியின்போது அவர் ஜனாதிபதியின் மடியில் அமர்ந்து கொஞ்சியதை நீங்கள் எடுத்துக் கூறியதும்... எம்.ஜி.ஆர். சிரித்து விட்டார்.

பிறகு, ‘‘சரி.. உனக்காக, பாபுவுக்கு

மறுபடியும் ஒரு வாய்ப்பு தருகிறேன்...’’

என்று கூறி, இயக்குனர் கே.சங்கரிடம், வைத்தியர் வேடத்திற்கு சந்திர

பாபுவை ஒப்பந்தம் செய்யச் சொன்னார். அதைக் கேட்டதும், சந்திரபாபுவுக்கே ஆச்சரியம். படப்பிடிப்பில் உங்களால்தான் அந்த வாய்ப்பு தனக்கு கிட்டியது என்பதை அறிந்து உங்களுக்கு நன்றி சொல்ல வந்தபோது, நீங்கள் அவருக்கு எச்சரிக்கை செய்தீர்கள்.

‘‘பாபு! நாம் நல்லதை நினைத்துக்

கொண்டு பேசும் பேச்சு, செய்யும் செயல் ஆகியவை சில நேரம், தவறாக புரிந்து கொள்ளப்பட்டுவிடும். பிறகு அதற்கு விளக்கம் கொடுக்கக் கூட நமக்கு வாய்ப்பு கிட்டாது. உங்கள் வெள்ளை உள்ளம் சிலருக்கு தெரியும். பலருக்கு தெரியாது. வார்த்தைகளில் கவனம் தேவை. டேக் கேர்...’’ என்று ஆங்கிலத்தில் கூற, சந்திரபாபுவும் ‘‘டோன்ட் ஒர்ரி, அம்மு. கவனமாக இருக்கிறேன்!’’ என்று ஏற்றுக் கொண்டார்.

‘அடிமைப் பெண்’ படத்தில் தனக்கு நிகராக, உங்களுக்கு முக்கியத்துவம் தந்தார் எம்.ஜி.ஆர்.!

ஒரு நாள் உங்களை ராமாவரம் தோட்டத்திற்கு அழைத்தார். நீங்களும், தாய் சந்தியாவும் அங்கு போனபோது. ‘‘நான் புதிதாக வளர்க்கும் ஒரு பிராணியை காட்டுகிறேன்..வா..’’ என்று உங்களை அழைத்துப் போனார். அங்கு சென்று பார்த்த நீங்கள் அலறாத குறையாக அரண்டுபோய் நின்றீர்கள்...!

தொடர்வேன்...

தொடர்புக்கு: narasimhan.ta@thehindu.co.in

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வலைஞர் பக்கம்

9 days ago

வலைஞர் பக்கம்

9 days ago

வலைஞர் பக்கம்

14 days ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

மேலும்